Wednesday, April 27, 2011

சிலிகான் காதலி - V

இதுவரை.....
தலைநகரில் தனது காதலி ஜீவிதாவை காணாமல் தவித்தான் ஜீவன். ஜீவிதாவை அங்கமங்கமாக அழகில் உயர்ந்த பல நூற்றாண்டு பெண்டிரின் அவயங்களை மாடலாக்கி க்ளோனிங் முறையில் ஒரு டாக்டரின் உதவியோடு செதுக்கியிருந்தான். அன்றைக்கு கண்காட்சியில் அச்சு அசல் ஜீவிதா போலவே ஒருத்தியை பார்த்தான். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளிடம் பேசிய போது அவள் தன் காதலி ஜீவிதா இல்லை என்று தெரிந்துகொண்டான். பின்னால் துரத்தும் போலீசிடம் இருந்து தப்பிக்க அந்த கண்காட்சியில் இருந்து வெளியே வந்தவனை ஒரு வானூர்தி இழுத்துப் போட்டுக்கொண்டு பறக்கிறது. அந்த வாகனத்தின் உள்ளே கண்காட்சியில் பார்த்தது போல ஏழு ஜீவிதாக்களை பார்க்கிறான். அதிசயத்தில் வாய் பிளக்கையில் அவனுடைய ஜீவிதாவை க்ளோனிங் முறையில் படிமம் எடுத்து அங்கம் அங்கமாக அழகுச் சிலையாக செதுக்கிய டாக்டர் ஜீவனையும் அந்த ஊர்தியில் பார்க்கிறான். நாட்டை இயந்திரங்களிடம் இருந்து காப்பாற்றும் தனது திட்டத்தை விளக்கி அதை செயல் படுத்துவதற்கு ஒரு அத்துவானக் கிராமத்தில் இருக்கும் தனது நண்பன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒரு பாறை மறைவில் தங்களது வானூர்தியை நிறுத்திவிட்டு நண்பனின் வீட்டிற்கு வரும் போது....

இனி...
****************** ஐந்தாவது ஸி.டி *********************


scifi1
.......அந்த அரைகுறை வெளிச்சத்தில் ஒரு கூட்டமாக ஏழெட்டு பேர் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். தூரத்தில் குட்டி குட்டி நிழலாய்க் கண்ணுக்கு தெரிந்தார்கள். வானத்தில் பல வர்ணங்களில் ஒளித்தீற்றல்கள் திப்பி திப்பியாக அப்பியிருந்தது. முன்பெல்லாம் தீபாவளிக்குத் தான் வானவேடிக்கைகளால் இரவிலும் வானம் பட்டப் பகலென வெளுத்திருக்குமாம். சுற்றுச்சூழல் மாசு காரணத்தினால் பட்டாசு கொளுத்தினால் சிறை வாசம் என்று மகிழ்ச்சிக்கு சுருக்குக் கயிறு போட்ட பிறகு மினி மற்றும் பிக் வான ஊர்திகளால் இப்போது ஆகாயத்தில் தினம் தினம் திருநாளே! இடது புறம் இருந்த பெரியமரத்துக்கு பின்னால் ஒளிவதா அல்லது முன்னேறி நடந்து அவர்களை கடந்து செல்வதா என்று அனைவரும் ஒரு கணம் யோசித்தோம்.

அனைத்துலக ஜீவிதா ரசிகர் மன்றத் தலைவன் கொடி பிடித்து விழா ஊர்வலம் போவது போல ஜீவிதாவிற்கு முன்னால் அந்தக் கூட்டத்திற்கு முதல் ஆளாய் கம்பீரமாக சென்ற நான் சமயோசிதமாக அந்த பன்னெடுங்காலம் வேரூன்றி கிளை பரப்பி தலை விரித்து நின்ற அரசமரத்தின் பின்னால் ஒளிந்தேன். அனைவரும் என் பின்னே தஞ்சமடைந்தனர்.

ஒருவர் பின் ஒருவராக அந்த மர்மக் குழு நடை ஒழுக்கத்தை கடை பிடித்து செல்லும் போது பிறை நிலா வெளிச்சத்தில் அவர்கள் முகம் ஒரே ஜாடையில் இருந்தது. திடுக்கிட்டேன். பக்கத்தில் டாக்டர் நண்பன் முகத்திலும் ஆச்சர்யம். இந்த வேளையில் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று எங்களால் துளிக்கூட யூகிக்க முடியவில்லை. அவர்கள் நேரே போய் அங்கே படுத்திருக்கும் யானை முதுகு போன்ற பாறை முக்கு திரும்பியவுடன் நிச்சயம் என்னிடமிருந்து கேள்வி வரும் என்று திரும்பிய டாக்டரை ஏமாற்றாமல் 

"டா.." என்று நான் கூப்பிட வாய் திறக்கையில் 

"என்ன?" என்று அந்தச் சூயிங் கம் நாற்றத்துடன் என் காதுக்கு மட்டும் அந்தக் கேள்வியை திணித்தான்.

"நீ ஒருவன் தான் இந்தத்  தொழிலில் கை தேர்ந்தவன் என்று நினைத்தால் இந்த குக்கிராமத்தில் கூட உன்னைப் போல ஒரு வித்தைக்காரன் இருக்கிறான் போல" என்றேன் அந்த கும்பல் சென்ற திக்கைப்பார்த்து அதிசயித்துக்கொண்டே. ஜீவிதா விட்ட மூச்சுக் காற்றை என் தோள் உணர்ந்து பின்னால் நின்றவளின் பயத்தை என்னிடம் தூது சொன்னது.

"த்சோ.. த்சோ.." என்று உச்சுக்கொட்டிவிட்டு  "நீ சரியா பார்க்கலையா.. எல்லாம் பேன்ட் சட்டை போட்ட அக்மார்க் ரோபோக்கள்..." என்றான் டாக் அலட்சியமாக.

"எப்படி சொல்றே"

"ராணுவ அணிவகுப்பு நடையில் அந்த ஒத்தையடிப் பாதையில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஒரு இம்மி பிசகாமல் நேரே நடந்து போவதை பார்த்தியே, உன்னால கண்டு பிடிக்க முடியவில்லையா?" என்று சொன்னபோது மேகத்தின் சிறையிலிருந்து மீண்ட அந்த அரை லிட்டர் பால் நிலாவில் அவன் பல் பளிச்சென்று தெரிந்தது.

"எங்கே போகிறார்கள் என்று ஏதாவது கெஸ் பண்ண முடியுதா?"

"சிறிது தூரம் சென்று பார்க்கலாம் வா!" என்று அழைத்தான் டாக்டர். ஆறு ஜீவிதாக்கள் கட்டளைக்கு காத்திருக்க ஏழாவது ஜீவிதா கலவரமானாள்.


"ஜீவன்! வேண்டாம்! எனக்கு பயமா இருக்கு" என்று என் காதில் கிசுகிசுத்தாள். நடுக்கத்தில் என்னை நெருங்கி பின்புறமாக இறுக்கி அணைத்தாள். பயம் வாழ்க.

"ச்சே.ச்சே.. கவலையை விடு.. நீங்கள் இந்த மரத்திற்கு பக்கத்தில் இருக்கும் பாறைக்கு மறைவான இடத்தில் பதுங்கியிருங்கள். இருக்கும் அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளின் சிக்னல்களை ஆஃப் செய்துவிடுங்கள். ஆம்பிளைத் துணையாக வண்டியோட்டி உங்களுடன் தான் இருக்கிறான். நானும் டாக்டரும் சென்று பார்த்து வருகிறோம்" என்று அவளைத் தேற்றினேன்.

வந்தவழியே அந்த ஒத்தையடிப் பாதை வழியாக நானும் டாக்டரும் அந்த மர்ம மனிதர்களாகிய ரோபோக்களை பின்தொடர்ந்தோம். அந்தப் பாதையின் விளிம்பில் காடு ஆரம்பித்தது. ஆயிரம் ஆயிரம் பாப் பாடக பாடகிகள் மேடையில் தலையை விரித்து விசிறியாட விடுவதைப் போன்று தோற்றமளித்தது அந்தக் காடு. அந்தக் காலப் பெண்டிர் சாமியாடும் போது கூட இதுபோல கருங்கூந்தலை கட்டவிழ்த்துவிட்டு தலையை உருட்டுவார்களாம். அசைவ மிருகங்கள், மாமிச பட்சிகள், அரவினங்கள் என்று அனைத்திற்கும் தங்க இலவச இடம் கொடுத்துவிட்டு அமைதியாக மூச்சுக்காட்டாமல் இருந்தது அந்த வனம். தூரத்தில் இருந்த காட்டுச் செடி கொடிகள் புடவை போல சுற்றிய மரத்தை வரிசையில் கடைசியாக சென்ற அந்த ஆளும் தாண்டிச் செல்வது தெரிந்தது. உடம்புக்கு ஆக்சிலேட்டர் கொடுத்து கொஞ்சம் வேகமாக நடையைக் கட்டினோம்.

காடுகளில் நடந்து பழக்கம் இல்லாததால் கால்கள் பின்னின. பத்து தப்படி நடப்பதற்குள் பதினைந்து அடிகள் தப்பாக வைத்தோம். சில இடத்தில் பாசி படிந்த கல் இடறி கீழே விழுந்து மூஞ்சி முகரையை பேர்த்துக் கொள்ளத் தெரிந்தோம். சில சமயம் காலில் கொடி வருடி அந்த ஸ்பரிசம் பாம்பு பயத்தை உண்டு பண்ணியது. அடர்ந்த வனத்திற்கு  நடுவே ஒரு காட்டாறு "ஷ்..ஷ்...ஷ்..." என்று எல்லோரையும் அதட்டி நுரை தள்ள தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையோரத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். ஆற்றின் வேகத்தால் உண்டான சாரல் அவர்களை நிச்சயம் நனைத்திருக்கும். ரொம்ப தூரம் வந்துவிட்டோமோ என்று அச்சப்பட்டோம். இவ்வளவு தொலைவு பின்தொடர்ந்தது வீணாகாமல் அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆர்வம் இன்னும் எங்களை பற்றி இழுத்துக்கொண்டு போனது.

சிறிது தூரம் சென்றதும் சட்டென்று ஒவ்வொருவரும் ஒரு மரத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றனர். என்ன மரம் என்று உத்துப்பார்த்தோம்.

"என்ன மரம் அது?"

டாக்டர் கண்ணாடியை தூக்கி தலைக்கு தள்ளிவிட்டு பார்த்தான்.

"மேப்பிள் ட்ரீ" என்று எனக்கு பதிலை சொல்லிவிட்டு வைத்த கண் வாங்காமல் அந்தப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு குழுவாக அவர்கள் அனைவரும் அந்த மரங்களை ஆரத்தழுவி உச்சி மோந்து கொண்டிருந்தார்கள்.

ஆச்சர்யம் மேலிட ஏன் என்ற கேள்வி என் மூளையை இரண்டு மூன்று முறை ஆங்காரமாக வலம் வந்தது. ஒன்றும் புரியவில்லை.

"ஏன் அந்த மரத்தை மூச்சு விட விடாமல் இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்?" என்று வியப்பாக கேட்டேன்.

"ஜீவ்! புரிந்து விட்டது"

"என்ன?"

"இவர்கள் சூரிய ஒளியில் இயங்கும் ரோபோக்கள். காலையில் இருந்து மாலை வரை இவர்களுக்கு வேறு சக்தி ஆகாரம் தேவையில்லை. சூரியன் மறைந்ததும் தங்களுக்கு வேண்டிய சக்தி சாப்பிட இந்த மரத்தை கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அது தனது சேய் போல இவர்களுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறது" என்று புதிர் போல சொன்னான் டாக்டர்.

"ஏய்! ஒண்ணுமே புரியலை. ஆணும் பெண்ணும் கட்டிப் பிடிச்சா மின்சாரம் வரும் அப்படின்னு கவிஞர்கள் கவிதையில புருடா விடுவாங்க. இப்ப என்னடான்னா நீ நேரே ரோபோ மரத்தை கட்டிப் பிடிச்சா அதுக்கு மின்சாரம் கிடைக்கும்ன்னு சொல்றே! அந்தக் காலமா இருந்தா இப்ப என்ன தெரியுமா உன்னை கேட்ருப்பாங்க."

"என்ன?"

"சும்மா காது குத்தாதன்னு கிண்டல் பண்ணியிருப்பாங்க!"

"இல்ல ஜீவ்! 20- ம் நூற்றாண்டிலேயே மேப்பிள் மரங்கள்ல குறைந்த வால்டேஜ் மின்சாரம் இருக்குன்னு என்னை மாதிரி ஒரு கிறுக்கு விஞ்ஞானி கண்டு பிடிச்சான்."

"இன்ட்ரெஸ்டிங்..."

"என்ன நான் கிறுக்குங்கறதா?"

"ச்சே.ச்சே.. சமாசாரம் சுவாரஸ்யமா இருக்குன்னு சொன்னேன்"

"இப்ப.. இந்த ரோபோக்கள் உள்ளே ஒரு வோல்டேஜ் பூஸ்டர் சர்கியூட் ஒன்னு தயார் செய்து மாட்டி விட்டு இப்படி காட்டுக்குள்ள உலவ விட்ருக்காங்க. நமக்கு இப்ப இது முக்கியம் இல்லை. இதுகளை யார் தயார் செய்து இப்படி அவுத்து விட்ருக்காங்க அப்டிங்கறது தான் முக்கியம். முடிஞ்சா அவரைக் கூட நம்ம போராட்டக் குழுவில சேர்த்துக்கலாம். என்ன சொல்றே"

"நிச்சயமா.. அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம்"

"வா! போய்க் கொண்டே பேசுவோம்" என்று என் தோளில் கை போட்டு திருப்பினான். பயத்தில் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.

"கவலைப் படாதே! நம்மளை சென்ஸ் பண்ற அளவுக்கு அதுங்களுக்கு இப்ப சக்தி இருக்கான்னு தெரியலை. நிச்சயம் இன்னும் ஒரு மணி நேரமாவது அவங்கெல்லாம் மூக்கு முட்ட சாப்பிட வேண்டும். அப்பத்தான் இன்னிக்கி ராத்திரி வேலை செய்யலாம்."

நிம்மதியாக நடக்க ஆரம்பித்தேன். நடுவே ஜீவிதா நினைவு வந்தது. ஒருத்திக்கு ஏழுபேராக காத்திருக்கிறார்கள். "கிர்ரக்..கிர்ரக்.." என்று கத்திக்கொண்டு இரண்டு குரங்கு குடும்பம் மரக்கிளை ரோட்டுகளில் வேறு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.

"நீ ஏதோ சந்தேகம்ன்னு கேட்ட" என்று நினைவூட்டினான் டாக்டர்.

"ம்... இப்ப இதுங்கல்லாம் இப்படி சார்ஜ் பண்ணிக்குதே. நீ இன்னொரு ஜீவிதாவை தலைநகரத்தில கண்காட்சியில விட்டுட்டு வந்திருக்கியே! அந்த ஜீவன் உள்ள ரோபோ எப்படி இப்ப நடமாடும்."

"ஹா..ஹா.. நடமாடும் போதே அது தனக்கு உண்டான சக்தியை உற்பத்தி பண்ணி சேமிச்சு வச்சுக்கும். கவலைப்படாதே. அது ஒரு Unique Design. "

டாக்டரின் மூளை என்னைப் பொறாமைப் பட வைத்தது.

"அதை ஏன் அங்கேயே விட்டுவிட்டு நாம மட்டும் இங்க வந்துட்டோம்" என்ற கேள்வி கேட்ட என்னை ஒரு பூச்சி போல பார்த்துவிட்டு

"அங்கே போய் பேசிக்கலாம்" என்று நடையை துரிதப்படுத்தினான் டாக்டர்.

நாங்கள் விட்டுவிட்டு வந்த இடத்தில் அனைவரும் பத்திரமாக இருந்தனர். மணி இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. இப்போதெல்லாம் இரவில் ஊர் அடங்கும் என்ற கலாசாரம் எல்லாம் வழக்கொழிந்து போயிற்று. நடுநிசியில் நாலாயிரம் பேர் நடமாடுகிறார்கள். இது கொஞ்சம் சிறிய ஊர் மற்றும் நண்பன் இருக்கும் இடம் கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஏரியா என்பதால் அங்கே செல்வதற்கு சிரமம் இருக்காது என்று ஜீவிதாக்களுடன் நகர்ந்தோம்.

மலையடிவாரத்தை ஒட்டிய கிராமம் அது. இன்னமும் நிறைய இடங்களில் பசுமையை தாங்கி வரம் பெற்றிருந்தது அந்த ஊர். நண்பனின் வீட்டிற்கு செல்லும் முன் போகும் வழியில் டாக்டர், என் உயிரைச் சுமந்த ஜீவிதா, அந்த மொட்டையடித்த வாகன ஓட்டி மூவரும் சிரமப்பட்டு தங்களது புஜத்தில் குத்தியிருந்த RFID ஐ சுட்டுசெயலிழக்க வைத்தார்கள். ஜீவிதாவிர்க்கு கண்ணில் நீர் வடியும்போது "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" என்று யாரோ ஒரு மீசை முறுக்கிய முண்டாசுக் கவி எழுதியதாக வலையில் படித்தது இப்போது நினைவலையில் நீந்தி வந்தது.

சாட்டிலைட் போனில் டாக்டருக்கு கால்.

"நரேன்! வந்துட்டோம்! ஜஸ் டூ மினிட்ஸ்"

என்று சொல்லி முடிக்கும் போது ஒரு பழங்கால கட்டிடம் ஒன்றின் முன்னால் நின்றிருந்தோம். முன்புறச் சுவற்றிற்கு பெயின்ட் அடித்து பல்லாண்டுகள் ஆகியிருக்கும். மாடியிலிருந்து மழைநீர் ஓடி தனது தடத்தை வெளிப்புற சுவற்றில் பதிந்திருந்தது. வலது புற சுவற்றை ஒட்டினாற்போல ஒரு இரண்டடிக்கு அரசமரக் கன்று வளர்ந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. நவயுகத்தில் ஒரு 'புது' வீடு. பத்து பேர் ஒரு கும்பலாக போக வேண்டாம் என்று முதலில் டாக்டர், நான், என் காதலி ஜீவிதாவோடு இன்னும் இரண்டு ஜீவிதாக்களை சேர்த்துக்கொண்டு ஐவராக அங்கே பிரவேசித்தோம்.

வாசலில் நிழலாடியதைப் பார்த்ததும் உள்ளிருந்து ஒரு அல்சேஷன் லொள்ளியது. கொலைவெறியில் ஓடிவந்தது. என்னை வந்து கடித்து சுவைக்கும் ஆவலில் வந்தது என்னுடைய தொடைக்கும் அதன் வாய்க்கும் அரை இன்ச் இடைவெளியில் அசையாமல் நின்றது. எனது சென்ற உயிர் மீண்டு வந்தது. என்ன ஆயிற்று என்று குனிந்து பார்க்கையில் ஒரு நீல நிறத்தில் திரை போல அந்த வீட்டின் வலது சுவற்றிலிருந்து இடது பக்கம் வரை ஓடிக்கொண்டிருந்தது. மிகத் துல்லியமாக அந்த மின் காந்த வேலிக்கு அரை இன்ச் முன்னால் இருந்ததால் தப்பித்தேன்.

நரேன் நரம்பாக வெளியே வந்தார். பார்த்தாலே அவர் பழமை விரும்பி என்று தெரிந்தது. ஒரு காவி வேஷ்டியும் மேலுக்கு கதர் சட்டையும் அணிந்திருந்தார். நிர்வாண உலகத்தில் கோவணாண்டி பைத்தியம் என்கிற ரீதியில் இந்த 2199- ல் அளவுக்கு மீறி வித்தியாசமாக இருந்தார். நகரத்திற்கு ஒதுக்குப் புறமான ஊர். ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடு. எல்லோரையும் விட்டு விலகியே இருந்தார். கண்கள் பிரகாசமாக இருந்தது. நாசி கூராக அவர் பிராணாயாம பயிற்சியை பறை சாற்றியது. அவர் எதையும் கூர்ந்து கவனிப்பவர் என்பதால் காது இரண்டும் உள்பக்கம் மடங்கி இருந்தது. ஆழ்ந்து யோசிப்பதினால் நெற்றியில் குறுக்குமடுக்காக ஐந்தாறு ரேகைகள் ஓடியது.

"ப்ளீஸ் கம். ப்ளீஸ் கம்." என்று வரவேற்றார்.

"நல்லவேளை! இந்த நாய் விழுந்து பிடிங்கியிருக்கும்." என்று பயத்தில் உதறிய உடம்பை சீராக்கிகொண்டு பேசினேன்.

"கவலைப்படாதீங்க. இந்த மின்காந்த வேலியோட ரிமோட் என் கையில இருக்கு. சரியான நேரத்தில நான் பார்த்து ஆன் செய்தேன்."

"இவ்ளோ ரிமோட் பிளேஸ்ல இருக்கீங்க. இது மாதிரி லேட்டஸ்ட் சமாச்சாரம் எல்லாம் யூஸ் பண்றீங்க" என்று கேட்ட என்னை ஒரு அசடு போல பார்த்தார். பின்பு பக்கத்தில் நின்ற டாக்டரை ஜாடையாய் பார்த்தார்.

"என்னோட பிரண்ட் சாருக்கு இம்ப்ளிமென்ட் பண்ணிக்கொடுத்தான். இது போல இன்னும் நிறைய ஆச்சர்யம் உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கு." என்று டாக்டர் சொல்லிமுடிக்கும் வேளையில் எங்களின் அடுத்த குழு வந்து சேர்ந்தது.

இரண்டாவதாக வந்த குழுவில் எனக்கு ஏதோ ஒன்று இடறியது. என்ன என்று யோசித்துப் பார்த்ததில்.. ஆ.....ஒரு ஆள் மிஸ்ஸிங். பயத்தில் மனது திக்கென்று ஆனது. "டா..டா..டா...."

தொடரும்....

பட உதவி: dualmonitorbackground.com மற்றும் http://desktopro.com/
-


34 comments:

Porkodi (பொற்கொடி) said...

நல்லாவே காது குத்தறீங்க எசமான்! ;-)

! சிவகுமார் ! said...

//வாசலில் நிழலாடியதைப் பார்த்ததும் உள்ளிருந்து ஒரு அல்சேஷன் லொள்ளியது. கொலைவெறியில் ஓடிவந்தது. என்னை வந்து கடித்து சுவைக்கும் ஆவலில் வந்தது என்னுடைய தொடைக்கும் அதன் வாய்க்கும் அரை இன்ச் இடைவெளியில் அசையாமல் நின்றது. எனது சென்ற உயிர் மீண்டு வந்தது. என்ன ஆயிற்று என்று குனிந்து பார்க்கையில் ஒரு நீல நிறத்தில் திரை போல அந்த வீட்டின் வலது சுவற்றிலிருந்து இடது பக்கம் வரை ஓடிக்கொண்டிருந்தது. மிகத் துல்லியமாக அந்த மின் காந்த வேலிக்கு அரை இன்ச் முன்னால் இருந்ததால் தப்பித்தேன்.//

நிஜமாக அவ்விடத்தில் இருந்த பதற்றம். சூப்பர்ப். RVS, நீங்க scientific Terrorist aa illai Terrific Scientist aa??

ஸ்ரீராம். said...

அவங்களைப் பின்தொடர்ந்துட்டு திரும்பி வரும்போதே ஜீவிதா காணாமல் போய் இருப்பாள் என்று எதிர்பார்த்தேன்...!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சுவாரஸ்யமாக போய்கொண்டிருக்கிறது,,,

எல் கே said...

மைனர்வாள் இவங்களை தொடர்ந்து வர மாதிரிதான் ப்ரோக்ராம் பண்ணி இருப்பாரு. அப்படி இருக்கச்சே எப்படி காணாம போகும்

பதில் சொல்லுங்க சார்

@கேடி

உனக்கு மட்டும்தான் காதுகுத்த உரிமை உண்டா. மைன்ரும் பண்ணட்டும்

பத்மநாபன் said...

அறிவியல் + மருத்துவம் + இயந்திரம் கலக்கல்... இப்ப பகுத்தறிவு போராட்டம் மாதிரி எந்திர எதிர்ப்பு போராட்டம் வரும்ங்கிறிங்க... ஆமாம் ,எல்லாம் முத்திப் போனால் போராட்டம் தானே...

வெங்கட் நாகராஜ் said...

ம். அப்புறம்?

Madhavan Srinivasagopalan said...

என்னமோ மிஸ்ஸிங்.. எதுன்னு.. சரியாத் தெரியலை..

A.R.RAJAGOPALAN said...

உயிரும் மெய்யும் தமிழ்
நிகழ்ந்ததும் நிகழ்த்தியதும் வரலாறு
கூட்டலும் கழித்தலும் கணிதம்
நீரும் நிலமும் புவியியல்
உணர்ந்ததும் உணர்த்தியதும் அறிவியல்

அசாத்யமும் தீர்க்கமும் வெங்கட் என
அர்த்தம் ஆகட்டும் ..........................

கக்கு - மாணிக்கம் said...

இது இன்னா இன்னமும் வந்துகினேக்கீது ? ரொம்ப பெரிசாகீது ........ஆக்காங் ?

கக்கு - மாணிக்கம் said...

இது இன்னா இன்னமும் வந்துகினேக்கீது ? ரொம்ப பெரிசாகீது ........ஆக்காங் ?

கக்கு - மாணிக்கம் said...

அட .. அத்து ஒண்ணுமில்ல கண்ணு.... அல்லாரும் டெம்ப்ளேட் கமெண்டு இடுகினேகீறாங்க இல்ல? அத்தான் நானு கொஞ்சம் ராங் காடிகினே. இன்னா மெர்சலாயி பூட்டியா??

சுந்தர்ஜி said...

நடத்துங்க நடத்துங்க ஆர்விஎஸ்.கண்ணைக்கட்டிக் கூட்டிட்டுப் போறீங்க இன்னோரு லோகத்துக்கு.கூடவே வர்றோம் ஆன்னு வாயைத் திறந்துக்கிட்டு.

ரிஷபன் said...

எங்களை யோசிக்க விடல.. நீங்க.. எழுத்து வேகம் அப்படி

RVS said...

@Porkodi (பொற்கொடி)
கொஞ்சம் அசந்தா மொட்டையடிச்சு காது குத்துவோம்.. ;-))
நன்றிங்க எஜமானி! ;-))

RVS said...

@! சிவகுமார் !
ஒரு Modernist- அ terrorist அப்படின்னு சொல்றீங்களா? ஹி..ஹி.. நன்றி. ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
காணா போனது ஜீவிதா தானா... பொறுத்திருந்து அடுத்த பதிவில் பார்க்கவும். ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
மிக்க நன்றி கருன்! ;-))

RVS said...

@எல் கே
ரோபோதான் தொலையணுமா எல்.கே? ;-))

RVS said...

@பத்மநாபன்
முடிச்சை கரீட்டா இழுத்துருவீங்க பத்துஜி நீங்க.. ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
விழுப்புரம் தல... ஹி..ஹி... ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
என்னான்னு சொன்னா அடியேன் திருத்திக்க தயாரா இருக்கேன் மாதவா! நன்றி. ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
கவிதையில் பின்னூட்டமிடும் நண்பா! மிக்க நன்றி. ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
சரி நைனா! ;-))

RVS said...

@சுந்தர்ஜி
மிக்க நன்றி சுந்தர்ஜி!
முடிஞ்ச வரைக்கும் சுவாரஸ்யமாய் கொண்டு போக முயற்சிக்கிறேன். மிக்க நன்றி. ;-))

RVS said...

@ரிஷபன்
உங்களது தொடர் வாசிப்பிற்கு மிக்க நன்றி சார்!

இளங்கோ said...

//"டா..டா..டா...."//
SUSPENSE.. !!

RVS said...

@இளங்கோ
YES.. Thriller ! ;-))

Ramani said...

தொடர்ந்தார்போல நான்கு பதிவுகளையும் படித்தேன்
(முதல் பதிவை ஏற்கெனவே படித்துவிட்டேன்)
விஞ்ஞானக் கதைகள் படிக்கையில்
எவ்வளவு சிறப்பாக எழுதினாலும்
படிக்க கொஞ்சம் அலுப்பு தோன்றும்
உண்மையில் உங்கள் பதிவில் தோன்றவில்லை
ஆனாலும் கதை படிக்கையில் காட்சியாக
சம்பவங்கள் விரியாது நிற்பதுபோல் படுகிறது
(அது என்னுடைய குறைபாடாகக் கூட இருக்கலாம்)
நிச்சயம் சுஜாதா இன்னேரம் படித்து சந்தோஷப் பட்டிருப்பதோடு
அடுத்த பதிவையும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பார்
தொடர வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

சுவாரஸ்யமா போகுது தொடர்.

சிவகுமாரன் said...

இன்குலாப் ஜிந்தாபாத் . ( ஒண்ணுமில்லைங்க போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு.. அதானே நம்ம பொழைப்பு )

RVS said...

@Ramani
தொடர் வாசிப்பிற்கு நன்றி ரமணி சார்! ;-))

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க.. ;-)

RVS said...

@சிவகுமாரன்
உங்க ஜிந்தாபாத்துக்கு ஜிந்தாபாத். நன்றிங்க சிவகுமாரன். ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails