Thursday, April 21, 2011

சிலிகான் காதலி


Future Pictures, Images and Photos

வானளாவிய விசிறிகள் சுழன்று செயற்கைக் காற்று "கூ..கூ.." என்று ஓலமிட்டு எல்லோரையும் தாக்கி அடித்துக்கொண்டிருந்த 21 மே, 2199-ம் வருடத்திய அதிகாலை மணி 5:01:01.

நகர மைய ஒழுங்குச் சட்டத்தின் படி வயது வந்தோருக்கான அலாரம் எனது அலைபேசியில் "கொக்கரக்கோ...கோ" என்று இரண்டு முறை கொக்கரித்தது. சென்ற வருடம் துல்லியமாக 5:01க்கு அலாரம் அடித்தார்கள். வருடத்திற்கு ஒரு செகன்ட் லேட்டாக எழுப்புவார்களாம். என்ன அக்கிரமம்! இருநூறு வருடங்களுக்கு முன்பு ஒரு தென்கோடி தமிழக கிராமச் சேவல் கூவிய போது ஒலிப்பதிவு செய்ததை அரசு ஒளிஒலிக் காப்பகத்தில் இருந்து எடுத்து வந்து தினமும் இதுபோல பொதுமக்கள் உறக்கம் கலைப்பதற்கு உபயோகப்படுத்துகிறார்கள். போன மாதம் டைனோசர் கதறுவது போல ஒரு அலாரம் வைத்தார்கள். இரண்டு பேருக்கு தூக்கத்தில் தூக்கிவாரிப் போட்டு படுக்கையில் இருந்து கீழே விழுந்து தலையில் ரத்தக் காயம். அந்த மண்டைக்கட்டு மக்களை முன்னிறுத்தி மக்கள் கொதித்தெழுந்து கூக்குரலிட்டு நாடு தழுவிய சர்வர் ஷட்டவுன் செய்தவுடன் தான் அரசு வழிக்கு வந்தது. அலாரம் அடித்ததும் உடனே எழுந்து வாசல் கதவோரத்தில் அரசு பொருத்தியிருக்கும் மனித உயிர்ப்பதிவேட்டு இயந்திரத்தில் வலதுகைப் பெருவிரலை பதிக்க வேண்டும். தவறினால் அடுத்த பத்து நிமிடத்தில் நல்லொழுக்கக் காவலர்கள் நாம் இருக்கோமா செத்தோமா என்று பார்க்க வீட்டின் கதவை தட்டுவார்கள். தினமும் காலை பத்துமணிக்குள் தேசத்தின் இன்றைய மக்கள் தொகை நகரின் எல்லாத் தெருமுனையிலும் டிஜிட்டல் போர்டுகளில் சிகப்பில் ஒளிரும். திரையில் தோன்றும் எந்த நம்பருக்கும் "த்சு..த்சு.." என்றெல்லாம் யாரும் காக்கா ஓட்ட மாட்டார்கள்.

நான் இருக்கும் கூம்பு வடிவக் கட்டிடத்தின் எழுபத்து இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னலைத் திறந்து கீழே எட்டிப் பார்த்தேன். குளோபல் வார்மிங் அதிகமாகி இயற்கையே தலைகீழ். சூரியன் ஓவர் டயம் ட்யூட்டி செய்கிறான். பிரம்ம முஹூர்த்ததிர்க்கு எழுந்து குளித்துவிட்டு ஐந்து மணிக்கே தனது ரதத்தில் ஏறி வந்து குப்புறப் படுத்துத் தூங்குவோருக்கு பின்னால் "சுள்.." என்று குத்தி கிளப்புகிறான். மனிதர்கள், யானை, பூனை, குட்டி நாய், ரோபோ என்ற இன வித்தியாசம் இல்லாமல் சின்னச் சின்னப் புள்ளிகளாய் கீழே அசைந்தார்கள். நேற்று நட்டு வைத்த ஒரு ராட்ஷஷ பிளாஸ்டிக் ஆல மரம் ஜீவனே இல்லாமல் அடித்த காற்றில் உபரியான நைலான் விழுதோடு ஆடிக்கொண்டிருந்தது. குப்பென்று எங்கிருந்தோ புறப்பட்டு வந்த ஒரு வாசனை மூக்கைத் துளைத்தது. "ஊருக்கு ஒரு வாசம்" - அரசின் புதிய திட்டம். இவர்களுடைய அலப்பறைக்கு அளவே இல்லை. இன்றைக்கு ஊருக்கு மஸ்க் ஸ்ப்ரே அடிக்கிறார்கள். தரைத் தளத்தில் இருப்பவன் முகத்தில் மாஸ்க் மாட்டிக்கொண்டு நாள் முழுக்க அலறப் போகிறான். எக்கேடு கெட்டுப் போகிறார்கள். இன்னும் கொஞ்ச நாள். என்னுடைய கனவு மெய்ப்பட்டால் எனக்கு இந்த கஷ்டகாலத்தில் இருந்தும் கருமாந்திர தேசத்திலிருந்தும் பூரண விடுதலை.

நட்டு போல்ட்டு லூசான ஒரு HKN-75 ரக வயசான ரோபோ அந்த விண்ணடுக்கு இருநூறு மாடி கட்டிடத்திற்கு தனியாளாய் காவல் பூதம் வேலை பார்த்தது. பாட்டரி சர்க்யூட்டில் சிறு பழுது ஏற்பட்டு சரியாக வேலை செய்யாததால் அவ்வப்போது மாறு கால் மாறு கை விலுக் விலுக்கென்று இழுத்துக் கொள்ளும். நான் எட்டிப் பார்த்ததை கண நேரத்தில் தனது உச்சந்தலை ஸ்கானர் மூலம் புற ஊதாக் கதிர்களை வீசி மனித ஸ்கான் செய்து "ர்டக்...டர்க்...டக்ர்...." என்று தலையை தூக்கி லேசர் கண்ணால் பச்சை அடித்துப் பார்த்தது அந்த சில்லுகளால் மூளை அடுக்கப்பட்ட அஃறிணை எந்திரம். கட்டிடத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மெயின் கேட் வாசற்படி தாண்டுவோர் எண்ணிக்கையை வயிற்றுக்குள் இருக்கும் டேட்டாபேசில் குறித்துக் கொள்ளும் அசகாய சக்தி படைத்தது. ஆனாலும் இதை ஈசியாக ஏமாற்றிவிடலாம். ப்ளூடூத்தில் நைஜீரியா நாட்டு பிரஜை எழுதிய VB ஸ்க்ரிப்ட் ஹக் ப்ரோக்ராம் தயாராய் இருக்கிறது. அனுமதி இல்லாமல் அதன் மெமரியில் புகுந்து நிமிஷத்தில் எல்லாவற்றையும் அழித்துச் சாய்த்துவிடலாம். வேளை வரும் வரை காத்திருப்போம்.

எனக்கு கை கால் எல்லாம் சரியான வலி. குடைகிறது. இன்னும் நான்கு மணி நேரம் கூட அசையாமல் சவம் போல படுத்து தூங்குவேன். இரண்டு High Capacity இன்றைய தலைமுறை ரோபோக்கள் நட்டு தேய செய்யவேண்டிய ஒரு நாள் முழு ஷிஃப்ட் வேலையை அரை நாளுக்குள் முடி முடி என்று தார்க்குச்சி போட்டு கழுத்தறுத்து என் தலையில் கட்டினார்கள். அங்கே இங்கே திரும்ப முடியவில்லை. மரீனா கடற்கரையின் உள்ளே கடல் நடுவில் பத்து கி.மீயில் இருக்கும் ரெஸ்டாரன்ட்டில் இருந்து ஐந்தாறு முறை பிங் செய்து கூப்பிட்ட அம்மாவிடம் கூட பேசமுடியவில்லை. யூரின் எந்நேரமும் என் பேண்டை நனைக்கும் அபாயத்துடன் வேலைப் பார்த்தது எப்படி என் இரும்பு இருதயம் படைத்த இயந்திர பாஸுக்கு தெரியும். PF, Gratuity, Union, சிவப்புக் கொடி பிடிப்பது, உண்ணாவிரதம் இருப்பது, வருஷத்துக்கு பதினைந்து நாள் சி.எல், பத்து நாள் பி.எல், கல்யாணம், காதுகுத்து, மொட்டை, பொம்பளையா இருந்தா தொண்ணூறு நாள் Maternity லீவ் போன்ற எந்தவிதமான தொல்லையும் கிடையாது என்று இதுகளை வேலைக்கு வைத்தான் பார் என் முதலாளி. அவனைச் சொல்லணும். ஒயரைச் சொருகி சில்லுகள் பதித்த அம்மாப்பலகையை வாடிக்கையாளர் உபயோகப்படுத்துவதற்கு சரியான ரீதியில் கம்பெனியில் தயாரித்திருக்கிறார்களா என்று பார்த்து ரிப்போர்ட் எழுதுவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. கையும் காலும் கெஞ்சியது.

ஐந்து நிமிஷத்திர்க்கு ஒரு முறை "ஜீவன்! தற்போதைய நிலவரப்படி ஐந்து மணிநேரத்திற்கு இன்னும் 8.32 பலகைகள் குறைவாகத் தரம் பார்க்கிறாய். இது நமது தரக்கட்டுப்பாட்டு அளவிற்கு மிகவும் குறைவு. சீக்கிரம் வேலையை முடி! இல்லையேல் இந்த வருட பெர்ஃபார்மன்ஸ் போனஸ் கிடைக்காது" என்று சராசரி பார்த்து என் காதருகில் வந்து எச்சரித்து அலறியது இந்த சூபெர்வைசர் ரோபோ சாத்தான். "இன்னும் 8.32 பலகை செய்து கொடுத்தால் அந்த .32 பலகையை எங்கே உபயோகப்படுத்துவாய்?" போனஸும் வேண்டாம் உங்கள் நாடும் எனக்கு வேண்டாம். ரத்தம் இல்லாத ரத்தக்காட்டேறியே!" என்று வாய்க்கு வந்தபடி திட்டவேண்டும் போலிருந்தது. இந்தமாதிரி நான் செய்யும் அல்லக்கை வேலைக்கும் ரோபோ ஜாதியில் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டியது தானே. டச் அண்ட் ஃபீலில் கையால் தடவி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டுமாம். தடவிப் பார்ப்பதற்கு இது என்ன...... இது என்ன... வேண்டாம்...கெட்டவார்த்தை பேசக்கூடாது. அப்புறம் ஓசியில் இந்த தேசம் சாப்பாடு போடாதாம். ஊருக்கே அன்னதானமும், சத்திர சாவடிகளும் இங்கே ஆண்டாண்டு காலமாக இருந்ததாக பழங்கால இலக்கிய பிட் ஒன்று நெட்டில் உலவியதை தேடிப் படித்தேன். அது என்ன ஒரு வசந்த காலம். பழங்கால என் மூதாதையார் கொடுத்து வைத்தவர்கள். உட்கார்ந்து படுத்து இன்பம் அனுபவித்திருக்கிறார்கள். சுகவாசிகள்.  கூறுகட்டி மொபைல் விற்கும் சின்னச் சின்ன ரோடோரத்து பொட்டிக் கடையில் இருந்து ராக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரைக்கும் இந்த சிலிகான் சில்லு பல்லு பல்லாக தேவைப்படுகிறது.

மெதுவாக எழுந்திருந்து சோம்பல் முறித்துக்கொண்டு தத்தித் தடுமாறி பாத்ரூம் சென்றேன். சுவிட்ச் போடக் கூட வீணாக நாம் விரலை நீட்டி சிரமப்பட தேவையில்லை. தசையும் பிண்டமுமாக யாராவது உள்ளே நுழைந்தால் விளக்கு தானாக எரிகிறது. ஐம்பது வருடத்திற்கு முந்தைய தொழில்நுட்பம்! தொழில்நுட்பம்!! பாத்ரூமில் இடுப்பு வரை தெரியும் கண்ணாடியில் பல் தேய்த்துக்கொண்டே பக்கத்தில் பொருத்தியிருந்த இன்டர்நெட் டச் ஸ்க்ரீனை கையால் தட்டி உயிர்ப்பித்து நியூஸ் படித்தேன். அப்படி ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை. ஆண்கள்-ஆண்கள் திருமணம் ஐம்பது சதம் அதிகரித்திருப்பதாக ஒரு ஆம்பிளையை வாழ்க்கைத் துணையாக வைத்திருக்கும் ஆம்பிளை மனிதகுல மேம்பாட்டு அமைச்சர் புள்ளிவிபரம் தெரிவித்தார். பூனையைப் புலியாக்கும் க்ளோனிங் டெக்னாலஜியை பயோ பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் செய்து காண்பித்து போட்டோவில் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தார்.  பக்கத்தில் பூனைக்கு சொந்தக்கார பாட்டி பயத்துடன் நின்றிருந்தாள். திருப்பதி வேங்கடவன் கோவிலில் தானியங்கி நகரும் படிகள் அமைக்கப்பட்டு நிமிடத்திற்கு பதினைந்து பேர் தரிசனம் செய்து பிரசாதம் பெற்று திரும்பும் வசதி செய்யப்பட்டிருந்தது.

செய்தி படித்துக் கொண்டிருக்கும் போதே "படக்.." என்று மின்சாரம் தடைப்பட்டது. அயல்நாட்டிலிருந்து கடலுக்கு அடியில் கேபிள் போட்டு கரண்ட் இறக்குமதி செய்கிறார்கள். அப்புறம் எப்படி தடைப்பட்டது? ஓ! என்னுடைய கரண்ட் கார்ட் ரீசார்ஜ் செய்ய மறந்து விட்டேன். வெளியே படுக்கையறை சென்று ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து வங்கியில் இருந்து இன்னும் இருபது நாளைக்கான தொகையை மட்டும் பணப் பரிமாற்றம் செய்தேன். இருபது நாட்கள் போதும். நிச்சயம் அதற்குள் இந்த உலகத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்துவிடும். அலைபேசியை மீண்டும் சட்டைப் பாக்கெட்டிற்குள் வைத்துவிட்டு கையை உருவும் போது அந்தப் புகைப்படம் "சொத்" என்று தரையில் விழுந்தது.

கையில் எடுத்துப் பார்த்தேன். கண்கள் காதலுடன் அதைப் பார்த்தது. இன்னும் இந்த ரசம் என்னுடன் ஒட்டியிருந்தது. ஊரில் எவ்வளவு பேர் இருந்தாலும் இவளைப் போல வருமா? மேனியின் அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் நூற்றாண்டு கால யவ்வன பருவத்து அதிரூப சுந்தரிகளின் அவயங்களை நெட்டில் வலைவீசித் தேடிப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அவளுக்கு குறிப்புகள் சொல்லியிருக்கிறேன். என் அறிவுரையில் பேரில் நாட்டின் அதிநவீன மருத்துவக் கல்லூரியில் தேர்ந்த மருத்துவரிடம் அவரது வீட்டின் ஆ.தியேட்டரில் காஸ்மெடிக் சர்ஜெரி செய்திருக்கிறாள். இவளோடு என் வாழ்க்கை சேர்வதற்கு இப்படி ஒரு நூதன எதிர்ப்பு வரும் என்று நினைக்கவேயில்லை. "ஜீவிதா! என் ஜீவிதா" என்று வாய்விட்டு மந்திரமாய் சொல்லி நாக்கை புனிதப்படுத்திக் கொண்டேன். வாய்க்குள் தேனாய் இனித்தது.

மீண்டும் பாத்ரூம் உள்ளே  நுழைந்ததும் விளக்கு எரிந்தது. நியாயஸ்தர்கள். நான் ஒதுக்கிய பணத்தை என் வங்கியில் வழித்துக்கொண்டு உடனே மின்சாரம் வழங்கிவிட்டார்கள். கீழே தரைத் தளத்தில் "ஊய்ங்... ஊயிங்... ஊயிங்.. ஊயிங்..." என்ற சைரன் ஒலி கேட்டது. ஓ! விழித்துக்கொண்டார்களா? அனைத்து அவயங்களும் ஒருசேர உடம்பு விறைத்து அலெர்ட் ஆனது. இன்னொரு இமாலய ஓட்டத்திற்கு தயாரானேன். எண்ணி எட்டாவது செகண்டில் அழைப்பு மணி அடித்தது. அப்போது நான்.....

தொடரும்...

பின் குறிப்பு: இந்தக் கதை எவ்வளவு தூரம் போகும் என்று பார்க்கலாம். இதை விஞ்ஞானப் புனைவாக படிக்கலாம். அல்லது விஞ்ஞான புலம்பலாக படிக்கலாம். உங்கள் கமென்ட்டிர்க்கு தக்கபடி இது வளரும்.

பட உதவி: http://s119.photobucket.com/home/vaboy25

33 comments:

பத்மநாபன் said...

பலமான பீடிகையோடு ஆரம்பித்துள்ளீர்கள்... இரண்டு வரி எழுதுவதற்க்குள் தாவுகழண்டு விடுகிறது..அதற்க்கும் முன்று முற்றுப்புள்ளி வைக்க வைக்கிறது...முற்றுப்புள்ளியே வைக்காமல் பத்தி பத்தியாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள்..

எனது பழைய கோரிக்கையான ``முடிந்தால் பத்தி பிரித்து பிரித்து எழுதுங்கள்``

Porkodi (பொற்கொடி) said...

YaaaaaaaaY!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல புனைவு… அம்மா பலகை – உங்கள் மொழிபெயர்ப்பு சிரிப்பை வரவழைத்தது. தொடரட்டும் இந்த அறிவியல் புனைவு மைனரே…

Balaji saravana said...

அண்ணா ஆரம்பமே அட்டகாசமா இருக்கே! அப்புறம் ஒரு வேண்டுகோள், இது புனைவாகவே தொடருங்கள், புலம்பல்களை "திண்ணைக் கச்சேரி"களில் வைத்துக் கொள்ளலாம். :)

எல் கே said...

பொற்கொடிக்கு pottiuyaa மைனர்வாள் ? தொடக்கம் அமர்க்களம்.. தொடருங்கள்

கக்கு - மாணிக்கம் said...

///ஒயரைச் சொருகி சில்லுகள் பதித்த அம்மாப்பலகையை வாடிக்கையாளர் உபயோகப்படுத்துவதற்கு........ ///

ரொம்பவும் குசும்புதான். எல்லா இடங்களிலும் ஏனோ தெரியவில்லை நம்ம குருநாதரின் ஜவ்வாது ,சந்தன வாசனை வந்து மூக்கை துளைகிறது.

! சிவகுமார் ! said...

//செய்தி படித்துக் கொண்டிருக்கும் போதே "படக்.." என்று மின்சாரம் தடைப்பட்டது. //

இன்று முதல் தமிழகத்தில் மின் வெட்டு அமல்....தங்கள் பதிவில் இன்று அதற்கான மறைமுக கண்டனம். நீங்க அரசியல் பேசலன்னு சொன்னா இனி நம்ப முடியாது.

இளங்கோ said...

//21 மே, 2199-ம் வருடத்திய அதிகாலை மணி //
அப்பாடா.. அப்ப நாம இருக்க மாட்டோம். :)

கதை நல்லா இருக்குதுங்க.. தொடருங்கள்.

Ramani said...

மே 21 2199 க்கு மிகச் சாதாரண்மாக
அழைத்து வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

A.R.RAJAGOPALAN said...

மிகவும் அற்புதமான சலிப்பில்லாத தீர்க்கமான திறன் திறந்த எழுத்துக்கள், நாட்களின் நகருதலில் நாம் வாழும் உலகம் உருண்டோடிய பின் வரும் காலங்களை உன் கற்பனை களத்தில் கருத்தாக்கியதற்க்கு வியப்பான வாழ்த்துக்கள் வெங்கட் .

Uma said...

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது ஆர்.வி.எஸ். எனது வேண்டுகோள் கதையை உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அதன்படியே கொண்டுபோகவும். யார் சொல்வதற்காகவும் கதையின் போக்கை மாற்றவேண்டாம்.

ரிஷபன் said...

கதை நல்லா இருக்கு...
Pl continue

மாதேவி said...

தொடரட்டும்.....படிக்கின்றோம்.

சுந்தர்ஜி said...

சேப்பாக்கில் ஆடக்கூடிய ஆர்விஎஸ் கல்லி க்ரிக்கெட் ஆடின மாதிரி இருக்கு.

உங்களின் கற்பனை புதிதாகவும் ஆச்சர்யம் நிறைந்ததாகவும் இருந்தாலும் உங்கள் எழுத்தில் வழக்கமாய் எதிர்கொள்ளும் சுவாரஸ்யங்கள் குறைந்ததுபோல் ஓர் அயர்ச்சி தெரிகிறது.

ஒரு வேளை 2199 அப்படித்தான் இருக்குமோ?போகப் போகப் பார்க்கலாம்.

RVS said...

@பத்மநாபன்
எண்ண ஓட்டத்தில் அதை மறந்து விடுகிறேன். மேலும், சில இடங்களில் தனி பாராவாக பிரிக்க முடியவில்லை. கருத்துக்கு நன்றி ஜி! சரியாக பாரா பிரிக்க முயலுகிறேன். நன்றி. ;-))

RVS said...

@Porkodi (பொற்கொடி)
என்னங்க அர்த்தம்! கொலை மிரட்டலா! ;-)))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! தொடருகிறேன். ;-))

RVS said...

@Balaji saravana
கருத்துக்கு நன்றி தம்பி! அப்படியே ஆகட்டும். ;-))

RVS said...

@எல் கே
ஊஹும்.. நம்மால் அது முடியுமா.. அவங்க கணேஷ் வசந்த் வச்சு நம்மளை மிரட்டுவாங்க எல்.கே. ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டை... ;-)))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
வாத்தியார் வாசனை இல்லாமல் இந்த சப்ஜெக்ட் யாராலும் எழுத முடியாது. அவர் வாசனை அடித்தது என்று சொன்னாலே எனக்கு மிகவும் சந்தோஷம் மாணிக்கம். கருத்துக்கு மிக்க நன்றி. ;-))

RVS said...

@! சிவகுமார் !
சிவா! தயவு செய்து ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அடிப்படை உறுப்பினராவாவது சேருங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. கருத்துக்கு நன்றி 'தோழரே'!! ;-)))

RVS said...

@இளங்கோ
இப்படி ஒரு பெருமூச்சா! அடுத்த பாகம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுல வச்சுக்கறேன்! ;-))

RVS said...

Ramani
நன்றி ரமணி சார்! ஒரு வினோத சப்ஜெக்ட் கையில் எடுத்துவிட்டேன். பத்திரமாக கையாளவேண்டும். சுஜாதாவை வேண்டிக் கொள்கிறேன். ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
உன் ரசனைக்கு நன்றி கோப்லி. போகப் போக இன்னும் சுவாரஸ்யமாக இழுக்கப் பார்க்கிறேன். நன்றி நண்பா! ;-))

RVS said...

@Uma
நிச்சயமாக... இந்த முறை கதைப் போக்கில் போகிறேன். நன்றிங்க.. ;-))

RVS said...

@ரிஷபன்
Thank you Sir! will continue...

RVS said...

@மாதேவி
நன்றி மாதேவி! தொடருகிறேன்... ;-))

RVS said...

@சுந்தர்ஜி
வெளிப்படையான கருத்துக்கு நன்றி சுந்தர்ஜி! நான் வழக்கம் போலத் தான் எழுதினேன். கதையின் களம் புதிது. அது இதுபோல இழுத்துச் சென்று விட்டதோ! இரண்டாம் பாகத்தை இன்னும் மெருகேற்றி வெளியிடுகிறேன். கண்டிப்பாக படித்துவிட்டு கருத்துச் சொல்லவும்.
மிக்க நன்றி. ;-))

சிவகுமாரன் said...

. \\ தடவிப் பார்ப்பதற்கு இது என்ன...... இது என்ன... வேண்டாம்...கெட்டவார்த்தை பேசக்கூடாது.//
\\\ மேனியின் அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் நூற்றாண்டு கால யவ்வன பருவத்து அதிரூப சுந்தரிகளின் அவயங்களை நெட்டில் வலைவீசித் தேடிப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அவளுக்கு குறிப்புகள் சொல்லியிருக்கிறேன்////. சுஜாதா ஸ்டைல் நடை நல்லாவே வருது உங்களுக்கு. அடிச்சு விளையாடுங்க RVS

Murali said...

Arumai R.V.S.M. ithu kathala ..illa crimea..ethuvaga irunthalum thodarattum. sina sujathavai padithathu pola irunthathu.
apadye mannarkudi maynakkalai patrium eluthungal

RVS said...

@சிவகுமாரன்
வாத்தியார் பெயரைச் சொன்னதற்கு ரொம்ப நன்றி சிவகுமாரன். ;-))
நான் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது... பாராட்டுக்கு நன்றிங்க.. ;-))

RVS said...

@Murali
மன்னார்குடி மைனாக்கள்... அட்டகாசம்... என்னுடைய எதிர்காலப் பதிவுக்கு உபயோகித்துக் கொள்கிறேன். நீங்கள் மன்னார்குடியா?
பாராட்டுக்கு நன்றி. ;-)

அப்பாதுரை said...

நகைச்சுவையோடு தொடங்கியது சட்டென்று நகச்சுவைக்கு மாறிவிட்டதே?

(பத்மநாபனின் கமென்ட் டாப்)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails