Tuesday, December 17, 2013

கோபுச்ச யதி

அதிகாலையில் பெய்த அடை மழை சாலைகளை அலம்பித் துடைத்துப் புனிதப்படுத்தியிருந்தது. டீஷர்ட்டின் கையை அசைத்து லேசாக வருடியத் தென்றலை அனுபவித்துக்கொண்டே நடப்பது மனசுக்கு இதமாக இருந்தது. காலத்தைப் பிடித்து நிறுத்தி இன்றைய பொழுதத்தனையும் இப்படியே கழியாதா என்ற ஏக்கம் பிறந்தது. சில தாண்டல்கள், ஓட்டங்கள், சறுக்கல்களை சமாளித்தல் என்று ஒவ்வொரு வீதியைக் கடக்கும் போதும் வேகமெடுத்து ஷூமேக்கர் ஓட்டும் ஃபார்முலா ஒன் கார் போல பறந்து வந்துகொண்டிருந்தேன்.

சுகுணா சிக்கனில் இன்றைய கறி விலையை தொங்கு சிலேட்டில் எழுதிக்கொண்டிருந்த முண்டா பனியன் பையனைக் கடந்து தூரத்தில் சரக்கொன்றை மலர் போல மஞ்சளாகப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்த ஒரு மரத்தடியில் கோமாதா ஒன்று நின்றிருந்தது கண்ணை காந்தமென இழுத்தது. வெண்மேகக் கூட்டம் ஒன்று தரையிறங்கி நின்றது போல இருந்தது. கண்ணையெடுக்காமல் பார்த்துக்கொண்டே கால்களில் மட்டும் ஆக்ஸிலேட்டரைக் கூட்டினேன்.

குளிப்பாட்டி கொம்புகளுக்கிடையே நெற்றியில் ஒரு பிடி மஞ்சளில் திலகம் இட்டு நடுவில் ஒரு சிட்டிகை குங்குமம் தீற்றியிருந்தார்கள். மங்களகரமாக இருந்தது. வயதான மூதாட்டி ஒருவர் பின்புறம் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தார். வயிறு, முதுகில் மூன்று இடங்களில், வாலின் இருபுறம் என்று அங்கமெங்கும் மஞ்சள் குங்குமமிட்டிருந்தார்கள். தேவாதிதேவர்கள் கொலுவீற்றிருக்கும் காமதேனுவே வானுலகிலிருந்து கீழிறங்கி வந்தது போல் இருந்தது. ப்ளாஸ்டிக் திங்காத மாடு போலிருக்கிறது. பளபளவென்று இருந்தது.

கூடவே இரண்டு மூன்று விஷயங்கள் குபீரென்று மண்டைக்குள்ளிருந்துப் பொத்துக்கொண்டு வந்தது. பசுவின் வால் குச்சத்திலிருக்கும் உரோமங்கள் நடுவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறுத்துக் குறைந்துகொண்டே வருகிற மாதிரி எழுதுகிற சித்ரகவிக்கு கோபுச்ச யதிஎன்று பெயராம். தெய்வத்தின் குரலாக பெரியவா சொன்னது. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பாட்டு ஒன்றை உதாரணமாகச் சொல்லியிருந்தார். ஸரஸகாயே, ரஸகாயே, ஸகாயே, அயே என்று ஒவ்வொரு எழுத்தாகக் குறைத்தாலும் அர்த்தம் வருகிறா மாதிரி எழுதியிருக்கும் மாயேஎன்கிற தரங்கிணி ராக க்ருதி.

அப்புறம் கோவிந்தபுரத்தில் காதுகளில் நம்பர் குத்தி ஈ மொய்க்காமலிருக்க ஃபேனுக்கடியில் கோசாலையில் சொகுசாக வசிக்கும் மடிபெருத்த பசுக்கூட்ட ஞாபகம் வந்தது. இக்கலியுகத்தில் அந்த ஆயர்குல பாலன் அங்கேதான் சாஸ்வதமாகக் குடியிருக்கிறான். கூடவே முன்னாடியெல்லாம் உங்க ஜெகதா பாட்டிதான் பால் கறப்பா... ஆத்துக்கு விருந்தாளியெல்லாம் வந்தா அதுவே புரிஞ்சுண்டு பக்கத்துல வரும்போது காதை குஷியா ஆட்டிண்டு அரைப் படி அதிகமா பால் கறக்குமாம்..என்று அம்மா சிலாகித்த சேப்புலக்ஷ்மியும் ஞாபகத்துக்கு வந்து கழுத்தில் நெட்டி மாலையோடு தலையை ஆட்டியது.

அப்பசுவை இரண்டு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தேன். வரும்வழியில் வீட்டிற்கு பேப்பர் போடும் கோபு டீக்கடை வாசலில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார் அவர் குடிக்கும் டீயின் பால்  எந்த ஆவினோடது? எவரறிவார்?

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Good post....

(From [my new] android)

சே. குமார் said...

நல்ல பகிர்வு...
அடிக்கடி எழுதுங்க அண்ணா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விவரணை...... ரசித்தேன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails