Tuesday, August 27, 2013

அத்தை

அந்தக்காலத்தில் இராத்திரி கிளம்பும் வெளியூர் பேருந்துகள் அதிகாலையில் மவுண்ட்ரோடை அடைத்துக்கொண்டு சென்னையின் பிரதான சாலைகளில் வழியே ஓடி பாரீஸ் கார்னரில் ரெஸ்ட் எடுக்கும்.

மன்னையிலிருந்து சீட்டுக்கு நம்பர் போட்ட திருவள்ளுவரில் ஏறி தேனாம்பேட்டையில் இறங்கி இன்னாபா... மேலே ரெண்டு ரூவா போட்டு குடுப்பாகைலியின் பீடி நாற்றத்துடன் பேசும் மொழியையும் வியந்துகொண்டே டர்ர்ர்ர்ர்ர்..ர்ர்..ர்ர்ர்ரென்று பயணித்து எல்டாம்ஸ் ரோடு பாலசுப்ரமணியர் கோயில் வழியாக நுழைந்து ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் தாண்டி இஸபெல்லைக் கடந்து சான்ஸ்க்ரீட் காலேஜ் பிள்ளையாரையும் எதிரே அப்பர் ஸ்வாமியையும் தரிசித்துக்கொண்டு வலது ஒடித்து ஆவின் இறங்கிக்கொண்டிருக்கும் லஸ் சிக்னலுக்கு நேரே நுழைந்து கையிலையே மயிலை மயிலையே கயிலையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டால் நமது பட்டினப் பிரவேசம் பூர்த்தியாகிவிடும். அப்படியே இன்னும் கொஞ்ச தூரத்தில் இடது திரும்பி காய்கறிக்கடையில்லாத ஃபண்ட் ஆஃபீஸும் தினசரி கையோடு தினசரிகளை அளவளாவும் காளத்தி ஸ்டோர்ஸுக்கு முன்னால் ரைட் எடுத்து சித்திரக்குளத்தைத் தாண்டி வருவது கேஸவபெருமாள் கோயில்.

ஆட்டோ படபடபடக்க வாசலில் நின்றவுடன் கலகலவென்று வாடா...வாடா..வாடா....என்று அழைத்து பல் தேய்த்தோமோ இல்லையோ கவலையில்லாமல் கையில் காஃபி டம்ப்ளரைத் திணித்துவிடுவாள். அத்தை. அண்ட்ராயர் வயசில் லீவுக்கு என்று ஊரை விட்டுக் கிளம்பினால் மெட்ராஸ்தான் டெஸ்டினேஷன். ஒரு வாரமோ ரெண்டு வாரமோ மெரீனா பீச், பட்டாணி சுண்டல், சுதந்திரமாக கைக் கோர்த்துத் திரியும் காதல்ஜோடிகள், கற்பகாம்பாள் உடனுறை கபாலி, குடையளவு அரிசி அப்பளாம் விற்கும் தீவுத் திடல், தேவி பாரடைஸில் ஒரு படம், லோக்கல் காமதேனுவில் ஒரு படம், பாரீஸ் கார்னர் அகர்வால் பவனில் SKC என்று ஊர் சுற்றிவிட்டு மன்னைக்கு ரிட்டர்ன். அடுத்த வருஷமும் கட்டாயம் வாடாஎன்று வாஞ்சையாக கூறிவிட்டு பாரீஸ் கார்னர் மூ.நாற்ற பஸ்ஸ்டாண்டில் கமகமவென்று பாசம் மணக்க ஏற்றிவிடுவாள். அத்தை.

ஸ்கூல் டீமில் செலக்ட் ஆகிவிட்டு எட்டாவது வேகேஷன் ஹாலிடேவில் சென்னை வந்திருந்த போது BDM ஆயில் பேட் வாங்கிக்கொடுத்து அத்த...உன்ன டீவியில பார்க்கணும்என்று ஆசீர்வதித்தாள். ஊருக்கு வந்து ஹாண்டில் பக்கத்தில் தேங்காயெண்ணை ரெண்டு சொட்டு போட்டு ராத்திரி எறும்பு மொய்க்க வைத்துவிட்டு மறுநாள் ப்ராக்டீஸில் லைட்டா க்ளான்ஸ் பண்ணினாலே பிச்சுக்கிட்டு ஃபோர் போகுதுடா.. சூப்பர் பேட்டு..என்று சக கிரிக்கெட்டர்கள் சொல்லும்போது மெட்ராஸிலிருந்து அத்த உன்ன டீவியில பார்க்கணும்டயலாக் என் காதுக்கு மட்டும் ரகஸியமாகக் கேட்கும். அத்தை.

வயசாக வயசாக லீவுக்கு மெட்ராஸ் வருவது நின்று போனது. சொந்த ஊர் பொறுக்கவே நேரம் போதவில்லை. பந்துக்களின் திருமணம் காதுகுத்து சீமந்தம் கிரேக்கியம் என்று சுகதுக்க நாட்களில் மண்டபத்தின் கடைசி சேர்களில் அமர்ந்து கட்டிப் பிடித்துக்கொண்டு எப்படிடா இருக்கே! பெரிய மனுஷாஎன்று கடவாய்ப்பல் சொத்தை தெரியச் சிரிப்பாள். அத்தை.

ஏசி எடுக்கவே மாட்டேங்கிறதுடா.. யார்ட்டயாவது சொல்லேன்க்கு ஆள் அரேஞ் பண்ணி அனுப்பிவிட்டு சரியாச்சுன்னா சொல்ல மாட்டியா?” என்று சண்டை போட ஃபோனை எடுத்தால் “Lalitha Athai calling.." என்று செல்பேசி சிணுங்கும். சரியாயிடுத்துடா... இப்படியாவது அத்தைக்கிட்ட பேசிண்டிருக்கியே.என்ற திருப்திப்பட்டுக் கொண்டாள். தீபாவளி, சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்களில் தம்பதியாய் போய் பார்த்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு வருவதற்குதான் சமீப காலங்களில் நேரமிருந்தது. அத்தை.

கேன்சர் என்று தெரிந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருப்பாள் என்று நம்பினோம். நேற்று மாலை திடீரென்று ஹிந்து மிஷனில் ஐஸியூவில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஓடினோம். ஆக்ஸிஜன் ஏறிக்கொண்டிருந்தது. தேகமெங்கும் ஒயர்கள். தலைக்கு மேல் மானிட்டரில் பல்ஸ் ரேட்ஸ் தாறுமாறாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வாய் கொஞ்சம் கோணி விலுக் விலுக்கென்று இழுத்துக்கொண்டிருந்தாலும் எனக்கு உன்ன டீவியில பார்க்கணும்தான் நினைவுக்கு வந்தது. சலைனுக்கு குத்தியிருந்த கையைத் தொட்டேன். ஜிலீர் என்றிருந்தது. உறைந்து போனேன். பிஸ்கெட் கேட்கும் வாண்டுகள் முட்டி மடக்கவியலாத வயதானவர்கள் என்று ஐசியூ வாசலில் உற்றார் உறவினர் கூட்டம். இங்க கூட்டம் போடக்கூடாதுஎன்று மீசைக்கார செக்கியூரிட்டி எங்களை விரட்டி தனது கடமையைச் செய்தார்.

ஹிந்து மிஷன் வாசலில் கட்டிப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தனியாக அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற துக்க காலங்களில் பேசாமல் தனித்து அமர்வது மனசுக்கு நிம்மதியாக இருந்தது. டிவியில் ஏதோ பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. கண் டிவியில் நிலைகுத்தி இருந்தாலும் மனசுக்குள் அத்தை சிரிப்பது, தலையை ஆட்டியாட்டி பேசுவது, பருப்பு போட்டு சாதம் பிசைவது, மெரீனாவுக்கு கையைப் பிடித்து அழைத்துப்போவது, “காளத்தி ஸ்டோர்ஸ்ல ரோஸ் மில்க் குடிடாஎன்று கையில் காசு திணிப்பது, கவரோடு பிடியெம் பேட் கொடுப்பது என்று அலை அலையாய் மனசுக்குள் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் டிவியில் உன்னைப் பார்க்கணும்நியாபகம் வந்தது. ஒரு வருஷத்துக்கு முன் சத்தியம் டிவியில் காமாசோமாவென்று நாம் பேசியதை சொல்லியிருக்கலாமோ என்று இப்போது மனசு அடித்துக்கொண்டது.

திபுதிபுவென்று ராஜாதான் ஓடிவந்தான். யே... அடங்கிடுத்து...என்றான். ஃப்ரீஸர் பாக்ஸுக்கும் பாடியைக் கொண்டு போக ஆம்புலன்ஸுக்கும் சொல்லிடுஎன்றான். துக்கம் தொண்டையை அடைக்க கேஷ் கவுண்டரில் விசாரித்தேன். வாசல்கிட்ட சூபர்வைசர் இருப்பாரு. அங்க கேளுங்க சார்என்று கம்ப்யூட்டர் தட்டப்போய்விட்டது ஷிஃப்ட் முடியும் தருவாயில் இருந்த அம்மாது. செக்யூரிட்டிகளின் பக்கத்தில் நெடிதுயர்ந்து சூப்பர்வைசர் இருந்தார். அட்ரெஸ் கொடுத்து எல்லாவற்றையும் முடித்தேன். திரும்பவும் ஐசியூவிற்கு செல்வதற்கு திரும்பும் போது செக்கியூரிட்டி கேபினிலிருந்து காற்றோடு கலந்து வந்து அது என் காதில் விழுந்தது. தேகமெங்கும் மயிர்க்கூச்சலெடுத்தது.

அத்தைமடி மெத்தையடி.. ஆடிவிளையாடம்மா..... ஆடும்வரை ஆடிவிட்டு அல்லிவிழி மூடம்மா....”.

அத்தை கண் மூடிவிட்டாள்.

Monday, August 12, 2013

பூ...பூ...பூ...

ஆகாயத்திலிருந்து ஷவரைப் பொழிவதற்கு ஆயத்தமாக கார்மேகங்கள் மெகா சைஸ் பூவாளிகளாகச் சூழ்ந்து நின்றன. கையில் குடையில்லாமல் தெருவில் இறங்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டைத் தாண்டும் போது பூத்துக்குலுங்கிய பவழமல்லியின் வாசனை மூக்கைத் துளைத்தது. இவ்வாசனை மன்னையில் எங்கள் வீட்டின் வாசலில் வைத்திருந்த சம்பங்கிச் செடியின் சுகந்தத்தை கட்டி இழுத்து வந்தது. அங்கே கொல்லையில் வைத்திருந்த செம்பருத்தியை மாலையாகவும் உதிரியாகவும் விஸ்வநாதர் கோயில் பிள்ளையாரின் தும்பிக்கையில் சேர்த்தது இங்கே சித்தி விநாயகர் கோயிலைக் கடக்கும் போது ஞாபகம் வந்தது.

இந்த நொடியிலிருந்து கண் வீடுவீடாக மலரைத் தேட ஆரம்பித்தது. மலர்=பூ என்றறிக. பூஜைக்கு நந்தியாவட்டை பறித்துக்கொண்டிருந்த கண்ணாடியணிந்த ஒரு ட்ரேட் மார்க் அப்பாவைப் பார்த்ததும் “பூக்களைத் தான் பறிக்காதீங்க.. காதலத் தான் முறிக்காதீங்க” என்று கன்னங்களை மறைக்கும் தாடி சகிதம் டி.ஆர் கையைக் காலை உதறிக்கொண்டு இசையமைப்பது தேவையில்லாமல் சிந்தனையில் வந்து கொட்டமடித்தது. அச்சச்சோ. காதலைப் பற்றி பேசும் சுகாதாரமான சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லையே என்று நினைத்துக்கொண்டேன். டிஆரால் வந்த சிரிப்பை அழுத்திக்கொண்டேன். மழைக்கு முன் வீட்டை அடைய நீளம் தாண்டுதல் போல விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன். கடவுளுக்கோ காதலிக்கோ ஏற்றார்போல நம் மூடை மாற்றும் வல்லமை படைத்த வாச மல்லிகை நிரம்பிய பூக்கூடை தெய்வங்களை நினைவுபடுத்தாமல் “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ”வைக் கிளப்பி ரொமாண்டிக் காலையாக மாற்றிப்போட்டது.

இப்போது மிதமான காற்றுடன் வானம் லேசாக பன்னீர் தூவ ஆரம்பித்தது. அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சளென கொழக்கட்டை மந்தாரை மலர்கள் தான் பூத்திருந்த செடியின் பச்சை இலைகளைகளின் எண்ணிக்கையைத் தோற்கடிக்கும் விதத்தில் அந்த பங்களாவின் வாசலில் குலுங்கிக்கொண்டிருந்தது. கூன் விழுந்த அந்த மூதாட்டி எக்கியெக்கி அந்த புஷ்பத்தைப் பறிக்க எத்தனித்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் நெருங்கி கிளையைத் தழைத்துத் தரலாம் என்று காலுக்கு ஆக்ஸிலேட்டர் கொடுத்து வேகத்தைக் கூட்டினேன். வாசலில் தலையை நீட்டி முண்டா பனியன் அணிந்த ஒரு பெரியவர் அந்தப் பாட்டியை விரட்டினார். இரண்டு விரலை நீட்டி அந்தப் பாட்டி கெஞ்சும் தோரணையில் பூ கேட்பது புரிந்தது. மீண்டும் விரட்டப்பட கோபமேயில்லாமல் பூப்போல சிரித்துக்கொண்டே என்னைக் கடந்து அந்தப் பாட்டி எதிர்திசையில் நடந்து போனார்.

காதல் வழிய வழிய உன்னி கிருஷ்ணன் காதுகளில் பாடிக்கொண்டிருந்த “வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி” துக்க உருண்டையாக மாறி தொண்டையை அடைத்தது. இரண்டு பூ மறுக்கப்பட்ட அந்த பாட்டிக்காக “இது சொர்க்கமா? இல்லை நரகமா?” மட்டும் உச்ச ஸ்தாயியில் கேட்டது.

மழைக்காக பசு ஒதுங்கியிருந்த கடை வாசலில் நானும் சிறிது நேரம் நின்றேன். கல்லூரி பஸ்ஸிற்காக காத்திருந்த பெண்ணின் தலையில் ஒற்றை ரோஜா எட்டிப்பார்த்தது. நடந்தால் ஐஃபோன் நனையாது என்று மழை குறைந்த பிறகு மீண்டும் நடையைத் தொடர்ந்து வீடு வந்து சேர்ந்தேன். வாசலில் மழையில் குளித்த புத்துணர்வுடன் அரளிப் பூ சிரித்துக்கொண்டே ”வா.. என்னைப் பறித்துக்கொள்” என்றது.

அந்தப் பாட்டி நம் தெருவுக்கும் வருவாளா? என்று அனிச்சையாய் என் தலை தெருமுக்கை திரும்பிப் பார்த்தது.

#வாக்கிங் காட்சிகள்

Monday, August 5, 2013

ராஜ்

ராஜ்ஜிடம் மணிமுடி துறக்க காலையிலிருந்தே கும்பலாய் காத்திருந்தார்கள். இந்தத் தியாகக் கூட்டத்தில் முடிமன்னர்களும், முடி(சூடா/யில்லா) ராஜாக்களும், காடாய் வளர்த்து இளவரசுப் பட்டம் கட்டிக்கொண்டவர்களும், வானப்ரஸ்தம் போகவேண்டிய வயதினர்களும் அடக்கம். உள்ளே நுழைந்தவுடன் ட்யூப்லைட் வெளிச்சத்தில் தலையில் வைரமுடி அணிந்ததுபோன்ற பளீர் ஜொலிஜொலிப்புடன் ஒருவர் தென்பட்டார். காதோரமும் பின்கழுத்தோரமும் ஒரு இன்ச் இடைவெளில் பரவாயில்லை என்று ஒவ்வொன்று முளைத்திருந்தது. ஊடுபயிராக ஏதாவது பயிரிடலாம். ராஜ்ஜின் கத்திரிக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் வேலையிருக்காது. சொத்து சொற்பமாக இருந்தாலும் அதை அற்பமாக நினைக்காமல் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பழக்கமிருக்கும் அவரை ஆதூரமாகப் பார்த்து ஆனந்தப்பட்டேன். ராஜ்ஜின் வசதிக்கு வெளிச்சமூட்டும் முயற்சியாக தலையக் குனிந்து முண்டனம் செய்த தலைக்கு ருத்ராட்சம் சுற்றிய மதுரை ஆதீன அட்டைப்பட ஜுனியர் விகடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

ராஜ் கடையில் ரேடியோவாகப் பணியிலிருக்கும் அரைநூற்றாண்டு உழைத்த டிவிக்கும் அம்மன் கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மரத்துக்கு மரம் கட்டியிருந்த கூம்பு ஸ்பீக்கருக்கும் வாய்த் தகராறு. போட்டியென்றும் சொல்லலாம். அம்மன் அருள் பெற்ற கூம்பிற்கு ராஜ் கடை தள்ளாத வயது டிவி அடிபணிந்தது.

“அணைச்சுடலாமே” என்கிற என் வேதனைக்குச் செவிசாய்த்து ”சரிதான்...” சொல்லி பொட்டென்று அணைத்தார்.

“உங்க கவிதையெல்லாம் எப்படியிருக்கு ராஜ்? உலோக அதிசயம்ங்கிற தலைப்புல

‘நீ சிரிச்சா வெள்ளி.
கட்டித் தங்கம் சிரிச்சா வெள்ளி வரும்?”

ன்னு ஒரு கவிதை சொன்னீங்களே அது அட்டகாசம்.” வாயைக் கிளறினேன்.

”எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வீட்டு லாஃப்ட்ல வச்சுருக்கேன். ஒருநாள் எடுத்து வரேன்...”

அப்பன்ராஜ்ஜின் வாய் பேசினாலும் கை கர்மசிரத்தையாக வேலையில் மும்முரமாயிருந்தது.

“உங்க அஸிஸ்டெண்ட் இன்னும் வரலையா?”

“எங்க சார் வரானுங்க. வாரத்துல நாலு நாள் லீவு. இப்ப எங்க இருக்கன்னு ஃபோன் பண்ணிக் கேட்டா ஐஞ்சு நிமிசத்துல கடைக்கு வந்துருவேம்பான். எப்போ பார்த்தாலும் காசு மட்டும் பத்தலை பத்தலைன்னு மூக்கால அழுவுறானுங்க..” அங்கலாய்த்தார்.

நான் இப்போது சிங்காதனம் ஏறியிருந்தேன். சேரில் உட்கார வைத்துச் சுற்றச்சொல்லும் தேங்காய் சீனிவாசன் ஞாபகம் வருவதை தடுக்கமுடியவில்லை. ”பச்க்.பச்க்” என்று ஸ்ப்ரே பண்ணி வழித்து வாரி கத்திரியை சினோரீட்டா ரஜினியாக ஓட்டிக்கொண்டிருக்கும் போது

“அஸிஸ்டெண்ட்டுக்கு எவ்ளோ தர்றீங்க அப்பன்ராஜ்?”

“ஒரு நாளைக்கு நானூறு ரூவா. வாரத்துக்கு ரெண்டு நாளு வரமாட்டானுங்க. ரெண்டு நாள் லீவு போட்டா 800 ரூவா. மாசத்துக்கு 3200 ரூவா இதிலயே கட். கரெக்டா வந்து வேலை பார்த்தாலே போதும்....சொகமா இருக்கலாம்... விதி யாரை விட்டுது...”

“நீங்க உங்க மாமா கடையில இருந்தப்போ...”

“ம்... 93ல நாப்பத்தஞ்சு ரூவா குடுப்பாரு. முப்பத்தஞ்சு ரூவா குடும்பத்துக்கு. பத்து ரூவா எனக்கு.” விரக்தியாக சிரித்துக்கொண்டு “நானு, எம்பொண்டாட்டி, அம்மா இத்தோட சேர்த்து கலியாணமாவாத எங்கக்காவும் என் கூட இருந்திச்சு... இந்த வேலை பார்த்துகிட்டே வீடு ப்ரோக்கர் வேலையும் பார்த்து ஒப்பேத்தினேன்...”

“இந்தப் பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

ராஜ்ஜை அவ்வளவு சிரமப்பட வைக்காத ஃப்ரெண்ட்லி கேசமாதலால் வெட்டும் வேலை முடித்து அவர் ப்ளேட் மாற்றி கிருதாவையும் பின்னங்கழுத்தையும் கோடு கட்டித் திருத்துவதற்கு ஆரம்பித்திருந்தார்.

“இல்லீங்க. பாச்சிலர் பசங்க.. வேலையின்னா இவனுஹளுக்கு வேப்பங்காயா இருக்கு. பணம் பட்டும் நெறையா வேணும்ங்கிறானுங்க... ஊரு சுத்தணும். சினிமா பார்க்கணும். நானு சின்னப்பையனா இருந்ததுலேர்ந்து ஒரு நாள் கூட லீவு போடாம மாமா கடையில வேலை செஞ்சேன். வாய்க்கும் வயித்துக்கும் போக மிச்சம் பண்ணி கடனை உடனை வாங்கி இந்தக் கடை போட்டேன். ஏதோ பொளப்பு நல்லபடியா ஓடிக்கிட்டிருக்கு. நீங்களே சொல்லுங்க... நா என்னிக்காவது கடைக்கு லீவு விட்ருக்கேனா?”

படிகாரத்தைப் பின்னங்கழுத்தில் மிருதுவாய் தேய்த்தார். ஏதோ ஊர்பேர் தெரியாத வெள்ளைநிற ஆண்டிசெப்டிக் எடுத்து குலுக்கி கைகளில் ஊற்றிக் கத்திபட்ட இடங்களில் சதும்ப தடவினார். முதலில் ஜிவ்வென்று எரிய ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஜிலீர்ரென்று குளுமையாக இருந்தது. அப்பன் ராஜ் கஷ்டப்பட்டு உழைத்து இப்போது கடை ஓனர் ஆனது போல.

ம்.. கடையிலிருந்து கிளம்புவதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம். இன்னும் அந்தப் பையன் வேலைக்கு வரவில்லை.

Friday, August 2, 2013

மகளிர் மட்டும்!

"நீ தீயள்ளித் தின்னச் சொல் தின்பேன்...” என்று பிரபு ட்யட்டுக்காகப் பாட்டுப் படித்துக்கொண்டிருந்ததையும் மீறி பித்தளை அண்டா சைஸில் நிறுத்தியிருந்த ‘அன்பு’விலிருந்து கிளம்பிய “பண்ணபுரம் மாரியம்மா...” செவிபுகுந்து காதல் சுவையிலிருந்து தடாலடியாக பக்திமயத்திற்கு மாற்றிப்போட்டது. ஷூக்காலோடு வீதியிலிருந்து எட்டிப்பார்த்தேன். பாலபிஷேகம். “ஏம்பாட்டி பாலபிஷேகம் விசேஷம்?” என்ற ட்ராயர் போட்ட ஆர்விஎஸ்ஸுக்கு “நோய்நொடி வராதுடா” என்று சமாதான பதில் சொன்ன சாரதாம்பாளும் செபியா கலரில் மனத்திரையில் ஓடினார்கள்.

கேஸடுப்பிலேயே குடும்பம் நடத்திய மாதரசி ஒருவருக்கு அரசமரத்தடியில் செங்கல் அடுப்பு சங்கடம் பண்ணிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த குங்கும நெற்றிக் கணவன் முட்டிபோட்டு குனிந்து அடுப்பூதி அப்பெண்ணிற்கு உதவி வாய் நீட்டிக்கொண்டிருந்தார். வீட்டில் அடுப்பங்கரையின் அட்ரெஸ் தெரியுமோ இல்லையோ அம்மனுக்கு முன்னால் அட்ஜெஸ்ட் செய்து கொள்வதைப் பார்க்கும் போது மனதுக்கு உவகையாக இருந்தது.

தினமும் அம்மன் கோயில் வாசலில் பொங்கல் வைத்தால் பல குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து நாம் சககுடும்ப க்ஷேமத்திற்காக நீதியெழுதும் நிலையும் வராது. Revathy Venkatடும் வெறுப்பாகமாட்டார்கள் என்றெண்ணிக்கொண்டே திரும்பினேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து “எவன் செத்தா எனக்கென்ன” மனோபாவ ட்ரைவர் அந்த நடத்துனர் விஸிலடிக்காமலேயே வண்டியை எடுத்து படியேறிய பெரியவரை கீழே தள்ளினார். பேலன்ஸில்லாமல் விழுந்தவரைத் தூக்குவதற்கு ஓடினேன். அதற்குள் துள்ளி எழுந்து கொண்டவரை பின்னால் ஏறுவதற்காக வந்த அவரின் திருமதி பதறிப்போய் புடவைத் தலைப்பால் முகம் முழங்கை என்று துடைத்தார். ”ஒண்ணுமில்ல...ஒண்ணுமில்ல...” என்று சிரித்து வெட்கப்பட்டவரை நினைத்து இப்பவும் ஒரு முறை முறுவலித்துக்கொண்டேன்.

மெயின் ரோடு ஏறி திரும்புவதற்குள் அச்சம்பவத்தைப் பார்த்த என் கண்ணை பிடுங்கிக்கொண்டுவிடலமா என்ற வெறுப்பு ஏற்பட்டது. கட்டம்போட்டக் கைலியணிந்த அந்த சித்தாள் தன்னைப் பெரியாளாக பாவித்துக்கொண்டு அவனுடைய குடும்ப பாரத்தை பங்கு போட்டுக்கொள்ள செங்கல் தூக்க வந்த மனைவியை பளாரென்று அறைந்தான். இராம.நாராயணன் திரைப்படங்களில் வருவது போல பொன்னியம்மன் கோயில் பொங்கலடுப்பு செங்கல் பறந்து அவன் மண்டையில் விழாதா என்று ஏங்கினேன். குழுமியிருந்தவர்கள் விலக்கி வைத்து மத்யஸ்தம் செய்தார்கள். மொழி பட ஜோதிகா யாராவது அம்மனுக்கு சப்ஸ்டிட்யூட்டாக அக்கணம் எதிரே தோன்றி பொளேர் என்று அறையமாட்டார்களா என்றும் ஆதங்கப்பட்டேன்.

காததிர ரஹ்மான் ஆர்கெஸ்ட்ரா கொண்டாட்டமான இசைமழை பொழிந்துகொண்டிருந்தது. கேட்க மனமில்லாமல் அடைத்திருந்த குமிழ்களை உருவி எறிந்து செவிக்கு விடுதலையளித்தேன். சிறிதுநேர நடைக்குப்பின்னர் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இசைக்குமிழ்களை மீண்டும் காதுகளில் பொருத்திக்கொண்டேன். ஷஃபுளில் “சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதைப் பூமி பார்க்க வேண்டும். தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் பாடல் கேட்க வேண்டும்” என்று தாஸேட்டன் புரட்சி பொங்க பாடிக்கொண்டிருந்தார். ஹோண்டா ஆக்டிவாவில் சிட்டென்று வேலைக்குப் பறந்த அந்த நாகரீக மங்கை சுகாசினி சாயலில் இருப்பதாகப்பட்டது.

‪#‎வாக்கிங்‬ காட்சிகள்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails