Wednesday, September 25, 2013

அந்துருண்டை

இன்று சங்கீதமில்லாமல் ஊர் வம்புக்குக் காது கொடுத்து நடந்தேன். மெயின் ரோடு புழுதியைக் கண்ணிலும் கல்லூரி வாகனங்களின் செவிப்பறைக் கிழிக்கும் ஹாரன்களைக் காதிலும் போட்டுக்கொண்டு கொட்டும் வியர்வையுடன் வாக்கிங்கின் இறுதிச் சுற்றுக்குத் திரும்பினேன். ”ச்சே.. இளவு வாள்க்கையில ஒரு பிடிப்பே வர மாட்டேங்குது....” என்று டீக்கடை வாசலில் முகத்தைச் தொங்கப்போட்டுக் கொண்டு நொந்தவர் கழுத்தில் தாம்புக்கயிறு செயினும் டீ க்ளாஸ் ஏந்திய கையில் UTP கேபிள் (தெரியாதவர்கள் இமேஜ் கூகிளவும்) தடிமன் ப்ரேஸ்லெட்டும் கதிரவனின் கிரணங்கள் பட்டுக் கண்களைக் குருடாக்கியது. அவரைக் கடக்கும் போது மூக்கைத் துளைத்த வாசம் சார்லிதான் என்று மூளை ந்யூரான்களைப் புரட்டிப் படித்துச் சொன்னது.

வேடிக்கையில் கண்ணை அலையவிட்டு அலட்சியமாக திரும்பினேன். தோளில் ஆடிய டப்பர்வேரில் தயிர்சாதமும் ஊறுகாயும் கலக்கும்படி, என்னைத் தட்டிவிடும் அபாயகரமான இடைவெளியில், ஆஃபீஸ் பஸ்ஸைத் துரத்திக்கொண்டு ஓடிய அந்தத் தாமத இளைஞி தடுமாறி விழுந்து பல் பேந்துவிடக்கூடாதே என்று பாடிகாட் முனீஸ்வரரை மனதார வேண்டிக்கொண்டேன்.

அப்போதுதான் அவரைக் கவனித்தேன். ஐம்பது ஐம்பத்தைந்து வயதிருக்கலாம். சலூன் வாசலில் நின்றுகொண்டிருந்தார். கறுப்பு வெள்ளையில் கழுத்தைச் சுற்றி ரிப்பன்கள் நாகாபரணமாகத் தொங்கிக்கொண்டிருந்தது. காதருகில் கர்ண குண்டலமாகத் தெரியும்படி இரு தோளிலும் அந்துருண்டை பாக்கெட். குடிசைத்தொழில் பட்ஸ் பாக்கெட்டுகள் அர்ஜுனனின் அஸ்திரங்கள் போல முதுகுப்பக்கம் சரிந்து விற்பனைக்காக ஏவத் தயாராயிருந்தன. எந்த த்ருஷ்டியும் அவரை அணுகாதிருக்க கருப்பு சிவப்பில் கொத்து அரைஞான் கயிறுகள் இடதுபுறம் மேலிருந்து கீழாக அவர் மேனியில் ஓடி இறங்கியிருந்தது. தொப்புள் வரை திறந்திருந்த சட்டையின்(பட்டன் இல்லையோ?) மார்பு ரோமக் காடுகளில், காலில் முடிபோட்டச் சின்ன கத்தரி ஒன்று கால் விரித்த தவளை போல தொங்கிக்கொண்டிருந்தது. கைலி ஆங்காங்கே கைத் தையல் கண்டிருந்தது.

யாரோ கஸ்டமர் தாத்தா போலிருக்கிறது. ”ஏய்! ரொம்ப நாளாக் காணோம். எப்படியிருக்கே?” என்று சத்தமாகக் குசலம் விசாரித்தார். இவர் வாயெல்லாம் பல்லாக “ரொம்ப நல்லாயிருக்கேன்யா...ரொம்ப.. ரொம்ப.. ” என்றதும் எனக்கு சட்டென்று தாம்புக்கயிறு செயினும் UTP கேபிள் ப்ரேஸ்லெட் சகிதமாக “வாள்க்கையில் பிடிப்பில்லாம” இருந்தவர் தலைக்கு மேலே முட்டை முட்டையாய் ஓடி ஒரு பெரிய கற்பனா கார்ட்டூன் முட்டையில் தோன்றினார்.

இவரைக் கடக்கும் போது அந்த அந்துருண்டை வாசம் சார்லியாக மணம் வீசியது.

#வாக்கிங் காட்சிகள்

7 comments:

Geetha Sambasivam said...

இருவேறு மாறுபட்ட நபர்களின் வாழ்க்கையைப் பற்றிய நேர் எதிர் எதிரான கருத்துகள். :))) உண்மையில் அப்படித் தான் நடக்கிறது.

அந்துருண்டை வாசம் என்றால் எனக்கு ஒரு சமயம் புனேயிலிருந்து என் கணவர் அனுப்பிய இனிப்பு ஒன்றை சூட்கேஸில் எடுத்து வந்த என் மைத்துனர் அதில் இருந்த அந்துருண்டைப் பாக்கெட்டை எடுக்க மறந்ததால் இனிப்பு முழுவதும் அந்துருண்டை வாசம் வந்து கீழே கொட்டியது தான் நினைவில் வரும். நாங்க அந்துருண்டையே வாங்குவதில்லை. :)))))

Geetha Sambasivam said...

தொடர

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... வாழ்த்துக்கள்...

அன்புடன் DD

http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

சுந்தர்ஜி said...

இதுதான்யா சங்கீதம். சபாஷ்.

அடிக்கடி காது மட்டும் ருசிப்பதை, இன்று கண் ருசித்து மனதுக்கு அனுப்பியிருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

அப்பா..... என்ன வித்தியாசம் இருவரிடமும்....

ரசித்தேன்.

மாதேவி said...

வாக்கிங் பலதும் பத்தும்...தருகின்றது :))

அப்பாதுரை said...

எந்துருண்டை?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails