Monday, July 22, 2013

குறள் வழி அறநெறி இயக்கம்

புழுதியடித்துக்கொண்டு திரும்பிய குப்பை லாரிக்குப் பின்னால் தெரிந்த அந்த வீட்டு வாசல் கரும்பலகையில் திருக்குறள் புதியதாக மாறியிருந்தது. தினமும் “குறள் வழி அறநெறி இயக்கம்” எழுதி அப்பக்கம் கடப்போர்க்கு விவேகமூட்டிய தாத்தா விடுமுறைக்குப் பின் வீடு திரும்பியிருக்கிறார் போலும். தனது அமைச்சியலைத் தொடர்ந்தார். சுத்தமாக அழித்து பார்டர் கட்டி எழுதியிருந்த குறள் மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. இயற்கையாகிய நுண்ணறிவை செயற்கையாகிய நூலறிவோடு சேர்ந்து வாய்த்த அமைச்சனுக்கு அதிநுட்பமாக சூழும் சூழ்ச்சிக்ளும் முன்நிற்குமோ? என்று அர்த்தத்தைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டே நடந்தேன். 

மூச்சுவிடக் கூட இடமில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வியர்த்து விறுவிறுத்து நிற்கும் மாநகரத்தின் குட்டை நெட்டைக் கட்டிடங்கள். முன்னாலும் பின்னாலும் அடுக்கிய பேப்பர் கோட்டைக்குள் நடுவில் டிவிஎஸ் விடும் ட்ராயர் அணிந்த பேப்பர் சிறுவன் விருட்டென்று என்னைக் கடந்தான். கண்ணெதிரே தொப்பென்று குதித்தான். பின்னாலிலிருந்து ஒரு ஆங்கில தினசரியை உருவினான். இந்தப் பாராவை நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அழகாகச் சுருட்டி இரண்டாவது மாடியில் திறந்திருந்த ஒற்றை ஜன்னலுக்கு குறிவைத்து எறிந்தான். அர்ஜுனனின் வில்லைக் கைக்குள் ஒளித்து வைத்திருப்பானோ என்பது போல பேப்பர் சரியாக அந்த ஜன்னல் கம்பிகளுக்கு இடையே புகுந்து உள்ளே பாய்ந்தது. அது படுக்கையறையாக இருந்தால் பெட் காஃபி மாதிரி பெட் பேப்பராக சாருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். எறிநுட்பம் வாய்க்கப்பெற்ற இந்தப் பையன் மதிநுட்பத்துடன் இருக்கிறான். படி(க்கும்)நுட்பம் இவனுக்கு கிடைத்திருக்குமா என்று எண்ணிக்கொண்டே நடக்கும் போது என்னைத் தாண்டி முன்னால் சென்றவன் நேரே ரோட்டைப் பார்த்துக்கொண்டே இடது கையால் பறக்கும் தட்டாக பேப்பரை ஒரு வீட்டிற்குள் அனுப்பியிருந்தான்.

 #வாக்கிங் காட்சிகள்!

6 comments:

அமைதிச்சாரல் said...

இந்தப் பேப்பர் பையர்களையெல்லாம் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் குண்டு எறிதலுக்கு அனுப்பினா தங்கமா அள்ளிட்டு வந்துருவாங்கங்கற அபிப்ராயம் எனக்கு எப்பவுமே உண்டு.

வாக்கறபோது பாக்கற காட்சிகளைப் பகிர்ந்தது அருமை.

அமைதிச்சாரல் said...

உங்கூர் ஹரித்ரா நதி 'எங்கள் ப்ளாகில்' ஓடிக்கிட்டிருக்கே. வாக்கிங்கை கண்டின்யூ செஞ்சு அங்கியும் ஒரு எட்டு வந்து பாக்கறது :-)

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படியும் படிக்கும் வல்லவர்கள் உள்ளார்கள்...

சே. குமார் said...

எறிநுட்பம் வாய்க்கப்பெற்ற இந்தப் பையன் மதிநுட்பத்துடன் இருக்கிறான். படி(க்கும்)நுட்பம் இவனுக்கு கிடைத்திருக்குமா

----------

கிடைத்திருக்கலாம்... பேப்பர் போட்டுக் கொண்டே படிப்பவர்களும் இருக்கிறார்களே அண்ணா..

சே. குமார் said...

எறிநுட்பம் வாய்க்கப்பெற்ற இந்தப் பையன் மதிநுட்பத்துடன் இருக்கிறான். படி(க்கும்)நுட்பம் இவனுக்கு கிடைத்திருக்குமா

----------

கிடைத்திருக்கலாம்... பேப்பர் போட்டுக் கொண்டே படிப்பவர்களும் இருக்கிறார்களே அண்ணா..

வெங்கட் நாகராஜ் said...

வாக்கிங் காட்சிகளை தொடர்ந்து இங்கே பதிவிடுவதால், ஒரு சேர படித்தேன்....

நல்ல காட்சிகள் - உங்கள் எழுத்தினால் என் கண் முன்னே...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails