Saturday, May 28, 2011

சிலிகான் காதலி - இறுதி அத்தியாயம்

முன்கதை சுருக்கம்:
தலைநகரில் தனது காதலி ஜீவிதாவை காணாமல் தவித்தான் ஜீவன். ஜீவிதாவை அங்கமங்கமாக அழகில் உயர்ந்த பல நூற்றாண்டு பெண்டிரின் அவயங்களை மாடலாக்கி க்ளோனிங் முறையில் ஒரு டாக்டரின் உதவியோடு செதுக்கியிருந்தான். அன்றைக்கு கண்காட்சியில் அச்சு அசல் ஜீவிதா போலவே ஒருத்தியை பார்த்தான். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளிடம் பேசிய போது அவள் தன் காதலி ஜீவிதா இல்லை என்று தெரிந்துகொண்டான். பின்னால் துரத்தும் போலீசிடம் இருந்து தப்பிக்க அந்த கண்காட்சியில் இருந்து வெளியே வந்தவனை ஒரு வானூர்தி இழுத்துப் போட்டுக்கொண்டு பறக்கிறது. அந்த வாகனத்தின் உள்ளே கண்காட்சியில் பார்த்தது போல ஏழு ஜீவிதாக்களை பார்க்கிறான். அதிசயத்தில் வாய் பிளக்கையில் அவனுடைய ஜீவிதாவை க்ளோனிங் முறையில் படிமம் எடுத்து அங்கம் அங்கமாக அழகுச் சிலையாக செதுக்கிய டாக்டரையும் ஜீவன் அந்த ஊர்தியில் பார்க்கிறான். நாட்டை இயந்திரங்களிடம் இருந்து காப்பாற்றும் தனது திட்டத்தை விளக்கி அதை செயல் படுத்துவதற்கு ஒரு அத்துவானக் கிராமத்தில் இருக்கும் தனது நண்பன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் ஒரு பாறை மறைவில் தங்களது வானூர்தியை நிறுத்திவிட்டு நண்பனின் வீட்டிற்கு வரும் போது நிறைய ரோபோக்களை பார்த்தார்கள். மேபிள் மரத்தை கட்டிப்பிடித்து தனக்கு தேவையான சக்தியை உறிஞ்சிக்கொண்டார்கள். இதைப் பார்த்துவிட்டு திரும்பிய டாக்டரும், ஜீவனும் டாக்டரின் நண்பர் நரேன் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்குவதற்காக வருகிறார்கள். வீட்டிற்கு வந்த பின் அவர்களது குழுவில் ஒரு ஆள் மிஸ்ஸிங். ஜீவன் அதிர்ச்சியுற்றான். தொலைந்து போன வண்டியோட்டி வாகனத்தில் விட்டு வந்த எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வந்து கொடுத்தான். பின்னர் ஜீவிதாக்களை வைத்து தான் செய்யப் போகும் காரியங்களை பற்றி விவரித்தான் டாக்டர். தலைமை செய்தி நிலையத்தில் ரோபோ ஜீவிதாவின் நடவடிக்கைகளை இங்கிருந்தே காண்பித்தான். குடிபோதையில் அந்த இயந்திர ஜீவிதாவை தொட்டு உரசி பிடித்து இழுக்கிறான். சிக்னல் அறுந்து போய் ஸ்க்ரீன் பிளான்க் ஆனது. வாசலில் மரப்பலகையில் ஷு காலோடு ஆயிரமாயிரம் பேர் நடப்பது போல சத்தம் கேட்டு ஜீவன் எட்டிப் பார்க்கையில் கொசுக்களை அழிக்க இயந்திரக் கொசுக்களை பறக்க விட்டிருந்தார்கள். இயந்திர ஜீவிதாவை  வைத்து இயந்திர ஆட்சியை முறியடித்துவிடலாம் என்று நினைத்திருந்த டாக்டரின் கனவில் நாலு தடியன்கள் வந்து மண்ணைப் போட்டார்கள். அவர்கள் என்ன செய்வார்களோ என்ற பீதியில் உறைந்திருந்த போது.....
 *******************


அந்த அறையெங்கும் சாராய நெடி வீச புஜபலமிக்க நான்கு குண்டர்கள் முரடாக நின்றுகொண்டிருந்தார்கள். அறைக்காற்றின் மூலக்கூறுகள் மாறியிருந்ததை சின்னஞ்சிறு சிகப்பு புள்ளிகளாக இங்கே மானிட்டர் திரையில் தெரிந்தது. க்ஷன நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை உருட்டினாள் இயந்திர ஜீவிதா. இன்டலிஜென்ஸ் மாட்யூல் வேலை செய்ய ஆரம்பித்தது. வட்டமும் சதுரமுமாக இங்கே கம்ப்யூட்டர் எதையோ பச்சை பச்சையாய் காட்டியது. மெமரியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிரிப்புகளில் தேர்ந்தெடுத்த ஒரு புன்னகை பூத்தாள். இங்கேயிருந்து பார்த்த எனக்கே கிக்காக இருந்தது. அங்கே உஹும். எவரும் மசிவதாக தெரியவில்லை.

"எங்களோடு வா.." முதல் குண்டன் கூப்பிட்டான்.

"எங்கே?" 

"உன் மாமியார் வீட்டிற்கு" சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தான் ரெண்டாமவன்.

"நான் பிரபுவை கூப்பிடுவேன்"

"எப்படி.. ஹே...பிராணநாதா... மஹா பிரபுன்னா" இது மூன்றாமவன்.

ஒரு கையிழுக்கும் பலவந்தம் மற்றும் கட்டியிழுக்கும் நிர்பந்தத்திர்க்கான சூழ்நிலை உருவாகியது. என் பக்கத்தில் இங்கே நின்றிருந்த என் காதலி ஜீவி பயத்தில் என் தோள் மீது சாய்ந்தாள். உட்கார்ந்திருந்த டாக்டர் சதை பிய்யும் வரை விரல் நகம் கடித்தான். துப்பினான்.

"என்ன செய்வான்னு தெரியலை" டாக்டர் குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.

"வாங்க போகலாம்..." புன்னகை மாறாமல் ஒயிலாக அவர்களுடன் சென்றாள் இ.ஜீவிதா.

வெள்ளை வெளேர் என்று பவுடர் பூசி நின்ற சுவர்கள் நிற்கும் காரிடாரை கடந்து ஒரு பெரிய இரும்புக் கதவுக்கு முன்னால் நின்றார்கள். வரி பனியன் போட்ட குண்டன் கையில் ஒரு மனிதக் கட்டை விரல் இருந்தது. அறுத்த முனையில் ரத்தம் ஒழுகாமல் இருக்க பாலிதீன் கவர் போட்டு சுற்றியிருந்தார்கள். கதவின் நாக்கில் அழுத்தித் தேய்த்தான். அதன் கைப்பிடி நீலமாக ஒளிர்ந்தது. அருகில் இருந்த பேனல் போர்டில் ஒரு பதினாரிலக்க எண்ணை "கிக்.கிக்.கிக்." என்று தட்டினான். நம்பரை உள்வாங்கி அலாவுதீன் சீசேம் சொன்னது போல திறந்து வழிவிட்டது. மீண்டும் ஒரு நூறு மீட்டர் தூரமுள்ள சந்தில் மேனி உரச நெருக்கமாக நடந்தார்கள். மேலே ஒளிர்ந்த விளக்குகள் எதிரொலியாக கீழே தெரிந்து அவர்கள் காலில் மிதிபட்டது.

மீண்டும் ஒரு கதவு, கட்டை விரல் அழுத்து, வேறு ஒரு பதினாரிலக்க எண். "ஹி....ஸ்..ச்" என்று திறந்து கொண்டது. அந்த அத்துவான அறையில் ஒரு நாற்காலி போட்டிருந்தது. ஒரு ரோபோ வொர்க்க்ஷாப்பின் பலவித உபகரணங்கள் நிறைந்திருந்தது.

"அந்த சேரில் உட்காரமுடியுமா?" என்று சாந்தமாக கேட்டான் ஒரு தடியன்.

"ம்.." என்று கொஞ்சல் முனகலாக சொல்லிவிட்டு ஜீன்ஸ் பேன்ட் கிழியாமல் பழங்காலத்து சரோஜாதேவி போல நடந்து சென்று அமர்ந்தாள்.  முகத்தில் இன்னமும் புன்னகையையும் கண்களில் ஒரு விதமான காதல் அழைப்பையும் ஏந்தியிருந்தாள்.

சிறிது நேரத்தில் கண்களில் முட்டை கண்ணாடியும் கையில் சிகரெட் சகிதமாக ஒரு குறுந்தாடி வந்தார். எழுந்து நின்றாள் இ.ஜீவிதா. ரொம்ப நாள் பழகியவர் போல சகஜமாக தோளில் கை போட்டார். செயற்கை நாணத்துடன் நெளிந்தாள். கேசத்தினுள் கைவிட்டு பின்னந்தலையில் இருந்த மெயின் சர்கியூட் போர்டு மின்சார இணைப்பை நறுக்கென்று துண்டித்தார். கை கால்களை விலுக்கென்று உதறி தலை குடைராட்டினமாக எல்லா பக்கமும் கிர்ரென்று சுழன்று உயிரற்ற சடலமாக கீழே கிடந்தாள் இ.ஜீவிதா. பொறுமையாக பொட்டு துணியில்லாமல் எல்லாவற்றையும் களைந்தார். அவளை அக்கக்காக பிரித்து மெயின் மாட்யூல்களை தனது எக்ஸ்டெர்னல் டிரைவில் காப்பி செய்தார். அவளது இதயத்தை பிளந்து ஒரு மெயின் பலகையை கடத்திக் கொண்டு காலால் ரூமின் ஒரு மூளைக்கு அவளை எத்திவிட்டு சென்று விட்டார்.

********

எஞ்சியிருக்கும் ஜீவிதாக்களை களத்தில் இறக்கும் திட்டத்தை வகுத்தான் டாக்டர். ஒரு இயந்தரத்தின் சாவு எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எங்கள் இதயத்தில் "கிர்க்..கிர்க்..." என்று ஆயில் போடாத துருவேறிய கியர் சத்தம் கேட்டது. இப்போது எல்லோரும் ஓரினம். மீண்டும் தகவல் மையத்திற்கு ஒருத்தியையும், இருவரை தேச மைய மருத்துவமனைக்கும், மேலும் மூவரை உள்நாட்டு நிர்வாகத் துறைக்கும், மீதமிருந்தவளை தலைமை செயல் அலுவலர் வீட்டுக்கும் புல்லட் ரயில் மூலம் டிக்கெட் எடுத்துக் கொடுத்து பார்சல் செய்தான்.

அடுத்த வாரத்தில் நான்கு காணொளிகள் அவனுடைய இன்டர்நெட் ப்ரைவேட் பாக்ஸை நிறைத்திருந்தது. அதன் காட்சிகள் உங்கள் பார்வைக்கும் இதோ..

** thagaval.avi **

கிளிங் என்று மணியடித்து "நா ஹோஹா வந்துருக்கேன்.." என்றாள்.

"யாரு" அறுபது வயது கதவைத் திறந்து கண்களை பிரகாசமாக திறந்தது.

"ஹோஹா... மெயில்ல அனுப்பினேனே"  சொல்லி முடிக்கும் போது காற்றில் ரெண்டு அவுன்சு மல்லிகை மணம் தூவினாள். ஜில்லென்ற கரங்களால் அவர் மணிக்கட்டை பிடித்தாள். அவர் கண்களில் பல்பு எரிந்தது.

அரைநிஜாரும், அரைகுறை நினைவோடும் போதையில் தள்ளாட்டமாகவும் இருந்த தகவல் மைய தலைமை நிர்வாகி கதவை திறந்து அவளை உள்ளே விட்டார். வாயைத் திறந்து லிட்டர் லிட்டராக வெளியே ஜொள்ளை விட்டார். ஹாலெங்கும் மின்னணு பொருட்கள் அலங்கரிக்க சோஃபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பளீரென்ற ஆடுசதை தெரிய ஆட்டிக்கொண்டிருந்தாள் ஹோ .ஹா.. என்ற ரோபோ ஜீவிதா.

** hospital.avi **

இரவு பதினொன்று நாற்பது. கடைசி ரவுண்டு சுற்றிவந்துவிட்டு தலைமை மருத்துவர் 82 வது மாடியில் இருந்து நேராக இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் தன் வீட்டிற்கு பறந்தார். அசராமல் 82 x 17 படிக்கட்டுகளை இருநூறு செகண்டுகளில் ஏறி வந்த அந்த இருவரும் கடைசி நாற்காலியில் கொழுக்கென்று இருந்த டூட்டி நர்சை அடைந்தார்கள். ஏதோ ரகசியம் போல நெருங்கி நின்று காதோடு காது பேசினார்கள். நர்ஸ் வந்த இருவரையும் ஆதுரமாகக் கட்டிக்கொண்டாள். தலையை பின்னுக்கு தள்ளி அவர்களது அங்கங்களை அசிங்கமாகப் பார்த்தாள். மூவரும் அணைத்துக்கொண்டே சூடாக ஓய்வறைக்கு விரைந்தார்கள்.  வெளியே மங்கலாக நீல விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

** internal.avi **

"உள்நாட்டு நிர்வாகக் கட்டிடம்" என்ற அந்த பெரிய போர்டு பிரதானமாக இருந்தது 101 வது மாடி. மொத்தம் நூறு மனிதர்கள், இருபது ரோபோக்கள் என்று எப்போதும் கலகலவென்று இருக்கும் ஒரு அரசாங்கப் பிரிவு. போலீஸ், நலத்திட்டப் பணிகள், ஒழுக்கக் கட்டுப்பாடு, ஊர்க் கட்டுப்பாடு என்று அனைத்தையும் நிர்வகிக்கும் முக்கியத் துறை. மூன்று வல்லுனர்கள் மேற்பார்வை பார்த்து வந்தார்கள். இரவுபகல் பாராது அலுவலகத்தில் குப்பை கொட்டும் திடகாத்திர இளைஞர்கள். வயது எழுபத்தியிரண்டு. பயோ டெக்னாலஜி முன்னேற்றத்தால் பல சிகிச்சைகள் அளித்து வயது ஏறினாலும் இளமை குன்றாமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் சேவை நாட்டுக்கு தேவை. ஆளும் தலைமைக்கும் இதே சிகிச்சை கொடுத்து சௌக்கியமாக வைத்துள்ளார்கள் என்று ஊரில் வதந்தி நிலவியது.

இயந்திர ராணிகள் மூவரும் ஆடை அணிந்திருந்த விதம் மிகவும் வில்லங்கமாக இருந்தது. அரை குறை ஆடை அந்த அலுவலக அறை முழுவதையும் சுண்டி இழுத்தது. காரிடாரில் அவர்கள் நடந்து போகும் போது இரண்டு மூன்று பேசிக் லெவல் ரோபோக்களே தலையை திருப்பி திருப்பி பார்த்து சைட் அடித்தன. ஒரு ஹுயூமனாய்ட் ரோபோ  "உய்.." என்று உதடு குவித்து ரொமான்டிக்காக சீட்டியடித்தது. ஆளுக்கு ஒருவரின் அறையாக அடைந்தார்கள். சிறிது நேர உரையாடலுக்கு பின்னர் கதவை உள்ளே தாளிட்டுக் கொண்டார்கள்.

**CEO.avi **

அந்த பலமாடிக் குடியிருப்பின் பெரிய போர்ஷனின் மிகப்பெரிய அறையின் ஓரத்தில் குட்டிதொப்பையுடனும் ஒளி பிரதிபலிக்கும் தலையுடனும் கம்ப்யூட்டர் கேம் ஆடிக்கொண்டிருந்தார் ஒரு பெரியமனிதர். இடது கையில் மதுக் கோப்பையை ஏந்தியிருந்தார்.

"ஹலோ... மை நேம் இஸ் ஜுஸ்ஸு" என்று ச்சில்லிங் எஃபெக்ட்டுடன் பேசினாள் ஜுஸ்ஸுவாக இருக்கும் இயந்திர மிஸ்ஸு. ஸு சொல்லும்போது வாயிலிருந்து சிரிஞ் மூலமாக தெளிக்கப்பட்ட நீர் ப்ரோக்க்ஷனமாக அவர் சொட்டை தலையில் தெளித்தது. அப்படியே குளிர்ந்து போய் எழுந்தார். மேல் சட்டை இல்லாமல் கால் சட்டையுடன் இருந்தார். மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அப்படியே எழுந்து அவள் பின்னால் உள்ளே சென்றார்.

படார் என்று கதவு அறைந்து சார்த்திக்கொண்டது.

**

ரிமோட்டாக அந்த இயந்திர சேனையுடன் ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து இரவுபகல் பாராது உழைத்தான் டாக்டர். நானும் ஜீவிதாவும் முடிந்த வரையில் உதவி செய்தோம். நரேன் சார் மிகவும் பொறுப்பாக பார்த்துக்கொண்டார். தொலைத் தொடர்புக்கும், அலைத் தொடர்புக்கும் பொது அலைவரிசையில் என்கிரிப்ட் செய்து தான் அனுப்பிய எழுவர் சேனையை கட்டுப்படுத்தினான்.

தகவல் மையத்தின் மத்திய தகவல் சேகரிப்பு டேட்டா பேஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு உயிருள்ளோர், அற்றோர் கலந்து குழப்பியடிக்கப்பட்டது. உயிரோடிருக்கும் நாடாளும் தலைவரை "டெட்" என்று காட்டி கண்ணை சிமிட்டியது. உள்நாட்டு நிர்வாக இயந்திரங்கள் அனைத்தும் வேலை செய்வதில் சுணக்கம் காட்டின. கணினியில் ஒழுக்கத்தின் கட்டளையாக இருந்தவைகள் இருந்த சுவடே தெரியாமல் ஃபார்மெட் செய்யப்பட்டன. மத்திய மருத்துவமனையில் கள்ளத்தனமாக க்ளோனிங் மற்றும் பாக மாற்று அறுவை சிகிச்சை போன்றவை பற்றிய முக்கிய குறிப்புகள் அகற்றப்பட்டன. அதைத் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டாக்டர்களின் மூளைகள் ஒரு முறை ஃபார்மெட்டாகி ரிஃப்ரெஷ் செய்யப்பட்டது.

டாக்டர் தன்னிடம் இருந்த "க்ளோனிங் ப்ராக்டீஸ்" என்று முத்திரையிடிப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை டெலீட் செய்தான். எண்ணி பதினெட்டாம் நாள் நாட்டில் ஒட்டுமொத்தமாக இயந்திர ஆதிக்கம் அழிக்கப்பட்டது. அனுப்பிய ஜீவிதாக்கள் இங்கே எங்கள் முன்னாள் திரையில் தோன்றி குதூகலித்தார்கள். டாக்டர் ஒவ்வொரு ரோபோவின் உள்ளும் இருந்த ஸெல்ஃப் டிஸ்ட்ரக்ஷன் ப்ரோக்ராமை தட்டி எழுப்பிவிட்டான். உளுத்த மரம் போல ஒவ்வொருவராக தொப்பென்று கீழே விழுந்தார்கள். காவலுக்கும் ஏவலுக்கும் இருந்த ரோபோ சமுதாயம் அனைத்தையும் ப்ளூ டூத்தில் கோர்த்து ஒரே ஸ்க்ரிப்டில் சமுத்திரத்திற்கு பக்கம் வரச் செய்தான் டாக்டர். அவ்வளவு இயந்திர மனிதர்களும் அவன் கட்டளைக்கு கீழ்படிந்து கடலில் குதித்து ப்ராஹத்தி செய்து கொண்டார்கள். பாட்டரிகள் வெடித்து நட்டும் போல்ட்டுமாய் சுக்குசுக்காக வெடித்து சிதறினார்கள்.

எல்லோரையும் ஆட்டிப்படைத்த இயந்திரங்கள் சகாப்தம் ஒழிந்தது. மக்கள் சர்வ சுதந்திரமாக வீதிகளில் வலம் வந்தார்கள். தெரு மூலைகளில் நிம்மதியாக ஒன்றுக்கு அடித்தார்கள். நினைத்தபொழுது எழுந்தார்கள், தூங்கினார்கள். பெண்கள் கல்லூரி வாசலில் விடலைகள் சைட் அடித்தார்கள். பிடித்த பெண்ணை கையை பிடித்து இழுத்தார்கள். சிறுவர்களை கணினித் தொழிற்சாலையில் தாய்ப்பலகை வார்க்கும் வேலைக்கு அமர்த்திக்கொண்டார்கள், சிகப்பு பச்சை என்று சிக்னல் பேதம் பார்க்காமல் இஷ்டத்திற்கு வண்டி ஓட்டினார்கள். கவர்ன்மென்ட் ஆபிசில் லஞ்சம் கொடுத்தார்கள். "எங்கள் சூப்பர் கம்ப்யூட்டரே!" என்று யாரையோ வாழ்த்தி போஸ்டர் ஒட்டினார்கள். திரும்பவும் கோடிகோடியாக செலவழித்து எலக்ஷன் வைத்தார்கள். தேர்தலில் நின்றவர்கள் லட்சம் லட்சமாக பணம் கொடுத்தார்கள். ஜெயிலுக்கு போனார்கள். நான் பெரியவன் நீ பிசாத்து என்று தெருச்சண்டை போட்டார்கள். கோவிலா, சர்ச்சா, மசூதியா என்று மதம் பிடித்து ஆடினார்கள். பழைய ரோபோக்களை பிரித்து குப்பை தொட்டியில் வந்து போட்டார்கள்.

"நாட்ல அக்கிரமம் அநியாயம் அதிகமாயிடுச்சுப்பா... யாராவது ஒரு சூப்பர் ரோபோ கண்டுபிடிச்சு ஆட்சிக்கு வச்சா நல்லாயிருக்கும்... யார்யாரோ தலைவன்றான்... தொண்டன்றான்... குண்டன்றான்..." என்று நடை தளர்ந்த பெருசு ஒன்று சரக்கடித்துவிட்டு சத்தமாக பேசிக்கொண்டே வீதியில் டான்ஸ் ஆடி சென்றுகொண்டிருந்தது.

முற்றும்

பின் குறிப்பு: இது ஒரு முழுநீள அறிபுனைவு நாவலுக்கான களம். நேரமின்மையும், பணிச்சுமையும் தொடர்ந்து எழுதவிடாமல் இம்சித்துவிட்டது. மேலும், இன்னும் நான்கு அத்தியாயம் நீட்டிக்கவேண்டாம் என்று படக்கென்று முடித்துவிட்டேன். குறைகளை மன்னிக்கவும். பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றி.

பட உதவி: http://www.rexwallpapers.com


-


25 comments:

அப்பாதுரை said...

முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கடைசியில் இப்படி முடிச்சிட்டீங்களே பாஸ்ஸூ? மனித இயல்புகளை மாத்த முடியாதுனு சொல்ல வரீங்களா?

கடலில் குதித்து பிஹ? பொருந்தவில்லையே?

A.R.ராஜகோபாலன் said...

கற்பனை
பிரவாகம்
பிரளயமென
பிரமாண்டமாய்
பெருக்கெடுத்து
பெருங்கடலாய்
வந்த
சிலிக்கான் காதலியே
இதனை படைத்த
பிரம்மா வெங்கட்
உனக்கு வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

டாக்டர் தன்னிடம் இருந்த "க்ளோனிங் ப்ராக்டீஸ்" என்று முத்திரையிடிப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை டெலீட் செய்தான். எண்ணி பதினெட்டாம் நாள் நாட்டில் ஒட்டுமொத்தமாக இயந்திர ஆதிக்கம் அழிக்கப்பட்டது.//
Enthiren New version Super.

RVS said...

@அப்பாதுரை
பாட்டரி கநெக்ஷனுடன் தண்ணீரில் குதித்ததால் ஷார்ட் சர்க்யூட் ஆகி செத்துப் போச்சு.. அதெல்லாம் வாட்டர் ப்ஃரூப் இல்லாம செய்யப்பட ரோபோக்கள்..
தலைவரே... நேரம் இல்லை... ஒருவழியா முடிச்சுட்டேன்.... பூதக்கண்ணாடி வச்சு பார்த்துடாதீங்க...
கருத்துக்கு நன்றி... ;-))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
கவிதையாய் பாராட்டிய கோப்லிக்கு எனது நன்றிகள். ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி

Thanks madam ;-))

எல் கே said...

அவசர அவசரமா முடிஞ்சு இருக்கு சில இடங்கள் மிஸ் மேட்ச் ஆகுது. குறிப்பா இறுதியில் ஓகே பரவாயில்லை. நல்ல அட்டெம்ப்ட்

அப்பாதுரை said...

பூதக்கண்ணாடி எதும் இல்லை RVS.. not a criticism.
நல்லாத் தான் இருந்துச்சு.. ரோபோக்களை அழிக்க கடல் தேவையில்லையேனு சொல்ல வந்தேன், அவ்வளவு தான். மத்தபடி இது உங்க ப்லே க்ரவுன்ட், பூந்து விளையாடுங்க.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சி மைனரே. கதை நன்றாக இருந்தது. பணிச்சுமை காரணமாக சீக்கிரம் முடித்து விட்டேன் என்று சொன்னதனால் விடுகிறோம். இல்லை எனில் இன்னும் கூட இரண்டு மூன்று அத்தியாயம் எழுதியிருக்கலாம்.

ரிஷபன் said...

சுவாரசியமாய் போய்க் கொண்டிருந்தது.. கடைசியில் குறிப்புகளாய்க் கொடுத்து முடித்துவிட்ட மாதிரி..
அடுத்த நாவலை முழுமையாய் எழுதிவிட்டு பிறகு பப்ளிஷ் செய்யவும்.

RVS said...

@எல் கே
அப்டியா? எனக்கு தெரியலை... கருத்துக்கு நன்றி எல்.கே. ;-))

RVS said...

@அப்பாதுரை
இல்ல தல.. பரவாயில்லை... நான் எழுதிப் பழகுகிறேன்... உங்கள் பாராட்டுக்கும் நன்றி.. ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
இவ்ளோ தூரம் பொறுமையாக படித்ததற்கு நன்றி தலைநகரத் தல... அடுத்ததா ஒரு கிரைம் ஸ்டோரி எழுதப் போறேன். முழுசா எழுதி முடிச்சுட்டு அப்புறமா பார்ட் பார்ட்டா போடலாமான்னு நினைக்கிறேன்... ;-))

RVS said...

@ரிஷபன்
ஸாரி சார்! அப்ரப்ட்டா முடிச்சுட்டேனோ... தோள் மேல பாரம் ஜாஸ்த்தியாயிடுச்சு.. அடுத்த முறை நீங்க சொல்றா மாதிரிதான் பண்ணப்போறேன்.. நன்றி சார்! ;-))

சிவகுமாரன் said...

ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டேன் RVS . (நடு நடுவில தவித் தாவி வந்துட்டேன்.சாரி ). நல்ல கற்பனை.

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்.. ஏதோ கொல்லைக்கு போர அவசரத்துல முடிச்ச மாதிரியில்ல இருக்கு? இரண்டு மூன்று பதிவுகள் உங்க வார்த்தை சிலம்பம் காட்டியிருக்கலாம்.அடுத்தது கிரைம் ஸ்டோரியா? கலக்குங்க. இப்பவே சொல்லிட்டேன். அதுல இன்ஸ்பெக்டர் பேரு மோகன். சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன்...

RVS said...

@சிவகுமாரன்
நன்றிங்க.. ;-)

RVS said...

@மோகன்ஜி
அடியெடுத்துக் கொடுத்தத்துக்கு நன்றி அண்ணா! கொல்லை(ளை) போற அவசரம்.. கடைசியா எங்க பாட்டி சொல்லி கேட்டது... ;-))

Eswari said...

ungalin thodar "meendum jeeno" pola meendum silikan kadhali(part2) ethir parkalama? thagalukul oru sujatha thangalayum ariyamal / arinthu olinthu erukirar......
kathai suvarasyamai amaithathu....

RVS said...

@Eswari
உங்களது வாழ்த்து எனக்கு மிகவும் தெம்பூட்டுகிறது. மிக்க நன்றி. அடுத்த முறை ஒரு கிரைம் ஸ்டோரி எழுதப்போகிறேன். களம் ரெடி. ;-))

Porkodi (பொற்கொடி) said...

//நேரமின்மையும், பணிச்சுமையும் தொடர்ந்து எழுதவிடாமல் இம்சித்துவிட்டது. மேலும், இன்னும் நான்கு அத்தியாயம் நீட்டிக்கவேண்டாம் என்று படக்கென்று முடித்துவிட்டேன். குறைகளை மன்னிக்கவும். //

hahahahah!!!! RVS uncle, ennala sirippai adakka mudiyalai sooorriiiI!

RVS said...

@Porkodi (பொற்கொடி)
//sirippai adakka mudiyalai sooorriiiI!//
என்னான்னு புரியலை கொடி! ;-))
அங்கிள் -- ஆ ஆ..ஆ..ஆ...? அண்ணே இல்ல... ;-))

Porkodi (பொற்கொடி) said...

seri vidunga, en dictionaryla anne uncle all same.. ;-)

sirippu edhuku na, correcta ipdi kadhai yaar ezhudha arambichalum aani load erangudhe eppudii nu thaan!!!

மாதேவி said...

மிகவும் சுவாரஸ்யம்.

அடுத்த தொடருக்கு ஆவலுடன்......

பத்மநாபன் said...

இப்பொழுது தான் நேரம் கிடைத்தது படித்து முடிக்க... சுவாரசியமான முடிச்சை அவசரமாக விடுவித்தாலும் நன்றாக இருந்தது.... இயந்திரம் தவிர்க்க முடியாத காலத்தில் இயந்திர ஒழிப்பு என்பதே வித்தியாசமான அறிபுனைவுக் கதை...... வாத்தியார் பெரிய அளவில் நிலாவையும் ஜீனோ வையும் வைத்து என்பதுகளில் விளையாடி இருப்பார் .. அவர் அறிபுனைக் கதையை பற்றி சொல்லிய விஷயம் ’’நிறைய மாற்று சாத்தியக்கூறுகளை ஆராயும் சுதந்திரம் கிடைக்கும் இந்த கதை விளையாட்டில் இன்றைய மனிதனின் உணர்ச்சிகளை சம்பத்திபடுத்தி ஒரு தொடர்பு எற்படுத்திக்கொண்டு விளையாடவேண்டும்’’ இந்த பாயிண்டை நீங்கள் கெட்டியாக பிடித்துக் கொண்ட மாதிரி இருந்தது....வாழ்த்துக்கள்...

சிலிக்கான் காதலியை விடவேண்டாம் ...ஐ மீன் அறிபுனைகதைகளை..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails