Wednesday, July 31, 2013

காஃபியாயணம்

கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் கம்பியைப் பிடித்தது போல கட்டுப்பாடின்றி கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. வெடவெடத்த மணிக்கட்டை திருப்பிப் பார்த்தால் மணி ஆறைத் தொட்டு ஐந்து நிமிடமாயிருந்தது. காஃபியடிமைகளான நாங்கள் மந்திரித்து விட்டது போல எழுந்து அந்த ஈக்கள் அண்டாத உணவுக் கோட்டைக்குள் புகுந்தோம். அது ஒரு சுயசேவைப் பிரிவு கடை. நான் காசை நீட்டுவதற்கு சற்று முன்னர் விநியோகப் பலகை எட்டாமல் எக்கி டபரா செட்டுகளை எடுத்து தளும்பாதவாறு அடிமேல் அடியெடுத்து ஒரு மாது சென்றுகொண்டிருந்தார். கவிச்சக்கரவர்த்தி அயோத்தியின் மகளிரை வர்ணிப்பது போல அன்னம் அந்தப்பெண்ணின் நடையை ஒத்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு மெதுவாக நகர்ந்து தனது இணைபிரியா இணைக்கு காஃபியை சிந்தாமல் டேபிளில் சேர்த்துவிட்டு தானும் சிதறாமல் அமர்ந்து கொண்டது.

நாங்களும் சிங்க நடை (கந்தன் கருணையில் சிவாஜி இடுப்பில் ஒரு முழம் துண்டோடு வீரபாகுவாக நடந்து வருவதை நினைத்துப் பார்த்து சிரிக்காமலிருக்க உங்களுக்குச் செந்திலாண்டவன் அருள் புரிவானாக!) நடந்து டேபிளை அடைந்து டபராவில் காஃபியை விட்டு ஆற்றிக் குடித்துக்கொண்டிருந்தோம். இன்னொரு டேபிளில் இவ்வளவு நாழியாக மொபைலைத் தேய்த்து நம்பர்களை அழித்துக்கொண்டிருந்த மாது தனக்கு இஷ்டப்பட்டவர் அங்கே பிரசன்னமானவுடன் விருட்டென்று புள்ளிமானாய் துள்ளிக்குதித்து ஓடி அன்னபக்ஷியாக காஃபியைக் கொத்திக்கொண்டு திரும்பியது. ஓரிரு வினாடிகளில் வலப்புறம் ஓரமாய் இருந்த டேபிளுக்கு வந்தடைந்த ஜோடியில், இரண்டு கைகளிலும் காஃபியேந்தி வந்தது அந்த ஒடிசலான மாதுதான். கலர் நிழலாய் பின்னால் வந்தவர் கைவீசம்மா கைவீசி கடைக்கு வந்திருந்தார்.

பக்கத்திலிருந்த ஃப்ரெண்ட் இந்தப் பெண்ணடிமைத் தனத்தைக் கண்டு பொங்கி எழுந்து கேட்டார் “ஏங்க இதுவரைக்கும் வந்த Pair எல்லாத்திலையும் ஒரு ஒத்துமையைக் கவனிச்சீங்களா? பாவம் பொண்ணுங்கதான் கஷ்டப்பட்டு காஃபி எடுத்துக்கிட்டு வருது. தடிமாடாட்டம் ஆம்பிளைங்க கையை வீசிகிட்டு பேசாம வர்றாங்க.” பதிலுக்கு என்னோடு கூட வந்த பாஸ் சொன்னார் “பாவம் அவன் வீட்டுக்கு போனவுடன் சாதம் வடிச்சு பத்துபாத்திரம் தேய்ச்சு பாக்கி காரியமெல்லாம் பார்க்கணும்னு இங்கே இந்தமாதிரி நாடகமெல்லாம் நடக்குது”. நான் சொன்னேன் ”இதுவரைக்கும் காஃபியடித்த ஜோடி எதுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. அதான்.....”. பக்கத்திலிருந்து இன்னொரு நண்பர் “அப்புறம் பையன் தான் பெட்காஃபி கொடுத்து இவங்களை எழுப்பணும்”. சுற்றிலும் வருவோர் போவோர் கண்ணுக்குத் தெரியாமல் யமலோக அட்மிஷன் கதை ஒன்று உடனடியாக ஞாபகம் வந்தது.

”நீ நரகத்துக்குப் போகணுமா? சொர்க்கத்துப் போகணுமா?” என்று கோடியில் ஒருத்தனுக்கு யமகிங்கரர்கள் பெப்சி உங்கள் சாய்ஸ் போல தருவார்கள். பல நல்லவைகள் அல்லவைகள் செய்து மரித்து மேலோகம் அடைந்த அப்புருஷனுக்கு லாட்டரி போல அன்றைய தினம் அந்த அதிர்ஷ்டம் அடித்தது. “எனக்கு ரெண்டுத்தையும் ஒரு தடவை சுத்திக் காமிங்க. அதுக்கப்புறம் நான் எதுவேணும்னு டிஸைட் பண்றேன்”ன்னு சிரம் தாழ்த்தி வணங்கி விண்ணப்பித்தான்.

சொர்க்கத்துக்கு அழைத்துப் போனார்கள். கதவைத் திறந்ததும் அமைதியாக இருந்தது. ஒரு மூலையில் அரையாடை காந்தி ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்தார். தெரேஸா அங்கேயும் சிலருக்கு மானுட சேவை புரிந்துகொண்டிருந்தார். வள்ளுவர் கீபோர்டும் கையுமாகக் காமத்துப்பாலுக்கப்புறம் கம்ப்யூட்டர்பால் என்று புதியகுறட்பாக்களை எழுதிக்கொண்டிருந்தார். அங்கே கிங்கரர்களால் அழைத்துவரப்பட்டவன் குஷால் பேர்வழி. அவனுக்கு இவையெல்லாம் சிலாக்கியமாகப்படவில்லை. “ஐயா! நரகத்தைப் பார்க்கலாங்களா?” என்று கிங்கரர்களைத் தொழுது கேட்டான்.

பூலோகத்தில் ஸ்பீட் ப்ரேக்கராக பார்த்த அதே எருமையை பறக்க வைத்து அழைத்துப் போனார்கள். நரகத்துக்கு நானூறு மீட்டர் முன்னாலேயே “யே..ஆத்தா.. ஆத்தோரமா வாரியா...”ன்னு குத்துப் பாட்டுக் கேட்டது. நெருங்க நெருங்க “மல்லிகா நீ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா.. “ன்னு ரிக்கார்ட் மாற்றப்பட்டு சிலுக்கு ஆடிக்கொண்டிருந்தார். ஜானிவாக்கர் ஷிவாஸ் ரெமிமார்ட்டின் என்று கைகளில் மதுபானங்களினால் நிரப்பப்பட்ட தம்ப்ளர்கள் ததும்ப எல்லோரும் ஹெடோனிஸ்டுகளாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள். ஒரே கூத்தும் கும்மாளமுமாக அந்த இடம் அல்லோகலப்பட்டது. இவனுக்கு பார்த்தவுடனேயே சட்டென்று அந்த இடம் ரொம்ப பிடித்துவிட்டது. “சார்..சார்.. நான் நரகத்துலேயே இருக்கேன்..” என்று நச்சரித்து அவர்களிடம் கேட்டுக்கொண்டான்.

“சரிப்பா.. உன் இஷ்டம்...”ன்னு விட்டுட்டு போய்ட்டாங்க. விடியவிடிய ஒரே கும்மாளம். ஜாலியா பொழுதைப் போக்கிட்டு தூங்கி எழுந்திருந்தான். பகல் பனிரெண்டு மணிக்கு யாரோ சுளீர் என்று சாட்டையால் அடிக்க எழுந்திருந்தான். நேரே நரகத்தின் சமையற்கட்டிற்கு தூக்கிக் கொண்டு போய் கை கால் நகத்தையெல்லாம் ஒவ்வொன்னா பிடிங்க ஆரம்பிச்சாங்களாம். பயபுள்ள அலறிப்போய் ”ஐயோ.. என்ன பண்ணப்போறீங்க”ன்னான். எண்ணெய்ச் சட்டியில போட்டு வறுக்கறதுக்கு முன்னாடி நகத்தையெல்லாம் எடுக்கிறோம். கத்திரிக்காவுக்கு பாவாடையை உறிச்சு குழம்புல நறுக்கிப்போடறதில்லையா. அது மாதிரி”ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்களாம். இவன் உடம்பெல்லாம் வேர்த்து “டே...டே.. நேத்திக்கு நல்லாத்தானே நடந்துக்கிட்டீங்க. அதுக்குள்ளாற இந்த நரகத்துக்கு என்னடா ஆச்சு”ன்னான். அதுக்கு அங்க ஹெட்குக் மாதிரி இருந்தவன் நெருங்கி வந்து ரகஸியம் மாதிரிச் சொன்னான் “நேத்திக்கு நீ ந்யூ எண்டரெண்ட். அதான் வெல்கம் பார்ட்டி கொடுத்தோம். ஒருநாள்ல இண்டக்ஷன் முடிஞ்சு போச்சு. இதுதான் ரியல்.”

இந்தக் கதைக்கும் கல்யாணம் ஆவதற்கு முன் அப்பெண்கள் காஃபியெடுத்து வந்து கொடுப்பதற்கும் கிஞ்சித்தும் ஒற்றுமையில்லை என்பதை தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொண்டு இவ்வியாசத்தை இந்த அளவில் பூர்த்திசெய்கிறேன். வணக்கம்.

Saturday, July 27, 2013

தலையணை மந்திரோபதேசம்

”என்ன மந்திரம் போட்டாளோ.. பொண்டாட்டி பின்னாடியே இப்படி ஆடறான்..” என்று பாதிக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் குழும சகமாமியார்களிடம் மாட்டுப்பொண்களை கரித்துக்கொட்டும் போது தலையணை மந்திரமென்பது பள்ளியறையில் மனைவியாகப்பட்டவள் சொக்குப்பொடி வார்த்தைகளால் நைச்சியமாகப் பேசி கணவனை தன் வசியப்படுத்துவது என்று தப்பர்த்தத்தில் ”மந்திரம்” பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படியில்லையாம். ஒரு சாஸ்திரியின் வெர்ஷன் கீழே!

இரண்டு மூன்று நாட்களாக எனக்கும் பில்லோ மந்திரம் நடந்துகொண்டிருக்கிறது. காதல் வயப்பட்டவர்கள் பல்வேறு கோணங்களில் தலையணையின் துணையோடு படுத்தும் ஒருக்களித்துக்கொண்டும் உட்கார்ந்தும் தனக்கு வந்த காதல் லிகிதத்தைப் படித்து இன்புறுவது போல இந்தத் தலையணை மந்திரத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். கவனிக்க. கேட்டுக்கொண்டிருந்தேன் அல்ல. படித்துக்கொண்டிருந்தேன்.

நடேச சாஸ்திரி என்ற பெருமகனாரால் 1901ல் எழுதப்பட்ட ”தலையணை மந்திரோபதேசம்” என்கிற க்ரந்தம் அது. புத்தகம் முழுக்க கௌட பிராமண தம்பதியர் அம்மணி பாய் மற்றும் ராம பிரஸாத் என்கிற இரண்டே கேரக்டர்கள் சம்பாஷித்துக்கொள்கிறது. பக்கம் பக்கமாக அம்மணி பாய் ராமபிரஸாத்தை கிழி கிழியென்று கிழிப்பதை நாம் நேரே நின்று பக்கத்துவீட்டுச் சண்டையை வாய் பிளந்து ஆர்வம் கொப்பளிக்க வேடிக்கைப் பார்ப்பது போல எழுதியிருப்பது இப்புத்தகத்தின் விசேஷம். காலதேசவர்த்தமானங்களையெல்லாம் கடந்தது இவ்வுபதேசம். சங்கரபிரஸாத்தின் அவலட்சணமான பெண் அம்மணி பாயை தனதான்யங்களுடன் ராம பிரஸாத்திற்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள். ஒவ்வொரு நாளிரவும் ராம பிரஸாத் நித்திரைக்கு போகும் முன் அவனின் அன்றைய நடவடிக்கையை விமர்சனம் செய்து வார்த்தைகளால் துவந்த யுத்தம் புரிவது அம்மணிபாயின் வழக்கம்.

அம்மணி பாயிடம் ராம பிரஸாத் வாங்கிய வசவுகளில் சில மாதிரிகள்...

"உலகத்தில் எவனாவது யோக்கியன் என்று பெயரெடுக்க விரும்புவன் பொடி போடுவானா? அது என்ன சர்க்கரையா, கற்கண்டா? மூக்குக்குத் தித்திக்குமா? துணியெல்லாம் பாழ். வீடெல்லாம் ஆபாசம்!!”

“நாளை மட்டும் பஜனைக்கூடத்து நீர் போம், பார்க்கிறேன்! நேரில் அவ்விடம் வந்து உமது மடியில் கைபோட்டு உம்மை வீட்டுக்கு இழுத்துவராவிடில் நான் ஒரு மனுஷியா?”

“இன்று ஓர் இரவு போனால் போகட்டும். நாளை இப்படி யாரையாவது கூட்டிவந்து “போடு இலை” என்றால் நான் அடுப்பில் ஒரு செம்பு தண்ணி ஊற்றிவிட்டு வாயிலில் நடந்து விடுவேன். அப்புறம் உங்கள் பாடு!!”

கடைசி அட்டைக்கு முதல் பக்கத்தில் அம்மணிபாய் ஜ்வரத்தில் பிராணனை விடும்வரை ராமபிரஸாத் அவளிடம் வசவு வாங்கிய கசையடி வைபவங்கள் ஒவ்வொன்றையும் மந்த்ரோபதேசமாக எடுத்து எழுதியிருக்கிறார் நடேச சாஸ்திரியார். மனைவி இவ்வளவு வசைபாடியும் பதிலுக்கு ஒரு வாக்கியமாகக் கூட இல்லாமல் இரண்டொரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டு அத்தியாயத்தின் கடைசி வரிகளில் கண்யர்கிறான். ஒன்றும் அறியாத மனைவிமார்கள் என்று இப்பூவுலகில் யாரேனும் இருந்தால் அவர்கள் திட்டுவதற்கு கோனார் நோட்ஸ் போல இப்புத்தகம் பயன்படுவது சர்வநிச்சயம். அதே ரீதியில் பாவப்பட்ட கணவனார்களுக்கும் வாங்கும் திட்டுக்களின் சேதாரத்தைக் குறைப்பதற்கான உபாயங்களைச் சொல்லிக்கொடுப்பதால் உபயோகமாயிருக்கிறது. இதைப் படிக்கும்போது சில சமயங்களில் அடக்கமாட்டாமல் குபீர்ச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தால் நீங்களும் ஒரு ராம பிரஸாத்தே!

கதைக் கணவனாக இருந்தாலும் ராமபிரஸாத் என்கிற வாயில்லாப் பூச்சி தனியொரு ஆணாய் வாங்கிக்கட்டிக்கொண்ட மூட்டை மூட்டையான வசவுகளுக்காகவும் சமுத்திரமளவு பொறுமைக்காகவும் மெரினா பீச்சில் அவனுக்கொரு சிலை வைக்கலாம் என்ற எண்ணம் எழாமல் கால்கட்டு போட்டுக்கொண்ட எந்த ஒரு ஆம்பளையாலும் இப்புத்தகத்தை மூடி வைக்க முடியாது.

மணமாகாத நண்பர்கள் யாராவது கலியாணம் செய்துகொண்டால் அவர்களின் நலம்விரும்பியாக இப்புத்தகத்தை பரிசளிக்க சித்தமாயிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பட்டியலில் கட்டை பிரம்மச்சாரியாக இருப்பவர்களுக்கு அதிசீக்கிரமே விவாஹ ப்ராப்திரஸ்து!!

Wednesday, July 24, 2013

வீரமங்கை

என் முன்னால் தினமணியேந்திய கரத்தோடு நடந்து வந்த ஷூக்கால் பெர்முடாஸ் தாத்தாவின் கலவர முகபாவத்தில் முதுகுக்குப் பின்னால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று சுதாரித்துக்கொண்டு திரும்பினேன். வெறி கொண்ட முரட்டுக் காளை ஒன்று வாலை முறுக்கித் தூக்கிக்கொண்டு நாலுகால் பாய்ச்சலில் ஓடிவந்தது. நான் இரண்டு கால் பாய்ச்சலில் எச்சில் துப்பியிருந்த டீக்கடையோரம் ஒதுங்கிக்கொண்டேன். என்னுடையது சிகப்பு பனியனில்லை. மாட்டை ஏவிவிடும் அளவிற்கு எனக்கு எதிரிகளில்லை. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தியதில்லை. (ஒரேயொரு முறை தட்டானுக்கு வாலில் நூல் கட்டி கல்தூக்க விட்டது தவிர. ”அடுத்த ஜென்மத்தில் நீ தட்டானாப் பொறந்து அது நீயாப் பொறந்து உன்னை இது மாதிரியே பண்ணும் பாரு..”ன்னு பாட்டியிடம் வசவு வாங்கினதும் பயந்து போய் உடனே அவிழ்த்து பறக்க விட்டுவிட்டேன்.) காரணமென்ன என்று திரும்பிப்பார்த்தால் தெருநாயிரண்டு அணியாகச் சேர்ந்து இம்மாட்டை விரட்டியிருப்பது அவைகளின் போர்க்குண கண்களிலும் துரத்தியதிலெழுந்த தெருப்புழுதியிலும் தெரிந்தது. என்னைத் தாண்டி ஓடி நேரே நடந்து வந்துகொண்டிருந்த ஒரு சிகப்புச் சுடிதாரணிந்த இளம் பெண்ணை முட்டிக் கவிழ்த்துவிடும் போலிருந்தது. இக்கணத்தில் கையில் வேலில்லையே என்று என் துர்பாக்கிய நிலையை எண்ணி வருத்தப்பட்டேன். வீசியெறிந்து காளைமாட்டை ப்ரேக் போட வைத்து படையப்பா ஆகியிருக்கலாம். க்ளைமாக்ஸில் என்ன நடக்குமோ என்று எனக்கு அட்ரிலின் சுரந்தது. “த்தே.. ச்சூ...” என்று அனாயாசமாக ஹேண்ட்பேக் கையை உயர்த்திய அந்த வீரமங்கையைப் பார்த்து பயந்து வெறிமாடு வாலை இறக்கி ஒதுங்கிவிட்டது. சங்ககாலத்தில் புலியை முறத்தாலும் சமகாலத்தில் மாட்டை தோள்பையினாலும் விரட்டியடிக்கும் தமிழ்ப் பெண்டிரின் வீரத்தை எண்ணியெண்ணி வியந்து வீரநடை போட்டேன். 

#வாக்கிங் காட்சிகள்!

நளபாகம்

என்னுடைய நண்பர்களில் பலர் நளபாகர்கள். கரண்டி பிடிக்கும் கரங்கள். சமீபத்தில் பூர்த்தியடைந்த காரடையான் நோம்பிற்கு வெல்லடை உப்படை தட்டுவதில் ஆம்படையாளுக்கு ஒத்தாசையாக இருந்து அதன் மூலமாக நமஸ்காரம் வாங்கிக்கொண்ட புண்ணியவான்களும் இதில் உலர். கிச்சனை எட்டிப் பார்க்காத ஒரேயாள் நானாகத்தான் இருப்பேன். என்னுடைய ஆத்ம நண்பரிடம் பலமுறை ஆவலாய் சமையல் கலையை அடியேனுக்கு அப்யசிக்க விண்ணப்பித்ததுண்டு. இன்னமும் அடுப்படியை அதகளமாக்கும் நேரம் வாய்க்கவில்லை. தினந்தோரும் அந்த வீட்டு வாசற்படி கடக்கையில் வயிற்றை வம்புக்கிழுப்பது போல கும்மென்று பிரமாதமாக வாசனையடிக்கும். என்றைக்காவது ஒருநாள் அவ்வீட்டு வாசலில் அம்மா தாயேன்னு கையேந்திவிடுமளவிற்கு கொக்கிப்போட்டும் கமகம சாப்பாட்டு வாசனை. இன்றைக்கு வாசனை நாலு வீட்டுக்கு முன்னாலேயே ஆரம்பித்திருந்தது. அந்த இல்லத்தில் ”COOKING CLASS" என்று க்ரில் கேட்டில் ரெண்டுக்கு ரெண்டில் சின்ன போர்டு தொங்கியது. "Learn and be merry" என்று நாக்கு நாலு முழம் வளர்ந்த ஆசாமிகளை திருப்திப்படுத்த உத்தரவாதமளிப்பது போன்ற அடிவாசகம். அதற்கடியில் போட்டிருந்த (Ladies Only) என்கிற ப்ராக்கெட் வார்த்தை என்னை அப்பளமாய் நொறுக்கிவிட்டது. சமைக்கத் தெரியாத மகளிரின் கண்ணீர் துடைக்க வந்த கம்பெனி போலும்.

#வாக்கிங் காட்சிகள்!

ஆணழகன்

அனவரதமும் தோழர்களாக என்னைப் பாவித்து நன்றி பாராட்டி வரும் தெருவோரத்துப் பைரவர்கள் சில நாட்களாக “கர்..கர்...”ரென்று கர்ஜிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஒரு சிலர் அருகில் வந்து முறைக்கவும் செய்தார்கள். ஏனென்று விவரம் புரியாமல் குழம்பியிருந்த போன வாரத்தில் ஒருநாள் கல் இடறியதில் காலைக் குனிந்து பார்த்த போதுதான் புத்திக்கு உரைத்தது. இருவேறு காலணிகளிலிருந்து ஜோடி பிரிக்கப்பட்டவை ஒன்றாய்ச் சேர்ந்து குப்பைத் தொட்டியில் கிடக்குமே, அது போல என்னுடைய ஷூ பல்லிளித்தது. நேற்று வாங்கிய புது பாட்டாவில் ராஜபாட்டையாக போனபோது வீதி பைரவர்கள் சிநேகபாவத்துடன் இன்று நெருங்கி வந்து வாலாட்டின. கண்களில் காருண்யம் தெரிந்தது. சிறிது தூரத்தில் மேற்சட்டையில்லாமல் இரு நெஞ்சும் கற்பாறையாகவும் தோள்பட்டையிலிருந்து கைகளுக்கு ஓடும் நரம்பெல்லாம் புடைத்து ஈபி ஒயர் போல முறுக்கேறியும் ஈவிரக்கம் இல்லாத கண்களுடன் மொட்டையடித்த WWF ஆள் படம் போட்டு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். விழி லென்ஸை சற்று ஃபோகஸ் செய்து பார்த்ததில் ஏதோ மாநில அளவில் ஆணழகன் போட்டியாம். மனஸு மென்மையாகவும் பிறத்தியாருக்குத் தீங்கு விளைவிக்காதவனாகவும் இன்சொல் பேசுபவனாகவும் பெண்களிடம் வீரத்தைக் காண்பிக்காதவனாகவும் இருப்பவன் தானே ஆணழகனாக இருக்க முடியும். இரும்பாக உறுதிகாட்டும் உடம்பைப் பேணுபவர்களுக்கு உடலழகன் போட்டிதான் வைக்கவேண்டும் என்று மனசுக்குள் ஒரு ஆர்.வி.எஸ் பேசிக்கொண்டே கூட நடந்து வந்தான். 

#வாக்கிங் காட்சிகள்!

Monday, July 22, 2013

குறள் வழி அறநெறி இயக்கம்

புழுதியடித்துக்கொண்டு திரும்பிய குப்பை லாரிக்குப் பின்னால் தெரிந்த அந்த வீட்டு வாசல் கரும்பலகையில் திருக்குறள் புதியதாக மாறியிருந்தது. தினமும் “குறள் வழி அறநெறி இயக்கம்” எழுதி அப்பக்கம் கடப்போர்க்கு விவேகமூட்டிய தாத்தா விடுமுறைக்குப் பின் வீடு திரும்பியிருக்கிறார் போலும். தனது அமைச்சியலைத் தொடர்ந்தார். சுத்தமாக அழித்து பார்டர் கட்டி எழுதியிருந்த குறள் மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. இயற்கையாகிய நுண்ணறிவை செயற்கையாகிய நூலறிவோடு சேர்ந்து வாய்த்த அமைச்சனுக்கு அதிநுட்பமாக சூழும் சூழ்ச்சிக்ளும் முன்நிற்குமோ? என்று அர்த்தத்தைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டே நடந்தேன். 

மூச்சுவிடக் கூட இடமில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வியர்த்து விறுவிறுத்து நிற்கும் மாநகரத்தின் குட்டை நெட்டைக் கட்டிடங்கள். முன்னாலும் பின்னாலும் அடுக்கிய பேப்பர் கோட்டைக்குள் நடுவில் டிவிஎஸ் விடும் ட்ராயர் அணிந்த பேப்பர் சிறுவன் விருட்டென்று என்னைக் கடந்தான். கண்ணெதிரே தொப்பென்று குதித்தான். பின்னாலிலிருந்து ஒரு ஆங்கில தினசரியை உருவினான். இந்தப் பாராவை நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அழகாகச் சுருட்டி இரண்டாவது மாடியில் திறந்திருந்த ஒற்றை ஜன்னலுக்கு குறிவைத்து எறிந்தான். அர்ஜுனனின் வில்லைக் கைக்குள் ஒளித்து வைத்திருப்பானோ என்பது போல பேப்பர் சரியாக அந்த ஜன்னல் கம்பிகளுக்கு இடையே புகுந்து உள்ளே பாய்ந்தது. அது படுக்கையறையாக இருந்தால் பெட் காஃபி மாதிரி பெட் பேப்பராக சாருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். எறிநுட்பம் வாய்க்கப்பெற்ற இந்தப் பையன் மதிநுட்பத்துடன் இருக்கிறான். படி(க்கும்)நுட்பம் இவனுக்கு கிடைத்திருக்குமா என்று எண்ணிக்கொண்டே நடக்கும் போது என்னைத் தாண்டி முன்னால் சென்றவன் நேரே ரோட்டைப் பார்த்துக்கொண்டே இடது கையால் பறக்கும் தட்டாக பேப்பரை ஒரு வீட்டிற்குள் அனுப்பியிருந்தான்.

 #வாக்கிங் காட்சிகள்!

ஒண்ணரை ஆல்ப நடை!

மேகமூட்ட வானம் சூரியனுக்கு சொகுசுப் போர்வை போர்த்தி அவனை எழும்ப விடாமல் அமுத்தியிருக்கும் கோடைக்கால காலை நேரங்கள் நடப்பதற்கு சுகமானவை. 

ஷூக்காலோடு லேசாய் வருடும் காற்றை முகத்தில் வாங்கி ரோடு திரும்பினால் எதிரே அரையில் கைலியும் மார்பு ரோமங்கள் தெரிய மேல் சட்டையில்லாமலும் ஷூக்கால் சரசரக்க நேற்று ரிடையர் ஆன ஒரு ஆள். டூவிலரில் கடந்தவன் லேடீஸ் காலேஜ் வாசலில் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்த மாணவியை சைட் அடிப்பது போல வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டே சென்றான். இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு இளம் தம்பதியர் அன்னியோன்யமான இடைவெளியில் சென்றுகொண்டிருந்தார்கள். ஓவர்டேக் செய்து கடந்து போகும்போது அழுத்தம் திருத்தமாக “உங்கம்மாவை மட்டும் எத்த்த்...துவுமே கேக்காதீங்க....”வும் அதைத் தொடர்ந்த பற்களின் ”நற..நற..”வும் செவி புகுந்தது. அந்த மனுஷ்யர் மனித அவயங்களில் தன்னால் மூடிக்கொள்ள இயலாத காதைத் திறந்து கண்ணை தொலைதூரத்தில் விட்டேத்தியாய் வைத்திருந்தார். சட்டென்று நினைவுக்கு வந்து பாக்கெட்டில் கிடந்த ஐஃபோனைத் தட்டியவுடன் ஹாண்ட்ஸ் ஃப்ரீ வழியாக ரஹ்மான் காதுக்குள் வந்து சப்ஜாடாகப் புகுந்துகொண்டார். நம் தோள்களில் ரியர்வ்யூ மிரர் இல்லாத அசௌகரியத்தினால் சர்வஜாக்கிரதையாக ஓரமாக நடக்க ஆரம்பித்தேன். ரஹ்மான் அழகிய தமிழ் மகனில் வலையப்பட்டி தவிலே.. வாசிக்க ஆரம்பித்திருந்தார். டிஜிடல் ஸ்டூடியோவில் வாசிக்கப்படும் தோல் வாத்தியக்கருவிகளில் மேளத்தின் கம்பீரம் என் நடுங்கும் காதுகளில் தெரிந்தது. ரஹ்மான் ஒவ்வொரு பாடலாக இசையையும் கருவிகளின் எண்ணிக்கையையும் கூட்டக்கூட்ட இரண்டிரண்டு அடியாகக் கூட்டி நான்கடியாக போட்டு எட்டடி பதினாறடியாக பாய்ந்து வேகம் பிடித்து சாலையோர மரங்கள் பின்பக்கம் ஓட நடையோட்டமாகப் போய்க்கொண்டிருந்தேன். நிறைய பாடல்களில் ரிகார்டிங் தியேட்டர் வாசலில் உட்காரவைத்து வார்பிடித்து வாசித்தக் கெட்டி மேளச்சத்தம் பின்னணியில் சன்னமாக ஒலித்துக்கொண்டேயிருந்தது. ஒன்றரை ஆல்ப நடையை மூன்று ஆல்ப நடையாக அதிகரிக்க உத்தேசித்திருக்கிறேன். ரஹ்மானின் துணையோடு!! 

 #வாக்கிங் காட்சியொலிகள்!

மீன ராசிக்காரர்கள் மீன் சாப்பிடலாமா?

மீன ராசிக்காரர்கள் மீன் சாப்பிடலாமா? மீன் மார்க்கெட் கடந்து, கீழே கிடந்த சாணியை மிதிக்காமல் தாண்டும் போது மேற்கண்ட டீஸர் வரிகளுடன் ஒரு ’தின இதழி’ன் வால் போஸ்டர் ஒரு ந்யூஸ் பேப்பர் மார்ட் கழுத்தில் தொங்கியது கண்ணில்பட்டது. சாணியை மிதித்திருக்கலாம். ஜ்யோதிஷத்தை வேதத்தின் கண் என்பார்கள். இவர்கள் அடிக்கிற கூத்திற்கு அளவே இல்லை. இனிமேல்.. மேஷ ராசிக்காரர்கள் பக்கத்து வீட்டு ஆட்டை அடித்து குழம்பு வைக்கலாமா? ரிஷப ராசிக்காரர்கள் பீஃப் சாப்பிடலாமா? விருச்சிக ராசிக்காரர்களை தேள் கொட்டாதா? கும்ப ராசிக்காரர்கள் சொம்பில் தீர்த்தம் அருந்தலாமா? தனுசு ராசிக்காரர்கள் ஆட்டீன் போட்டு அம்பு விடலாமா? துலா ராசிக்காரர்கள் நீதியரசர்களாக வருவதற்கு பாக்கியமுண்டா? இந்த ரீதியிலெல்லாம் போஸ்டர் வந்தாலும் சகித்துக்கொள்ளலாம். “கன்னி ராசிக்காரர்கள் கன்னிப்பெண்ணைக் கரம் பிடிக்கலாமா?” என்று திருமணப் புரட்சி செய்துவிடும் அபாயம் இருப்பதாகப்படுகிறது. இதற்கு "பயம், நன்மை, குதூகலம், கனவு, விரக்தி, அனுகூலம், தோல்வி, சுகம், ஜெயம், மங்களம்,ப்ரீதி, சாந்தி” என்று பன்னிரெண்டு சுப, அசுப, மத்திம பலன் வார்த்தைகளை தினமொன்றாக ஒவ்வொரு ராசிக்கும் பெர்முட்டேஷன் காம்பினேஷனில் புரட்டிப்போட்டு அச்சடித்திருக்கும் டெய்லி ஷீட் காலெண்டர் வாழ்க! 

#வாக்கிங் காட்சிகள்!

நாவல்

அவர்கள் மூவரும் தலையில் தாராளமாக க்ரௌண்ட் வாங்கியிருந்தார்கள். தினமணி, தினமலர், தினகரன் என்று கைக்கு ஒன்றாக பிரித்து வைத்துக்கொண்டு திறக்காத கடை வாசலில் க்ரூப் ஸ்டடி செய்து கொண்டிருந்தார்கள். ஏதோ ந்யூஸ் அனாலிஸிஸ் நடந்துகொண்டிருந்தது அவர்களது கை ஆட்டல்களிலும் குலுங்கிப் பேசும் உடல்மொழியிலும் தெரிந்தது. என் காதுகளில் தபலாக்காரரை உட்கார வைத்து ”ஏ மாண்புரு மன்னவா..”விற்கு தாள ஜாலம் காட்டிக்கொண்டிருந்தார் ரஹ்மான். தபலாவின் ஜதிக்கு ஈடுகொடுத்துத் துள்ளிக் கடந்து சென்று கொண்டிருந்தேன். க்ஷண நேரத்தில் அதே தாளகதியில் சடசடவென்று தலையில் கல் மழை பொழிந்தது. திடுக்கிட்டு மேலே பார்த்தால் அம்மரத்திலிருந்து பக்ஷிகள் கூட்டம் ஒன்று அவசரமாகப் பறந்துகொண்டிருந்தது. தலையில் விழுந்தவைகள் நாவல் பழங்கள். குனிந்து பொறுக்கி எடுத்து ஊதும் போது மீண்டும் ஒரு முறை மேலே காயோடு பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்த அம்மரத்தைப் பார்த்துக்கொண்டேன். நான் ஔவையாக இல்லாவிட்டாலும் சுட்ட பழம் அளித்த தமிழ்க்கடவுள் இருக்கிறானா என்று. அடுத்த அடி எடுத்துவைப்பதற்குள் திரும்பிப் பார்க்கும் போது மூவரும் படித்துக்கொண்டு அமர்ந்திருந்த படியில் ஒரு கூறு நாவல்பழங்கள்.
 
#வாக்கிங் காட்சிகள்

சிங்கம் II

ஓடினால் மளுக்கென்று முட்டி முறிந்துவிடும் அபாயநிலையிலும் கடைசி வருஷ சர்வீஸில் இருக்கும் வொர்க்கிங் பாட்டி ஓடிவந்து M1 ஏறி சாகசம் படைத்தார்.......... கையில் பிரித்த நோட்டும் கண்கள் ரோட்டின் மூலையிலுமாக நின்றிருக்கும் கல்லூரிப் பெண் படக்கென்று நோட்டை மூடி விறுவிறுவென்று பஸ்ஸில் அமர்ந்துவிட்டார்...... மோவாய்கட்டை வரை பெட்ரோல் டேங்க் மேல் பேப்பர் அடுக்கிய பையன் வீடு வீடாக பேப்பர் ஃப்ரிஸ்பீயை விசிறியடித்துக்கொண்டிருக்கிறான்..... மலையாய்க் குவித்திருந்த இளநீருக்கு அடியில் கொத்து ஊதுபத்தி சாம்பிராணியாய்ப் புகைய வாயில் பீடிப் புகை கசிய கஸ்டமருக்காகக் கிழவர் கடை திறந்துவிட்டார்.....கொலஸ்ட்ரால் கவலையில்லாத சித்தாள் பெரியாட்கள் தயிர்வடை பாணி எண்ணெய் வடையுடன் டீ அடித்து அமர்ந்திருந்த இடத்தில் நாய் வாலாட்டி வட்டமிட ஆரம்பித்துவிட்டது..... விநாயகர் கோயில் குருக்கள் வெள்ளிக்காப்பிலிருந்த பிள்ளையாருக்குத் தீபாராதனைக் காட்டி பயபக்தி சேவார்த்திக்குத் தட்டை நீட்டிக்கொண்டிருந்தார்... நிறைமாத கர்ப்பஸ்திரி தோளில் ஒரு தோல் பை கையில் ஒரு சாப்பாடு பையுமாக மெட்டர்னிட்டி லீவுக்கு முன்னால் விடுப்பு எடுக்கயியலா கட்டாய ஆஃபீஸுக்கு விரைந்துகொண்டிருந்தார்...... ....மானுட வாழ்வில் இவையெல்லாம் குப்பை என்று இன்னும் சிலர் சிங்கத்தைச் சந்திக்க தியேட்டர் வாசலில் ஒரு யோகியைப் போல தவமிருந்தனர்.... எகிப்தின் டெம்பரரி அரசின் தலைவர் அட்லி மன்சூர் போன்றவருடன் போஸ்டரில் சுறுசுறுப்பாயிருந்தார் கன்னம் மறைக்கும் காட்டு மீசை வளர்த்த சூர்யா..... எல்லாவற்றையும் கடந்து நான் போய்க்கொண்டிருந்தேன்.... 

#வாக்கிங் காட்சிகள்

Saturday, July 20, 2013

ஜடபரத ஆர்விஎஸ்

துஷ்டப்பயல்கள் அவரது வேஷ்டியை உருவிக்கொண்டு ஒரு சாக்கைக் கட்டி வயலோரத்தில் உட்காரவைத்துவிட்டார்கள். வெய்யில் மழை பார்க்காமல் அவரும் தேமேன்னு பல நாள் உட்கார்ந்திருந்தார். ஒரு நாள் அந்தப் பக்கமா ஒரு ராஜாவோட பல்லாக்கு மணியோசையுடன் ஆடியாடி வந்தது. முன்னாடி எட்டு பேர் பின்னாடி எட்டு பேர் தூக்க பல்லாக்குக்கு முன்னால் குதிரையில் குலபதி (லீடர்) வந்துகொண்டிருந்தான். நல்ல ஆகிருதியான சரீரரத்தோட ஒருத்தர் வரப்பில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான். ஏற்கனவே “மூச்சு வாங்கறது...”ன்னு ஒண்ணு ரெண்டு பல்லக்குத் தூக்கிகள் தஸ்ஸுபுஸ்ஸுன்னு மூச்சிரைக்க சொல்லிக்கொண்டிருந்தார்கள். இவன் ஒருத்தனே இந்தப் பல்லாக்கை தூக்கிடுவானேன்னு குலபதி அவரைத் தட்டி எழுப்பி “யோவ்.. இங்க வாய்யா.. இது ராஜாவோட பல்லாக்கு... தூக்கு போ...”ன்னு அதிகாரமாத் தட்டி எழுப்பிவிட்டான். அவரும் வாயைத் திறக்காமல் போய் முன்னாடி ஒரு தோள் கொடுத்து தூக்க ஆரம்பிச்சார். 

அந்தக் காட்டு வழியில் கொஞ்ச தூரம் போயிருப்பார்கள் இந்தப் புதுசா சேர்ந்த ஆள் பல்லாக்கோட ஒரு எட்டடித் தாண்டிக் குதித்தார். பின்னால எல்லாப் பயலும் தாண்ட முடியாமல் கட்டையில தொங்கினான்கள். ராஜா எட்டிப் பார்த்து “என்னடா?”ன்னு விசாரித்தான். “இல்ல புதுசா இவனை சேர்த்தோம். இவன் தான் இந்த மாதிரி பண்ணிட்டான். ராஜா க்ஷமிக்கணும்.”ன்னு அவரைக் காமிச்சு மன்னிப்புக் கேட்டான். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் ஒரு பத்தடி தாண்டிக் குதித்தார். ராஜாக்கு மண்டையில அடி. ஜன்னலைத் திறந்து எட்டிப் பார்த்தான். எல்லோரும் அவரைக் கை காண்பித்தார்கள். சாட்டையை எடுத்து அவர் முதுகில சுளீர்னு அடித்தான். எல்லார் முதுகிலும் அடி விழுந்தது. ராஜா உட்பட. சாட்டையை சுழற்றும் போது பட்டிருக்கும்னு நினைத்துக்கொண்டான்...... 

...இந்தக் கதை இப்படியே போகும்.... இது ஸ்ரீமத்பாகவதத்தில் வரும் ஜடபரதர் உபாக்கியானம். இப்படித் தாண்டித் தாண்டிக் குதிக்கிறவர் ஜடபரதர். அவர் ஒரு பரமஞானி. அதாவது முமூக்ஷுக்களா இருக்கும் போது தரையிலிருக்கும் பூச்சிப் பொட்டை கால்ல மிதிக்கக்கூடாதுன்னு தாண்டிக் குதிச்சுச் சாதகம் பண்ணறவாளுக்கு பின்னால ஞானியான பிறகு அதுவே லக்ஷணம் ஆயிடுமாம். அதாவது அடிக்கு அடி குனிந்தெல்லாம் பார்க்கமாலேயே புழுபூச்சியை மிதிக்காமல் ஸ்வபாவமாகவே தாண்டுவார்களாம். சரி.. இந்தக் கதை இப்போ எதுக்கு? காலையில் கிட்டத்தட்ட ஒரு பத்து தெருவானும் கடந்து வாக்கிங் செல்கிறேன். எந்தந்தத் தெருவோரத்தில் என்னென்ன கிடக்கும் என்று தலையைக் குனியாமல் தாண்டுவது எனக்கும் லக்ஷணமாக ஆகிவிட்டது. அசாத்திய சாதகம் செய்து ஞானியான சத்புருஷர் ஜடபரதர் மாதிரி... நானும்..... சரி... வேண்டாம்...

வாக்கிங் டெக்கத்லான்

மழைக்கப்புறம் வீதி வீதியாக வாக்கிங் வருவது டெக்கத்லானின் ட்ராக் ஈவெண்ட்ஸுக்கு சமானம். 

எதிரே வரும் இஞ்சினியரிங் காலேஜ் பஸ் முன்னாலிருக்கும் திடீர்க் குட்டையில் குதித்து டயர் அலம்பி நம் முகத்தை அலம்பும் முன் ஒரு நூறு மீட்டர் ஸ்ப்ரிண்டர் போல ஓடி அதைக் கடந்துவிட வேண்டும். ரோட்டோர மூலையில் கர்நாடகா திறந்து விட்ட காவிரியைப் போல வழியை மறித்து நிற்கும் திடீர்க் குளத்தை ஆங்காங்கே விதைத்திருக்கும் செங்கற்களில் கால் வைத்துத் தாண்டி லாங் ஜம்ப்கள் செய்ய வேண்டும். பிறகு நடுநடுவே வரும் மளிகைக்கடை வாசல் செத்த எலியும், சாணியும், பொட்டிக்கடை பக்கம் பான்பராக் சாரும், குப்பைத் தொட்டியோர விஸ்பரும் நீங்கள் கட்டாயம் தாண்ட வேண்டிய ஹர்டில்ஸ். உங்கள் அதிர்ஷ்டம் கல்லடிபட்ட நாய் துரத்தினால் அன்றைக்கு வாக்கிங்கோடு சேர்த்து ஒரு நானூறு மீட்டர் ரேஸ். பூமா தேவியின் பொறுமையைச் சோதிப்பது போல தோண்டி ரோட்டிற்கு குறுக்காக ஷார்ட் சைட் ஆசாமிகளின் கண்களுக்குப் புலப்படாத பிரிசணல் கயிறு கட்டி வைத்திருந்தால் அது தடுத்து உங்களை ஹை ஜம்பிற்கு பழியாய் அழைக்கும். கயிற்றுக்கு அப்பால் ஆற்று மணல் குவித்து வைத்திருந்தால் இன்று அதையும் செய்திருப்பேன். மூன்று ஆயிரத்து ஐநூறு மீட்டர் வீறு நடை போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. 

இவ்வளவுத் தடைகள் இருந்தும் லாபம் என்னவென்றால் மேற்கண்ட தடகள விளையாட்டுகள் ஏதேனும் ஒன்றில் நீங்கள் ஒலிம்பிக்கில் பங்குபெற்று தங்கம் வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இப்போதே என் காதுகளில் “ஜெய் ஹோ இந்தியா! ஆர்விஎஸ் ராக்ஸ்!!” கேட்கிறது. 

வாக்கிங் வகைகள்!!

மெது வடை

மனித எலிகளைப் பிடித்து இழுக்கும் வாசனை அது. காதுகளில் இடி முழுக்கம் போல இரண்டு ஆண்களுக்குச் சமானமாக ”மி...ன்...சா...ர...க் கண்ணா..”வை சூப்பர்லேடிவ் ஆரோஹனத்தில் பாடிக்கொண்டிருந்தார் நித்யஸ்ரீ. வரம் வாங்கி வந்த குரல். ரெக்கார்டிங்கில் மிருதங்கத்தின் டெஸிபலை வலுக்கட்டாயமாகக் கூட்டியிருக்கவேண்டும். “தொம். .நம்..தொம்...நம்..நம்..நம்..நம்..” தாளங்கள் தரையில் சிதறி ஓடும் முத்துகள் போலத் தனித் தனியாகக் கேட்டது. விஷம ஜெர்ரியை வலைக்குள்ளிருந்து வெளியே வரத் தூண்டில் போடும் டாமைப் போல் தெரிந்தார் சாதுவான தோற்றமுடைய மெதுவடை மாஸ்டர். 

அந்தப் பொன் நிற மெ.வடை வாசனைக்கு தேவலோகத்திலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் இறங்கி வந்து வரிசையில் நின்று தட்டு தூக்கிப்பிடிக்கும் வாய்ப்பிருந்தது. ஆயில் கவலையின்றி கைலியும் வேஷ்டியும் பேண்டுமாக நின்று வடை கடித்துக்கொண்டிருந்தவர்கள் தேக ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லாத தேவ புருஷர்களை ஒத்திருந்தார்கள். அறுபதடிக் கூந்தலுடைய தலைக்கு எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யும் அளவிற்கு வடை மடித்து வைத்திருந்த ந்யூஸ் பேப்பரில் ஆயில் ஊறியிருந்தது. எல்லாவற்றையும் மீறி வாயில் நீர் ஊறியது. 

இது தினமும் காணும் காட்சிதான். அடிக்கடி ரஹ்மானையும் கேட்கிறேன். குப்பல் குப்பலாக குவித்துவைக்கப்படும் மெதுவடைகளும் இதுபோல தினமும் தின்று தீர்க்கப்படுகின்றன. காதுகளில் ரஹ்மான் ம்யூட்டாக சட்டென்று பட்டினத்தார் கையில் பேய்க்கரும்பும் அரையில் ஒரு காவித்துண்டுமாக மனக்கண்ணில் தோன்றி அவரது திருவெண்காட்டு திருவிசைப்பாவிலிருந்து “உண்டதே உண்டு உடுத்தியதே உடுத்தி உரைத்ததே உரைத்து கண்டதே கண்டு கேட்டதே கேட்டு கழிந்தன நாளெல்லாம்.” என்று பாடினார். வாசனையைக் கடந்து நடந்து வந்து கொண்டிருந்தேன். இப்போது மனோ “வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள.....அட தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள....” என்று வைரமுத்தார் எழுதிய வரிகளைப் பாடிக்கொண்டிருந்தார். மெதுவடை கண் முன் தோன்றி நக்கலாகச் சிரித்தது. 

 இன்று உள்ளுக்குள்ளே அளவுக்கதிகமாகத் தத்துவ கிக் ஏறியது!

ஆடி வெள்ளி

அங்கே அப்படியொன்றும் அசம்பாவிதம் நடப்பதாகத் தெரியவில்லை. வெண்புகைச் சுருள்கள் சுருண்டு சுருண்டு மேலே ஏற ஏற தூரத்திலிருந்து அந்த இடம் மேகங்கள் சூழ்ந்த தேவலோக சினிமா செட் போல காட்சியளித்தது. நெருங்கினால் அரசமரத்தடியில் ஐந்தாறு குடும்பஸ்திரீகள் கரண்டியும் கையுமாக நின்றிருந்தனர். தலைமுழுகி கூந்தல் அடியில் முடிபோட்டு ஈரம் காயாமல் கோயில் வாசலில் செங்கல் அடுப்பில் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள். எதிரே பொன்னியம்மனுக்கு உஷத் கால பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. ஆடி வெள்ளி. 

கொஞ்ச தூரம் கடந்து வந்த பின்னர் துளிர் இலைகளோடு பசுமையாய் செழித்து வளர்ந்த வேப்பமரம் ஒன்று கண்ணில்பட்டது. அதன் கழுத்தில் “PAN CARD? CONTACT" என்று ஒரு தகர போர்டில் குங்குமச் சிவப்பில் எழுதி திருமாங்கல்யமாகக் கட்டியிருந்தார்கள். வேப்பமரத்தை பார்க்கும்போதெல்லாம் ஆதிசக்தியின் நினைப்போடு ”இப்போல்லாம் இராம.நாராயணன் பக்தி சினிமா எடுப்பதில்லையா?” என்கிற பலத்த சந்தேகம் எழும். சட்டை போட்டக் குரங்கு, பேண்ட் போட்ட யானை, பல்லு பிடிங்கிய நாகராஜா போன்ற விலங்கினங்கள் க்ஷேமமாக இருக்கவேண்டுமே என்கிற கவலையோடு அந்தப் படம் எடுக்கும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று அச்சமாகவும் இருந்தது. அப்படி இராம.நா புத்தம் புதிய பக்திப் படமெடுக்கும் பட்சத்தில் க்ராஃபிக்ஸ் பூச்சாண்டியெல்லாம் இல்லாமல் உத்வேகத்துடன் நடமாடும் காட்டு ராஜாவை வாகனமாக்கி சிம்மவாஹினியாக நடிக்க எந்தப் பொம்பளைச் சிங்க நடிகை பொருத்தமாயிருப்பார் என்று நினைத்தேன். குபுக்கென்று பொத்துக்கொண்டு வந்து எனக்கு நானே சிரித்துக்கொண்டேன்! 

எதிரே மேலுக்கு வேஷ்டி சட்டையும் காலுக்கு அடிடாஸ் ஷூவுமாக அட்ராக்டிவ் வாக்கிங் வந்த அந்த அனானி என் சிரிப்பை வாங்கிக்கொண்டு விஷ் பண்ணி பதில் புன்னகை பூத்தார். 

ஆத்தா! (அவருக்கு) நான் ஃப்ரெண்டாயிட்டேன்!! #வாக்கிங் காட்சிகள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails