Saturday, August 20, 2016

வாழ்த்துக்கு நன்றி

டைட்டில் கார்டு: பாராதிராஜா பட கைகூப்பி வணங்குதல்.
ஒவ்வொரு வாழ்த்தும் ஒருவித நறுமணம். தித்திக்கும் கல்கண்டு. ஒரு சுகானுபவம். பிறந்தநாள் வாழ்த்து வெள்ளத்தில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்டு திக்குமுக்காடிப்போனேன். இன்றுதான் கரை ஒதுங்கினேன். நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது. இங்கிவர்களை யான் பெறவே என்ன தவம் நான் செய்துவிட்டேன்!!
இந்த நண்பர் குழாம் என் பூர்வஜென்ம புண்ணியப்பலன். இந்த ஜென்மத்து பூஜாபலன். அகாலவேளைகளில் நேரம் கிடைக்கும் போது, கால் முளைத்தக் குழந்தை தத்தக்காபித்தக்கா என்று நடப்பது போல எழுதுகிறேன். கூடத்தில் (ஃபேஸ்புக்கில்) சுற்றி அமர்ந்திருக்கும் உற்றார் உறவினர்கள் இரசித்து... லயித்து... "ஆஹா.. குட்டீ.. அழக்....கா இருக்கே. ஓடிவா... த்தோ... வாடா.... கண்ணா.." என்று இருகரம் நீட்டிக் கொஞ்சுவது போல இணைய நண்பர்கள் ஊக்கமளித்து இன்னும் தீவிரமாக இயங்க உசுப்பேற்றுகிறார்கள். சகலருக்கும் நமஸ்காரங்கள். ஏதோ கோணங்கித்தனத்தால் கொணஷ்டையினால் எவரையாது எவ்வகையிலாவது இம்சித்திருந்தால் இந்தப் பாவியை மன்னியுங்கள். மன்னிப்பவர் தேவர். மறப்பவர் தேவாதிதேவர்.
மன்னையையும் ராஜகோபாலஸ்வாமியையும் நினைக்காமலும் இணைக்காமலும் வாழ்த்துகள் இல்லை என்பது தனி விசேஷம். திரையில் முகம் பார்த்து அகம் நுழைந்த நட்புகளின் பாசம், மன்னார்குடி மாடு மேய்க்கும் மாயவன் கோபாலனை புன்னை மரத்தடியில் நேரே பார்த்த பக்தன் போல பிரமிக்கவைக்கிறது. எழுத்து விற்பன்னர்கள் சாகசம்காட்டும் இந்த ஃபேஸ்புக்கில் நான் அடாசு ரகம். என்னைக் கவர்ந்த விஷயங்களையும், நான் விளையாடித் திரிந்த ஊர் பற்றியும், சொக்கிப்போன இசைபற்றியும், சக ஸ்நேகிதங்களுடன் கொட்டமடித்ததையும், எப்பவாவது (சிறு)கதையும், (கவிதை எழுதினால் வீடு தேடி வந்து கையை ஒடித்துவிடுவார்கள். எனக்கு இடது கையால் ஷவரம் செய்துகொள்ளத் தெரியும்!  ), அப்பப்போ ஏனோதானோ கட்டுரைகளும் எழுதுகிறேன். இலக்கியக் கம்பு சுழற்றி சிலம்பாட்டம் ஆடி சோனிகளுக்கு சாந்து பொட்டும் சந்தன பொட்டும் வைப்பவர்களிடமும் , அரசியல் சர்ச்சைகளிலும் மூக்கை நுழைக்காமலிருக்கிறேன்.
"இன்னும் ஒரு கரண்டி ஊத்துங்கோ..." என்று ஒரு வாய் இழுத்து மறுவாய்க்கு உள்ளங்கை குழித்துக் கேட்க வைக்கிற, உரைக்காத, தக்காளி ரசம் போல எழுத ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன். ருஜியின் தரம் இரசிக்கும் நீவிர் அறிவீர். தி பெட்டர்இந்தியா என்றொரு வலைத்தளமுண்டு. இந்தியாவைப் பற்றி சுவாரஸ்யமான, ஒழுக்கமான, ஸ்ரேயஸ்ஸான, பரம பாவனமான சங்கதிகளை மட்டும் பிரசுரம் செய்து நல்லபிள்ளை என்று பெயரெடுக்கிறார்கள். (கூகிள் அறிவியல் கண்காட்சியில் இறுதிச் சுற்றுக்கு வந்த பதினாறு இளம் விஞ்ஞானிகளில் ஆறு பேர் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என்ற ஆக்கப்பூர்வமான நேர்மறையான செய்தியே லேட்டஸ்ட்.)
ஆகஸ்டு பதினாறில் பிறந்த என்னை என்றும் பதினாறாக நினைக்க வைத்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!
நன்றியும் மகிழ்ச்சியும் வெறும் வார்த்தையில் வாரா! சங்கிலித்தொடர் வாழ்த்துகளால் ஆயிரம் இதழ் கொண்டு மலர்ந்த இதயத்தாமரையின் துடிப்பிற்கு இடையில் இடையறாது அனைவருக்கும் கீழே எழுதியிருப்பதை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.
"ந.'லப்'.ன்.'டப்'.றி.'லப்'.ந.'டப்'.ன்.'லப்'.றி.'டப்'.ந.'லப்'.ன்.றி.'டப்'"
(முடிந்தவரை எல்லோருக்கும் பிரத்யேகமாக நன்றி நவில முயற்சிக்கிறேன்)

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

நான்கு நாட்கள் அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தார். அட்வான்ஸ் கட்டி அட்டண்டர் நாற்காலியில் அலர்ட்டாக அமர்ந்திருந்தோம். “ராமமூர்த்தி அட்டெண்ட்டர்...” என்று சந்தனக் கீற்று நர்ஸ் சேச்சி குரல் கொடுக்கும் போது பெடிக்ரீக்கு பாயும் டாமி போல ஓடவேண்டும். பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து வேயுறு தோளி பங்கன்.. படிப்பவர்களும் சஷ்டி கவசம் தியானம் செய்பவர்களும் சடுதியில் நெருக்கமாகிவிடுகிறார்கள்.
“எப்படி இருக்கு? பரவாயில்லையா? ஒண்ணும் ஆகாது.. இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ்ஜுன்னு டாக்டர் சொல்லிடுவார் பாருங்க.. பயப்படாதீங்கோ.. அவன் மேலே பாரத்தைப் போடுங்கோ.. அவன் பார்த்துப்பான்.... ” என்று பரஸ்பர ஆறுதல்களும் க்ஷேம விஜாரிப்புகளும் அன்பு பொழியும் உலகத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்கின்றன. ”என் வீட்டு வாசல்ல ஏன் வண்டி நிறுத்தறே.. எடுய்யா..” என்று பாய்பவர்கள் கூட “அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்று ஆதூரத்துடன் கை பிடிப்பார்கள்.
சோகங்களும், இடர்களும் மனிதர்களை ஒன்று சேர்க்கின்றன. “நான் போய் வாங்கிட்டு வரேன்.. நீங்க அப்பாவைப் பாருங்க...” என்று மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு ஃபார்மஸிக்கு ஓடுகிறார்கள். “இட்லிதான்.. பசிக்கும்.. ஒண்ணே ஒண்ணு...” என்று சிரித்துக்கொண்டே நீட்டுகிறார்கள். கையில் வைத்திருக்கும் மாலை மலரின் உள் ஷீட்டை கையில் கொடுத்து “படிங்க...” என்று நட்பாகச் சிரிக்கிறார்கள். உள்ளே படுக்கையில் இருக்கும் ஆசாமியின் நலம்தான் பிரதானம் என்று வீற்றிருக்கும் போது அந்தக் கவலையில் நொந்துபோகக்கூடாது என்கிற கவனமும் அக்கறையும் அபாரம்.
வெள்ளத்தில் சென்னை மிதந்தால் உடனே படை திரட்டிக்கொண்டு உதவி புரிய ஓடுகிறோம். சிசியூவுக்கு வெளியே காத்திருக்கும்போது கைகுலுக்கி நட்பாகி சோகத்தைப் பங்குப்போட்டு நிம்மதி அடைகிறோம். வாய்வார்த்தையான ஆறுதலில் ஆனந்தமடைகிறோம். மகிழ்ச்சியில் மமதையடையும் மனித இனம் சோகத்தில் சொந்தபந்தங்களைத் தேடுகிறது. சோகத்திலும் வருத்தத்திலும் கைகோர்க்க ஆளில்லாத மனிதனே செல்வமில்லாத சொத்தையாகிறான் என்பது புரிகிறது.
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து

என்று பட்டினத்தார் புட்டுப்புட்டு வைத்து காயம் பொய், அநித்யம் என்று தெரிந்தும், பிறப்பெடுத்து வாழ்க்கையெனும் பாழும் கிணற்றில் விழுந்து பல கஷ்ட நஷ்டங்களில் அடி வாங்கினாலும், மனுஷ்ய ஜென்மத்தின் ஜீவன் மீதுள்ள தீரா ஆசை விந்தையிலும் விந்தையே!
“ஒண்ணுமில்லை.. ஹி இஸ் ஆல்ரைட்டுன்னு டாக்டர் சொல்லிட்டார்..” என்று முப்பத்திரண்டையும் காட்டிச் சிரிக்கும் போது வாழ்க்கையின் பிடிமானம் உறுதியாக வெளியில் தெரிகிறது. சேற்றுப் பாதையைக் கடக்க முயலும் புழுவிற்குக் கூட குதிரையின் குளம்புகளுக்குள் சிக்காமல் அதன் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடுவதைப் பற்றி மகாபாரதத்தில் வரும் கட்டம் சாஸ்வதமான உண்மை.

குமுட்டி நினைவுகள்

"கார்த்தீ.... சாம்ப்ராணிக்கு தணல் வேணும்...."
அம்மா வரலக்ஷ்மி பூஜையின் நடுவில் குரல் கொடுத்தாள்.
" ....ம்ம்ம்... சங்கல்பம் முடிஞ்சவொன்னே பேசுங்கோ மாமி.. நமோஸ்துதே.." என்று மந்திரங்களுக்கு இடையில் அம்மாவைக் கண்டித்து அடுத்த மந்திரத்துக்குத் தாவினார் வெங்கடேச சாஸ்திரிகள் . அம்மாவை வரலக்ஷ்மி கோச்சுக்கமாட்டா. எழுபத்து ஐந்து வருஷ உழைப்பு. பொறந்தாம் புக்காம் எல்லோருக்கும் நேரங்காலம் பார்க்காமல் அசராத உழைப்பு. அர்ப்பணிப்பு.
"பின்னாடி கொல்லை ஷெட்டு லாஃப்ட்ல குமுட்டி இருக்குடா தம்பி.. அத எடு.." பவானி சித்தி கொக்கியாய்க் கூன் விழுந்த முதுகை நிமிர்த்திக் கேட்டாள்.
எக்கிக் குமுட்டியை எடுக்கும் போதே சாரதா பாட்டியின் நினைவுகள் என்னை மொய்க்க ஆரம்பித்தன. அண்ட்ராயர் வயசிலிருந்து பாண்ட் போடும் வரை என்னை வளர்த்துப் பெரிய ஆளாக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தவள்.
"பக்கத்து ப்ளாஸ்டிக் வாளில கரி இருக்கு பாரு.. அதையும் எடுத்து குமுட்டி ஜல்லடைல போடு... நா உரிமட்டை நார் கொண்டு வரேன்...சித்த நாழில சீக்கிரம் பிடிச்சுக்கும்.." என்று பவானி சித்தி விலகிய நொடியில் குமுட்டியை இறக்குவதற்குள் மனசு மன்னையில் தஞ்சமடைந்திருந்தது.
மதனகோபால்நாயுடு கடையில் ஒரு மனு விறகும், உர சாக்குப் பையில் ரெண்டு கிலோ கரியும் வாங்கிக்கொண்டு பவானி சித்திக்கு ஒத்தாசையாகத் தூக்கிக்கொண்டு ஜெயலக்ஷ்மி விலாஸ் ஸ்கூல் தாண்டியது கண்ணுக்குள் வந்து போனது. பின்னால் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வருவாள். பாவம் தம்பிக்கு கை வலிக்குமே என்று யாராவது தெரிந்தவர்கள் சைக்கிளில் கடந்தால் "தம்பி.. இவனைக் கொஞ்சம் கீழ்கரையில இறக்கிவிட்டுடேன்.." என்று கெஞ்சி ஏற்றிவிடுவாள்.
"ம்... விசிறு.." என்று எரியும் கசங்கிய காகிதத்தை குமுட்டி வாயில் சொருகினாள். வேஷ்டியைக் கால்களுக்கிடையில் சொருகிக்கொண்டு சந்தியாவந்தனம் பண்ணுவது போல உட்கார்ந்து கொண்டேன். ப்ளாஸ்டிக் விசிறியால் “பட்..பட்..பட்”டென்று விசிற ஆரம்பித்தேன். குமுட்டியின் மேலிருந்து குபுகுபுவென்று புகை சுழன்று வரவர அதற்குள் கறுப்பு-வெள்ளையில் காட்சிகள் ஓட ஆரம்பித்தது.
புளி போட்டுத் தேய்த்த, டாலடிக்கும், வெண்கலப்பானையில் தான் பாட்டி அரிசி உப்புமா செய்வாள்.
"பசிக்கிறது.. என்ன டிஃபன்?" என்று பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் பரபரப்போடு அடுக்களைக்கும் நுழையும் போது "சித்த குமுட்டியை விசிறுடா... ஒருதடவை குழப்பிட்டு எடுத்துண்டு வரேன்" என்று பனைமட்டை விசிறியைக் கையில் கொடுத்துவிட்டு வெண்கலப்பானையோடு கொல்லைப்பக்கம் கிணத்தடிக்கு விரைவாள். பாட்டி பளபள வெண்கலப்பானையோடு வருவதற்குள் குமுட்டியில் தணல் பிடித்திருக்கவேண்டும்.
எல்லாம் முடிந்து சாப்பிடுவதற்குள் பசி போய்விடாமல் இருக்க "இந்தாடா... " என்று ஒரு பிடி வேர்க்கடலையைக் கையில் திணிப்பாள். குனிந்து குன்று போல உட்கார்ந்து கொண்டு... எல்லாம் முடிந்து இறக்கும்போது.. பின்னால் தட்டோடு நான் நிற்பேன். "சித்த உலப்பூறட்டும்டா..". என்றைக்காவது கத்ரிக்கா கொத்ஸு கிடைக்கும். தேவார்மிதம்.
"தம்பி... இன்னும் கொஞ்சம் பேப்பர் சொருகு... கரி ஈரமா இருக்கு போல்ருக்கு.. பிடிச்சுக்கலை.." குமுட்டி வாயில் பேப்பர் சொருகி வேகமாக விசிறினேன்.
விரத நாட்களில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுட்டுச் சாப்பிடுவதற்கும்.. "இன்னிக்கி பயத்தம் தூத்தம் வெச்சுடறேன்.." என்று கிருத்திகைக்குப் பயத்தம்பருப்புப் பாயஸமும் குமுட்டியில்தான் வைப்பாள். "என்னயிருந்தாலும் குமுட்டிதான் மடி.. நீங்க என்ன சொல்றேள் அக்கா?..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியை துணைக்குக் கூப்பிடுவாள்.
"கத்திரிக்கா தொகயல் பண்ணிடுடீ பவானி..." என்று கரிமேல் போட்டு கையாலேயே சுட்டுத் தருவாள். தோல் வழுமூண்டு போயி வெந்த கத்தரிக்கா பந்திக்கு அழைக்கும்.
"இன்னுமா புடிச்சுக்கலை... பூஜையே முடிஞ்சுடும் போல்ருக்கே..." என்று பின்புறத்திலிருந்து பவானி சித்தியின் குரல் கேட்டது. விசிறிய கையையும் கடந்த காலத்தில் கொக்கி போட்டிருந்த மனசையும் நிறுத்திவிட்டு குமுட்டி அடுப்பைப் பார்த்தேன். மேலே கறுப்பாய் இருந்த கரி அடிபாகத்தில் பிறந்த குழந்தையின் பாதம் போல சிவப்பாக இருந்தது.
"இந்த தணல் போறும்டா..." என்ற குரலுக்குக் குமுட்டிப் புகையிலிருந்து மீண்டு நிகழ்காலத்திற்குள் நுழைந்தேன். தணல் தூபக்காலில் இடப்பட்டு சாம்பிராணி புகை பூஜையறையெங்கும் படர்ந்தது. புகையை மீறி தூபக்காலில் பார்த்த கரியின் ஜிவ்வென்ற அக்னியில் எனது மன்னை நினைவுகள் கனன்றுகொண்டிருந்தது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails