Thursday, April 28, 2011

ஜானகி மந்திரம்!

ரொம்ப சீரியஸா நான் சயின்ஸ்ல சிலுத்துக்கிட்டு சிலிகான் காதலி எழுதிகிட்டு இருந்த போன வாரம் ஜானகியம்மாவின் பிறந்தநாள் வந்துட்டு போச்சு. எண்பதுகளில் கடைசியில் என்னுடைய கொப்புளிக்கும் இளம் பிராயத்தில் எஸ்.பி.பி யுடன் சேர்ந்து அவர் பாடிய பல டூயட்டுகள் நிறைய பேரை காதலிக்க வைத்தது. பல பேரை பித்தம் பிடிக்க வைத்தது.

என்னுடைய பள்ளி/கல்லூரி நாட்களில் நிறைய தாவணி போட்ட பெண்கள் வெள்ளித்திரையில் ராதா "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு" என்று ஏங்கிப் பாடியது போல இந்தப் பாட்டை பாயில் படுத்து பாடிக்கொண்டு இன்பக் கனா பல கண்டார்கள். அப்படி பாடியவர்கள் பார்ப்பதற்கு ராதா போலும் இல்லை குரலிலும் ஜானகி போலும் இல்லை என்பது என் இளமைக்கு ஒரு வருத்தமான செய்தி தான்.

"இச்.இச்." என்று அனு கன்னத்தில் ரெண்டு வைத்து பாக்கியராஜ் தனது கட்டிலை ரோட்டுக்கு மேலே ஒரு இராப்பொழுதில் பறக்கவிட்டு இந்த பாட்டு சீனை ஆரம்பித்திருப்பார். படம் சின்ன வீடு. பாட்டு ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் தனது உடற்பயிற்சிகளை அவர்பாட்டுக்கு கடமையாய் செய்துகொண்டிருப்பார். இதில் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால் கூட ஆடும் அனுவிற்கு ஆடத்தெரிந்தால் கூட ஜோடியாக எக்செர்சைஸ் தான் கட்டாயமாக பண்ணவேண்டும். ஸ்டெப்ஸ் வைத்து பார்க்கும் போது புலியூர் சரோஜா அக்காவாகத்தான் இருக்கணும். அக்கா ஒரு ஃபிட்னெஸ் சென்ட்டர் வைத்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். எஸ்.பி.பி வழக்கம் போல அற்புதமாக பாடி நமக்கும் ஒரு சின்ன வீடு செட் பண்ணும் ஆசையை கிளப்பியிருப்பார். ராஜாவின் ஆளை இழுக்கும் இசை. நடுநடுவே வரும் தக்.தக்..தக்.தக். ரசிக்கும் நமக்கு ஒரு அழகிய திக்.திக்.திக்.திக்.

பாவம். எவ்வளவு நல்லா நடிச்சாலும் வினீத் ஒரு ராசியில்லாத நடிகர் அப்படின்னு முத்திரை குத்தி ஓரங்கட்டி வைத்துவிட்டார்கள். வினீத் நடித்த ஆவாரம் பூ ஒரு அற்புதமான படம். ஏ படம் தான். ஆனாலும் ஒரு மனநிலை பிழன்றவனின் உள்ளத்தை ஓவியமாக காண்பித்த படம். வினீத் உடன் நடித்த நந்தினியும் மிக நன்றாக நடித்திருப்பார். என்னுடைய கல்லூரிக் காலங்களில் வந்த படம் இது. பாதி பேர் இதை இளமைக்கு விருந்தாக பார்த்தார்கள். இந்தப் படத்தில் ஜேசுதாஸ் பாடிய மந்திரம் இது மந்திரம் எனும் பாடல் இளையராஜாவின் ஒரு உன்னத படைப்பு. நன்றாக படமாக்கப் பட்டிருக்கும். இப்பதிவின் நாயகி ஜானகி ஆதலால் அம்மையாரும் எஸ்.பி.பி யும் சேர்ந்து பாடிய சாமிகிட்ட சொல்லிவச்சு..


சுகமான சுமையாக சௌந்தர்யாவை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு கார்த்தி பாடுவதை நான் கல்லூரியில் பயிலும் காலத்தில் மெட்ராசுக்கு வந்த போது குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் கொசுக்கடியோடு தியேட்டர் ரொம்ப ரிலீஸ் ஆன ரெண்டாம் நாள் பார்த்தேன். படத்தில் ஆர்.வி.உதயகுமார் மாமா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், லவ்வர் செண்டிமெண்ட் என்று ஓராயிரம் செண்டிமெண்ட் வைத்து பொளந்து கட்டியிருப்பார். என்ன இருந்தாலும் மனதைரியத்தோடு அத்தனை கடியிலும் (கொசு..கொசு..) விடாப்பிடியாக கடைசி வரை அந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது யாரோ ஓடிவந்து எனக்கு 'ரசிகபூஷன்' விருது கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். உஹும்.. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் பாடிய நெஞ்சுக்குள்ள இன்னாரென்று ஒரு சூப்பெர்ப் ஹிட். எனக்கு இன்னொரு பேர் கார்த்திக் என்று இந்த பதிவு படிப்போர் அறிக. அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன் என்றும் அறிக.


ரஞ்சிதா சாமியாரிடம் மாட்டிக்கொள்வதற்கு வெகு காலத்திற்கு முன்பு நடித்த கர்ணா படத்தில் வரும் மலரே மௌனமாவும் நல்ல பாடல். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரிப் பெண் ஒருத்தி பேருந்து பயணத்தில் பெண்கள் பக்கத்தில் அமர்ந்து மௌனமாக வந்த போது என்னுடைய ஒரு அராத்து நண்பன் கட்டை குரலில் "மலரே... மௌனமா" என்று பாடியதும் அந்தப் பெண் அலறியடித்துக்கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவிடுவென்று நடையை கட்டியது. பயத்தில் பத்து நாள் யாரிடமும் பேசியிருக்காது என்பது திண்ணம். இதை விட அவமானம் சைட் அடிக்கும் பிராயத்தில் ஒருத்தனுக்கு இருக்க முடியாது. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு அவன் ம.மௌ மௌனமாக பாடிக்கொண்டே இருந்தான். "மாப்ள நல்லவேளை கால்ல கிடக்கறதை கயட்டி அடிக்காம விட்டாளே!" என்று நாங்களும் ரொம்ப நாள் அவனை சத்தமாக ஓட்டிக்கொண்டிருந்தோம். பாடலில் ஜானகியம்மாவின் அந்த கொஞ்சல் ததும்பும் ஏற்ற இறக்கங்கள் ரஞ்சிதாவிற்கு நடிக்கும்(?!) போது நிச்சயம் பக்க பலமாக இருந்திருக்கும்.

அண்ணனும் தம்பியும் தன் மாமன் மகளை லவ்வும் படம் சின்னத் தம்பி பெரிய தம்பி. நதியா வழக்கம் போல இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த படம். இக்காலத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கவனிக்கவும். சுடிதார், ஸ்கர்ட் போன்று அந்தக் காலத்தில் அதி நவீன உடைகள் அணிந்து நடித்து நதியா வளையல், நதியா புடவை, நதியா பொட்டு, நதியா ஸ்கர்ட்டு என்று சகலத்திர்க்கும் தன் பெயரை சார்த்திக்கொண்ட பெருமை பெற்றவர். நல்லவேளை எந்த கொலை வெறி ரசிகனும் பித்தம் தலைக்கேறி தன்னை பெற்றவர்களை நதியா அப்பா, நதியா அம்மா என்று அழைக்கவில்லை. குஷ்பு அலைக்கு முன்னர் நதியாவின் நதியலை தமிழக ரசிக நெஞ்சங்களை இழுத்துச் சென்றது.


நல்ல குளிரில் பிரபுவையும் ராதாவையும் ஓடவிட்டு எடுத்த இந்த பாடல் நம் செவிகளுக்கு ஒரு அற்புதமான விருந்து. கைராசிக்காரன் என்ற இந்தப் படம் ராசியாக போணியானதா என்று தெரியவில்லை ஆனால் இந்தப் பாடல் ஒரு அமிர்தம். ஒரு நூறு வயலின்கள் ஒரு சேர இழுஇழு என்று இழுக்கும் போது நாயகனும் நாயகியும் ஓடிவருவது முதல் டெம்போ. அப்புறம் எடுத்த வுடனேய அண்ணன் எஸ்.பி.பி. ஆரம்பிக்கும் நிலவொன்று கண்டேன்... அடாடா.. ஒரு ரெண்டு மூணு தடவை அந்த ஆரம்பத்தை மட்டும் கேட்டுவிட்டு தான் பாட்டிர்க்குள்ளேயே செல்வேன். கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம் என்று ஆரம்பிக்கும் ஜானகியின் குரல் குற்றாலமாக வரும்.

பின் குறிப்பு: சிலிகான் காதலி குறுந்தொடராக எழுதலாம் என்று நினைத்தேன். நீள்கிறது. அதனால் இந்தப் பதிவு அதற்கு ஒரு இடைவேளையாக இங்கே. அப்பாடி என்று நாலு பேர் பெருமூச்சு விடுவது கேட்கிறது. விடாது கருப்பாக உங்களை விடாது சிலிகான்.

பட உதவி: us.7digital.com
-

Wednesday, April 27, 2011

சிலிகான் காதலி - V

இதுவரை.....
தலைநகரில் தனது காதலி ஜீவிதாவை காணாமல் தவித்தான் ஜீவன். ஜீவிதாவை அங்கமங்கமாக அழகில் உயர்ந்த பல நூற்றாண்டு பெண்டிரின் அவயங்களை மாடலாக்கி க்ளோனிங் முறையில் ஒரு டாக்டரின் உதவியோடு செதுக்கியிருந்தான். அன்றைக்கு கண்காட்சியில் அச்சு அசல் ஜீவிதா போலவே ஒருத்தியை பார்த்தான். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளிடம் பேசிய போது அவள் தன் காதலி ஜீவிதா இல்லை என்று தெரிந்துகொண்டான். பின்னால் துரத்தும் போலீசிடம் இருந்து தப்பிக்க அந்த கண்காட்சியில் இருந்து வெளியே வந்தவனை ஒரு வானூர்தி இழுத்துப் போட்டுக்கொண்டு பறக்கிறது. அந்த வாகனத்தின் உள்ளே கண்காட்சியில் பார்த்தது போல ஏழு ஜீவிதாக்களை பார்க்கிறான். அதிசயத்தில் வாய் பிளக்கையில் அவனுடைய ஜீவிதாவை க்ளோனிங் முறையில் படிமம் எடுத்து அங்கம் அங்கமாக அழகுச் சிலையாக செதுக்கிய டாக்டர் ஜீவனையும் அந்த ஊர்தியில் பார்க்கிறான். நாட்டை இயந்திரங்களிடம் இருந்து காப்பாற்றும் தனது திட்டத்தை விளக்கி அதை செயல் படுத்துவதற்கு ஒரு அத்துவானக் கிராமத்தில் இருக்கும் தனது நண்பன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒரு பாறை மறைவில் தங்களது வானூர்தியை நிறுத்திவிட்டு நண்பனின் வீட்டிற்கு வரும் போது....

இனி...
****************** ஐந்தாவது ஸி.டி *********************


scifi1
.......அந்த அரைகுறை வெளிச்சத்தில் ஒரு கூட்டமாக ஏழெட்டு பேர் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். தூரத்தில் குட்டி குட்டி நிழலாய்க் கண்ணுக்கு தெரிந்தார்கள். வானத்தில் பல வர்ணங்களில் ஒளித்தீற்றல்கள் திப்பி திப்பியாக அப்பியிருந்தது. முன்பெல்லாம் தீபாவளிக்குத் தான் வானவேடிக்கைகளால் இரவிலும் வானம் பட்டப் பகலென வெளுத்திருக்குமாம். சுற்றுச்சூழல் மாசு காரணத்தினால் பட்டாசு கொளுத்தினால் சிறை வாசம் என்று மகிழ்ச்சிக்கு சுருக்குக் கயிறு போட்ட பிறகு மினி மற்றும் பிக் வான ஊர்திகளால் இப்போது ஆகாயத்தில் தினம் தினம் திருநாளே! இடது புறம் இருந்த பெரியமரத்துக்கு பின்னால் ஒளிவதா அல்லது முன்னேறி நடந்து அவர்களை கடந்து செல்வதா என்று அனைவரும் ஒரு கணம் யோசித்தோம்.

அனைத்துலக ஜீவிதா ரசிகர் மன்றத் தலைவன் கொடி பிடித்து விழா ஊர்வலம் போவது போல ஜீவிதாவிற்கு முன்னால் அந்தக் கூட்டத்திற்கு முதல் ஆளாய் கம்பீரமாக சென்ற நான் சமயோசிதமாக அந்த பன்னெடுங்காலம் வேரூன்றி கிளை பரப்பி தலை விரித்து நின்ற அரசமரத்தின் பின்னால் ஒளிந்தேன். அனைவரும் என் பின்னே தஞ்சமடைந்தனர்.

ஒருவர் பின் ஒருவராக அந்த மர்மக் குழு நடை ஒழுக்கத்தை கடை பிடித்து செல்லும் போது பிறை நிலா வெளிச்சத்தில் அவர்கள் முகம் ஒரே ஜாடையில் இருந்தது. திடுக்கிட்டேன். பக்கத்தில் டாக்டர் நண்பன் முகத்திலும் ஆச்சர்யம். இந்த வேளையில் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று எங்களால் துளிக்கூட யூகிக்க முடியவில்லை. அவர்கள் நேரே போய் அங்கே படுத்திருக்கும் யானை முதுகு போன்ற பாறை முக்கு திரும்பியவுடன் நிச்சயம் என்னிடமிருந்து கேள்வி வரும் என்று திரும்பிய டாக்டரை ஏமாற்றாமல் 

"டா.." என்று நான் கூப்பிட வாய் திறக்கையில் 

"என்ன?" என்று அந்தச் சூயிங் கம் நாற்றத்துடன் என் காதுக்கு மட்டும் அந்தக் கேள்வியை திணித்தான்.

"நீ ஒருவன் தான் இந்தத்  தொழிலில் கை தேர்ந்தவன் என்று நினைத்தால் இந்த குக்கிராமத்தில் கூட உன்னைப் போல ஒரு வித்தைக்காரன் இருக்கிறான் போல" என்றேன் அந்த கும்பல் சென்ற திக்கைப்பார்த்து அதிசயித்துக்கொண்டே. ஜீவிதா விட்ட மூச்சுக் காற்றை என் தோள் உணர்ந்து பின்னால் நின்றவளின் பயத்தை என்னிடம் தூது சொன்னது.

"த்சோ.. த்சோ.." என்று உச்சுக்கொட்டிவிட்டு  "நீ சரியா பார்க்கலையா.. எல்லாம் பேன்ட் சட்டை போட்ட அக்மார்க் ரோபோக்கள்..." என்றான் டாக் அலட்சியமாக.

"எப்படி சொல்றே"

"ராணுவ அணிவகுப்பு நடையில் அந்த ஒத்தையடிப் பாதையில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஒரு இம்மி பிசகாமல் நேரே நடந்து போவதை பார்த்தியே, உன்னால கண்டு பிடிக்க முடியவில்லையா?" என்று சொன்னபோது மேகத்தின் சிறையிலிருந்து மீண்ட அந்த அரை லிட்டர் பால் நிலாவில் அவன் பல் பளிச்சென்று தெரிந்தது.

"எங்கே போகிறார்கள் என்று ஏதாவது கெஸ் பண்ண முடியுதா?"

"சிறிது தூரம் சென்று பார்க்கலாம் வா!" என்று அழைத்தான் டாக்டர். ஆறு ஜீவிதாக்கள் கட்டளைக்கு காத்திருக்க ஏழாவது ஜீவிதா கலவரமானாள்.


"ஜீவன்! வேண்டாம்! எனக்கு பயமா இருக்கு" என்று என் காதில் கிசுகிசுத்தாள். நடுக்கத்தில் என்னை நெருங்கி பின்புறமாக இறுக்கி அணைத்தாள். பயம் வாழ்க.

"ச்சே.ச்சே.. கவலையை விடு.. நீங்கள் இந்த மரத்திற்கு பக்கத்தில் இருக்கும் பாறைக்கு மறைவான இடத்தில் பதுங்கியிருங்கள். இருக்கும் அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளின் சிக்னல்களை ஆஃப் செய்துவிடுங்கள். ஆம்பிளைத் துணையாக வண்டியோட்டி உங்களுடன் தான் இருக்கிறான். நானும் டாக்டரும் சென்று பார்த்து வருகிறோம்" என்று அவளைத் தேற்றினேன்.

வந்தவழியே அந்த ஒத்தையடிப் பாதை வழியாக நானும் டாக்டரும் அந்த மர்ம மனிதர்களாகிய ரோபோக்களை பின்தொடர்ந்தோம். அந்தப் பாதையின் விளிம்பில் காடு ஆரம்பித்தது. ஆயிரம் ஆயிரம் பாப் பாடக பாடகிகள் மேடையில் தலையை விரித்து விசிறியாட விடுவதைப் போன்று தோற்றமளித்தது அந்தக் காடு. அந்தக் காலப் பெண்டிர் சாமியாடும் போது கூட இதுபோல கருங்கூந்தலை கட்டவிழ்த்துவிட்டு தலையை உருட்டுவார்களாம். அசைவ மிருகங்கள், மாமிச பட்சிகள், அரவினங்கள் என்று அனைத்திற்கும் தங்க இலவச இடம் கொடுத்துவிட்டு அமைதியாக மூச்சுக்காட்டாமல் இருந்தது அந்த வனம். தூரத்தில் இருந்த காட்டுச் செடி கொடிகள் புடவை போல சுற்றிய மரத்தை வரிசையில் கடைசியாக சென்ற அந்த ஆளும் தாண்டிச் செல்வது தெரிந்தது. உடம்புக்கு ஆக்சிலேட்டர் கொடுத்து கொஞ்சம் வேகமாக நடையைக் கட்டினோம்.

காடுகளில் நடந்து பழக்கம் இல்லாததால் கால்கள் பின்னின. பத்து தப்படி நடப்பதற்குள் பதினைந்து அடிகள் தப்பாக வைத்தோம். சில இடத்தில் பாசி படிந்த கல் இடறி கீழே விழுந்து மூஞ்சி முகரையை பேர்த்துக் கொள்ளத் தெரிந்தோம். சில சமயம் காலில் கொடி வருடி அந்த ஸ்பரிசம் பாம்பு பயத்தை உண்டு பண்ணியது. அடர்ந்த வனத்திற்கு  நடுவே ஒரு காட்டாறு "ஷ்..ஷ்...ஷ்..." என்று எல்லோரையும் அதட்டி நுரை தள்ள தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையோரத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். ஆற்றின் வேகத்தால் உண்டான சாரல் அவர்களை நிச்சயம் நனைத்திருக்கும். ரொம்ப தூரம் வந்துவிட்டோமோ என்று அச்சப்பட்டோம். இவ்வளவு தொலைவு பின்தொடர்ந்தது வீணாகாமல் அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆர்வம் இன்னும் எங்களை பற்றி இழுத்துக்கொண்டு போனது.

சிறிது தூரம் சென்றதும் சட்டென்று ஒவ்வொருவரும் ஒரு மரத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றனர். என்ன மரம் என்று உத்துப்பார்த்தோம்.

"என்ன மரம் அது?"

டாக்டர் கண்ணாடியை தூக்கி தலைக்கு தள்ளிவிட்டு பார்த்தான்.

"மேப்பிள் ட்ரீ" என்று எனக்கு பதிலை சொல்லிவிட்டு வைத்த கண் வாங்காமல் அந்தப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு குழுவாக அவர்கள் அனைவரும் அந்த மரங்களை ஆரத்தழுவி உச்சி மோந்து கொண்டிருந்தார்கள்.

ஆச்சர்யம் மேலிட ஏன் என்ற கேள்வி என் மூளையை இரண்டு மூன்று முறை ஆங்காரமாக வலம் வந்தது. ஒன்றும் புரியவில்லை.

"ஏன் அந்த மரத்தை மூச்சு விட விடாமல் இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்?" என்று வியப்பாக கேட்டேன்.

"ஜீவ்! புரிந்து விட்டது"

"என்ன?"

"இவர்கள் சூரிய ஒளியில் இயங்கும் ரோபோக்கள். காலையில் இருந்து மாலை வரை இவர்களுக்கு வேறு சக்தி ஆகாரம் தேவையில்லை. சூரியன் மறைந்ததும் தங்களுக்கு வேண்டிய சக்தி சாப்பிட இந்த மரத்தை கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அது தனது சேய் போல இவர்களுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறது" என்று புதிர் போல சொன்னான் டாக்டர்.

"ஏய்! ஒண்ணுமே புரியலை. ஆணும் பெண்ணும் கட்டிப் பிடிச்சா மின்சாரம் வரும் அப்படின்னு கவிஞர்கள் கவிதையில புருடா விடுவாங்க. இப்ப என்னடான்னா நீ நேரே ரோபோ மரத்தை கட்டிப் பிடிச்சா அதுக்கு மின்சாரம் கிடைக்கும்ன்னு சொல்றே! அந்தக் காலமா இருந்தா இப்ப என்ன தெரியுமா உன்னை கேட்ருப்பாங்க."

"என்ன?"

"சும்மா காது குத்தாதன்னு கிண்டல் பண்ணியிருப்பாங்க!"

"இல்ல ஜீவ்! 20- ம் நூற்றாண்டிலேயே மேப்பிள் மரங்கள்ல குறைந்த வால்டேஜ் மின்சாரம் இருக்குன்னு என்னை மாதிரி ஒரு கிறுக்கு விஞ்ஞானி கண்டு பிடிச்சான்."

"இன்ட்ரெஸ்டிங்..."

"என்ன நான் கிறுக்குங்கறதா?"

"ச்சே.ச்சே.. சமாசாரம் சுவாரஸ்யமா இருக்குன்னு சொன்னேன்"

"இப்ப.. இந்த ரோபோக்கள் உள்ளே ஒரு வோல்டேஜ் பூஸ்டர் சர்கியூட் ஒன்னு தயார் செய்து மாட்டி விட்டு இப்படி காட்டுக்குள்ள உலவ விட்ருக்காங்க. நமக்கு இப்ப இது முக்கியம் இல்லை. இதுகளை யார் தயார் செய்து இப்படி அவுத்து விட்ருக்காங்க அப்டிங்கறது தான் முக்கியம். முடிஞ்சா அவரைக் கூட நம்ம போராட்டக் குழுவில சேர்த்துக்கலாம். என்ன சொல்றே"

"நிச்சயமா.. அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம்"

"வா! போய்க் கொண்டே பேசுவோம்" என்று என் தோளில் கை போட்டு திருப்பினான். பயத்தில் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.

"கவலைப் படாதே! நம்மளை சென்ஸ் பண்ற அளவுக்கு அதுங்களுக்கு இப்ப சக்தி இருக்கான்னு தெரியலை. நிச்சயம் இன்னும் ஒரு மணி நேரமாவது அவங்கெல்லாம் மூக்கு முட்ட சாப்பிட வேண்டும். அப்பத்தான் இன்னிக்கி ராத்திரி வேலை செய்யலாம்."

நிம்மதியாக நடக்க ஆரம்பித்தேன். நடுவே ஜீவிதா நினைவு வந்தது. ஒருத்திக்கு ஏழுபேராக காத்திருக்கிறார்கள். "கிர்ரக்..கிர்ரக்.." என்று கத்திக்கொண்டு இரண்டு குரங்கு குடும்பம் மரக்கிளை ரோட்டுகளில் வேறு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.

"நீ ஏதோ சந்தேகம்ன்னு கேட்ட" என்று நினைவூட்டினான் டாக்டர்.

"ம்... இப்ப இதுங்கல்லாம் இப்படி சார்ஜ் பண்ணிக்குதே. நீ இன்னொரு ஜீவிதாவை தலைநகரத்தில கண்காட்சியில விட்டுட்டு வந்திருக்கியே! அந்த ஜீவன் உள்ள ரோபோ எப்படி இப்ப நடமாடும்."

"ஹா..ஹா.. நடமாடும் போதே அது தனக்கு உண்டான சக்தியை உற்பத்தி பண்ணி சேமிச்சு வச்சுக்கும். கவலைப்படாதே. அது ஒரு Unique Design. "

டாக்டரின் மூளை என்னைப் பொறாமைப் பட வைத்தது.

"அதை ஏன் அங்கேயே விட்டுவிட்டு நாம மட்டும் இங்க வந்துட்டோம்" என்ற கேள்வி கேட்ட என்னை ஒரு பூச்சி போல பார்த்துவிட்டு

"அங்கே போய் பேசிக்கலாம்" என்று நடையை துரிதப்படுத்தினான் டாக்டர்.

நாங்கள் விட்டுவிட்டு வந்த இடத்தில் அனைவரும் பத்திரமாக இருந்தனர். மணி இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. இப்போதெல்லாம் இரவில் ஊர் அடங்கும் என்ற கலாசாரம் எல்லாம் வழக்கொழிந்து போயிற்று. நடுநிசியில் நாலாயிரம் பேர் நடமாடுகிறார்கள். இது கொஞ்சம் சிறிய ஊர் மற்றும் நண்பன் இருக்கும் இடம் கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஏரியா என்பதால் அங்கே செல்வதற்கு சிரமம் இருக்காது என்று ஜீவிதாக்களுடன் நகர்ந்தோம்.

மலையடிவாரத்தை ஒட்டிய கிராமம் அது. இன்னமும் நிறைய இடங்களில் பசுமையை தாங்கி வரம் பெற்றிருந்தது அந்த ஊர். நண்பனின் வீட்டிற்கு செல்லும் முன் போகும் வழியில் டாக்டர், என் உயிரைச் சுமந்த ஜீவிதா, அந்த மொட்டையடித்த வாகன ஓட்டி மூவரும் சிரமப்பட்டு தங்களது புஜத்தில் குத்தியிருந்த RFID ஐ சுட்டுசெயலிழக்க வைத்தார்கள். ஜீவிதாவிர்க்கு கண்ணில் நீர் வடியும்போது "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" என்று யாரோ ஒரு மீசை முறுக்கிய முண்டாசுக் கவி எழுதியதாக வலையில் படித்தது இப்போது நினைவலையில் நீந்தி வந்தது.

சாட்டிலைட் போனில் டாக்டருக்கு கால்.

"நரேன்! வந்துட்டோம்! ஜஸ் டூ மினிட்ஸ்"

என்று சொல்லி முடிக்கும் போது ஒரு பழங்கால கட்டிடம் ஒன்றின் முன்னால் நின்றிருந்தோம். முன்புறச் சுவற்றிற்கு பெயின்ட் அடித்து பல்லாண்டுகள் ஆகியிருக்கும். மாடியிலிருந்து மழைநீர் ஓடி தனது தடத்தை வெளிப்புற சுவற்றில் பதிந்திருந்தது. வலது புற சுவற்றை ஒட்டினாற்போல ஒரு இரண்டடிக்கு அரசமரக் கன்று வளர்ந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. நவயுகத்தில் ஒரு 'புது' வீடு. பத்து பேர் ஒரு கும்பலாக போக வேண்டாம் என்று முதலில் டாக்டர், நான், என் காதலி ஜீவிதாவோடு இன்னும் இரண்டு ஜீவிதாக்களை சேர்த்துக்கொண்டு ஐவராக அங்கே பிரவேசித்தோம்.

வாசலில் நிழலாடியதைப் பார்த்ததும் உள்ளிருந்து ஒரு அல்சேஷன் லொள்ளியது. கொலைவெறியில் ஓடிவந்தது. என்னை வந்து கடித்து சுவைக்கும் ஆவலில் வந்தது என்னுடைய தொடைக்கும் அதன் வாய்க்கும் அரை இன்ச் இடைவெளியில் அசையாமல் நின்றது. எனது சென்ற உயிர் மீண்டு வந்தது. என்ன ஆயிற்று என்று குனிந்து பார்க்கையில் ஒரு நீல நிறத்தில் திரை போல அந்த வீட்டின் வலது சுவற்றிலிருந்து இடது பக்கம் வரை ஓடிக்கொண்டிருந்தது. மிகத் துல்லியமாக அந்த மின் காந்த வேலிக்கு அரை இன்ச் முன்னால் இருந்ததால் தப்பித்தேன்.

நரேன் நரம்பாக வெளியே வந்தார். பார்த்தாலே அவர் பழமை விரும்பி என்று தெரிந்தது. ஒரு காவி வேஷ்டியும் மேலுக்கு கதர் சட்டையும் அணிந்திருந்தார். நிர்வாண உலகத்தில் கோவணாண்டி பைத்தியம் என்கிற ரீதியில் இந்த 2199- ல் அளவுக்கு மீறி வித்தியாசமாக இருந்தார். நகரத்திற்கு ஒதுக்குப் புறமான ஊர். ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடு. எல்லோரையும் விட்டு விலகியே இருந்தார். கண்கள் பிரகாசமாக இருந்தது. நாசி கூராக அவர் பிராணாயாம பயிற்சியை பறை சாற்றியது. அவர் எதையும் கூர்ந்து கவனிப்பவர் என்பதால் காது இரண்டும் உள்பக்கம் மடங்கி இருந்தது. ஆழ்ந்து யோசிப்பதினால் நெற்றியில் குறுக்குமடுக்காக ஐந்தாறு ரேகைகள் ஓடியது.

"ப்ளீஸ் கம். ப்ளீஸ் கம்." என்று வரவேற்றார்.

"நல்லவேளை! இந்த நாய் விழுந்து பிடிங்கியிருக்கும்." என்று பயத்தில் உதறிய உடம்பை சீராக்கிகொண்டு பேசினேன்.

"கவலைப்படாதீங்க. இந்த மின்காந்த வேலியோட ரிமோட் என் கையில இருக்கு. சரியான நேரத்தில நான் பார்த்து ஆன் செய்தேன்."

"இவ்ளோ ரிமோட் பிளேஸ்ல இருக்கீங்க. இது மாதிரி லேட்டஸ்ட் சமாச்சாரம் எல்லாம் யூஸ் பண்றீங்க" என்று கேட்ட என்னை ஒரு அசடு போல பார்த்தார். பின்பு பக்கத்தில் நின்ற டாக்டரை ஜாடையாய் பார்த்தார்.

"என்னோட பிரண்ட் சாருக்கு இம்ப்ளிமென்ட் பண்ணிக்கொடுத்தான். இது போல இன்னும் நிறைய ஆச்சர்யம் உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கு." என்று டாக்டர் சொல்லிமுடிக்கும் வேளையில் எங்களின் அடுத்த குழு வந்து சேர்ந்தது.

இரண்டாவதாக வந்த குழுவில் எனக்கு ஏதோ ஒன்று இடறியது. என்ன என்று யோசித்துப் பார்த்ததில்.. ஆ.....ஒரு ஆள் மிஸ்ஸிங். பயத்தில் மனது திக்கென்று ஆனது. "டா..டா..டா...."

தொடரும்....

பட உதவி: dualmonitorbackground.com மற்றும் http://desktopro.com/
-


Tuesday, April 26, 2011

சிலிகான் காதலி - IV

இந்தக் கதையில் இப்போது நான்காவது ஸி.டி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் மூன்று ஸி.டியின் சுருக்கம் கீழே.

முதல் ஸி.டி: ஜீவன் தேடிய ஜீவிதா
மூன்றாவது ஸி.டி: அவள் இல்லை என்று தெரிந்ததும் துரத்தும் போலீசிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த ஜீவனை அப்படியே அள்ளி போட்டுக்கொண்டு போன வான ஊர்தி.

இனி...

****************** நான்காவது ஸி.டி *****************
scifi2


.....உள்ளே பார்த்து பிளந்த வாயை மூட முடியாமல் அசந்து போனேன். கண்ணாடி மாளிகையில் ஒருத்தி ஒன்பது பேராய் தெரிவது போல சேர்ந்தார்ப்போல ஆறேழு ஜீவிதாக்கள் என் கண்ணெதிரே சிங்காரமாய்த் தோன்றி என்னைத் திணறடித்தார்கள். காதல் புறா, பேசும் கிளி, பாடும் குயில், ஆடும் மயில் போல ஒன்றுக்கு ஒன்று வித்தியாசம் தெரியாமல் ஏழு புத்தம் புது ஜீவிதாக்கள். பாலிஷ் போடப்பட்ட பளிங்கு சிலைப் போல மேனியில் முகம் பார்த்து தலைவாரிக் கொள்ளும் வண்ணம் பளபளப்பாக இருந்தார்கள். ஒருத்தி என்னை பார்த்து மந்தகாசப் புன்னகை வீசினாள், இன்னொருத்தி ஒரு மூலையில் அடக்கமாக உட்கார்ந்து கொண்டு கை நகத்திற்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தாள்.

வேறொருத்தி கையில் இருந்த அலைபேசி ஸ்க்ரீனில் யாரோடோ முகத்துக்கு முகம் பார்த்து சிரிக்க சிரிக்க அரட்டை பேசிக்கொண்டிருந்தாள், ஒருத்தி லஜ்ஜையே இல்லாமல் நான் கண்ணை உயர்த்தி பார்க்கும் உயரத்தில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். என் கண்ணை கீழேயே இறக்கவும் விடாமல், இமைக்கவும் விடாமல் காலை ஆட்டிக் கொண்டிருந்தாள். பார்த்த என் கண் அங்குமிங்கும் இளமை ஊஞ்சல் ஆடியது. கேடுகெட்ட என் இதயமும் சேர்ந்து பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் ஒரு அழகான டிசையனில் ஆர்டர் செய்து வாங்கிய ஹியுமனாய்ட் ரோபோ போல அம்சமாக இருந்தார்கள்.

வனப்பும் வயதும் யாரையும் ஒரு கை பார்த்துவிடும் வலிய மோகனாயுதங்கள். எனக்கு எங்கேயோ இடறியது. அளவுக்கு மீறி என் ஆசை ஜீவிதாக்கள் அங்கே இரைந்து கிடந்தது அமிர்தமும் நஞ்சாக மாறியது போன்ற உணர்வு. எனக்கு புரிந்துவிட்டது. அந்த டாக்டர் பாவியை தேடினேன். என்னுடைய "அனைத்து அழகு விகிதாசாரக் கலப்புப்" பெண்ணை டெம்ப்ளேட் எடுத்து கூவிக் கூவி விற்க ஆரம்பித்துவிட்டானா? என்னை வாரி இழுத்து உள்ளே போட்டது யார்? ஜீவித மயக்கத்தில் இருந்து விடுபட்டு இப்போது தான் விழித்தெழுந்தேன். முன்னும் பின்னும் மலங்கமலங்க பார்த்தேன். அந்தப் பெண்டிரைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை. அந்த ஊர்தியின் முன்கண்ணாடி வழியாக எக்கிப் பார்த்ததில் நகரத்தை தாண்டி வெளியே வெகு தொலைவு வந்துவிட்டோம் என்று மட்டும் தெரிந்தது. கட்டிடங்கள் முப்பது நாற்பது மாடிகளுக்கு மிகாமல் மிகவும் குள்ளமாக இருந்தன. பக்கத்தில் வந்த ஒரு ஜீவிதா லேசாக இடுப்பு பக்கம் இடித்த மாதிரி தெரிந்ததும் பதறிப் போய் விலகினேன். ஒரு கற்புக்கரசனை கண்டமேனிக்கு சோதிக்கிறார்கள்!!

கண்ணைக்கட்டி ஜீவிதாக்கள் கூட்டத்தில் விட்டது போல நினைத்துக் கொண்டு திரும்பியதும் தான் அவனைப் பார்த்தேன். குறுந்தாடியும் கையில் ஒரு பாம் டாப் சகிதம் சிரித்துக்கொண்டே அந்த வானூர்தியின் முன்பக்க அறையில் இருந்து பந்தாவாக வெளியே வந்தான். கண்ணுக்கு கருப்பு கண்ணாடி மாட்டிவிட்டிருந்தான். தலையெங்கும் சின்ன சின்ன குச்சி ஆண்டேன்னாக்கள் போல சிகையலங்காரம் செய்திருந்தான். கன்னம் வரைக்கும் நீண்ட இரு கிருதாக்களும் சிகப்பு வண்ணத்தில் டேஞ்சர் என ஒளிர்ந்தது. மீசை இல்லாமல் கீழ் உதட்டுக்கு கீழே வண்டு ஒட்டினாற்போல கொஞ்சம் மயிர் வளர்த்திருந்தான். வாயில் சூயீங் கம் ஒன்றைப் போட்டு தாவாங்கட்டையை சதா அசைத்துக்கொண்டே இருந்தான். க்ளோனிங் மற்றும் பயோ டெக்னாலஜியில் அசகாய சூரன். கல்லூரியில் முழுப் பரீட்சைக்கு விடைத்தாளில் பதிலுக்கு பதில் ஆய்வுக்கட்டுரை எழுதிய படிப்பாளி. பேனைப் பெருமாளாய் மாற்றும் தந்திரம் தெரிந்த படைப்பாளி. பயோ டெக்னாலஜியை கரைத்துக் குடித்து அரசாங்கத்திற்கு தெரியாமல் கள்ள கிளினிக்கும் வெளியே வெள்ளைக் கோட் போட்ட நல்லவனாகவும் வாழ்ந்து வந்தான்.

"ஹாய் ஜீவன்!" என்று துள்ளிக் கொண்டு உற்சாகமாய் வந்தான்.

"ஏய்! என்ன இது. கலர்க்கலரா இவ்ளோ பேர் ஒரே மாதிரியா.."

"எல்லாம் உனக்காகத்தான் ஜீவ். பார்த்தவொடனே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதா? ஏழு நாளுக்கு ஏழு ஜீவிதா. தி ஹோல் லாட் இஸ் யுவர்ஸ். டேக் இட்!! ஜஸ்ட் என்ஜாய் ஐ சே!"

கால் சுண்டு விரலில் நகப் பாலிஷ் போட்டுக்கொண்டிருந்த வேறொரு ஜீவிதா தலையை தூக்கி நேராக நிமிர்ந்து கண் அம்பை தொடுத்தாள். அவளின் கண் சூடு பட்டு எனக்கு ஜுரம் வந்துவிடும் போல இருந்தது.
"என்ன நக்கலா? நான் கொடுத்த டிப்ஸ் என்னுடைய காதலிக்கு மட்டும். நீ என்னடா என்றால் ஊரில் உள்ள..." என்று இன்னும் ஒருமுறை பெடஸ்டல் ஃபேனைப் போல கழுத்தை உருட்டி எழுவரையும் பார்த்துக்கொண்டே இழுத்தேன்.

எனக்கு எதற்கு எடுத்தாலும் இருநூறு வருடங்களுக்கு முந்தைய வாசனை தான் அடிக்கிறது. சில சமயங்களில் கடும் பசிக்கு இவர்கள் 'போஜன்' மாத்திரை சாப்பிடும் போது வாழை இலையில் நீர் தெளித்து அரிசி என்ற பதார்த்தை தக்காளியை நசுக்கி புளிக் கரைத்த ரசம் என்பதை ஊற்றி கையால் பிசைந்து சுருட்டி எடுத்து வாயில் தள்ளி "ஸர்ப்..ஸர்ப்... " என்று உறிஞ்சி சாப்பிடுவது எனக்கு Virtual Reality-யாக தெரிகிறது. என்னுடைய மூன்றாம் தலைமுறை தாத்தா ஒரு சோற்றால் அடித்த சுவரு என்று என் மூ.தல.பாட்டி திட்டுவதை என்னுடைய "தலைமுறை கலெக்ஷன்" ப்ளூ ரே டி.வி.டியில் பழைய அமுதாய் சேமித்து வைத்திருக்கிறேன்.

"இன்னும் என்ன மாசத்துக்கு ஒரு ஜீவிதா வேணுமா? இல்ல. வருஷம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒரு ஜீவிதா வேணுமா ? சொல்லு..சொல்லு.. சீக்கிரம் சொல்லு.."

"ஏய் உன் கிண்டல் பேச்சை நிப்பாட்டு. என்ன இது விளையாட்டு?" என்று ஒரு ஓரத்தில் நின்ற சப்தகன்னிகளில் ஒருத்தியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே டாக்கை பார்த்து பல்லைக்காட்டாமல் முறைத்தேன்.

"எவ்வளவு நாள் உன் காதல், உன் குடும்பம், உன் அப்பார்ட்மென்ட், உன் பி.ஸி, உன் ரேஷன், உன் ரோபோ என்று சுயநலமாய் இருப்பாய் மகனே. கொஞ்சம் எல்லோருக்காகவும் பொதுநலமாக இருப்போமே!" என்று அந்தக்கால வெள்ளை சொள்ளை அரசியல்வாதிகள் போல குட்டிப் பிரசங்கம் செய்தான்.

"கிழிஞ்சுது போ!" என்று முணுமுணுத்தேன் நான்.

"என்ன..என்ன... சொன்னே"

"இல்ல... இங்க ஏழு பேரை வச்சுருக்கியே இதுல எதுவுமே என்னோட ஆள் இல்லையா?" என்று ஏக்கத்துடன் வினவினேன். இல்லை என்று சொல்லி என் நெஞ்சில் அமிலத்தை அள்ளி ஊற்றிவிடப் போகிறான் என்று பயந்தேன்.

"ஹ்...ஹ்" என்று வாயிலிருந்து காற்று மட்டும் வெளியே வர சிரித்தான்.

"அப்ப நான் கலகலன்னு கண்ணுக்கு குளிர்ச்சியா காய்கறி கண்காட்சியில பார்த்தது யாரு...சொல்லு...."

"அது ஒரு ரோபோ!" என்று சொல்லிவிட்டு எகத்தாளமாக சிரித்தான். நான் அதிர்ந்துவிட்டேன்.

"பொய் சொல்லாதே!"

"இல்ல ஜீவன். அது ஒரு ரோபோதான்."

"அவள் மேல் கொலோன் வாசனை அடித்தது. கைகள் வழுவழுன்னு வழுக்கியது. மேல்சட்டைக்கு கீழே இடுப்பில் ஒரு சின்ன மடிப்பு இருந்தது. கைகளில் பூனை ரோமம் இருந்து. நீலக் கண்ணால் என்னைப் பார்த்து "நீ யார்?"ன்னு ஸ்பஷ்டமாக பேசினாளே!"

"ஹி..ஹி.. அவளுக்கு இரண்டு லிட்டர் கொலோன் ஊசியாய் ஏற்றியிருக்கிறேன். இன்னும் ஐந்தாறு வருடங்கள் அதே வாசனையாய் இருப்பாள். குளிக்காவிட்டால் கூட. மொழிப் பயிற்சி கொடுப்பது பற்றி எல்லாம் உனக்கு தெரியும். என்ன என்னவென்று கேட்டு நேரத்தை வீணடிக்காதே"

"ஏய் என்ன இது.... இன்னும் இருபது நாளில் அவளும் நானும் கல்யாணம் செய்து கொண்டு தேனிலவிலிருந்தே பால் நிலாவில் குடியேறலாம் என்று கனாக் கண்டு கொண்டிருந்தோம். இதோ பார் நிலாவுக்கு போவதற்கு பாஸ்போர்ட் கூட ரெடி பண்ணிட்டேன். என்னுடன் படித்தவன் அங்கே ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறான். ஏற்கனவே நாடெங்கிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்து தடை செய்யப்பட்ட க்ளோனிங் டெக்னாலஜி ப்ராக்டீஸ் பண்ற கேடி டாக்டர்ன்னு உன்னையும் என்னோட காதலிக்காக நான் உனக்கு கொடுத்த ஸ்கரிப்ட்டுக்காக என்னையும் நிக்க விடாமா துரத்தி துரத்தி தேடறாங்க. இனிமே இந்த கிரகத்தில எனக்கு என்ன வேலை. அதான் அவளோட ஓடிடலாம்ன்னு பார்த்தா..... நீ இப்படி புது மாதிரி படுத்தறே!... என்னோட ஜீவிதா எங்கே. ப்ளீஸ் சொல்லு... "

"உன்னோட பினாத்தலை கொஞ்சம் நிறுத்தறியா? இனிமே நீ நிலாவுக்கெல்லாம் போக முடியாது. இந்த நாட்டின் ஒட்டு மொத்த போலீசும் உன்னையும் என்னையும் கண்ல காண்டாக்ட் லென்ஸ் வச்சுக்கிட்டு தேடிக்கிட்டு இருக்கு. இப்ப நாம செய்யப்போறது இந்த நாட்டுக்கு ஒரு விடிமோட்சம் கிடைக்கக் கூடிய தீர்வு. எவ்ளோ நாளைக்கு இந்த இயந்திரங்கள் கூடவும் செயற்கைத்தனமான சாதனங்கள் கூடவும் வாழ்க்கை நடத்தறது உனக்கே சலிப்பா இல்லை. இதை விட்டு வெளியே போக முடியாத அடிமை ஜனங்களுக்கு எப்போ விடுதலை.. நாம காப்பாத்தலைன்னா அப்புறம் யார் செய்வாங்க..." என்று ஆரம்பித்து நிறைய புரட்சிகர வாசகங்கள் உள்ளடக்கிய உணர்ச்சிப் பிழம்பாக பேசினான். அவன் பேசப் பேச எனக்கு வேறு ஒரு உலகம் தெரிய ஆரம்பித்தது. சுற்றிலும் அந்த ஏழு மாந்தர்களும் கண் கொட்டாமல் காதைத் தீட்டிக்கொண்டு உண்ணிப்பாக கேட்டார்கள்.

"சரி.. புரிந்தது" என்று நான் தலையாட்டியவுடன் அவனுடைய கருத்தரங்கத்தை ஏதோ ஒரு பானத்தை அருந்தி முடித்துக்கொண்டான்.

"எங்கே என் ஜீவிதா?" என்று மீண்டும் கேட்டேன். மனது அலைபாய்ந்தது.

"அதோ" என்று அவன் கைகாட்டிய திசையில் இருந்த அந்தக் குழுவிலிருந்து அன்றலர்ந்த தாமரை போல ஒருத்தி வந்தாள். கரம் சேர்க்கையில் உள்ளுணர்வு என்னை உலுக்கி "இவளே உன் காதலி" என்று. மல்லிகை மணம் மூக்கைத் துளைத்தது.

"ம்.. இவள் தான்..." என்று என்னவளை எனக்கு அடையாளம் காட்டினான்.

"மல்லிகை மணம் வீசும் வாசனைக் குப்பியை கொடுத்து பூசிக்கொள்ள சொல்லியிருக்கிறேன். இல்லையேல் நாம் குழம்பிவிடுவோம்." என்று கூறி குபீர் சிரிப்பு சிரித்தான்.

"ஒரு சந்தேகம்" என்றேன்.

"என்ன?"

"பிரஜா எண் இல்லாமல் இவர்கள் எப்படி இத்தேசத்தில் குடியிருப்பார்கள்? அந்தக் கண்காட்சியில் பார்த்தவளுக்குக் கூட ஒரு எண் இருந்ததே!"

"இறந்தவளுக்கு எண் உயிரூட்டினேன்."

"விளங்கவில்லை"

"இறந்து போன ஒரு பெண்ணின் பிரஜா எண்ணை அரசு மக்கள் தொகைக் காப்பக டேட்டாபேசில் இருந்து எடுத்து அந்த கண்காட்சிகாரி ரோபோவுக்கு ALIVE என்று அசைன் செய்துவிட்டேன். சிம்பிள்."  என்று இரு தோள்களையும் குலுக்கினான்.


விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. ஒவ்வொன்றாக எனக்கு புரியவைத்து மெதுவாக பறந்து இருட்டும் நேரத்தில் தேனீக்கு பக்கத்தில் கட்டக்குடி வனத்துக்கு மத்தியில் இன்னமும் யாராலும் ஆக்கிரமிக்கப்படாத ஒரு குக்கிராமத்தில் வந்திறங்கினோம். எனது மனசு கைதட்டி கும்மாளமிட்டது. வாய் விசிலடித்தது. இப்படி ஒரு இடத்தை என் வாழ்நாளில் முதன் முறையாக பார்க்கிறேன். அந்த இடம் பூலோக சொர்க்கமாக இருந்தது எனக்கு. டாக்டரின் நண்பன் ஒருவன் எங்களுக்கு ஒத்துழைக்க ஒத்துக்கொண்டிருந்தான். காட்டில் வாகனத்தை இரு பெரிய பாறைகளுக்கு நடுவில் மறைவாக பார்க் செய்திருந்தோம். எந்த புத்திசாலி ராடாரையும் ஏய்ப்பதர்க்காக அதனுடைய அனைத்து சென்சார்களையும் அணைத்துவிட்டோம்.

ஒரு  நிஜ ஜீவிதா மற்றும் ஆறு நிழல் ஜீவிதாக்களோடு நானும் வாகன ஓட்டியும் டாக்டரும் அவருடைய சிநேகிதன் இருப்பிடத்திற்கு அந்த ஒத்தையடிப் பாதை வழியாக ஒரு சில மூட்டை முடிச்சுகளோடு சென்று கொண்டிருந்தோம். அப்போது......

விஞ்ஞானம் வளரும்...

பட உதவி: dualmonitorbackground.com மற்றும் http://desktopro.com/

-

Monday, April 25, 2011

சிலிகான் காதலி - III

முன்னாலே...முன்னாலே...
இன்னும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் இயந்திரமயமாகிப் போன ஒரு உலோக உலகில் ஆசாபாச உணர்வுகளோடு தவித்த ஜீவன் என்ற மானிடன் தனது காதலியைக் காணாமல் தவித்தான். அவன் செய்த ஒரு குற்றத்திற்காக போலீசார் வேறு அவனைத் துரத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவன் தப்பித்து ஓடி ஒரு காய்கறி கண்காட்சியில் ஒளிகிறான். அங்கு அவனது காதலி போலவே ஒருத்தியைப் பார்த்து பின்னால் சென்று துரத்தித் தோளைத் தொட்டு திருப்புகையில்.....

இனி....
********************** மூன்றாவது ஸி. டி **************************

city

ஆ.. அவளேதான்... இன்பத்தில் பலமுறை நடனம் ஆடியது எனது காதல் வசப்பட்ட இதயம். மூச்சடைக்கும் விதமாக மேலாடை உடுத்திருந்தவளை பார்த்து தித்தித்த என் மனசு உச்சுக் கொட்டியது.  என்னைச் சுற்றிலும் கூட்டமாக இருந்த நிற்பது, நடப்பது, பறப்பது எல்லாம் மாயமாய் மறைந்து காற்றில் கரைந்து போனது. இந்த ஷணத்தில் என் மனதில் போலீஸ் பயம் விலகி மாவீரனாய் விஸ்வரூபம் எடுத்து நின்றேன்.

"மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" எப்போதோ எங்கேயோ தட்டுக்கெட்டு நெட்டில் பார்த்த வாசகங்கள் இப்போது எட்டிப் பார்த்தன. அவள் முன்னே நான் தனியாளாய் எங்கள் இருவருக்குமான அந்தரங்க லோகத்தில் ஆனந்தமாக சஞ்சரித்தேன். இந்தப் புற உலகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எலக்ட்ரானிக் கருவிகளின் முடிவில்லா "பீக்.பீக்.பீக்."குகள் எனது செவியில் இப்போது ஏறவில்லை. அவளின் கருநீலக் கண்ணோடு என் செவ்வரி ஓடிய கண் சேர்த்துப் பார்த்தேன். அவளின் மிருதுவான பட்டுக் கையோடு என் முரட்டுக் கையை கோர்க்கப் போனேன். அருகில் நெருங்கி அவள் தடவியிருந்த கொலோன் வாசனையை மூக்கில் பிடித்து 

"ஜீவிதா!" என்று கண்கள் சொருகி அடிக்குரலில் ரொமாண்டிக்காக கூப்பிட்டேன். கடைசி 'தா' அவள் காதுகளை அடையும் முன் நிச்சயம் அவள் காலடியில் சரணாகதி அடைந்திருக்கும். என்னைப் போல.

"யார் நீ?" என்று காட்டுக் கத்தலாக கத்தி சட்டென்று தோளை உதறி விடுவித்துக் கொண்டு என் மீது எரிந்து விழுந்தாள்.

கோபாக்கினியில் அவள் முகம் சிவந்தது. அவளது சிவந்த முகம் கண்டு என் மனசு குபீர் என்று நெருப்புப்பொறி கண்ட எரிவாயு போல பற்றிக்கொண்டது. பக்கத்தில் நடந்து சென்ற ஒரு ஜோடி இளக்காரமாய் திரும்பிப் பார்த்தது. அரை நொடியில் பளிச் என்று ஒரு மின்னல் என் பின்புறம் வெட்டியது. நிதானத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தேன். ஏதோ ஒரு மீசை வைத்த டிராயர்-சட்டை தலைக்கு கிளிப் குத்திக்கொண்டு மேடிட்ட சட்டை உடுத்தியிருந்த மீசையில்லாத டிராயர்யை ஃபோட்டோ எடுத்திருந்தது. ச்சே. யாரும் டிஜி ஸ்கேன் செய்துவிட்டார்களோ என்று பதறிவிட்டேன்.

"ஜீவிதா, நான் ஜீவன். உன்னுடைய காதலன். உன்னுடைய இதயத்திற்கு சொந்தக்காரன். இவ்வையகத்தில் இப்போது அருகிவிட்ட ஆண்-பெண் திருமணத்தை தட்டி நிமிர்த்தப் போகிற நிஜமான உயிருள்ள லவ்வர்ஸ் நாம்."

"யாருடைய ஜீவன்? எந்த ஜீவன்?" என்று அடுக்கு மொழிகளில் அதிகார தோரணையில் காதைப் பொத்திக்கொண்டு கண் மூடி சுடு கேள்விகள் கேட்டாள்.

"நீயும் நானும் உன் கல்லூரி கம்ப்யூட்டர் லைப்ரரியில் பார்த்துக்கொண்டோம். கான்டீனில் பழகினோம். ஓடும் பஸ்ஸில் காதலித்தோம். ஒருநாள் உன் கை பட்ட ஸ்பரிசத்தில் என்னுள் மின்சாரம் பாய்ந்து அந்த கணத்தில் இருந்து உன்னுள் குடி வந்துவிட்டேன். ஞாபகம் இல்லையா?" கெஞ்சினேன். என் நாக்கு வறண்டது. தொண்டை கமறியது.

என்னையே சிறிது நேரம் வெறித்து பார்த்தாள்.
வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர் போல தடுமாறியது எனது உள்ளம். மூளைக்குள் யாரோ "டர்.....ர்ர்ர்ர்ர்ர்ர்"ரென்று சுழன்று இங்குமங்கும் மோட்டார் போட் விட்டார்கள். உணர்வுகள் செத்துவிட்ட இந்த ரோபோக்களின் ராஜ்ஜியத்தில் இவளிடத்தில் இதை எதிர்பார்க்கக் கூடாதோ? சந்தேகத்தில் கண்களை கசக்கி விட்டு மீண்டும் ஒரு முறை அவளை உற்றுப் பார்த்தேன். கட்டுப்பாட்டில் இல்லாத என்  பார்வைகள் அவளைத் தகாத இடங்களில் துளைத்ததும் என்னைப் பார்த்து முறைத்தாள்.

"ஏய்... யார் நீ? ஏன் என் பின்னால் சுற்றுகிறாய்? எங்கெங்கோ பார்க்கிறாய்? சித்த ஸ்வாதீனம் இல்லாதவனா? அல்லது அரசாங்கத்தால் மூளை உருவப்பட்டவனா?" என்று சரமாரியாகக் கேள்வி புல்லட்டுகளால் என்னைச் சுட்டுச் சல்லடையாகத் துளைத்தாள். என் மார்பு பிரதேசத்தை ஊடுருவி ஒளி சிறு சிறு புள்ளிகளாக எனக்கு பின்னால் தரையில் டிஸ்கோ ஒளி வட்டமாக இரைந்தது கிடப்பது போன்ற ஓர் உணர்வு.

"ஜீவிதா! நான் உன் காதலன். உன்னுடைய ஒவ்வொரு அங்கத்திற்கும் ராப்பகலாக இன்டர்நெட்டில் இடுப்பொடிய உட்கார்ந்து மாடல் தயாரித்து கொடுத்தவனே நான் தானே! பக்கத்தில் உட்கார்ந்து டீ போட்டுக் கொடுத்தாயேடி. உன்னை ஒரு ஹவர் கிளாஸ் போல வடிவமைக்கப் படாத பாடுபட்டவன். என்னால் தானே நீ இந்த அழகு பெற்றாய். என்னைத் தெரியாது என்று மட்டும் சொல்லிவிடாதே" என்று அவளுக்கு நான் எழுதிய சாஃப்ட்வேர் பற்றியும் என் பாண்டித்யத்தை பற்றியும் சொல்லி மன்றாடினேன்.  ம்ஹும் அவள் மசியவில்லை.

உச்சி வெய்யில் ஏறி மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது. இவள் வேறு ஏற்கனவே என் நெஞ்சத்தை பிளந்துவிட்டாள். "சொய்ங்...சொய்ங்..சொய்ங்.." என்ற சைரன் ஒலி என் காதைப் பிளந்தது. ஆகாயமார்க்கமாக அவர்களும் வந்து என்னுடைய தடம் தெரிந்த கடைசி இடமாகிய இந்த கண்காட்சியில் வந்து இறங்கி விட்டார்கள். கடமையும் பொறுப்பும் நிறைந்த உத்தமர்கள். இந்த மாதத்தில் எவ்ளோ திருடர்கள் பிடித்தார்கள், எவ்ளோ ரோபோ கடத்தல்காரர்களை கவர்ந்தார்கள், எவ்ளோ திருட்டு க்ளோனிங் டாக்டர்களை இழுத்து வந்தார்கள் என்று அவர்களுக்கும் டார்கெட் இருக்கிறது. எல்லாவற்றிலும் கணக்கு பார்க்கிறார்கள்.

கடகடவென்று என் சட்டைப் பையை தடவிப் பார்த்தேன். லோக்கல் கள்ள மார்க்கெட்டில் தயாரான பிரஜா எண் காட்டும் கருவி. அரசாங்கம் வைத்திருக்கும் அதே வேலைகளை இதுவும் செய்யும். முன்னால் ஒட்டியிருக்கும் ஹோலோக்ராம் மட்டும் வேறே! இடதுக் கை பெருவிரலை அதன் மேல் வைத்து அழுத்தினால் டிஸ்ப்ளேயில் அவர்களது எண் தெரியும். அவள் கையை இழுத்து விரலை வைத்துப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். என் மீதிருக்கும் பயத்தில் அவள் ZZZ என்று அலைபேசியில் தட்டினால் ஐந்து நிமிடத்திற்குள் அவள் இருக்கும் இடத்திற்கு ஒரு சேனையாக கிளம்பி வந்துவிடுவார்கள் காவலோத்தமர்கள். அந்தக் காலத்தில் நூறோ, இருநூறோ கொடுத்து 'கவனித்தால்' கண்டுக்காமல் சென்று விடுவார்களாம். ஹும்.. அது அந்தக் காலம். இனி தாமதித்து பிரயோஜனம் இல்லை. சீக்கிரம் வேலையை முடி என்ற கட்டளை எழுந்தது.

"ஸாரி மேடம்!" என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு கையை இழுத்து விரலை என் கருவியில் வைத்தேன். அது நீலக் கலரில்

3ffe:1900:4545:3:200:f8ff:fe21:67cf 

என்று கண்ணடித்து காண்பித்தது. 'ஓ' வென்று வாயெடுத்து அலறிவிட்டேன். இது அவள் இல்லை.  கையை இழுக்கும் முன் போட்ட அந்த ஸாரியை இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக ரிப்பீட்டினேன்.  விடு ஜூட்! எடுத்தேன் ஓட்டம். என் மூளை குழம்பியது. எங்கோ தவறு நடந்திருக்கிறது.

ஒவ்வோர் பிரஜைக்கும் ஒரு Hexadecimal IPயை பிரஜா எண்ணாக வைத்திருந்தார்கள். இது எங்கள் நாட்டிற்கு மட்டும் இருக்கும் எண் அல்ல. இந்த அண்டசராசரத்தின் ஒவ்வோர் மூலையில் இருக்கும் மக்களுக்கும் இது போல ஒரு எண் பொருந்தும். பாக் ஜலசந்தியில் கப்பலில் பயணிக்கும் தின்னவேலி பக்கத்து கல்லிடை கிராம சிறுவனுக்கு கூட ஒரு நம்பர் உண்டு. பிறந்தவுடன் மருத்துவமனைகளில் புகுந்து கைகால் ரேகைகளையும் கண்களின் ரெடினாவையும் எடுத்து சேர்த்து வைத்து ஒரு சீரியல் நம்பர் போல கொடுக்கிறார்கள். 340,282,366,920,938,000,000,000,000,000,000,000,000 ஜீவராசிகளுக்கு இப்படி பிரத்யேக நம்பர் வைக்கலாம். இரத்தின சுருக்கமாக சொல்வதென்றால் இந்த உலகின் மெம்பர்கள் அனைவருக்கும் ஒரு நம்பர். இதிலேயே நூதன பித்தலாட்டங்கள் நடக்கின்றன. மனிதன் கண்டுபிடித்ததை அதே மனிதனே அழிக்கிறான். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.


பின்னால் என்னை துரத்துகிறார்கள். எந்நேரமும் என்னை நெருங்கலாம். அரசு மைய ஆஸ்பத்திரிக்கு என்னை இழுத்துச் சென்று படுக்கவைத்து என் மூளையை ஓட்ட நறுக்கி எடுத்து விட்டு அந்த இடத்தில் சில்லு பதித்து மனித ரோபோவாக மாற்றலாம். பதித்த சில்லு அவர்கள் சொல்லுவதை அடி பிறழாமல் செய்து நடைப்பிணமாக என்னை ஆக்கலாம். அரசு கருவூலத்தில் நோட்டு என்னும் வேலைக்கு ஒரு ஓரத்தில் தரையில் சம்மணமிட்டு உட்கார்த்தி வைக்கலாம். சாப்பிடு சொன்னால் சாப்பிடலாம். தூங்கு என்றால் தூங்கலாம்.

இப்போதெல்லாம் யாருக்கும் சிறைவாசம் கிடையாது. மரண தண்டனை கிடையாது. தக்க தண்டனை தருவதற்கு மருத்துவ வில்லன்கள் போதும். போன வாரம் காலேஜ் செல்லும் பெண் பிள்ளையை பார்த்து விஷமம் செய்தவனை கொண்டு போய்  'காம்னோ' அறுவை சிகிச்சை செய்தார்கள். அண்ணனுக்கு இனிமேல் 'அந்த' ஆசையே துளிர்க்காத மாதிரி காமத்தையும் காதலையும் தூண்டும் ஹார்மோன்கள் அனைத்தையும் மொத்தமாக உருவி ஒரு குடுவையில் அடைத்து ஹார்மோன் வங்கியில் சீலிட்டு அடைத்துவிட்டார்கள். தெருவில் வயசுக்கு வந்தப் பெண்களுக்கு தைரியமாக அவனை பாதுகாப்புக்கு வைத்துவிட்டு பெற்றோர்கள் டாட்டா செல்கிறார்கள். இப்போது கா மற்றும் கா இரண்டிலும் மலடனாக வீதிகளில் திரிகிறான்.

நான் ஒரு கன்னியின் விருப்பமில்லாமல் அவள் பூங்கரம் பற்றி இழுத்திருக்கிறேன். இதற்கு என்ன தண்டனையோ தெரியவில்லை. கவர்ன்மென்ட் வெப் சைட்டில் விலாவாரியாக போட்டிருப்பார்கள். அந்த கண்காட்சியின் ஒவ்வொரு சாரியின் வழியாக ஜன நெருக்கடி மிகுந்த இடங்களில் புகுந்து புகுந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தேன். இன்னமும் இவ்வளவு பேர் சைவம் சாப்பிடுவது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. மரம் செடி கொடிகள் வளர்வது பிரம்மப்ரயர்த்தனமாக இருக்கும் இவ்வேளையில் இக்கடைகளில் வரிசையில் நின்று மரக்கறி புசிக்கிறார்கள். கஷ்டப்பட்டு வளர்ந்த காய்கள் அவர்களை மன்னிக்கட்டும்.

காய்கறிக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருந்தது. பெண்களின் விரல் நீளத்திற்கு கொண்டையில் சிகப்பாக நெயில் பாலிஷ் போட்டது போன்ற வெண்டைக்காய்கள் கிலோ கிலோவாக விற்றார்கள். அந்தக் கடையில் கூட்டம் அலைமோதியது. எவ்வளவோ விஞ்ஞானத் தொழில்நுட்பங்களில் இந்த தேசம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் 'தன்' நிறைவு பெறாத ஒரு விஷயமாக இன்னமும் ஆண்-பெண் உறவு நிலவுகிறது. மாறாக ப்ரோக்ராம் செய்யப்பட ரோபோக்கள் நம்மை அதன் அன்பிலும் பாசத்திலும் குளிப்பாட்டுகின்றன. இரும்பு இயந்திரங்கள் எல்லா இடத்திலும் ஆட்சி புரிந்தன. மிகவும் நமைச்சல் எடுக்கும் குஜால் அன்பர்கள் ரோபோக்களின் தானியங்கி உல்லாச விடுதிகளுக்குச் சென்று சுகமாக வார்ப்பிரும்புகளில் வகையாக ரத்தம் வர சொரிந்து கொண்டார்கள்.

இந்தக் கண்காட்சி கூட்டத்தில் சரி பாதி மெட்டல் மனிதர்களும் உலவினார்கள். ஏதாவது ஒரு ரோபோவின் கட்டுப்பாட்டுக்குள் ரேடியோ அலைவரிசையில் அணிமா சக்தி போல உள்ளே நுழைந்து கூட என்னை போலீசார் வேவு பார்க்கலாம்.என்னை எதற்காக துரத்துகிறார்கள் என்று உங்களுக்கு சொல்லவே இல்லையே. இருங்கள் பிடித்துவிடப் போகிறார்கள். அரசுத் தொழிற்சாலைக்கு போட்டியாக ஆரம்பித்த எங்கள் அம்மாப்பலகை கம்பெனியில் என்னை ஒரு துரும்பாக உட்கார்த்தி வைத்து தரம் காண உபயோகித்தார்கள். ஆனால் என்னுடைய சாஃப்ட்வேர் அறிவு பல பெர்முடேஷன் காம்பினேஷனில் தப்பிக்கும் வழிகளை இங்கு ஆராய்கிறது.

கண்காட்சியின் கொல்லைப் பக்கம் ஆளில்லா அந்தக் கடைசி கீரை அப்பளக் கடையை அடைந்துவிட்டேன். அந்தக் கடையை தாண்டி பச்சை லேசரினால் கதிர் கம்பி அடித்து வேலி அமைத்திருக்கிறார்கள். யாராவது அந்தக் கதிர்களை கடந்தால் அலாரம் அடித்து அனைவரையும் எழுப்பும். லேசர் கதிர் படும் இடங்களில் அங்கஹீனம் நிச்சயம். இந்த லேசர் வேலியின் பிரதான பீம் அடிக்கும் லேசர்கன்னை இயக்கும் அறை அருகில் ஒரு கழிப்பறை ஓரம்  இருந்தது. அறை உள்ளே ஒரு பிசாத்து இரண்டாம் தர ரோபோவை காவலுக்கு வைத்திருந்தார்கள். பக்கத்தில் ஒரு எலி ஓடினால் ஓடிப்போய் பிடிக்கும் அளவிற்கு அது திறமைசாலி. என்னுடைய ப்ளூடூத்தினால் அதை ஹேக் செய்தேன். ஒரு நிமிடம் மோதிப் பார்த்தது. கடைசியில் அடிபணிந்தது. அதனுடைய 32 bit திறனுக்கு ஏற்ப ஃபிபனோக்கி நம்பர்களை மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கும் வேலையை நிற்காமல் infinite தரம் தொடர்ந்து செய்யும் ஒரு முடிவில்லா நிரலியை அதனுள் திணித்தேன். தண்டம் உட்கார்ந்து பொறுமையாக அதைச் செய்து செய்து வெளியே துப்பிக் கொண்டிருந்தது. நிதானமாக அந்த அறைக்குள் சென்று கதிர்களின் வீச்சுத் தரத்தை கணினியில் உட்கார்ந்து எழுபத்தைந்து சதம் குறைத்தேன். மொத்தமாக நிறுத்தினால் மாட்டிக்கொள்வேன்.

என் கட்டளையை அந்தக் கம்ப்யூட்டர் சிரமேற்கொண்டு சுலபமாக ஏற்றது. அந்த வேலிக்கு இடையில் ஒரு தும்பி போல நுழைந்து சுதந்திரமாக வெளியே வந்தேன். சில்லென்று காற்று வீசி என் கேசத்தை கலைத்தது. ரொம்ப நேரம் அங்கே நிற்பது ஆபத்து. ஆகாயத்தில் போக்குவரத்து குறைந்திருந்தது. அண்ணாந்து பார்த்து குனிவதர்க்குள் மின்னல் வேகத்தில் ஒரு வாகனம் என்னருகில் வந்து இறங்கியது. "பர்ர்ரர்...க்" என்ற வினோத ஓசையுடன் அதன் கதவு திறந்தபோது நான் செய்வதறியாது நின்ற தருணத்தில் ஒரு கை என்னை சரெக்கென்று உள்ளே இழுத்து மூடிக் கொண்டது. பச்சையும் நீலமுமாய் விளக்குகள் எரிந்த அந்த விசித்திரமான வான ஊர்தியின் உள்ளே நான் கண்ட காட்சி....
விஞ்ஞானம் வளரும்...
பட உதவி: io9.com
-

Saturday, April 23, 2011

சிலிகான் காதலி - II


ஜீவன் என்கிற நரன் தனது ஜீவனில்லாமல் நொந்து பயோ வேஸ்ட் ஆன படலம் இங்கே.

இனி...
************* இரண்டாவது ஸி.டி *********************

air traffic


....ஜன்னலைத் திறந்தேன். "பீம். பாம். பிப்பீப்பி பாம்" என்று ஏக இரைச்சல் காதை அறுத்தது. வெளியே கழுத்தை நெரிக்கும் டிராஃபிக். என்ன கேட்கிறீர்கள். கீழேவா? இல்லை இல்லை. மேலே அந்தரத்தில் தான். காஸ் பிடித்த வண்டிகள் நடுவானில் கொசுபோல தாறுமாறாக இங்குமங்கும் ஹாரன் ரீங்காரமிட்டு பறக்கின்றன. எவ்வளவு விதத்தில், வகையில். ராஜா கொசு, ராணி கொசு, மத்திம கொசு, நோஞ்சான் கொசு என்று நூற்றியெட்டு வகையறாக்கள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனுசப் பய மனசு எங்கே மாறுகிறது. பூமியில கட் அடிச்சவன் இப்ப வானத்துல அந்தர்பல்டி அடிக்கறான். தரைவழிப் போக்குவரத்து ரொம்பி வழிந்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன. எனது அப்பா காரில் எங்களை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு போன அழுக்கு ஃபோட்டோ ஒன்று இன்னமும் என் டெஸ்க்டாப்பில் அலங்காரமாக இருக்கிறது. நிறைய கடைகளின் பலூன் கட்டிய அலங்காரத் தரைத் தளத்தையும், சைக்கிள் என்ற மிதிவண்டி ஒன்றை காலால் மிதித்து உருட்டி பயணித்ததையும், பார்க் போன்ற இடங்களில் சக சிறுவர்களுடன் ஊஞ்சல் கட்டி விளையாடியதும் எனது மெமரியின் அடிவாரத்தில் இன்டெக்ஸ் ஆகி இருந்தது கொஞ்சமாக நகர்ந்து முன்னுக்கு வந்தது.

இந்த இக்கட்டான வேளையில் தேவையில்லாத வீண் சிந்தனை இது. அரசின் பிரஜா விதி 382-ன் படி கொலைகாரனையே தேடி அவன் வீட்டிற்கு கைது செய்ய போலீஸ் வந்தாலும் வீட்டின் உரிமையாளர் கதவை பத்து நிமிடத்திற்குள் திறக்கும் வரை படி தாண்டக் கூடாது. சட்டங்களும் தண்டனைகளும் அதனதன் கடமைகளை செவ்வனே செய்தன. பத்துநிமிட அவகாசத்திற்கு பிறகு ஊர்சாவி உதவியுடன் சுலபமாக கதவைத் திறந்துவிடுவார்கள். ஒரு தட்டை பிளாஸ்டிக் அட்டையில் பொருத்தியிருக்கும் அரசாங்க முத்திரைச் சில்லு ஒன்றை கதவருகில் காண்பித்தால் ஊரில் எல்லாக் கதவும் சல்யூட் அடித்து தானாக திறக்கும். என்னைப் போன்றோரை பிடிக்க வருமுன் மேயரிடம் இருக்கும் மின் பதிவேட்டில் ரிஜிஸ்டர் செய்து எடுத்து வருவார்கள். ஆதிகால தொங்கு பூட்டு போட்டு இழுத்துப் பார்க்கும் கலாசாரமெல்லாம் இப்போது வழக்கத்தில் கிடையாது. திறந்து மூடினால் வழுக்கிக்கொண்டு தோளோடு தோள் சேர்த்து "பச்சக்.." என்று ஒட்டிக் கொள்ளும் கனிந்த காதலி போல கதவு ஒட்டிப் பூட்டிக்கொள்ளும். கா...த..லி... ஹும்...இந்தப் பாழும் நினைவை கொளுத்தவேண்டும்.

இப்போது ஜன்னலின் விளிம்பில் நிறுத்தி வைத்திருந்த என்னுடைய அந்த லோ காஸ்ட் புஷ்பக விமானத்தை எடுத்தேன். ஒரு ஆள் குத்த வச்சு உட்காரலாம். ஸ்டீரிங், பிரேக், அப், டவுன், ஆக்சிலேட்டர். அந்த வண்டியின் இந்த ஐம்புலனும் வேலை செய்யும். அவ்வளவுதான். மணிக்கு இருநூறு கி.மீ தான் செல்லும் இந்த சப்பை வண்டி. அடுத்த ஜன்னல் வீட்டுக்காரன் ஐநூறில் பொண்டாட்டியுடன் சொகுசாகப் பறக்கிறான். கீழே இருக்கும் வயசாளி காவல் ரோபோ என்னைப் பார்த்தது இக்கணத்தில் நான் செத்தேன்.

பக்கத்துக் கோபுர கட்டிட எழுபத்தி இரண்டாம் மாடி
"ஹேய்! ஜீவன் ஹொவ் ஆர் யு? பார்த்து ரொம்ப நாளாச்சு.." என்று கங்காரு போல தலையை நீட்டி நலம் விசாரித்தது.

"யா! நா நல்லா இருக்கேன். நீங்க?" என்று  பழங்காலத்தில் இருந்து செத்த வீட்டில் பார்த்தால் கூட நாம் சொல்லும் அதே செத்த பதிலை உதிர்த்தேன்.

"என்ன இந்த டயத்ல... டூட்டிக்கு கிளம்பிட்டியா?" குஷி மூடில் சிரித்துக்கொண்டே கேட்டது.

"இல்ல. சும்மாதான்... காய்கறி தொழிற்சாலை நடத்தும் கண்காட்சி வரை போய்வரலாம்ன்னு..." என்று நான் முடிக்கக் கூட இல்லை.. உடனே...

"ஓ! குட். குட். நேத்திக்கு நான் போயிருந்தேன். ஒருத்தன் பச்சைப் பாம்பு மாதிரியே என்னளவுக்கு நீளமாய்ப் புடலங்காய் தயார் பண்ணி காண்பிச்சான்! வாங்கிட்டு வந்து சைனீஸ் ஃபுட் போல நறுக்கி சமைச்சு சாப்பிட்டேன். டேஸ்ட்டா இருந்தது. நல்லவேளை காய் உள்ளயிருந்து ரத்தம் வரலை. ஹி..ஹி.." என்று நேரங்காலம் தெரியாமல் பிளேடு போட்டது சனியன்.

"அப்டியா.. சரி நானும் அங்கதான் பார்க்கப் போறேன்.."

"வரும்போது எனக்கு ரெண்டு முள்ளுத்தோல் இல்லாத மொழுக் பலாப்பழம் வாங்கிகிட்டு வரியா? பாலாச்சுளை சாப்பிடனும் போல இருக்கு. ப்ளீஸ்" கெஞ்சியது அந்த நோஞ்சான் பக்கத்து பில்டிங் 72-வது மாடி.

"வாங்கிட்டு வரேன்.. நா இப்ப கிளம்பறேன்"

"காசு வாங்கிக்காம போறியே!" விண்ணதிர கூப்பாடு போட்டது.

நாக்கை அறுக்க. 120 வயசில் இந்தக் கிழத்துக்கு அப்படி என்ன தீனி வேண்டிக் கிடக்கு. இது வாய்க்கு ஒரு பூட்டு போடணும்.

"என் அக்கவுன்ட்டுக்கு மணி ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க.." காற்றில் என் குரல் கரைய புகையாய்ப் பறந்தேன்.

"நம்பர்?" என்று மறு ஓலமிட்டது.

"567-123-0808" என்று அது கேட்ட என் வங்கிக் கணக்கு எண்ணை அதற்கு மெசேஜ் செய்தேன்.


அந்த மெசேஜ் செய்யும் போது நான் கா.கண்காட்சியில் இறங்கியிருந்தேன். எனது வண்டியில் லோடாகி மிச்சம் இருந்த ஃப்ரீ எக்ஸிட் டோகேன் வயசாளி ரோபோவை என் பக்கம் திரும்ப விடாமல் கவனித்துக் கொண்டது.

ஆகாயத்திலிருந்து கீழே கலர்க்கலர் குடைகளாய் கண்காட்சி தெரிந்தது. கீழிருந்து விண்ணை நோக்கி ஐநூறு அடி உயரத்திற்கு இரும்புப் படிக் கட்டியிருந்தார்கள். ஆதியந்தம் காண முடியாத ஒரு ரோலர் கோஸ்டர் போல அது வானத்தை குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது. எல்லாம் ராட்சத இரும்பு படிகள். வண்டியை அந்தரத்தில் அந்தப் படியோடு இணைந்த ஷார்ட் ஷட்டில் பார்க்கிங்கில் அணைத்து நிறுத்திவிட்டு  ஒவ்வொரு படியாக குதித்து குதித்து அவசரமாக கீழே இறங்கினேன். முதலில் காவலர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும்.

இந்நேரம் ஊர்சாவியில் என்னுடைய அகத்தை கஷ்டப்படாமல் "கிளுக்" என்று நறுவிசாக திறந்திருப்பார்கள். ஒவ்வொரு அறையாக ஜல்லடை போட்டு என்னுடைய ஆவணங்களை தேடுவார்கள். என்னுடைய பூர்வீகம் என்ன? என்ன தொழில் செய்கிறேன்? எனக்கு அரசு அளித்த மானியங்கள் என்ன? யார் யாருக்கு என்னென்ன கடன் வைத்திருக்கிறேன்? கடைசியாக யாரிடம் அலைபேசியில் சுடசுடக் கடலைப் போட்டேன்? நேற்றுவரை எந்தெந்த இடத்தில் பொழுதைக் கழித்தேன்? என்று ஒன்றுவிடாமல் அரை மணியில் சப்ஜாடாக அரித்து எடுத்துவிடுவார்கள். தேடட்டும். "ஸ்.. ப்பா" துடிதுடித்து கையை உதறினேன். புல்டோசர் போல எதிரே வந்தவன் நங்கென்று என் தோளில் இடித்தான். எதிர்சாரியில் செல்லும் புடவை கட்டிய பொம்பளை ரோபோவைப் பார்த்து லிட்டர் லிட்டராய் ஜொள்ளி என் மேல் விழுந்துவிட்டான். படு பாவி!

ரோபோவுக்கும் பெண்ணுக்கும் வித்யாசம் தெரியாத கபோதி. கை பயங்கரமாக வலித்தது. அழுந்த துடைத்து விட்டுக் கொண்டேன். ஆஹா! மறந்தே விட்டேன். ச்சே! இதை எப்படி மறந்து தொலைத்தேன். பிறந்தவுடன் என்னுடைய புஜத்தில் கவசகுண்டலமாக குத்தியிருக்கும் RFIDயை முதலில் செயலிழக்க செய்யவேண்டும். போலீஸ் கையில் இருக்கும் ரீடரில் என்னுடைய நடமாட்டங்கள் ஒவ்வொன்றையும் படம் பிடித்து ஷோ காண்பித்துக் கொண்டிருக்கும். அவர்கள் கையில் இருக்கும் எலக்டிரானிக் ஊர் வரைபடத்தில் எறும்பு ஊறுவது போல நான் சிகப்பு புள்ளியாக அங்குலம் அங்குலமாக தெருக்களில் ஊர்ந்து கொண்டிருப்பேன். அந்தக் காலத்தில் அம்மைக்கு தடுப்பூசி போடுவது போல இப்போதெல்லாம் புஜத்தில் RFID Tag ஒன்றை குத்தித் தைத்து விடுகிறார்கள். டி.வியில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்களுடைய பிரஜா எண்ணை தட்டினால் நீங்கள் எந்த டாய்லெட்டில் ஒளிந்து கொண்டு ஒன்றுக்கு போகிறீர்கள் என்று கூட கண்டுபிடித்துவிடுவார்கள். எமகாதகர்கள்!

ராட்சத படிக்கட்டு இறங்கியதும் பெரிய நீர்த்தொட்டி போன்ற வாயகன்ற வாணாய் ஒன்றை அடுப்பில் ஏற்றி ஆயிரம் பேருக்கு ஏககாலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு மூலிகை டீ தயாரிப்பதற்கு ஒரு பிரம்மாண்டமான கலர்க் கொட்டகைக் கடை ஒன்றை விரித்திருந்தார்கள். அருகில் எல்லா விரலையும் மடித்து நடுவிரலை ஆகாசத்தை காட்டி உயர்த்தி படம் போட்டு ஏதோ அசிங்க வாசக அரைக்கை வெள்ளை பனியனும் தொடையளவு ஜிலுஜிலு கருப்பு ஸ்கர்ட்டும் போட்ட ஒரு சீனாக்காரி தன் சப்பை மூக்கை நீவி விட்டு அதை பெரிதாக்கிக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் இருந்த குள்ள சீனக்காரன் வேறு யாரையோ வெறிக்க வெறிக்க 'A' படம் போல பார்த்துக் கொண்டிருந்தான். நாலைந்து ரோபோ அடிமைகள் வருவோர் போவோருக்கு டீ பிஸ்கட் கொடுத்து சேவகம் செய்து கொண்டிருந்தன. கடையோரத்தில் ரிப்பேர் ஆன ஒரு ரோபோவிலிருந்து புகை வர ஓரத்தில் ஒரு நாற்காலியில் சாய்த்து வைத்திருந்தார்கள். "கிர்..கிர்..கிர்க்.." என்று சத்தம் வர அழுதுகொண்டிருந்தது.

"Excuse me" என்று ஆங்கிலத்தில் நான் புலவன் ஷேக்ஸ்பியர் போல செப்பியதர்க்கு
"Yesh..."
எஷ் என்று இங்கிலீஷை தன் உதட்டால் ஈஷிய சீன தேச சிங்காரியை சிரித்து சமாளித்து அருகில் சென்றேன். சடாரென கால் தடுக்கி கீழே சரிவது போல அடுப்பில் வெந்துகொண்டிருந்த வாணாயின் அடிபாகத்தில் என்னுடைய வலது தோள்பட்டை படுவது போல இயல்பாக விழுந்தேன். அங்கு தான் RFID பொருத்தியிருக்கிறார்கள்.

"ஆ..ஆ..." என்று நான் கத்தியதில் அந்தக் கடையே மொத்தமாக திரும்பிப் பார்த்தது. மிரண்டு போய் வாய்க்குள் டீ ஊத்துவதற்கு பதிலாக சட்டைமேல் ஊற்றிக்கொண்டான் ஒரு பரட்டைத் தலை ப்ரஹஸ்பதி. எரியும் அடுப்பிற்குள் விழாதது என் ஆத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தா செய்த புண்ணியமே. நினைத்தது போல வானாயின் அடிபாகத்தில் தோள்பட்டை சமீபம் தேய்த்து மிகச் சரியாக RFID ஃபிக்ஸ் செய்திருந்த இடம் பொத்துப் போய்விட்டது. தீப்புண்ணிலும் ஒரு திருப்தி. சுட்ட வலியிலும் ஒரு சுகம். நிச்சயம் இன்னும் 48 மணி நேரத்திற்கு அவர்களுக்கு என்னைப் பற்றிய அப்டேட் போகாது. கடைசியாக இந்தக் கண்காட்சியில் இருந்ததாக தகவல் போயிருக்கும். இந்தப் புண்ணிய பூமியில் எப்போதோ திருவிழாவில் காணாமல் போவார்களாம். அதுபோல நான் கண்காட்சியில் தொலைந்து போய்விட்டதாக நினைத்துக் கொள்ளட்டும்.

சீனாக்காரிக்கு ஒரு பலமான "ஸாரி!" சொல்லிவிட்டு ஜனசமுத்திரத்திற்குள் சங்கமம் ஆனேன். வாய்க்கு வஞ்சனை இல்லாமல் தின்று கொண்டிருந்தார்கள். இடது பக்கம் பார்த்துவிட்டு எதேச்சையாய் திரும்பிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! காடாய் விரித்த கருங்கூந்தலில் முன்னால் போகும் அவள்! துள்ளல் நடையைப் பார்த்தால் அசப்பில் ஜீவிதா போலவே இருக்கிறது! வளைந்த தோளிலிருந்து கழுத்தைத் தடவி நழுவி வழியும் மஃப்ளர். முக்கால் பேன்ட் அணிந்திருந்ததில் கணுக்கால் ரசம் பூசாத கண்ணாடியாக பக்கத்து கடை விளக்கை பளிச்சென்று பிரதிபலித்தது. பேன்ட்டிற்கும் மேலே இருந்த சட்டைக்கும் 'இடை'ப்பட்ட இடம் வெண்ணை தடவியது போல வழவழ பளிங்காக சிறுத்து டாலடித்துக் கொண்டிருந்தது. ஐந்தடி ஆறங்குல வாசனை மலர்க்கொத்து கால் முளைத்து நடப்பது போல போய்க் கொண்டிருக்கிறாள். விடாதே! அவளேதான். பிடி! துரத்து என்று கட்டளையிட்டது மூளையின் ஒரு ஓர முடிச்சில் இருந்த ஒரு அடங்காப்பிடாரி ந்யூரான். தோளில் அடிபட்டது விண் விண்ணென்று தெறிக்க துரத்தினேன்.

இன்னும் இரண்டடியில் பிடிக்கலாம் என்று நினைத்த போது ஒரு தடியன் குறுக்கே வந்தான். அந்த மாமிச மலையை தாண்டி தலை தெறிக்க ஓடினேன். இதோ தோளைத்தொடும் தூரத்திற்கு வந்து விட்டேன். மனசு கிடந்து அடித்துக்கொண்டது. நான் கூப்பிட்டு திரும்பியதும் அவள் கட்டிப் பிடிக்கப்போகும் இன்பத் தருணங்களை மூளை இப்போதே ஒரு முறை ரிகர்சல் பார்த்தது. சுற்றிலும் ஆயிரம் ரோபோக்கள் "தந்தன தந்தன" பாடினார்கள்.

"ஜீவிதா!" என்று ஆசையுடன் காதல் மொழி பேசி தோளைத் தொட்டு என் பக்கம் திருப்பினேன்....
"ஆ".....

விஞ்ஞானம் வளரும்...
 பின் குறிப்பு:
முதன் முறையாக ஒரு முழு நீள அறிவியல் புனைவு போல ஒரு கதை எழுதுகிறேன். குறைகளை இந்தச் சமூகம் மன்னிக்கட்டும். நிறைகளை வாழ்த்தட்டும்.

பட உதவி: wisb.blogspot.com

-

Thursday, April 21, 2011

சிலிகான் காதலி


Future Pictures, Images and Photos

வானளாவிய விசிறிகள் சுழன்று செயற்கைக் காற்று "கூ..கூ.." என்று ஓலமிட்டு எல்லோரையும் தாக்கி அடித்துக்கொண்டிருந்த 21 மே, 2199-ம் வருடத்திய அதிகாலை மணி 5:01:01.

நகர மைய ஒழுங்குச் சட்டத்தின் படி வயது வந்தோருக்கான அலாரம் எனது அலைபேசியில் "கொக்கரக்கோ...கோ" என்று இரண்டு முறை கொக்கரித்தது. சென்ற வருடம் துல்லியமாக 5:01க்கு அலாரம் அடித்தார்கள். வருடத்திற்கு ஒரு செகன்ட் லேட்டாக எழுப்புவார்களாம். என்ன அக்கிரமம்! இருநூறு வருடங்களுக்கு முன்பு ஒரு தென்கோடி தமிழக கிராமச் சேவல் கூவிய போது ஒலிப்பதிவு செய்ததை அரசு ஒளிஒலிக் காப்பகத்தில் இருந்து எடுத்து வந்து தினமும் இதுபோல பொதுமக்கள் உறக்கம் கலைப்பதற்கு உபயோகப்படுத்துகிறார்கள். போன மாதம் டைனோசர் கதறுவது போல ஒரு அலாரம் வைத்தார்கள். இரண்டு பேருக்கு தூக்கத்தில் தூக்கிவாரிப் போட்டு படுக்கையில் இருந்து கீழே விழுந்து தலையில் ரத்தக் காயம். அந்த மண்டைக்கட்டு மக்களை முன்னிறுத்தி மக்கள் கொதித்தெழுந்து கூக்குரலிட்டு நாடு தழுவிய சர்வர் ஷட்டவுன் செய்தவுடன் தான் அரசு வழிக்கு வந்தது. அலாரம் அடித்ததும் உடனே எழுந்து வாசல் கதவோரத்தில் அரசு பொருத்தியிருக்கும் மனித உயிர்ப்பதிவேட்டு இயந்திரத்தில் வலதுகைப் பெருவிரலை பதிக்க வேண்டும். தவறினால் அடுத்த பத்து நிமிடத்தில் நல்லொழுக்கக் காவலர்கள் நாம் இருக்கோமா செத்தோமா என்று பார்க்க வீட்டின் கதவை தட்டுவார்கள். தினமும் காலை பத்துமணிக்குள் தேசத்தின் இன்றைய மக்கள் தொகை நகரின் எல்லாத் தெருமுனையிலும் டிஜிட்டல் போர்டுகளில் சிகப்பில் ஒளிரும். திரையில் தோன்றும் எந்த நம்பருக்கும் "த்சு..த்சு.." என்றெல்லாம் யாரும் காக்கா ஓட்ட மாட்டார்கள்.

நான் இருக்கும் கூம்பு வடிவக் கட்டிடத்தின் எழுபத்து இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னலைத் திறந்து கீழே எட்டிப் பார்த்தேன். குளோபல் வார்மிங் அதிகமாகி இயற்கையே தலைகீழ். சூரியன் ஓவர் டயம் ட்யூட்டி செய்கிறான். பிரம்ம முஹூர்த்ததிர்க்கு எழுந்து குளித்துவிட்டு ஐந்து மணிக்கே தனது ரதத்தில் ஏறி வந்து குப்புறப் படுத்துத் தூங்குவோருக்கு பின்னால் "சுள்.." என்று குத்தி கிளப்புகிறான். மனிதர்கள், யானை, பூனை, குட்டி நாய், ரோபோ என்ற இன வித்தியாசம் இல்லாமல் சின்னச் சின்னப் புள்ளிகளாய் கீழே அசைந்தார்கள். நேற்று நட்டு வைத்த ஒரு ராட்ஷஷ பிளாஸ்டிக் ஆல மரம் ஜீவனே இல்லாமல் அடித்த காற்றில் உபரியான நைலான் விழுதோடு ஆடிக்கொண்டிருந்தது. குப்பென்று எங்கிருந்தோ புறப்பட்டு வந்த ஒரு வாசனை மூக்கைத் துளைத்தது. "ஊருக்கு ஒரு வாசம்" - அரசின் புதிய திட்டம். இவர்களுடைய அலப்பறைக்கு அளவே இல்லை. இன்றைக்கு ஊருக்கு மஸ்க் ஸ்ப்ரே அடிக்கிறார்கள். தரைத் தளத்தில் இருப்பவன் முகத்தில் மாஸ்க் மாட்டிக்கொண்டு நாள் முழுக்க அலறப் போகிறான். எக்கேடு கெட்டுப் போகிறார்கள். இன்னும் கொஞ்ச நாள். என்னுடைய கனவு மெய்ப்பட்டால் எனக்கு இந்த கஷ்டகாலத்தில் இருந்தும் கருமாந்திர தேசத்திலிருந்தும் பூரண விடுதலை.

நட்டு போல்ட்டு லூசான ஒரு HKN-75 ரக வயசான ரோபோ அந்த விண்ணடுக்கு இருநூறு மாடி கட்டிடத்திற்கு தனியாளாய் காவல் பூதம் வேலை பார்த்தது. பாட்டரி சர்க்யூட்டில் சிறு பழுது ஏற்பட்டு சரியாக வேலை செய்யாததால் அவ்வப்போது மாறு கால் மாறு கை விலுக் விலுக்கென்று இழுத்துக் கொள்ளும். நான் எட்டிப் பார்த்ததை கண நேரத்தில் தனது உச்சந்தலை ஸ்கானர் மூலம் புற ஊதாக் கதிர்களை வீசி மனித ஸ்கான் செய்து "ர்டக்...டர்க்...டக்ர்...." என்று தலையை தூக்கி லேசர் கண்ணால் பச்சை அடித்துப் பார்த்தது அந்த சில்லுகளால் மூளை அடுக்கப்பட்ட அஃறிணை எந்திரம். கட்டிடத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மெயின் கேட் வாசற்படி தாண்டுவோர் எண்ணிக்கையை வயிற்றுக்குள் இருக்கும் டேட்டாபேசில் குறித்துக் கொள்ளும் அசகாய சக்தி படைத்தது. ஆனாலும் இதை ஈசியாக ஏமாற்றிவிடலாம். ப்ளூடூத்தில் நைஜீரியா நாட்டு பிரஜை எழுதிய VB ஸ்க்ரிப்ட் ஹக் ப்ரோக்ராம் தயாராய் இருக்கிறது. அனுமதி இல்லாமல் அதன் மெமரியில் புகுந்து நிமிஷத்தில் எல்லாவற்றையும் அழித்துச் சாய்த்துவிடலாம். வேளை வரும் வரை காத்திருப்போம்.

எனக்கு கை கால் எல்லாம் சரியான வலி. குடைகிறது. இன்னும் நான்கு மணி நேரம் கூட அசையாமல் சவம் போல படுத்து தூங்குவேன். இரண்டு High Capacity இன்றைய தலைமுறை ரோபோக்கள் நட்டு தேய செய்யவேண்டிய ஒரு நாள் முழு ஷிஃப்ட் வேலையை அரை நாளுக்குள் முடி முடி என்று தார்க்குச்சி போட்டு கழுத்தறுத்து என் தலையில் கட்டினார்கள். அங்கே இங்கே திரும்ப முடியவில்லை. மரீனா கடற்கரையின் உள்ளே கடல் நடுவில் பத்து கி.மீயில் இருக்கும் ரெஸ்டாரன்ட்டில் இருந்து ஐந்தாறு முறை பிங் செய்து கூப்பிட்ட அம்மாவிடம் கூட பேசமுடியவில்லை. யூரின் எந்நேரமும் என் பேண்டை நனைக்கும் அபாயத்துடன் வேலைப் பார்த்தது எப்படி என் இரும்பு இருதயம் படைத்த இயந்திர பாஸுக்கு தெரியும். PF, Gratuity, Union, சிவப்புக் கொடி பிடிப்பது, உண்ணாவிரதம் இருப்பது, வருஷத்துக்கு பதினைந்து நாள் சி.எல், பத்து நாள் பி.எல், கல்யாணம், காதுகுத்து, மொட்டை, பொம்பளையா இருந்தா தொண்ணூறு நாள் Maternity லீவ் போன்ற எந்தவிதமான தொல்லையும் கிடையாது என்று இதுகளை வேலைக்கு வைத்தான் பார் என் முதலாளி. அவனைச் சொல்லணும். ஒயரைச் சொருகி சில்லுகள் பதித்த அம்மாப்பலகையை வாடிக்கையாளர் உபயோகப்படுத்துவதற்கு சரியான ரீதியில் கம்பெனியில் தயாரித்திருக்கிறார்களா என்று பார்த்து ரிப்போர்ட் எழுதுவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. கையும் காலும் கெஞ்சியது.

ஐந்து நிமிஷத்திர்க்கு ஒரு முறை "ஜீவன்! தற்போதைய நிலவரப்படி ஐந்து மணிநேரத்திற்கு இன்னும் 8.32 பலகைகள் குறைவாகத் தரம் பார்க்கிறாய். இது நமது தரக்கட்டுப்பாட்டு அளவிற்கு மிகவும் குறைவு. சீக்கிரம் வேலையை முடி! இல்லையேல் இந்த வருட பெர்ஃபார்மன்ஸ் போனஸ் கிடைக்காது" என்று சராசரி பார்த்து என் காதருகில் வந்து எச்சரித்து அலறியது இந்த சூபெர்வைசர் ரோபோ சாத்தான். "இன்னும் 8.32 பலகை செய்து கொடுத்தால் அந்த .32 பலகையை எங்கே உபயோகப்படுத்துவாய்?" போனஸும் வேண்டாம் உங்கள் நாடும் எனக்கு வேண்டாம். ரத்தம் இல்லாத ரத்தக்காட்டேறியே!" என்று வாய்க்கு வந்தபடி திட்டவேண்டும் போலிருந்தது. இந்தமாதிரி நான் செய்யும் அல்லக்கை வேலைக்கும் ரோபோ ஜாதியில் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டியது தானே. டச் அண்ட் ஃபீலில் கையால் தடவி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டுமாம். தடவிப் பார்ப்பதற்கு இது என்ன...... இது என்ன... வேண்டாம்...கெட்டவார்த்தை பேசக்கூடாது. அப்புறம் ஓசியில் இந்த தேசம் சாப்பாடு போடாதாம். ஊருக்கே அன்னதானமும், சத்திர சாவடிகளும் இங்கே ஆண்டாண்டு காலமாக இருந்ததாக பழங்கால இலக்கிய பிட் ஒன்று நெட்டில் உலவியதை தேடிப் படித்தேன். அது என்ன ஒரு வசந்த காலம். பழங்கால என் மூதாதையார் கொடுத்து வைத்தவர்கள். உட்கார்ந்து படுத்து இன்பம் அனுபவித்திருக்கிறார்கள். சுகவாசிகள்.  கூறுகட்டி மொபைல் விற்கும் சின்னச் சின்ன ரோடோரத்து பொட்டிக் கடையில் இருந்து ராக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரைக்கும் இந்த சிலிகான் சில்லு பல்லு பல்லாக தேவைப்படுகிறது.

மெதுவாக எழுந்திருந்து சோம்பல் முறித்துக்கொண்டு தத்தித் தடுமாறி பாத்ரூம் சென்றேன். சுவிட்ச் போடக் கூட வீணாக நாம் விரலை நீட்டி சிரமப்பட தேவையில்லை. தசையும் பிண்டமுமாக யாராவது உள்ளே நுழைந்தால் விளக்கு தானாக எரிகிறது. ஐம்பது வருடத்திற்கு முந்தைய தொழில்நுட்பம்! தொழில்நுட்பம்!! பாத்ரூமில் இடுப்பு வரை தெரியும் கண்ணாடியில் பல் தேய்த்துக்கொண்டே பக்கத்தில் பொருத்தியிருந்த இன்டர்நெட் டச் ஸ்க்ரீனை கையால் தட்டி உயிர்ப்பித்து நியூஸ் படித்தேன். அப்படி ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை. ஆண்கள்-ஆண்கள் திருமணம் ஐம்பது சதம் அதிகரித்திருப்பதாக ஒரு ஆம்பிளையை வாழ்க்கைத் துணையாக வைத்திருக்கும் ஆம்பிளை மனிதகுல மேம்பாட்டு அமைச்சர் புள்ளிவிபரம் தெரிவித்தார். பூனையைப் புலியாக்கும் க்ளோனிங் டெக்னாலஜியை பயோ பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் செய்து காண்பித்து போட்டோவில் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தார்.  பக்கத்தில் பூனைக்கு சொந்தக்கார பாட்டி பயத்துடன் நின்றிருந்தாள். திருப்பதி வேங்கடவன் கோவிலில் தானியங்கி நகரும் படிகள் அமைக்கப்பட்டு நிமிடத்திற்கு பதினைந்து பேர் தரிசனம் செய்து பிரசாதம் பெற்று திரும்பும் வசதி செய்யப்பட்டிருந்தது.

செய்தி படித்துக் கொண்டிருக்கும் போதே "படக்.." என்று மின்சாரம் தடைப்பட்டது. அயல்நாட்டிலிருந்து கடலுக்கு அடியில் கேபிள் போட்டு கரண்ட் இறக்குமதி செய்கிறார்கள். அப்புறம் எப்படி தடைப்பட்டது? ஓ! என்னுடைய கரண்ட் கார்ட் ரீசார்ஜ் செய்ய மறந்து விட்டேன். வெளியே படுக்கையறை சென்று ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து வங்கியில் இருந்து இன்னும் இருபது நாளைக்கான தொகையை மட்டும் பணப் பரிமாற்றம் செய்தேன். இருபது நாட்கள் போதும். நிச்சயம் அதற்குள் இந்த உலகத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்துவிடும். அலைபேசியை மீண்டும் சட்டைப் பாக்கெட்டிற்குள் வைத்துவிட்டு கையை உருவும் போது அந்தப் புகைப்படம் "சொத்" என்று தரையில் விழுந்தது.

கையில் எடுத்துப் பார்த்தேன். கண்கள் காதலுடன் அதைப் பார்த்தது. இன்னும் இந்த ரசம் என்னுடன் ஒட்டியிருந்தது. ஊரில் எவ்வளவு பேர் இருந்தாலும் இவளைப் போல வருமா? மேனியின் அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் நூற்றாண்டு கால யவ்வன பருவத்து அதிரூப சுந்தரிகளின் அவயங்களை நெட்டில் வலைவீசித் தேடிப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அவளுக்கு குறிப்புகள் சொல்லியிருக்கிறேன். என் அறிவுரையில் பேரில் நாட்டின் அதிநவீன மருத்துவக் கல்லூரியில் தேர்ந்த மருத்துவரிடம் அவரது வீட்டின் ஆ.தியேட்டரில் காஸ்மெடிக் சர்ஜெரி செய்திருக்கிறாள். இவளோடு என் வாழ்க்கை சேர்வதற்கு இப்படி ஒரு நூதன எதிர்ப்பு வரும் என்று நினைக்கவேயில்லை. "ஜீவிதா! என் ஜீவிதா" என்று வாய்விட்டு மந்திரமாய் சொல்லி நாக்கை புனிதப்படுத்திக் கொண்டேன். வாய்க்குள் தேனாய் இனித்தது.

மீண்டும் பாத்ரூம் உள்ளே  நுழைந்ததும் விளக்கு எரிந்தது. நியாயஸ்தர்கள். நான் ஒதுக்கிய பணத்தை என் வங்கியில் வழித்துக்கொண்டு உடனே மின்சாரம் வழங்கிவிட்டார்கள். கீழே தரைத் தளத்தில் "ஊய்ங்... ஊயிங்... ஊயிங்.. ஊயிங்..." என்ற சைரன் ஒலி கேட்டது. ஓ! விழித்துக்கொண்டார்களா? அனைத்து அவயங்களும் ஒருசேர உடம்பு விறைத்து அலெர்ட் ஆனது. இன்னொரு இமாலய ஓட்டத்திற்கு தயாரானேன். எண்ணி எட்டாவது செகண்டில் அழைப்பு மணி அடித்தது. அப்போது நான்.....

தொடரும்...

பின் குறிப்பு: இந்தக் கதை எவ்வளவு தூரம் போகும் என்று பார்க்கலாம். இதை விஞ்ஞானப் புனைவாக படிக்கலாம். அல்லது விஞ்ஞான புலம்பலாக படிக்கலாம். உங்கள் கமென்ட்டிர்க்கு தக்கபடி இது வளரும்.

பட உதவி: http://s119.photobucket.com/home/vaboy25

Wednesday, April 20, 2011

ஐவர்

Thirumazhapadi

ஊர்: திருமழபாடி
இடம்: வைத்தியநாதர் சுவாமி சன்னதி
மனுஷன்: ஈர்க்குச்சி ராஜ்கிரண்

புது சொக்காய் புது பேண்ட்டுடன் திருஷ்டிப்பொட்டு கலரில் கருகருவென்று அழகாய் கொழுக்கு மொழுக்காய் இருந்தது அந்தக் குழந்தை. தலையில் சந்தனம் கரைத்து இருகையாலும் குழைத்து மொட்டையடித்த எரிச்சல் தெரியாமல் இருக்க சதும்ப பூசியிருந்தார்கள். அந்தக் கருப்பனின் அம்மாவும் அம்மாவைப் பெற்ற புண்ணியவதியும் அர்ச்சனைக்கு கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த எண்ணெய் தேய்த்துக் குளிக்க தயாராய் இருந்த தூணில் சாய்ந்து காத்திருந்தவுடன் ஐந்து நிமிடத்தில் ஒல்லியான ஒரு ராஜ்கிரண் மாமா அடியாள் நடையுடன் வந்தார். கீழே குனிந்து குப்பையை பொறுக்கச் சொன்னால் ராமர் ஒடித்த சிவதனசு போல இரண்டாக ஒடிந்து விடுவார். அவ்வளவு Fragile. கட்டம் போட்ட தூக்கி கட்டிய கைலியுடன், கருங் கழுத்து வேர்வைக்கு ஒரு கசங்கிய அழுக்கு கர்ச்சீப். அக்குளில் வேர்த்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மக்களை மூக்கின் மேல் விரல் வைக்கத் தூண்டியது. வைத்தியநாதர் சன்னதிக்கு வந்தவுடன் "சொல்லுடா" என்று கேட்டுவிட்டு கெக்கெக்கே என்று விகாரமாக சத்தம் போட்டு சிரித்தார். காதோடு மொபைலை சேர்த்து வைத்து தைத்தது போல ஒட்டவைத்துக்கொண்டு அளவில்லாமல் அளவளாவினார். இதைப் பார்த்து வெகுண்ட அந்த குட்டி மொட்டை மொபைல் வேண்டும் என்று கைகாட்டி அழுததும் "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்..." என்று ஒரு பாட்டை அதில் தட்டிவிட்டு சுவாமி சன்னிதியில் அனைவரையும் காதலாகி கசிந்துருக வைத்தார் அந்த மாமனிதர். குருக்கள் ஒரு வார்த்தை கேட்காமல் "சக குடும்ப ஷேம..." என்று சங்கல்பம் செய்து வாழ்த்தி அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்தார். ஈ.ராஜ்கிரணுக்கு அர்ச்சனை செய்தவர் அவருடைய பிரண்டு குருக்களாம்.

*

ஊர்: திருமழபாடி
இடம்: கொள்ளிடக்கரை ஆற்றங்கரை அரசமர நிழல்
மனுஷி: புளியாத்தா

எந்த துணி சோப்பாலும் வெளுக்க முடியாத, பல லட்சம் பறந்து கிடந்த முடியில் ஒன்று கூட கருப்பு இல்லாத பளீர் மின்னலடிக்கும் வெள்ளை கேசம். வெள்ளைத் துணியில் தொள தொளா ரவிக்கை. நீலக்கலர் கண்டாங்கி சேலை. வருடக்கணக்கில் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த தோல்கள் அயர்ச்சியடைந்து இறுக்கம் தளர்ந்து தளர்வாக இருந்த ஒரு கிழவி தரையில் படுதா விரித்து கடை பரப்பி புளி விற்றுக்கொண்டிருந்தாள். அருகாமையில் மேலே மூடி போட்டிருந்த தள்ளுவண்டிக் கடைக்கும் அவள் தான் ஓனர். துணைக்கு உட்கார்ந்திருந்த இருபது ஆணி அடித்தது போல அசையாமல் உட்கார்ந்திருக்க இந்த எண்பது சேவாக் போல பம்பரமாய் சுற்றி அடித்து ஆடியது. புளி கிலோ அறுபது ரூபாய்க்கு சல்லிக்காசு குறைக்க முடியாது என்று கறாராக சொன்னாள்.
"எடை சரியா இருக்குமா?"
"சரியா இருக்கும். வேணும்னா வெளிய அளந்து பாத்து காசு கொடுங்க."
"கொஞ்சம் குறைச்சுக்க கூடாதா?"
"குறைச்சுக்கலாம். ஆனா அளவும் குறையும்"
"பாட்டி நீங்க சென்னை வந்துடறீங்களா"
"எதுக்கு. விலையைக் கூட்டி அளவை குறைச்சு விக்கறதுக்கா?"

ரெண்டு கிலோ புளி வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறியபோது தள்ளுவண்டியில் நாலு பேருக்கு நன்னாரி சர்பத் கலக்கிக்கொண்டிருந்து. கிளாசில் "டிக்..டிக்..டிக்.டிக்.." என்ற ஸ்பூன் எழுப்பிய சப்தம் எங்களைத் தொடர்ந்தது.

*

ஊர்: கும்பகோணம்
இடம்: வெங்கட்ரமணா ஹோட்டல்
மனுஷர்: சர்வர் ரசம்

கத்தரிக்காய் சாம்பார் ஊற்றிய கறை படிந்த வெள்ளை வேஷ்டி. கும்பகோணம் வெற்றிலையின் காவி படிந்த பற்கள். நெற்றியில் மெலிதாய் ஒரு விபூதிக் கீற்றல். அர்த்தநாரி போல இரண்டாக பிளந்தால் சரிபாதியாய் பிரியும் ஒரு செ.மீ விட்டம் கொண்ட குங்குமம். முழங்கை முட்டி வரை மடித்துவிடப்பட்ட கசங்கிய வெள்ளை சட்டை. அந்தப் பெரிய சாப்பாட்டு அறையின் இடது வலது கோடியை நிமிஷத்திற்கு நூறு தடவை அளக்கும் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேக நடை. தலையின் நரை காலுக்கு பூட்டு போடவில்லை. எந்நேரமும் ஆளை அசத்தும் புன்னகையை தாங்கிய நீள முகம். கனிவான பரிமாறல்.

"இந்தா பாப்பா அப்பளம்"
"ரெண்டு அப்பளம் வேண்டாம் மாமா"
"பரவாயில்லை. பிடிக்கும்தானே சாப்பிடு"
"சார்! வேண்டாம்" அவசராவசரமாக நான்.
"அட! நீங்க போங்க சார்! குழந்தை சாப்பிடட்டும். யப்பா சாருக்கு பொரியல் போடு." என்று தொலைவில் நாற்கின்னத்துடன் இருக்கும் சோகையான பொரியலுக்கு சொல்லிவிட்டு ரசம் உறிஞ்சிக்கொண்டு கோடியில் உட்கார்ந்திருந்த பவுடர் மாமாவுக்கு பரிமாற விரைந்தார்.

சாப்பிட்டு முடிக்கும் வரை தனியொரு ஆளாய் அங்கே பசியாறிக்கொண்டிருந்த சகலரையும் அவர்கள் இலையறிந்து சாப்பிடுவோர் நிமிர்ந்து கேட்கும் முன் பரிமாறிய வித்தையும் விதமும் அவ்வளவு இலகுவாக யாருக்கும் வராது. எல்லாவற்றிற்கும் மனசு வேண்டும்.

இன்னமும் அவரை எங்கள் வயிறு வாழ்த்துகிறது!

*

ஊர்: நீடாமங்கலம்
இடம்: சூடான வெங்காய மெதுபக்கடோ மணத்துக் கொண்டிருந்த தென்னங்கீற்று வேய்ந்த டீக்கடை
மனுஷர்: ரிடையர் ஆன வாத்தியார்

உள்ளே போட்டிருந்த கோடு போட்ட அண்ட்ராயரை மறைக்க சக்தி இல்லாமல் வெளியே காட்டிக்கொண்டிருந்த ப்ரீமியம் வொயிட் வேஷ்டி. வண்ணான் போட்ட R மார்க் ஓரத்தை தூக்கி வலது கையில் பிடித்திருந்தார். மொட மொடா சட்டையின் இஸ்த்திரி மடிப்பில் தோளுக்கு கீழே புடைத்துக்கொண்டு புஜபலம் மிக்கவராக காண்போருக்கு மாயத் தோற்றம் அளித்தார். தலையில் ஆங்காங்கே சில வெள்ளை முடிகள். கண்ணுக்கெட்டியதூரம் வரை கருப்பு கலரில் முடிகள் இல்லை. வெள்ளை முடிகள் இல்லாத பிரதேசங்கள் அந்த மதிய வெய்யிலில் கண்ணைப் பறித்தது. புறநானூற்று பாட்டுடைத் தலைவன் போல தலையில் நறுநெய் பூசியிருக்கலாம். இடுப்பில் இருந்த அரைக்கிலோ எடையுள்ள பச்சை பெல்ட்டில் சில்லரையாக குறைந்தது ஐம்பது ஒரு ரூபா காயின். ஒரு ஆபத்துசம்பத்திர்க்கு பெல்ட்டே ஆயுதமாக எடுத்து சுழற்றினால் எதிராளி சர்வ நிச்சயமாக அப்பீட். மேலோகத்திர்க்கு டிக்கெட் வாங்கிக்கொள்வான்.

"தம்பி டீ சாப்பிடுங்க...(கடை உள்ளே பார்த்து) அஞ்சு டீ போடுப்பா. டீச்சர், பாப்பால்லாம் சாப்பிடுவாங்க இல்ல.."
"சார்! வெய்யிலா இருக்கு பிள்ளைங்களுக்கு ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி குடுத்துட்டு வரேன்"
"இருங்க தம்பி. நம்ம ஊருக்கு வந்துட்டு. போன் பண்ணிட்டு வந்திருந்தீங்கன்ன இளநி வெட்டச் சொல்லியிருப்பேன். இப்டி திடுதிப்புன்னு வந்து நிக்கிறீங்க."
"பரவாயில்ல சார்!" எதிர் கடைக்கு விரைந்தேன்.
எனக்கு முன் புயலாய் விரைந்து சென்று
"சேகரு... ப்ரிட்ஜில என்ன சில்லுன்னு இருக்கு.."
"பவண்டோ.. மிரண்டா..." என்று வெய்யில் கசகசப்பிர்க்கு சட்டை உரித்து அரையாடையில் இருந்த சேகரு.
"மிரண்டா குடு... பெரிய பாட்டில் இருக்கா?" அதட்டிக் கேட்டார் சார்.
"பவண்டோல கெமிக்கல் கிடையாது.. அதுதான் நல்லது இந்தாங்க..." என்று திடீர் விஞ்ஞானி ஆன சேகரு பாட்டிலை கையில் திணித்தார்.

அரை மணிநேரம் போனதே தெரியாமல் பேசிவிட்டு கைகுலுக்கி கிளம்பினோம்.

ஆனியன் மெதுபக்கோடாவும், ஏ கிளாஸ் டீயும், பவண்டோவும் அவரிடமிருந்து விடைபெற்று வந்த நெடுநேரம் வரை அவர் காட்டிய அன்பால் கற்கண்டாக இனித்தது.

*

ஊர்: மன்னார்குடி
இடம்: கீழப்பாலம் அய்யனார் குட்டை அருகில்
மனுஷி: பட்டக்கா

பெயரில் பட்டக்காவாக இருந்தாலும் அது ஒரு பக்காக் கிழவி. பட்டாக இல்லாமல் கரடுமுரடாக இருக்கும் கார்மேகக் கிழவி. வரும் ஐப்பசியில் தொண்ணூறாம். லபோதிபோ என்று கத்திக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பார்த்தது. உடம்பில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டு நின்றது. ஜாக்கெட் இல்லாமல் விறகுக் கரியாய் இருந்த பட்டக்கா ஒரு வயதான கருஞ் சிலை போல ஓரத்தில் சாய்ந்திருந்தது. கண்ணும் காதும் அவள் போட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை செய்யாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தன. என்ன ஒரு தீர்க்கமான பார்வை! இரண்டாம் முறை "ஆ" என்று வாய்க்கு வேலை வைக்காத காது.

"என்னக்கா? எப்படி இருக்கே" இந்தக் குசலம் விசாரித்தது என் அம்மா.
"ஒரு கொறவும் இல்லம்மா" என்று நொண்டியடித்துக்கொண்டே சொன்னது பட்டக்கா.
"மவன் ஒழுங்கா பார்த்துக்கரானா?" பக்கத்தில் நின்ற மாரியைப் பார்த்து வம்பு வளர்த்தது என் அம்மா.
"நீங்கெல்லாம் ஊரை விட்டு போயிட்டீங்க..." என்று கண்களில் நீர் முட்ட கையை விரித்து ஆரம்பித்ததை பார்த்து மாரி முறைத்தான்.
இதற்கு முன்னர் லாரி கிளீனர் மாரிக்கு தனியாக காசு கொடுத்திருந்தேன். பட்டக்கா நிலைமையறிந்து பர்சுக்குள் கையை விட்டதும் முட்டிக்கொண்டிருந்த நீர் தாரை தாரையாய் வழிந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் கையை பிடித்து பணத்தை திணிக்கையில் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது.

"ஏ..க்கே...ஏ...ஹே..ஹே.." என்று குச்சியை தரையில் அடித்து ஆடு மேய்த்துக்கொண்டு ஓடிய பட்டக்கா ரெண்டடிக்கு நாலடி இடத்தில் சருகு போல மடிந்து சரிந்திருந்தது ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது.

பின் குறிப்பு: இந்த முறை மன்னை சென்றபோது சந்தித்த சில மனிதர்கள்.

பட குறிப்பு: கொள்ளிடக்கரையில் இருந்து திருமழபாடி கோயிலின் கம்பீரத் தோற்றம் 

-

Monday, April 18, 2011

பெண்ணெழுத்து பொன்னெழுத்து

eppodhum penபெண்ணெழுத்து எப்போதும் கொள்ளை அழகு. குண்டு குண்டாக மணி மணியாக சீராக பார்ப்போரை வசீகரிக்கும்படி எழுதுவார்கள். எதிலும் பொறுமையும் சிரத்தையும் மனம் ஒருமித்து உள்ளவர்களால் மட்டுமே அதுபோல சிறப்பாக எழுத முடியும். ஔவையார் பெண்ணெழுத்துகளின் தானைத் தலைவி. Don. பக்தி இலக்கியம் மற்றும் நிறைய நன்னெறிகள் நயமாக நச்சென்று போதித்தவள். இந்தக் கிழவி ஒரு தொந்திக் குழந்தையுடன் கொஞ்சியது என்றால் ஒரு குமரி தலையில் மயிற்பீலி சொருகிய ஒரு கள்வனோடு குலாவியது. ஆண்டாள் எழுதிய திருப்பாவை பெண்ணினத்தின் காதல் வெளிப்பாடுகள். நான் பொதுவாக எழுத்துக்களில் HE SHE வித்தியாசம் பார்ப்பதில்லை. பெண்கள் கைப்பட எழுதினால் தான் அது பெண்ணெழுத்து என்று நான் எடுத்துக்கொள்வதில்லை. பெண்மையை போற்றும் எதுவும் பெண்னெழுத்தே. எப்போதுமே Macho ரசம் மிகும் எந்த எழுத்துமே பெண் எழுதினாலும் ஆண்மை மிளிரும் தன்மை உடையதாக மாறுகிறது. எழுத்தில் நளினம் வந்துவிட்டால் அது பெண்பாற் எழுத்தாக உருமாறி விடுகிறது. நான் படித்த வரையில் தி.ஜா, லா.ச.ரா போன்ற நிறைய பழம்பெரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கதைகளில் நாவல்களில் அது உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண் எழுத்துக்களில் இரண்டு ஆடவர்களை நான் இங்கே சேர்த்துக்கொள்வேன். ஒருவர் முண்டாசுக்கவி பாரதி. இரண்டாமவர் சுஜாதா. சுஜாதாவின் "எப்போதும் பெண்" ஆண் எழுதிய ஒரு அற்புதமான பெண்ணிலக்கியம். பெண்களின் நட்பு, காதல், பொறுப்புணர்ச்சி, பாசம், கடமை, மடமை, விவாகரத்து என்று சகலத்தையும் அக்கக்காக அலசிய கதை. சின்னு என்ற பெண் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை படும் பாடுதான் கதை. நடு நடுவே வரும் பாட்டிகளும், சிநேகிதிகளும், அம்மாக்களும், புதியதாய் கல்யாணம் கட்டியவர்களும், புள்ளைதாச்சிகளும் என்று எப்போதும் பெண்ணில் எங்கெங்கும் பெண். தி.ஜாவின் 'சிலிர்ப்பில்' ஒரு ஏழைப் பெண் குழந்தையின் மனமொருமித்த வேலைக்குணம் பற்றி எழுதி கண்களில் நீரை வரவழைப்பார். என்னைப் பொறுத்த வரையில் அதுவும் பெண் எழுத்தே! லா.ச.ரா கல்யாணம் ஆகி கணவனைப் பிரிந்து தனியாளாக இருப்பவள் கணவனுக்கு எழுதும் கடிதமாக 'பாற்கடல்' எழுதியிருப்பார். அது ஒருவகையில் ரசனையான பெண் எழுத்து.

சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி என்று தமிழில் நிறைய ஜாம்பவானிகள் உண்டு. கரண்டி பிடித்த பல கைகள் பேனா பிடித்து சங்கப்பலகை பார்த்ததுண்டு. சங்க இலக்கியங்களில் காக்கை பாடினியார் நச்செள்ளை, வெள்ளிவீதியார் போன்ற பெண்பாற்புலவர்கள் பலர் பாடல் பாடியது உண்டு. நம்மில் அவர்கள் வெகு பரிச்சயம் என்பதால் நான் படித்த ஒரு சில வங்காளப் பெண் எழுத்தாளர்களின் கதைப் புஸ்தகத்தில் இருந்து ஒன்றிரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

Three Sides of Life

தௌலி - மஹாஸ்வேதா  தேவி
தாழ்ந்த ஜாதிப் பெண் ஒருத்தியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டிய இந்தச் சிறுகதை பெண் இலக்கியத்தில் ஒரு வரலாறு. மாமனார் மாமியார் நாத்தனார் என்று ஒரு வட்டத்திற்குள் அடங்கும் கதைகளுக்கு இடையில் இது போன்ற எழுத்துக்கள் என்னை வெகுவாக ஈர்க்கிறது. ஒரு உயர்ந்த ஜாதி பண்ணையாரின் கடைசி மகனை லவ்வினாள் தௌலி. எல்லாப் பெரியமனுஷன் வீட்டுப் பிள்ளைகளைப் போல அவள் வயிற்றை நிரப்பி விட்டு தந்தையின் பேச்சை மீற முடியாமல் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு நகரத்திற்கு போய் விடுகிறான். வயிறு வளர்பிறையாக வளர்ந்து மடிகனத்தை ஊருக்கு காட்டிகொடுகிறது. அவள் தாய் அக்கருவை அழிக்கச் சொல்லுகிறாள். மறுதலித்த இவள் தைரியமாக பெற்றுப் போடுகிறாள். இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் நகரத்தில் ஒரு விலைமாதாகிப் போகிறாள். தனி ஒருத்தியாக போராடிய ஒரு பெண்ணின் ஆசாபாசங்களை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் கதாசிரியர். தௌலி என்றால் அழகான பெண் என்று அர்த்தம்.

தி காயக் -  நபனீத தேவ் சென்
காயக் என்றால் ஒருவர் மட்டுமே செல்லும் படகு என்று அர்த்தமாம். கெளஷிகி என்ற பேத்தி அமேரிக்கா செல்கிறாள். இந்தியாவில் தனியாக விட்டு விட்டு வந்த அவளின் பாட்டியை பற்றிய நினைவலைகள் தான் கதை. அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு நண்பியின் வீட்டில் அவளுடைய பாட்டியை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பார்த்து மனம் பதபதைக்கிறாள். ஒரு பாட்டி-பேத்தி உறவை அதி அற்புதமாக கதைப்படுத்தியிருப்பார். பாட்டியை பற்றிய இடங்களில் பெண்களின் பல பரிமாணங்களை தொட்டிருப்பார் இக்கதாசிரியர். இக்கதையின் தலைப்பை பாட்டியின் வாழ்க்கையுடன் சேர்த்துப் படிக்கவேண்டும். இதுவும் ஒரு அக்மார்க் பெண்ணெழுத்து.


ஹாரி பாட்டர் - ஜே.கே ரவ்லிங்  
துடப்பக்கட்டையை இரு கால்களுக்கு இடையே சொருகி கேரக்டர்களை பறக்கவிட்டு சிறார்களையும் அவர்கள் கூடவே சிறகடிக்க வைத்த பெருமை இந்த வெள்ளைக்கார ரவ்லிங் அம்மையாருக்கு உண்டு. அண்டமெங்கும் இருக்கும் பாலகர்களை மயக்கிய பெருமைக்கு உரிய எழுத்து அது. எப்போதுமே தாத்தா கதைகளை விட பாட்டி சொல்லும் கதைகளுக்கே மவுசு அதிகம். இந்தப் பாட்டியின் அதீத கனவுகள் எல்லா வயதினரையும் கவர்ந்திழுத்த எழுத்தானது இவ்வுலகிற்கு பாக்கியமே.

கடைசி பத்து பக்கங்கள் கிழிந்த ஒரு புஸ்தகத்தை படிக்க மாட்டேன் என்று மறுத்த நண்பரிடம் அவரது உறவினர் "அறுநூறு பக்க புஸ்தகத்தில் கடைசி பத்து பக்கங்கள் இல்லை என்று 590 பக்க சுவாரஸ்யத்தை ஏன் வேண்டாம் என்று இழக்கிறீர்கள்" என்று கேட்டாராம். அதுபோல ஆண்/பெண் பேதம் பிரித்துப் பார்க்காமல் பெண்ணினத்தை சிறப்பிக்கும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் எந்த எழுத்தும் பெண் எழுத்தே என்று வாசிப்போம்.

இந்தத் தொடர் பதிவிற்கு அழைத்த ராஜிக்கு நன்றி சொல்லிக் கீழ் கண்ட பதிவர்களை அழைக்கிறேன்.
பத்மநாபன்
கக்கு-மாணிக்கம்
அறிவன்
மோகன்ஜி
சுந்தர்ஜி
மாதங்கி மாலி 
இப்படிக்கு இளங்கோ

பின் குறிப்பு: மேற்கண்ட இரு வங்காளக் கதைகளும் படித்த கதைத் தொகுதி.
Three Sides of Life - Short stories by Bengali Women Writers.
Oxford University Press
Price: Rs. 350

பட உதவி: thehindu.com மற்றும் uyirmmai.com
-

Sunday, April 17, 2011

சென்னை டூ மன்னை

Haridhra Nadhi


ஆறு மாதத்திற்கு ஒரு முறை தஞ்சைத் தரணியின் ஞாபகங்கள் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய காவிரி போல என் நெஞ்சில் சுழித்துக் கொண்டு ஆறாக ஓடும். அந்த ஆற்றுக்கு அணையாக ஆபிஸ் வந்து குறுக்கே நின்று பல்லைக் காட்டி சிரிக்கும். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ரெட்டை மாட்டு வண்டியாய் குடும்பத்தை சிரமமில்லாமல் இழுக்கிறோம். ஒருவருக்கு லீவ் கிடைத்தால் மற்றொருவருக்கு இருபத்து நான்கு மணிநேரம் ஆணி பிடுங்க அவசியம் இருக்கும். அம்பேத்கர், மகாவீரர் மற்றும் என் அலுவலக நண்ப மேலாளர் போன்றோரின் ஆசியால் போன வாரம் எனக்கு இயந்திரம் வைத்து போரடிக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் நெற்களஞ்சியத்திர்க்கு செல்லும் பெரும் பேறு கிடைத்தது. இந்நாளில் வெள்ளையடித்த எல்லைக்கல் நட்டு நிறைய தரிசுகள் நகர்களாக ப்ரமோஷன் பெற்றிருந்தன.
 
சொந்த வண்டியில் போனால் டங்குவார் கிழிந்துவிடும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் தேசிய கீதம் பாட வாடகைக்கு கார் அமர்த்தி மன்னைக்கு புறப்பட்டோம். வெள்ளைச் சீருடையில் வந்த பார்த்தசாரதியை வண்டியை முதலில் நேராக புள்ளிருக்குவேளூருக்கு விடச் சொன்னேன். போகும் வழியில் ஸ்ரீகாழியிலிருந்து சமுத்திரக் கரையில் இருக்கும் திருமுல்லைவாசல் என்ற சம்பந்தர் பாடல் பெற்ற சிவஸ்தலம் சென்றேன். கோயிலுக்கு நேர் எதிரே கூப்பிடும் தூரத்தில் வங்காள விரிகுடா. சுனாமியின் போது அந்த முல்லைவனேஸ்வரர் கோவிலைத் தாண்டி அலையரக்கன் ஊருக்குள் நுழைய முடியவில்லையாம்.

vaitheeswaran koil

சீர்காழியில் இருந்து மாயவரம் செல்லும் பாதையில் வரும் ஹேர் பின் பெண்டு திரும்பியதும் மேலக் கோபுரவாசலில் வழக்கம் போல ஏதோ ஒரு மாநில டூரிஸ்ட் வண்டி நின்றுகொண்டிருந்தது. அதன் பின்பக்க டயர் அடியில் அதில் வந்திருந்த பக்தர்களின் குழந்தைச் செல்வங்களின் சுச்சா கக்கா சமாஜாரங்கள் போராட்டமில்லாமல் சகஜமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. Incredible India! நாடி ஜோஸியக்காரர்கள் நிராதரவாக கொளுத்தும் வெய்யிலில் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் பெருமக்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார்கள். அதை இருவர் வாய் பிளந்து கேட்டு நம்பிக்கைச் சாறு பருகிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து தட்டி போர்டில் அகத்தியர் கமண்டலத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்.

அம்மன் சன்னதி கோபுரவாசலில் தனியாக சில்லறைக் காசு எண்ணிக்கொண்டு திருவோட்டுடன் உட்கார்ந்திருக்கும் காவி உடை பிச்சைக்கார பெருமகனைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. பாசி ஆடையை களைந்த சுத்தமான திருக்குளம். துர்நாற்றம் இல்லாமல் பாடி ஸ்ப்ரே அடித்திருந்தது. படித்துறையில் உட்கார்ந்திருந்த பொரிக்கடைக்காரருக்கு லாபம் சம்பாதித்து தரும் "வா..வா..வா.." என்று ஆகாரத்திற்கு தண்ணீர் மட்டத்திற்கு வந்து கோயிலுக்கு வருவோர் போவோரைப் பார்த்து வாயைப் பிளக்கும் நிறைய கெண்டையும் கெளுத்தியும் வாங்கி விட்டிருக்கிறார்கள். இறங்கி தலையில் நீரை ப்ரோக்ஷனம் செய்துகொண்டோம். எக்க விடாமல் குனிய விடாமல் கசங்க விடாமல் கர்ப்பக்ரஹத்தில் இருந்து வைத்தீஸ்வரன் அருள் புரிந்தார். அடியார்களின் திருக்கூட்டம் இல்லை. நெற்றியை பரபரவென்று தூணில் தேய்த்தால் பட்டை இட்டுக் கொள்ளும் அளவிற்கு மக்கள் குங்குமத்தாலும் விபூதியாலும் தூணுக்கு அபிஷேகம் செய்திருந்தார்கள். தையல்நாயகி சன்னதி வாசலில் "அம்பாள் அருள் புரிந்தால் தான் இந்த இடத்தை விட்டு நகருவேன்" என்று சபதம் செய்து அழிச்சாட்டியமாக யாரையும் பார்க்கவிடாமல் அந்தாதி படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சமீப காலத்தில் பாட்டியான அந்த அம்மணியை தாண்டி தரிசித்துக் கொண்டு வெளியே வந்தோம். இரண்டு பேர் காலால் எத்தியதில் முட்டியை தேய்த்துக்கொண்டே ஏக கடுப்பில் இருந்தார். அங்காரகன் சந்நிதியில் நிறைய பேர் சிகப்பு வஸ்த்திரம் கொடுத்து செவ்வாயிடம் வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டார்கள். நிமிஷத்தில் கருப்பு அங்காரகன் ஒரே செக்கச் செவேலென சிகப்பானார்.

திருவாரூரில் முதல்வர் வந்த தடம் நன்றாக தெரிந்தது. இரவில் வண்டியின் தலை விளக்கில் ரோடு ஃபேசியல் போட்டது போல பளபளத்தது. அலுங்காமல் குலுங்காமல் சென்றதில் என் சிறிய பெண் சௌகர்யமாக உறங்கினாள். ரோடோரங்கள் குண்டு குழியில்லாமல் செம்மண்ணால் மட்டமாக நிரவியிருந்தன. சைக்கிள்காரர்கள் தைரியமாக ரோட்டை விட்டு இறங்கி பஸ் கார்களுக்கு மனமுவந்து வழிவிட்டார்கள். யார் முதல்வர் ஆனாலும் ஒரு முறை தேசாந்திரம் போய் வந்தார்கள் என்றால் பொதுமக்கள் முதுகு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி பாராட்டும். செல்வியில் சாப்பாடு போடுகிறார்களா என்று கேட்பதற்கு முயலவில்லை. பஸ் ஸ்டாண்ட் ஓர பிரபலமான வாசன் வாசனை இல்லாமல் போட்ட டிஃபன் ஜீரணம் ஆவதற்கு ரோட்டில் கடகடா கிடுகிடு நடுவிலே பள்ளம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். சவளக்காரன் தாண்டும் போது அந்தப் பனைமர இடைவெளியில் தூரத்தில் பெரிய கோவில் கோபுரத்தின் விளக்கு நிலாவுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தது. தூக்கத்திலும் மன்னை அற்புதமாக இருந்தது. ஊரில் நான் கால் வைத்தவுடன் நிச்சயம் குறைந்தது ஒரு நூறு பேருக்காவது நித்திரையில் புரை ஏறி இருக்கவேண்டும்.

இன்னும் இரண்டு நாட்கள் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரம் சுற்றி ஐந்தாறு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பார்த்தேன். எல்லாவற்றையும் எழுதினால் இந்தப் பதிவு குமுதம் பக்தி மற்றும் சக்தி விகடன் போன்ற ஆன்மீக பத்திரிக்கைகளுக்கு போட்டியாகிவிடும் என்று இத்தோடு இப்போது நிறுத்திக்கொள்கிறேன். அவ்வப்போது திண்ணையில் நிறைய பகிர்கிறேன்.

கடைசியாக போன வருஷத்தில் கும்பாபிஷேகம் கண்ட எங்களூர் முதல்வன் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை தரிசித்தேன். சிறுவயதில் நானும் என் சித்தியும் மட்டும் ஏகாந்தமாக சுற்றிவந்த விண்ணை முட்டும் மதிலெழுந்த பிரகாரங்கள் இப்போது மக்களால் நிறைந்து வழிகிறது. மன்னை மக்கள் பக்தியில் திளைக்கிறார்கள். வாசலில் என்னுடன் படித்த ராஜகோபால் "செங்கமல"த்துடன் உட்கார்ந்து பற்கள் தெரிய சிரித்தான். "சௌக்கியமா?" கேட்டதற்கு என் பெண்ணிற்கு இலவசமாக ஆசீர்வாதம் செய்யச் சொன்னான். தும்பிக்கையாழ்வாரிடம் கடன் இல்லாமல் மாமூல் இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டேன். தும்பிக்கையில் இருந்து அவன் கைலிக்கு காசை லாவகமாக மணி ட்ரான்ஸ்பர் செய்தது செங்கமலம். தூண்களில் புதிது புதிதாக நிறைய ஸ்வாமிகள் முளைத்திருக்கிறார்கள். தனது வயதான அன்பு மனைவியை துவஜஸ்தம்பம் அருகில் மங்கலான வெளிச்சத்தில் நிறுத்திவைத்து 1 MP மொபைல் கேமராவில் பத்தடி தள்ளி நின்று தோராயமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். அத்தனை வயதிலும் பக்கத்தில் நிற்க அப்படி என்ன பயமோ? அம்பாள் சன்னதி சுற்றி நிறைய ஸ்வாமி படங்கள் வரைந்திருக்கிறார்கள். ஏலுகொண்டலவாடாவை பார்ப்பது போல செம்பகலக்ஷ்மி தாயார் சந்நிதியில் "பார்த்தவங்க வெளிய வாங்க.... பார்த்தவங்க வெளிய வாங்க..." என்று இழுத்து தள்ளாத குறையாக விரட்டினார்கள். அந்தக் கூட்டத்திலும் "என்ன டீச்சர் சௌக்கியமா?" என்று என் சித்தியை நிறுத்தி விசாரித்தார் பட்டர்.

Rajagopalan

ஸ்வாமி சன்னதி நுழையும் போதே ராஜகோபாலனுக்கு கல்யாண அலங்காரம் செய்துகொண்டிருந்த என்னுடன் தெரு கிரிக்கெட் விளையாடிய பிரசன்னா "வாய்யா ஆர்.வி.எஸ்.எம்? சௌக்கியமா?" என்று எங்களூர் பாணியில் விசாரித்து "மூலவரை தரசிச்சுட்டு வா..." என்று உள்ளே அனுப்பினான்(ர்). ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் பரவாசுதேவப் பெருமாள் தங்கக் காப்பில் ஜொலித்தார். நடுவில் மாடு கன்றுகளுடன் சந்தான கோபாலன் சேவை சாதித்தார்.  வெளியே வந்து மீண்டும் கோபாலனை கண்ணார தரிசித்தேன். சிரித்த முகத்துடன் கல்யாண அவசரத்தில் இருந்தார் கோபாலன். மனமார வேண்டிக்கொண்டு "பிரசன்னா... ஒரு போட்டோ எடுத்துக்கட்டா?" என்று உரிமையுடன் கேட்டு "தாராளமா..." என்று சொல்லிவிட்டு அந்த நீல மேக ஷ்யாமளனுக்கு பின்னால் நீல ஸ்க்ரீன் போட்டான் மகானுபாவன். அசையாமல் சிரித்துக்கொண்டே எனக்கு போஸ் கொடுத்தார் ராஜகோபாலன்.

Thiruvizha Night

பின் குறிப்பு: ஐந்தாறு பாகமாக எழுதவேண்டிய மூன்று நாள் டூரை ஒரே பதிவில் வெளியிட்ட எனக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பாரட்டிக்கொள்கிறேன்.  இப்பதிவில் வெளிவந்த படங்கள் நானே என் கண்களால் பார்த்து கைகளால் கிளிக்கியது. எடுத்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் என்னுடைய வலைக்கு ஒரு தொடர்புச் சுட்டி கொடுத்து உபயோகித்துக் கொண்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.


படக் குறிப்புகள்:  
  1. ஒரு சாயுங்கால நேர ஹரித்ராநதியின் தோற்றம். 
  2. வைதீஸ்வரன் கோவிலின் சுத்தமான குளம். 
  3. ராஜகோபாலனின் எழில் மிகு கல்யாணத் திருக்கோலம்.
  4. பெரிய கோவிலின் திருவிழாக்கால இரவுக் காட்சி.
-

Wednesday, April 13, 2011

ஜனநாயகக் கடமை

snehaகாலை ஏழு மணிக்கு வாசலில் வந்து எட்டிப் பார்த்தால் தெரு வெறிச்சோடி போயிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையின் சோம்பேறி வேளையை நினைவுபடுத்தியது. நேற்றிரவு கோயம்பேடு தாண்டுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. க்ளட்சுக்கும் ஆக்சிலேட்டருக்கும் கால் நர்த்தனம் ஆடி களைத்து ஓய்ந்துவிட்டது. இன்றைக்கு தேர்தல் விடுமுறை, நாளைக்கு அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் நம்பியவர்களுக்கு தமிழ் வருடப் பிறப்பு, சனிக்கிழமை மகாவீர் ஜெயந்தி அப்புறம் சன்டே. நடுவில் வெள்ளி மட்டும் ஆபிசுக்கு பங்க் அடித்தால் ஐந்து நாட்கள் விடுமுறை என்ற லாபக் கணக்கு வைத்துக்கொண்டு குழந்தை குட்டியோடு பொட்டி படுக்கையுடன் ஆயிரம் ஆயிரம் பேர் ஒரு சேனையாய் அந்தக் குட்டியோண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தை நேற்றிரவு முற்றுகையிட்டார்கள். காலையில் இருந்து கை காண்பித்து சலித்துப் போன போ.போலிஸ் "போங்கடா போக்கத்துவனுகளா.." என்று ஒதுங்கி சிக்னல் கம்பத்தில் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்தது.

பிளாட்பாரத்தில் இருசக்கர வாகனாதிகள் ரேஸ் போனார்கள். ஆட்டோ அன்பர்கள் வளையத்திற்குள் நுழையும் கழைக் கூத்தாடி பெண்டிர் போல முரட்டுத்தனமாக ஸெல்ப் டிரைவிங் வண்டிகள் பின் சென்று "உர்.உர்"...என்று உறுமி மிரட்டி மூர்க்கத்தனமாய் இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறினார்கள். வண்டி நிறைய துருபிடித்த முறுக்குக் கம்பி ஏற்றிக்கொண்டு நுனியில் சிகப்பு கட்டாமல் பனியன் போட்ட கிளி டோர் தட்டி மிரட்டி பின்னால் வருவோரை அலகு காவடியில் சொருகும் லாவகத்தோடு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சடன் பிரேக் அடித்து சேதாரம் ஆகாத ஏமாற்றத்தில் ஆமை வேகத்தில் கிளப்பி இன்ச் இன்ச்சாக நகர்ந்தார்கள். இந்த சென்னை மாநகரின் ரோடுகளுக்கு ஏகபோக உரிமையாளர்களான மாநகர பேருந்து ஓட்டுனர்கள் அக்கம் பக்கம் மற்றும் கீழே பார்ப்பது அகௌரவமான செயல் என்று பாரதியின் நேர்கொண்ட பார்வையுடன் எதைப் பற்றியும் கவலைப்படமால் கூட்டத்திற்குள் வண்டியை விட்டு அடித்தார்கள். இவ்வளவு இன்னல்களையும் நடுச் சாலை கொடுஞ் செயல்களையும் மீறி எங்கள் குல தெய்வம் வெங்கடாசலபதி புண்ணியத்தில் இரவு பன்னிரண்டரைக்கு வாகனத்திற்கும் எனக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமாக வீடு வந்து சேர்ந்தேன். 

காலையில் முதல் ஓட்டு என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்த கடமை வெறியில் சீக்கிரம் எழுந்திருந்த போது நான் கண்ட காட்சி தான் இந்தப் பதிவின் முதல் இரண்டு வரிகள். "ரிப்பன் வெட்டி போலிங் பூத் திறக்க உங்களைத்தான் கூப்பிடறாங்க" என்ற வீட்டு லேடிசின் கேலிப் பேச்சையும் மீறி நமது பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் ஜரூராக கிளம்பினேன். மனைவியும் அம்மாவும் எனக்கு இசட் பிரிவு பாதுகாவலர்கள் போல என்னுடன் தோளுக்கு ஒருவராய் வந்தார்கள். ஒரு தேர்தலில் நடிகர் திலகம் சிவாஜி ஓட்டுப் பறிபோன மாதிரி என்னுடையதும் களவு போவதற்கு முன்னர் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு மிகவும் அவசரப்பட்டேன். கட்சி சின்னம் அச்சடித்து வீடுவீடாக ஸ்லிப் கொடுக்கும் ஒரேயொரு உபயோகமான வேலையைக் கூட இந்த முறை தேர்தல் ஆணையம் கழகங்களிடம் இருந்து பிடிங்கிக் கொண்டது. கருப்பாகவும் வெள்ளையாகவும் நம்மை அச்சடித்து அடையாளம் தெரியாத அகோர முகத்துடன் தோராயமாக அது நாம் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு சீட்டை முன்பே வீடு தேடி வந்து கொடுத்திருந்தார்கள்.

ஓட்டுப் போடும் அரசினர் பள்ளியின் வகுப்பறை வாசல்களில் நோஞ்சான் போலீசார் சிலர் திடகாத்திரமான லத்தியுடன் நின்றிருந்தார்கள். இயந்திரப் துப்பாக்கி ஏந்திய வடநாட்டு காவலர்கள் சிலரும் ஆங்காங்கே நின்றுகொண்டு "ஹை..ஹை" என்று ஹிந்தியில் பேசி ஃபிலிம் காட்டிக் கொண்டிருந்தார்கள். "இருபத்து ரெண்டு அங்கே இருக்கு" என்று உள்ளே நுழைந்தவர்களிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கி ஒருத்தர் ஓட்டுப் போட வந்த கும்பலை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். என்னைவிட மிகவும் சிரத்தையாக ஒரு பத்து பேர் கியூவில் எனக்கு முன்பாக வரிசையில் கதை பேசிக் கொண்டு நின்றிருந்தார்கள். கூன் விழுந்த ஈர்க்குச்சி போல இருந்த ஆறடி தாத்தா வாத்தியாரை நினைவுப்படுத்தினார். "சீனியர் சிடிசன்லாம் தனி கியூ  சார்" என்று ரெண்டு பேர் அவரை வரிசையில் இருந்து கிளப்பி விட்டார்கள். கிளம்பி சரியாக தவறான இன்னொரு கேட்டில் நேராக நுழைந்தார் கூன் பெரியவர். அனுகூலமாக சொல்லி எங்கள் கதவுக்கு அவரை திருப்பி விட்டார்கள்.

அசராமல் கடமையை ஆற்றி விட்டு வெளியே வந்தவருக்கு பெண்கள் சைடில் இருந்து அழைப்பு வந்தது. "அங்கே உக்காருங்கோ" என்ற கட்டளைக்கு கீழ்ப் படிந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சிரமபரிகாரம் செய்துகொண்டார். பிள்ளைகளுக்கு ஃபாரின் சாக்லேட் கிடைத்த சந்தோஷம் போல ஓட்டுப் போட்ட மகளிர் சில பேர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்கள். இவர்களை எல்லாம் போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போட மாட்டார்களா? "உம்... ராணியம்மா.. " என்று கை தட்டி கூப்பிட்ட பெண்மணியும் கூப்பிடப் பட்ட பெண்மணியும் ராஜ வம்சம் போல நிச்சயம் தோன்றவில்லை. ராணியின் அம்மா என்று பதம் பிரித்து தெரிந்து கொண்டேன். "புள்ளைக்கு மொட்டை போட்டோம். குமாரு நல்லா இருக்கா? உங்களுக்கு சுகரு இப்போ இறங்கியிருக்கா ஏறியிருக்கா" என்று குடும்பத்தின் ஷேமலாபங்கள் விசாரிக்க ஆரம்பித்தார். கதவருகே பெண்பால் ஈர்க்குச்சிக்கு காக்கி மாட்டியது போல இருந்தவர்  "அம்மா... நவுருங்க.. இங்க நின்னு கத பேசாதீங்க..." என்று ஸ்ட்ரிக்ட் டீச்சர் தோரணையில் விரட்ட ராணி அம்மா முறைத்தார்கள். முகம் சுணங்கி நகர்ந்தார்கள்.

நான்கு அரசுத்துறை ஊழியர்கள் வரிசையாக பெஞ் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். நான் ஸிலிப் கொடுத்தவுடன் சரசரவென்று பக்கம் புரட்டி டிக் அடித்துக் கொண்டார் ஒரு பெண்மணி. அடுத்தவர் இன்னொரு புத்தகத்தில் குறித்துக்கொண்டு "சார்! வெங்கடசுப்ரமணியன்" என்று ஒரு மூலையைப் பார்த்து குரல் கொடுத்தார். திரும்பி பார்த்தால் நான்கு பேர் கையில் வாக்காளர் புத்தகத்துடன் கரை வேஷ்டியுடன் அலர்ட்டாக உட்கார்ந்திருந்தார்கள். பூத் ஏஜெண்ட்ஸ். அவர்களும் தன் பங்கிற்கு குறித்துக் கொண்டார்கள். அப்புறம் இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர் ஆகப் போகும் ஒரு கண்ணாடி போட்ட பெரியவர் நோட்டு ஒன்றில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு இடது கை ஆட்காட்டி விரலில் நீலக் கலர் நெயில் பாலிஷ் அடித்து ஒரு ரோஸ் ஸ்லிப் கொடுத்தார். அதை நான்காமவரிடம் கொடுக்க அவர் ஒரு மறைவிடத்தை காண்பித்தார். அவர் அழுத்த நான் அழுத்த "பீப்" கேட்டவுடன் எனது வாக்கை உறுதி செய்து கொண்டு நகர்ந்தேன். அந்தக் கரை வேஷ்டி நான்கும் என் முகத்தை ஒருதடவை ஏற இறங்க பார்த்துக் கொண்டது.

பெண்கள் தரப்பு வரிசை வழக்கம் போல வேகவேகமாக முன்னேறி தாயும் தாரமும் வெளியே எனக்காக காத்திருந்தார்கள். குடிமாற்றி வேறு தெரு போனவர்கள் இருவர் "உங்களுக்கு இருக்கா.. எனக்கு இல்லை.." என்று அங்கலாய்த்து பேசிக்கொண்டிருந்தார்கள். லத்தி சுழற்றி "இங்க நிக்காதீங்க.. போங்க... போங்க..." என்று விரட்டினார் ஒரு கடா மீசை போலீஸ். "எங்கள விரட்டுங்க.. அராஜகம் பண்றவங்களை உட்டுடுங்க..." என்று காத தூரம் வந்த பிறகு முனுமுனுத்துக்கொண்டே சென்றார். வீட்டிற்கு வந்தவுடன் முதலில் தலை முழுகினேன். ச்சே.ச்சே. தினமும் ஸ்நானம் பண்ணுவதைத் தான் சொன்னேன்.

பட உதவி: தனக்கு ஓட்டு போடும் வயதுதான் என்று நிரூபித்த ஸ்னேஹா படம் கிடைத்த இடம். http://nkdreams.com

-

Monday, April 11, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ்ரீராம நவமி

Lord Rama

ஓய்வொழிச்சல் இல்லாமல் வெய்யில் புயல் மழை சிரமம் பார்க்காமல் சதா சர்வகாலமும் நாங்கள் அசராமல் உட்கார்ந்து உலகளாவிய சத் விஷயங்கள் பேசிக்கொண்டிருக்கும் மதில் கட்டைக்கு கீழே இருப்பது அ/மி கோதண்டராமர் திருக்கோவில். எங்கள் எல்லா பேச்சுக்கும் அவர் தான் சாட்சி. மார்கழி மாதக் குளிரில் சாரங்கன் மாமா மூலம் எங்களுக்கு சுடச்சுட வெண்பொங்கல் படி அளந்த பிரான். வேப்பமர நிழற்காற்றில் ஏகாந்தமாக சேவை சாதித்திக் கொண்டிருப்பவருக்கு ஹாப்பி பர்த் டே கொண்டாடும் திருநாள் ராம நவமி உற்சவம். கிரிக்கெட் ஆனாலும் சரி ராம நவமி ஆனாலும் சரி எங்களுடையுது ஒரு டீம் வொர்க். ஒரு அணியாக திரண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வோம். அந்த ராமர் கோவிலுக்கு நவமி இன்சார்ஜ் எங்கள் ரவி சார். ரவி சார் ஒரு அற்புதமான மனிதர். நான் படித்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வொகேஷனல் பிரிவில் ஆசிரியர். இடுப்புக்கு மேலே ஷர்ட்டை டக் செய்த பேன்ட். நாள் கிழமைகளில் நெற்றியில் திருமண். பெடலுக்கு வலிக்காமல் சைக்கிள் ஓட்டுவார். விடுமுறைகளில் வெளியூர் செல்லும் போது கொத்துச் சாவியுடன் வீட்டை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும் எங்களுடைய நெருங்கிய தோஸ்த். குளக்கரை கோதண்டராமர் ஒரு இருபது டிகிரி இடது பக்கம் திரும்பி அம்பு விட்டால் அது ரவி சார் வீட்டை தாக்கும். 

ராம நவமிக்கு ரெண்டு நாள் முன்னால் மணி டீக்கடை மூலையில் இருந்து தொடங்கும் எங்கள் வசூல் பணி. நானும் ஸ்ரீராமும்தான் நவமி கலெக்ஷன் நிரந்தர ஏஜெண்ட்ஸ். ஸ்ரீராம் கக்கத்தில் இடுக்கிக்கொள்ளும் இனாமாக வந்த ஒரு பையும், அடியேன் கையில் ஒரு ரசீதுப் புஸ்தகமுமாய் களப்பணி ஆற்றுவோம். திருவிழாக் கமிட்டி பொருளாளர்கள். ஸ்ரீராம் தனது ஹாஸ்யப் பேச்சால் நிறைய வசூல் செய்வான். ஒரு வீட்டிற்குள் நன்கொடை வசூலிக்கப் போனால் குறைந்தது பத்து பதினைந்து நிமிடம் ஆகும். 
"என்ன மாமி சௌக்கியமா இருக்கேளா? அடையாளமே தெரியாம மெலிஞ்சுட்டேளே!"
"ஆமா. ஆமா.. ரொம்ப சரி.."
"எல்லாம் கோபாலன் பார்த்துப்பான்"
"குளத்த சுத்தி பிரதக்ஷிணம் இப்போ போறதில்லையோ"
"ச்.ச்.ச்.சோ..முடியலன்னா டாக்டர்ட்ட காமிக்கப்படாதோ"
"உங்காத்து காப்பிக்கு உங்கள்ட்டே ஆயுசு பூரா அடிமையா இருக்கலாம் "
"இந்த ராமனுக்கா தரேள். இல்லையே. பில் வச்சுண்டிருக்கிற எனக்கா தரேள்! கையில வில் வச்சுண்டிருக்கிற பகவானுக்குன்னா தரேள்!"
"நிச்சயமா பாருங்கோ.. வர வாரத்திலேர்ந்து மதில்ல யாரும் உக்கார்ந்து அரட்டை அடிக்கமாட்டோம்"
"நீங்க யாரு... ஒரு ராம நவமி உற்சவம் மொத்தமாவே நீங்க பண்ணலாம்"
"உங்க தாராளம் இந்தத் தெருவில யாருக்கு வரும்."
மேற்கண்ட வகை வசனங்கள் சர்வ சாதாரணமாக அவன் வாயிலிருந்து பிரவாகமாக கொட்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து சாதுர்யமாக பேசி துட்டு கேட்டு வாங்குவதில் சர்வ வல்லமை படைத்தவன். 

கிழக்கு தெருவிற்கும் வடக்கு தெருவிற்கும் சேர்த்து மொத்தம் இரண்டு ராமநவமி கொண்டாட்டங்கள் உண்டு. கிழக்கு தெருவில் ராதாக்ருஷ்னைய்யர் வீட்டில் காலையில் வருவோருக்கு டிபனுடன் உஞ்சவிருத்தியில் ஆரம்பித்து மாலையில் ராம மடத்தில் திவ்ய நாம அகண்ட பஜனையில் மங்களம் பாடி பூர்த்தி செய்வார்கள். உஞ்சவிருத்தியில் தியாகராஜரை ஒத்த முக தீட்சண்யம் மிக்க பெரியவர் ஒருவர் கச்சலான தேகத்துடன் அரிசி பருப்பு பிக்ஷை வாங்கி சப்ளாக் கட்டை ஜலஜலக்க வீதியில் பஜனை வருவார். ஆனால் சாயந்திரம் பஜன் நன்றாக களை கட்டும். தெருவின் சங்கீதப் பிரியைகள் கூட்டம் அன்று மடத்தில் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கும். கிழக்கு தெருமுனையில் இருக்கும் ராம மடத்தில்தான் அந்த விசேஷ பஜனை நடக்கும். வடக்குத் தெரு கோபால் அண்ணா மிருதங்கம். அவர்தான் அந்த மடத்தின் ஆஸ்தான இசை வாத்தியக் கலைஞர். ஒன்று அந்த மிருதங்கம் இருக்கவேண்டும் இல்லை தன் கை இருக்கவேண்டும் என்று இரண்டில் ஒன்று பார்ப்பது போல உக்கிரமாக வாசிப்பார் கோபால். அண்ணன் தாளத்தில் மடம் தவிடுபொடியாகும். கட்டம் போட்ட பிரேம் கொண்ட பாக்கியராஜ் கண்ணாடி. மீசை அதன் வாழ்நாளுக்கு கத்தரி பார்த்திருக்காமல் காடாக மேலுதட்டை மூடியிருக்கும். குடிக்கும் காப்பியை ஃபில்ட்டர் செய்து வாய்க்குள் இறக்கும். ஆனால் கோபால் அண்ணா சிகரெட்டும் நிஜாம் பாக்கும் கலந்த வாசனையுடன் பஜனை மேடை ஏறும் ஒரு மிருதங்க வித்வான். அவருக்கு மிருதங்கம் என்ற தாள வாத்தியம் வாசிக்கும் பழக்கம் தவிர்த்து 'வெண்'குழல் ஊதும் பழக்கமும் இருந்தது. பிரச்சனைகளை ஊதித் தள்ளுவதற்கு.

"ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு" என்ற மேடையின் பிரதான பஜனை பாடகரின் குரலுக்கு மடம் முழுக்க கோரஸாக "ஜெய்!" போடும். அந்த பக்திக் கடலில் சிறுதுளியாய் என்னுதும் ஈனஸ்வரத்தில் ஒரு சோனி "ஜெய்". நான்கிற்கு ஆரம்பித்தால் ஆறு மணி வரை கை சிவக்க மேனி முழுவதும் வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஓட வாத்தியத்தை தட்டி எடுத்துவிடுவார் கோபால் அண்ணா. தலையை ஆட்டி ஆட்டி ஆவேசத்துடன் கழுத்து சுளுக்கு பிடித்துக் கொள்ளுமோ என்று பார்ப்பவர் அஞ்சி பதற பதற வாசிப்பார். காண்போருக்கு அவர் அதனுடன் ஒரு யுத்தம் புரிந்து கொண்டிருப்பது போல தோன்றும். சில சமயங்களில் பாடுபவர் கூட விக்கித்துப் போய்விடுவார். அவரிடம் தாளம் தப்பாது ஆனால் வாசிப்பு அபிநயங்களில் பக்கத்தில் உட்கார்ந்து பாடுபவருக்கு பயத்தில் நா எழாது. அந்த மடத்து சுவற்றில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் பஜனை பாடும். கூட்டத்தின் காதுகளில் ராம நாமம் நிறையும். பஜனை முடிந்ததும் மிக முக்கியமான ஐட்டமான பொங்கல் பிரசாதம் கட்டாயம் உண்டு. அங்கே செவிக்கும் வயிற்றுக்கும் சேர்த்து ஈயப்படும்.

ராம மடம் பஜனை முடிந்து கோபால் அண்ணா மிருதங்கத்துக்கு அந்த "ஒரு வண்டி" அழுக்கு உள்ள 'வாசனை' உறை போடும் வேளையில் வடக்குத் தெரு ராமர் மணியொலி எழுப்பி வா..வாவென்று அழைக்க அவரைப் பார்க்க பறந்து போவோம். போகிற வழியில் நீர் மோரும், பானகமும் எனது கிரஹத்தில் வாங்கி  மிச்சம் மீதி இடம் இருக்கும் வயிற்றில் ரொப்பிக் கொண்டு ஓடுவோம். கோதண்டராமர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை என்று அமர்க்களப் படுத்துவார்கள். அன்றைக்கு ராமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல ஏகப்பட்ட விசிட்டர்ஸ் வரிசையில் காத்திருப்பார்கள். ஏனைய நாட்களில் ராமருக்கு நாங்களும் எங்களுக்கு ராமரும்தான் ஜோடி. கடைத்தெருவிற்கு போய் அபிஷேக சாமான்கள் மற்றும் ஏனைய பொருட்கள் வாங்கி வந்ததால் ஸ்ரீராம் நடுவில் நின்று அலம்பல் விட்டுக்கொண்டிருப்பான். விழாவிற்கு கடைசி நேரத் தேவைகள் எதுவும் இருப்பின் திசைக்கு ஒருவராய் சைக்கிளில் ஏறிப் பறப்போம்.

எட்டு மணி வாக்கில் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்வோம். முக்கால் வாசி எங்கள் தேசிய மேல் நிலைப் பள்ளி தமிழ் வாத்தியார் ஜெம்பகேச தீட்சிதரின் ராமாயணம் உபன்யாசம். எதிர்த்தாற்போல் ராமன் அண்ணா வீட்டில் இருந்து ரெண்டு பெஞ்ச், ஏ.ஆர்.ஆர். கோப்லி வீட்டில் இருந்து ரெண்டு பெஞ்ச், ஸ்ரீராம் வீட்டு பென்ச் என்று உருவி சேர்த்து மேடையமைப்போம். குளத்துப் படித்துறையில் உட்கார்ந்து அந்த ஜகம் புகழும் ராமனின் புண்ணிய கதையை கேட்போம். எல்லா வருஷமும் ஜெம்பகேசன் சார் ராமாயணம் கேட்டு பழகியிருந்தது அந்த படித்துறை. தேங்காய் மூடி பிரசாதமும் சொற்ப சம்பாவனையையும் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளும் பக்குவத்தை ராமர் அவருக்கு கொடுத்திருந்தான். கலெக்ஷனை பொறுத்து சில வருடங்கள் கலை நிகழ்ச்சிகள் மாறும். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் மிக மிகக் குறைவு. ஒரு முறை தஞ்சையிலிருந்து என்று நினைக்கிறேன், ஒரு பொம்மலாட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். ராமர் தன் சந்நிதியிலிருந்து நேராக கண்டுகளிக்கும் வகையில் குளத்தோரத்தில் மேடை அமைத்திருந்தோம். நிழலாக ஒரு மெல்லிய வாயில் புடவைத் திரைக்கு பின்னால் அமர்ந்துகொண்டு ரெண்டு பேர் ராம-ராவண யுத்தம் கைகளால் ஆட்டிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆர்வக் கோளாறில் பொம்மலாட்ட டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்வதற்கு மேடைக்கு பின்னே சென்று செமத்தியாக வாங்கிக் கட்டிகொண்டோம்.

ஒன்பதரை வாக்கில் பெருமாளின் அருள் பெற்று எல்லோரும் விடை பெற்ற பின்னர் பெஞ்ச் எடுத்த வீட்டில் எல்லாம் கொண்டு போய் சேர்பித்துவிட்டு ஜமக்காளம் சுருட்டி பிரசாதங்களை எல்லோரும் பங்குபோட்டு சாப்பிடுவோம். அன்றைக்கு மதில் இரவு ஒரு மணிவரை விழித்திருக்கும். காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளின் ஹைலைட்ஸ் ஒலிச்சித்திரமாக ஓடிக்கொண்டிருக்கும். யார் வழுக்கி விழுந்தா, யார் யாரை பார்த்தார்கள், யார் யாரை முறைத்தார்கள், யார் யாரைப் பார்த்து சிரித்தார்கள், யாருக்கு யார், யாரோடு யார் போன்ற பல யார்கள் விஸ்தாரமாக விவாதிக்கப்படும். கூத்தடிக்கும் அந்த கெக்கெக்கே சிரிப்பில் விழாக் கொண்டாடிய ராமருக்கு தொந்தரவாக இருக்கும் என்ற பட்சத்தில் சங்கத்தை கலைக்கும் அந்த அகால வேளையில்..
"வெங்குட்டு, ஸ்ரீராம் ரெண்டு பேரும் நாளைக்கு காலயில வந்துடுங்கோ. ராமநவமி அக்கௌண்ட்ஸ் பார்த்துடலாம்" என்று அவசரமாக அற்பசங்கைக்கு எழுந்திருந்த ரவி சார் ஜெனரல் பாடி மீட்டிங்கிற்கு அழைப்பு விடுப்பார்.

பின் குறிப்பு: நாளை ஸ்ரீராம நவமி. தசரத மஹாராஜா அப்பாவான நாள்.

பட உதவி: in.ygoy.com

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails