Wednesday, July 24, 2013

வீரமங்கை

என் முன்னால் தினமணியேந்திய கரத்தோடு நடந்து வந்த ஷூக்கால் பெர்முடாஸ் தாத்தாவின் கலவர முகபாவத்தில் முதுகுக்குப் பின்னால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று சுதாரித்துக்கொண்டு திரும்பினேன். வெறி கொண்ட முரட்டுக் காளை ஒன்று வாலை முறுக்கித் தூக்கிக்கொண்டு நாலுகால் பாய்ச்சலில் ஓடிவந்தது. நான் இரண்டு கால் பாய்ச்சலில் எச்சில் துப்பியிருந்த டீக்கடையோரம் ஒதுங்கிக்கொண்டேன். என்னுடையது சிகப்பு பனியனில்லை. மாட்டை ஏவிவிடும் அளவிற்கு எனக்கு எதிரிகளில்லை. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தியதில்லை. (ஒரேயொரு முறை தட்டானுக்கு வாலில் நூல் கட்டி கல்தூக்க விட்டது தவிர. ”அடுத்த ஜென்மத்தில் நீ தட்டானாப் பொறந்து அது நீயாப் பொறந்து உன்னை இது மாதிரியே பண்ணும் பாரு..”ன்னு பாட்டியிடம் வசவு வாங்கினதும் பயந்து போய் உடனே அவிழ்த்து பறக்க விட்டுவிட்டேன்.) காரணமென்ன என்று திரும்பிப்பார்த்தால் தெருநாயிரண்டு அணியாகச் சேர்ந்து இம்மாட்டை விரட்டியிருப்பது அவைகளின் போர்க்குண கண்களிலும் துரத்தியதிலெழுந்த தெருப்புழுதியிலும் தெரிந்தது. என்னைத் தாண்டி ஓடி நேரே நடந்து வந்துகொண்டிருந்த ஒரு சிகப்புச் சுடிதாரணிந்த இளம் பெண்ணை முட்டிக் கவிழ்த்துவிடும் போலிருந்தது. இக்கணத்தில் கையில் வேலில்லையே என்று என் துர்பாக்கிய நிலையை எண்ணி வருத்தப்பட்டேன். வீசியெறிந்து காளைமாட்டை ப்ரேக் போட வைத்து படையப்பா ஆகியிருக்கலாம். க்ளைமாக்ஸில் என்ன நடக்குமோ என்று எனக்கு அட்ரிலின் சுரந்தது. “த்தே.. ச்சூ...” என்று அனாயாசமாக ஹேண்ட்பேக் கையை உயர்த்திய அந்த வீரமங்கையைப் பார்த்து பயந்து வெறிமாடு வாலை இறக்கி ஒதுங்கிவிட்டது. சங்ககாலத்தில் புலியை முறத்தாலும் சமகாலத்தில் மாட்டை தோள்பையினாலும் விரட்டியடிக்கும் தமிழ்ப் பெண்டிரின் வீரத்தை எண்ணியெண்ணி வியந்து வீரநடை போட்டேன். 

#வாக்கிங் காட்சிகள்!

7 comments:

மாதேவி said...

நீங்கள் எல்லாம் கடையைதேடி ஒதுங்கும்போது :))))

அவளல்லவோ வீர மங்கை.
மாடு முட்டாமல் விட்டுதே.


திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ தப்பித்தார்கள்...!

சே. குமார் said...

வீரமங்கை.

அமைதிச்சாரல் said...

சபாஷு.. உங்களுக்கில்லை, அந்த வீர மங்கைக்கு :-)

வெங்கட் நாகராஜ் said...

இன்று பகிர்ந்த வாக்கிங் காட்சிகள் அனைத்தும் அருமை......

வீரமங்கைக்கு வாழ்த்துகள்.

சமைக்கறது அப்படி ஒண்ணும் பெரிய விஷயமில்லை மைனரே..... :) ஆர்வமிருந்தால் போதும்!

கோவை2தில்லி said...

வாக்கிங் காட்சிகள் எல்லாமே தங்களது கைவண்ணத்தில் அருமையாக இருந்தது. நல்லதொரு விஷயத்தை தொடக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

சமையல் ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. வெந்தய தோசைக்கு எனக்கு செய்முறை சொல்பவர் தான் இதற்கு முன்னால் உங்களுக்கு கருத்துரையில் தெரிவித்துள்ளாரே....:))

தக்குடு said...

பொம்ணாட்டிகள் ஹேண்ட் பாக்ல என்ன வேணும்னாலும் இருக்கலாம்னு மாட்டுக்கு கூட பயம் இருக்கு! :)

டில்லி தம்பதிகளோட கமண்ட் சிரிப்பை வரவைத்தது. :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails