Saturday, February 22, 2014

அணை உடைத்த பெண்மை!

குளிர்ந்த காற்று வீசியது. முகத்தில் ஜிலுஜிலு. எந்த சீதோஷ்ணத்திலும் ஸ்வெட் ஆகணும் என்று வாக்கிங்கில் பிடிமானம் வைத்திருக்கிறேன். ஓட்டமும் நடையுமாக வீதியில் வந்துகொண்டிருந்தேன். கூடுதல் ஆக்ஸிஜன் தேவையில் மூச்சிரைத்தது. தூரத்தில் நான்கு ரோடுகள் கூடுமிடம். கல்லூரிப் பேருந்துகளின் பந்தய சாலை. தலைமேல் ஆட்களை ஏற்றிக்கொண்டு ஊடாடும் காய்கறி டாட்டா ஏஸ்கள். புகை. புழுதி. ஹார்ன் ஒலி.

ஜெயகாந்தனின் ”ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நாவலில் வரும் மலையோர கிராமத்து மனிதர்கள் போல வெற்றிலைச் சாறையோ சளியையோ இரண்டுமில்லையென்றால் வெறும் எச்சிலையோத் துப்பிவிட்டு காலடி மண்ணால் மறைத்துக்கொண்டிருப்பார்கள். அதன்மேல் ஜட்டியில்லாத அவர்கள் பிள்ளை வெறும்காலோடு ஓடியாடும்.

கைலி மற்றும் புடவையில் இருபாலிலும் உழைப்பாளர்கள். டீக்கடை வாசலில் இவர்களைச் சித்தாள் பெரியாளாகக் கவர்ந்து போவதற்கு புல்லட்டுடன் சில ஏஜெண்ட்டுகள்; கையில் ப்ளாஸ்டிக் அரையடி ஸ்கேல் அகல ப்ரேஸ்லெட்; கழுத்தில் தாம்புக்கயிறாக செயின். சிலர் கையில் மெதுவடை. பலர் டீ க்ளாஸுடன். பத்து பேர் சிரித்தால் ஐந்து பேர் நேற்றிரவு ஆஃப் அடித்தது இறங்காமல் அரை இமை திறந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று வேஷ்டி கட்டிய ஆளொருவன் ஓரத்திலிருந்து நடுரோட்டில் பப்பரக்கா என்று விழுந்தான். எங்கிருந்தோ உடைத்த மூங்கில் பளாச்சும் கையுமாக ஒரு வீரப்பெண்மணி. சிகப்புச் சேலை. கண்களில் கோபக் கனல். பொண்டாட்டியாக இருக்கக்கூடும். சகட்டுமேனிக்கு சுழட்டிச் சுழட்டி வீர்வீர்ரென்று வீரியது. மூங்கில் ப்ளாச்சு உஸ்...உஸ்..ஸென்று சப்தமிட்டுக் காற்றைக் கிழித்தது.

மொத்த கும்பல் வேடிக்கைப் பார்த்தது. காது கூசும் படி அந்தாள் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினான். பதிலுக்கு சுளீர் சுளீரென்று அடி. என் நடையின் வேகம் தடைபட்டது. சுதாரித்து எழுந்து கொண்ட அந்த ஆள் எதிர்புறம் ஓடினான். அங்கு ஓரத்தில் ஈரமாய்க் கிடந்த பூக்கடை மேசையைக் கையால் ஒங்கிக் குத்தி உடைத்தான். நிராயுதபாணியாய் இருந்தவன் இப்போது உடைந்த கட்டையை கையில் எடுத்துக்கொண்டு எதிர்திசையில் தாக்குவதற்கு ஓடினான்.

அந்தம்மா கையில் இருந்தது இவன் கையில் இருந்ததை விட சற்றே பெரிய கம்பு. யாரோ இரண்டொருவர் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அவனைத் தடுக்க ஓடினார்கள். அவள் அசையாமல் ரௌத்திராகாரமாக நின்றுகொண்டிருந்தாள். எனக்கு இனிமேல் நிற்க பிடிக்கவில்லை. அந்த இடத்தைக் கடந்தேன். நின்றதை ஈடுகட்ட இன்னும் வேகமாக நடந்தேன்.

“நாம் பெண்மை பெண்மை என்று பாராட்டுகிறோமே... அது தண்ணீரைப் போல். ஏரியிலே குளத்திலே ஆற்றிலே அணைக்கட்டிலே தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. அப்படித் தேங்கிக்கிடக்கிற தண்ணீர் புறக்கண்களினால் பார்க்கும் போது எவ்வளவு அடி ஆழமுள்ள தண்ணீர் என்று தெரியாது. குட்டையிலே கிடக்கிற தண்ணீரும் 120அடி அணைக்கட்டிலே கிடக்கிற தண்ணீரும் பார்க்கிற கண்களுக்கு ஒன்றாகத்தான் தெரியும். கரை அத்தண்ணீருக்குப் பாதுகாப்பு கொடுப்பதால் ஏரி, அணைக்கட்டுகளில் கிடக்கிற நீர் அமைதியாகக் கிடக்கிறது. பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய கரை தன்னுடைய கடமையிலிருந்து விலகிக்கொள்ளுமேயானால் அதுவரை அடைபட்டுக் கிடக்கிற தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக வந்து அனைத்தையும் அழித்துவிடும். பெண்மையும் அப்படித்தான். ஆண்மை தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் வரை அடங்கிக்கிடக்கும். அந்த ஆண்மைக்கு அடங்கிக்கிடப்பதைப் பெருமையாக நினைக்கும். ஆனால் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய ஆண்மை அந்தப் பாதுகாப்பிலிருந்து தவறினால் சீறி எழுந்து எல்லாவற்றையும் அழித்துவிடும்..” என்று வில்லிபாரதச் சொற்பொழிவில் பாஞ்சாலி சபதத்திற்கு முன்னால் புலவர் கீரன் சொன்னதை அசை போட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

பனியன் நனைய உடம்பு நன்றாக வியர்த்திருந்தது!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails