Tuesday, April 26, 2011

சிலிகான் காதலி - IV

இந்தக் கதையில் இப்போது நான்காவது ஸி.டி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் மூன்று ஸி.டியின் சுருக்கம் கீழே.

முதல் ஸி.டி: ஜீவன் தேடிய ஜீவிதா
மூன்றாவது ஸி.டி: அவள் இல்லை என்று தெரிந்ததும் துரத்தும் போலீசிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த ஜீவனை அப்படியே அள்ளி போட்டுக்கொண்டு போன வான ஊர்தி.

இனி...

****************** நான்காவது ஸி.டி *****************
scifi2


.....உள்ளே பார்த்து பிளந்த வாயை மூட முடியாமல் அசந்து போனேன். கண்ணாடி மாளிகையில் ஒருத்தி ஒன்பது பேராய் தெரிவது போல சேர்ந்தார்ப்போல ஆறேழு ஜீவிதாக்கள் என் கண்ணெதிரே சிங்காரமாய்த் தோன்றி என்னைத் திணறடித்தார்கள். காதல் புறா, பேசும் கிளி, பாடும் குயில், ஆடும் மயில் போல ஒன்றுக்கு ஒன்று வித்தியாசம் தெரியாமல் ஏழு புத்தம் புது ஜீவிதாக்கள். பாலிஷ் போடப்பட்ட பளிங்கு சிலைப் போல மேனியில் முகம் பார்த்து தலைவாரிக் கொள்ளும் வண்ணம் பளபளப்பாக இருந்தார்கள். ஒருத்தி என்னை பார்த்து மந்தகாசப் புன்னகை வீசினாள், இன்னொருத்தி ஒரு மூலையில் அடக்கமாக உட்கார்ந்து கொண்டு கை நகத்திற்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தாள்.

வேறொருத்தி கையில் இருந்த அலைபேசி ஸ்க்ரீனில் யாரோடோ முகத்துக்கு முகம் பார்த்து சிரிக்க சிரிக்க அரட்டை பேசிக்கொண்டிருந்தாள், ஒருத்தி லஜ்ஜையே இல்லாமல் நான் கண்ணை உயர்த்தி பார்க்கும் உயரத்தில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். என் கண்ணை கீழேயே இறக்கவும் விடாமல், இமைக்கவும் விடாமல் காலை ஆட்டிக் கொண்டிருந்தாள். பார்த்த என் கண் அங்குமிங்கும் இளமை ஊஞ்சல் ஆடியது. கேடுகெட்ட என் இதயமும் சேர்ந்து பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் ஒரு அழகான டிசையனில் ஆர்டர் செய்து வாங்கிய ஹியுமனாய்ட் ரோபோ போல அம்சமாக இருந்தார்கள்.

வனப்பும் வயதும் யாரையும் ஒரு கை பார்த்துவிடும் வலிய மோகனாயுதங்கள். எனக்கு எங்கேயோ இடறியது. அளவுக்கு மீறி என் ஆசை ஜீவிதாக்கள் அங்கே இரைந்து கிடந்தது அமிர்தமும் நஞ்சாக மாறியது போன்ற உணர்வு. எனக்கு புரிந்துவிட்டது. அந்த டாக்டர் பாவியை தேடினேன். என்னுடைய "அனைத்து அழகு விகிதாசாரக் கலப்புப்" பெண்ணை டெம்ப்ளேட் எடுத்து கூவிக் கூவி விற்க ஆரம்பித்துவிட்டானா? என்னை வாரி இழுத்து உள்ளே போட்டது யார்? ஜீவித மயக்கத்தில் இருந்து விடுபட்டு இப்போது தான் விழித்தெழுந்தேன். முன்னும் பின்னும் மலங்கமலங்க பார்த்தேன். அந்தப் பெண்டிரைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை. அந்த ஊர்தியின் முன்கண்ணாடி வழியாக எக்கிப் பார்த்ததில் நகரத்தை தாண்டி வெளியே வெகு தொலைவு வந்துவிட்டோம் என்று மட்டும் தெரிந்தது. கட்டிடங்கள் முப்பது நாற்பது மாடிகளுக்கு மிகாமல் மிகவும் குள்ளமாக இருந்தன. பக்கத்தில் வந்த ஒரு ஜீவிதா லேசாக இடுப்பு பக்கம் இடித்த மாதிரி தெரிந்ததும் பதறிப் போய் விலகினேன். ஒரு கற்புக்கரசனை கண்டமேனிக்கு சோதிக்கிறார்கள்!!

கண்ணைக்கட்டி ஜீவிதாக்கள் கூட்டத்தில் விட்டது போல நினைத்துக் கொண்டு திரும்பியதும் தான் அவனைப் பார்த்தேன். குறுந்தாடியும் கையில் ஒரு பாம் டாப் சகிதம் சிரித்துக்கொண்டே அந்த வானூர்தியின் முன்பக்க அறையில் இருந்து பந்தாவாக வெளியே வந்தான். கண்ணுக்கு கருப்பு கண்ணாடி மாட்டிவிட்டிருந்தான். தலையெங்கும் சின்ன சின்ன குச்சி ஆண்டேன்னாக்கள் போல சிகையலங்காரம் செய்திருந்தான். கன்னம் வரைக்கும் நீண்ட இரு கிருதாக்களும் சிகப்பு வண்ணத்தில் டேஞ்சர் என ஒளிர்ந்தது. மீசை இல்லாமல் கீழ் உதட்டுக்கு கீழே வண்டு ஒட்டினாற்போல கொஞ்சம் மயிர் வளர்த்திருந்தான். வாயில் சூயீங் கம் ஒன்றைப் போட்டு தாவாங்கட்டையை சதா அசைத்துக்கொண்டே இருந்தான். க்ளோனிங் மற்றும் பயோ டெக்னாலஜியில் அசகாய சூரன். கல்லூரியில் முழுப் பரீட்சைக்கு விடைத்தாளில் பதிலுக்கு பதில் ஆய்வுக்கட்டுரை எழுதிய படிப்பாளி. பேனைப் பெருமாளாய் மாற்றும் தந்திரம் தெரிந்த படைப்பாளி. பயோ டெக்னாலஜியை கரைத்துக் குடித்து அரசாங்கத்திற்கு தெரியாமல் கள்ள கிளினிக்கும் வெளியே வெள்ளைக் கோட் போட்ட நல்லவனாகவும் வாழ்ந்து வந்தான்.

"ஹாய் ஜீவன்!" என்று துள்ளிக் கொண்டு உற்சாகமாய் வந்தான்.

"ஏய்! என்ன இது. கலர்க்கலரா இவ்ளோ பேர் ஒரே மாதிரியா.."

"எல்லாம் உனக்காகத்தான் ஜீவ். பார்த்தவொடனே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதா? ஏழு நாளுக்கு ஏழு ஜீவிதா. தி ஹோல் லாட் இஸ் யுவர்ஸ். டேக் இட்!! ஜஸ்ட் என்ஜாய் ஐ சே!"

கால் சுண்டு விரலில் நகப் பாலிஷ் போட்டுக்கொண்டிருந்த வேறொரு ஜீவிதா தலையை தூக்கி நேராக நிமிர்ந்து கண் அம்பை தொடுத்தாள். அவளின் கண் சூடு பட்டு எனக்கு ஜுரம் வந்துவிடும் போல இருந்தது.
"என்ன நக்கலா? நான் கொடுத்த டிப்ஸ் என்னுடைய காதலிக்கு மட்டும். நீ என்னடா என்றால் ஊரில் உள்ள..." என்று இன்னும் ஒருமுறை பெடஸ்டல் ஃபேனைப் போல கழுத்தை உருட்டி எழுவரையும் பார்த்துக்கொண்டே இழுத்தேன்.

எனக்கு எதற்கு எடுத்தாலும் இருநூறு வருடங்களுக்கு முந்தைய வாசனை தான் அடிக்கிறது. சில சமயங்களில் கடும் பசிக்கு இவர்கள் 'போஜன்' மாத்திரை சாப்பிடும் போது வாழை இலையில் நீர் தெளித்து அரிசி என்ற பதார்த்தை தக்காளியை நசுக்கி புளிக் கரைத்த ரசம் என்பதை ஊற்றி கையால் பிசைந்து சுருட்டி எடுத்து வாயில் தள்ளி "ஸர்ப்..ஸர்ப்... " என்று உறிஞ்சி சாப்பிடுவது எனக்கு Virtual Reality-யாக தெரிகிறது. என்னுடைய மூன்றாம் தலைமுறை தாத்தா ஒரு சோற்றால் அடித்த சுவரு என்று என் மூ.தல.பாட்டி திட்டுவதை என்னுடைய "தலைமுறை கலெக்ஷன்" ப்ளூ ரே டி.வி.டியில் பழைய அமுதாய் சேமித்து வைத்திருக்கிறேன்.

"இன்னும் என்ன மாசத்துக்கு ஒரு ஜீவிதா வேணுமா? இல்ல. வருஷம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒரு ஜீவிதா வேணுமா ? சொல்லு..சொல்லு.. சீக்கிரம் சொல்லு.."

"ஏய் உன் கிண்டல் பேச்சை நிப்பாட்டு. என்ன இது விளையாட்டு?" என்று ஒரு ஓரத்தில் நின்ற சப்தகன்னிகளில் ஒருத்தியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே டாக்கை பார்த்து பல்லைக்காட்டாமல் முறைத்தேன்.

"எவ்வளவு நாள் உன் காதல், உன் குடும்பம், உன் அப்பார்ட்மென்ட், உன் பி.ஸி, உன் ரேஷன், உன் ரோபோ என்று சுயநலமாய் இருப்பாய் மகனே. கொஞ்சம் எல்லோருக்காகவும் பொதுநலமாக இருப்போமே!" என்று அந்தக்கால வெள்ளை சொள்ளை அரசியல்வாதிகள் போல குட்டிப் பிரசங்கம் செய்தான்.

"கிழிஞ்சுது போ!" என்று முணுமுணுத்தேன் நான்.

"என்ன..என்ன... சொன்னே"

"இல்ல... இங்க ஏழு பேரை வச்சுருக்கியே இதுல எதுவுமே என்னோட ஆள் இல்லையா?" என்று ஏக்கத்துடன் வினவினேன். இல்லை என்று சொல்லி என் நெஞ்சில் அமிலத்தை அள்ளி ஊற்றிவிடப் போகிறான் என்று பயந்தேன்.

"ஹ்...ஹ்" என்று வாயிலிருந்து காற்று மட்டும் வெளியே வர சிரித்தான்.

"அப்ப நான் கலகலன்னு கண்ணுக்கு குளிர்ச்சியா காய்கறி கண்காட்சியில பார்த்தது யாரு...சொல்லு...."

"அது ஒரு ரோபோ!" என்று சொல்லிவிட்டு எகத்தாளமாக சிரித்தான். நான் அதிர்ந்துவிட்டேன்.

"பொய் சொல்லாதே!"

"இல்ல ஜீவன். அது ஒரு ரோபோதான்."

"அவள் மேல் கொலோன் வாசனை அடித்தது. கைகள் வழுவழுன்னு வழுக்கியது. மேல்சட்டைக்கு கீழே இடுப்பில் ஒரு சின்ன மடிப்பு இருந்தது. கைகளில் பூனை ரோமம் இருந்து. நீலக் கண்ணால் என்னைப் பார்த்து "நீ யார்?"ன்னு ஸ்பஷ்டமாக பேசினாளே!"

"ஹி..ஹி.. அவளுக்கு இரண்டு லிட்டர் கொலோன் ஊசியாய் ஏற்றியிருக்கிறேன். இன்னும் ஐந்தாறு வருடங்கள் அதே வாசனையாய் இருப்பாள். குளிக்காவிட்டால் கூட. மொழிப் பயிற்சி கொடுப்பது பற்றி எல்லாம் உனக்கு தெரியும். என்ன என்னவென்று கேட்டு நேரத்தை வீணடிக்காதே"

"ஏய் என்ன இது.... இன்னும் இருபது நாளில் அவளும் நானும் கல்யாணம் செய்து கொண்டு தேனிலவிலிருந்தே பால் நிலாவில் குடியேறலாம் என்று கனாக் கண்டு கொண்டிருந்தோம். இதோ பார் நிலாவுக்கு போவதற்கு பாஸ்போர்ட் கூட ரெடி பண்ணிட்டேன். என்னுடன் படித்தவன் அங்கே ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறான். ஏற்கனவே நாடெங்கிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்து தடை செய்யப்பட்ட க்ளோனிங் டெக்னாலஜி ப்ராக்டீஸ் பண்ற கேடி டாக்டர்ன்னு உன்னையும் என்னோட காதலிக்காக நான் உனக்கு கொடுத்த ஸ்கரிப்ட்டுக்காக என்னையும் நிக்க விடாமா துரத்தி துரத்தி தேடறாங்க. இனிமே இந்த கிரகத்தில எனக்கு என்ன வேலை. அதான் அவளோட ஓடிடலாம்ன்னு பார்த்தா..... நீ இப்படி புது மாதிரி படுத்தறே!... என்னோட ஜீவிதா எங்கே. ப்ளீஸ் சொல்லு... "

"உன்னோட பினாத்தலை கொஞ்சம் நிறுத்தறியா? இனிமே நீ நிலாவுக்கெல்லாம் போக முடியாது. இந்த நாட்டின் ஒட்டு மொத்த போலீசும் உன்னையும் என்னையும் கண்ல காண்டாக்ட் லென்ஸ் வச்சுக்கிட்டு தேடிக்கிட்டு இருக்கு. இப்ப நாம செய்யப்போறது இந்த நாட்டுக்கு ஒரு விடிமோட்சம் கிடைக்கக் கூடிய தீர்வு. எவ்ளோ நாளைக்கு இந்த இயந்திரங்கள் கூடவும் செயற்கைத்தனமான சாதனங்கள் கூடவும் வாழ்க்கை நடத்தறது உனக்கே சலிப்பா இல்லை. இதை விட்டு வெளியே போக முடியாத அடிமை ஜனங்களுக்கு எப்போ விடுதலை.. நாம காப்பாத்தலைன்னா அப்புறம் யார் செய்வாங்க..." என்று ஆரம்பித்து நிறைய புரட்சிகர வாசகங்கள் உள்ளடக்கிய உணர்ச்சிப் பிழம்பாக பேசினான். அவன் பேசப் பேச எனக்கு வேறு ஒரு உலகம் தெரிய ஆரம்பித்தது. சுற்றிலும் அந்த ஏழு மாந்தர்களும் கண் கொட்டாமல் காதைத் தீட்டிக்கொண்டு உண்ணிப்பாக கேட்டார்கள்.

"சரி.. புரிந்தது" என்று நான் தலையாட்டியவுடன் அவனுடைய கருத்தரங்கத்தை ஏதோ ஒரு பானத்தை அருந்தி முடித்துக்கொண்டான்.

"எங்கே என் ஜீவிதா?" என்று மீண்டும் கேட்டேன். மனது அலைபாய்ந்தது.

"அதோ" என்று அவன் கைகாட்டிய திசையில் இருந்த அந்தக் குழுவிலிருந்து அன்றலர்ந்த தாமரை போல ஒருத்தி வந்தாள். கரம் சேர்க்கையில் உள்ளுணர்வு என்னை உலுக்கி "இவளே உன் காதலி" என்று. மல்லிகை மணம் மூக்கைத் துளைத்தது.

"ம்.. இவள் தான்..." என்று என்னவளை எனக்கு அடையாளம் காட்டினான்.

"மல்லிகை மணம் வீசும் வாசனைக் குப்பியை கொடுத்து பூசிக்கொள்ள சொல்லியிருக்கிறேன். இல்லையேல் நாம் குழம்பிவிடுவோம்." என்று கூறி குபீர் சிரிப்பு சிரித்தான்.

"ஒரு சந்தேகம்" என்றேன்.

"என்ன?"

"பிரஜா எண் இல்லாமல் இவர்கள் எப்படி இத்தேசத்தில் குடியிருப்பார்கள்? அந்தக் கண்காட்சியில் பார்த்தவளுக்குக் கூட ஒரு எண் இருந்ததே!"

"இறந்தவளுக்கு எண் உயிரூட்டினேன்."

"விளங்கவில்லை"

"இறந்து போன ஒரு பெண்ணின் பிரஜா எண்ணை அரசு மக்கள் தொகைக் காப்பக டேட்டாபேசில் இருந்து எடுத்து அந்த கண்காட்சிகாரி ரோபோவுக்கு ALIVE என்று அசைன் செய்துவிட்டேன். சிம்பிள்."  என்று இரு தோள்களையும் குலுக்கினான்.


விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. ஒவ்வொன்றாக எனக்கு புரியவைத்து மெதுவாக பறந்து இருட்டும் நேரத்தில் தேனீக்கு பக்கத்தில் கட்டக்குடி வனத்துக்கு மத்தியில் இன்னமும் யாராலும் ஆக்கிரமிக்கப்படாத ஒரு குக்கிராமத்தில் வந்திறங்கினோம். எனது மனசு கைதட்டி கும்மாளமிட்டது. வாய் விசிலடித்தது. இப்படி ஒரு இடத்தை என் வாழ்நாளில் முதன் முறையாக பார்க்கிறேன். அந்த இடம் பூலோக சொர்க்கமாக இருந்தது எனக்கு. டாக்டரின் நண்பன் ஒருவன் எங்களுக்கு ஒத்துழைக்க ஒத்துக்கொண்டிருந்தான். காட்டில் வாகனத்தை இரு பெரிய பாறைகளுக்கு நடுவில் மறைவாக பார்க் செய்திருந்தோம். எந்த புத்திசாலி ராடாரையும் ஏய்ப்பதர்க்காக அதனுடைய அனைத்து சென்சார்களையும் அணைத்துவிட்டோம்.

ஒரு  நிஜ ஜீவிதா மற்றும் ஆறு நிழல் ஜீவிதாக்களோடு நானும் வாகன ஓட்டியும் டாக்டரும் அவருடைய சிநேகிதன் இருப்பிடத்திற்கு அந்த ஒத்தையடிப் பாதை வழியாக ஒரு சில மூட்டை முடிச்சுகளோடு சென்று கொண்டிருந்தோம். அப்போது......

விஞ்ஞானம் வளரும்...

பட உதவி: dualmonitorbackground.com மற்றும் http://desktopro.com/

-

30 comments:

அமைதிச்சாரல் said...

இப்படியொரு அருமையான அறிவியல் புனைவுக்கதையை படிச்சு எவ்ளோ நாளாச்சு.. அருமை. அப்படியே சுஜாதா ஸாரின் நாவலைப்படிக்கறமாதிரியே இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

அனைத்து அழகு விகிதாசாரக் கலப்புப்" பெண்ணை டெம்ப்ளேட் எடுத்து கூவிக் கூவி விற்க ஆரம்பித்துவிட்டானா? என்னை வாரி இழுத்து உள்ளே போட்டது யார்? ஜீவித மயக்கத்தில் இருந்து விடுபட்டு இப்போது தான் விழித்தெழுந்தேன்.//
விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பித்தது. ஒவ்வொன்றாக எனக்கு புரியவைத்து மெதுவாக பறந்து //
அறிவியல் புனைவு ரசிக்க வைத்தது.பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

அறிவியல் அதீதத்தால் திகட்டும் காதலிகள்...எப்படி ஜீவனின் காதல் உருக்கத்தை அவன் ஜீன் கைவிடாமல் இருக்கிறது என்பது ஆச்சர்யம் இருந்தாலும் , அதுதானே கதையின் சவாலே...சமாளித்துவிடுவீர்கள் ஆர்.வி.எஸ்...

சுந்தர்ஜி said...

ஒண்ணு விட்டு ஒண்ணு புடிச்சுடறீங்க ஆர்விஎஸ்.

நல்ல வளமான கற்பனையுடன் ஜிவ் என்று டாப் கியரில் போகிறது ப்ரயாணம்.சபாஷ்.

பாட்டி சொல்லியிருக்க வேண்டியது சோற்றால் அடித்த சுவர்.திருத்திவிடுங்கள்.

ரிஷபன் said...

ரொம்ப நாளாச்சு.. இப்படி விறுவிறுப்பாய் கதை படித்து ..

வெங்கட் நாகராஜ் said...

அட ஏழு ஜீவிதாவா? விறுவிறுப்பாய் போகிறது. தொடரட்டும்.

Porkodi (பொற்கொடி) said...

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

Porkodi (பொற்கொடி) said...

குறைன்னு சொல்ல ஒண்ணும் கிடைக்கலை! அதனால இதை சொல்லிக்கறேன் :D - ஒரு பாகத்துல 3/4 (அல்லது ஏதோ ஒரு சின்ன நம்பர்) புதிய கான்செப்ட்ஸ் தான் இருக்கும்னு வெச்சீங்கன்னா புரிஞ்சுக்க கொஞ்சம் ஈசியா இருக்கும். இப்ப வரிக்கு வரி படிச்சு ஒரு செகண்ட் நிறுத்தி புரிஞ்சுக்க வேண்டியிருக்கு! எனக்கு அப்படி நிறுத்தி யோசிச்சு படிக்கறது ஃப்ளோ நிறுத்தற மாதிரி இருக்கு, ஆனா உங்களுக்கு அதை நிறுத்தினா ஃப்ளோ போயிடுமோ என்னவோ? ;)

siva said...

ரொம்ப கிரேட் சார் நீங்க நிசமா நம்ம ஊரு மையினர்
வாழ்க வளமுடன்

! சிவகுமார் ! said...

புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளதா?

தக்குடு said...

என்ன கமண்ட் போடர்துன்னே தெரியலை. 7 ஜீவிதாவையும் பார்த்து சொக்கிப்போன ஜீவன் மாதிரி பிரமிப்போட படிச்சுண்டு இருக்கேன்..:))

கோவை2தில்லி said...

நல்ல எழுத்து நடை. நல்ல கற்பனை. தொடருங்கள்.

Madhavan Srinivasagopalan said...

எப்படிலாம் கற்பனை பண்ணுறாங்கப்பா..
நம்ம லெவல் தாண்டி போயிக்கிட்டு இருக்கு..

இளங்கோ said...

//இவர்கள் 'போஜன்' மாத்திரை சாப்பிடும் போது வாழை இலையில் நீர் தெளித்து அரிசி என்ற பதார்த்தை தக்காளியை நசுக்கி புளிக் கரைத்த ரசம் என்பதை ஊற்றி கையால் பிசைந்து சுருட்டி எடுத்து வாயில் தள்ளி "ஸர்ப்..ஸர்ப்... " என்று உறிஞ்சி சாப்பிடுவது//

:)

A.R.RAJAGOPALAN said...

""இறந்து போன ஒரு பெண்ணின் பிரஜா எண்ணை அரசு மக்கள் தொகைக் காப்பக டேட்டாபேசில் இருந்து எடுத்து அந்த கண்காட்சிகாரி ரோபோவுக்கு ALIVE என்று அசைன் செய்துவிட்டேன். சிம்பிள்." என்று இரு தோள்களையும் குலுக்கினான்"

அழகு
அற்புதம்
அமர்க்களம்
அட்டகாசம்
அமோகம்
அதகளம்
அசத்தல்
அறிவியல் .........................

கலக்குற நண்பா ................

RVS said...

@அமைதிச்சாரல்
பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க.. ஏதோ முயற்சி செய்யறேன். ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி

Thank you!! ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி! புலி வாலைப் பிடித்துவிட்டேன். ரொம்ப பயங்கரமா விரியுது.. ;-))

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! அவரசரத்தில் தப்பாக டைப்பிவிட்டேன்.. நன்றி. ;-))

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்! இன்னும் மூணு நாலு எபிசொட் போகும்ன்னு நினைக்கிறேன். யாருக்காவது பொறுமை இருக்குமா? ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலை நகரமே! என்ன ஒண்ணுமே எழுதக் காணோம்? ;-))

RVS said...

@Porkodi (பொற்கொடி)
சரியான கருத்துதான்! ஒத்துக்கறேன்.
ஆனா இவ்ளோதான் கான்செப்ட் வைக்கணும்ன்னு தீர்மானம் பண்ணி எழுதறதில்லை. அப்டியே ஒரு ஃப்ளோல வர்றதை எழுதறேன். முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி. ;-))

RVS said...

@siva
மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சிவா! ;-))

RVS said...

@! சிவகுமார் !
வெளியிடும் அளவிற்கு உள்ளதா? நன்றி சிவா... ;-))

RVS said...

@தக்குடு
நீங்க கதை படிக்கறது எனக்கு பெருமை தக்ஸ்... ஹி..ஹி...

RVS said...

@கோவை2தில்லி
தொடர் வாசிப்பிற்கு நன்றி சகோ! ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
கற்பனை தானே மாதவா! காசா பணமா? ;-))

RVS said...

@இளங்கோ
;-) ;-) ;-) ;-) ;-)

RVS said...

@A.R.RAJAGOPALAN
அறிவியல் புனைவிற்கு உன்னுடைய
அகரம்
அமர்க்களமாக
அமைகிறது.
நன்றி கோப்லி. ;-))

சிவகுமாரன் said...

எந்திரனில் நூற்றுக்கணக்கா ரோபோ ரஜினி வந்த மாதிரி.... ஏழு ஜீவிதாக்கள். ... யாரப்பா அங்கே ஷங்கருக்கு போனைப் போட்டு இன்னொரு சுஜாதா வந்துட்டாருன்னு
சொல்லுங்கப்பா

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails