Saturday, February 22, 2014

பார்பி

ஏழு மணிக்குக் கூட கந்தசாமிக் கோயிலை தொட்டடுத்தத் தெரு நிசப்தமாயிருந்தது. வீதியின் மூலையில் ஒதுக்கியிருந்த பச்சை வண்ணக் குப்பைத் தொட்டிக்குள் இரண்டு பேர் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் அந்தத் தெருவை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த நாய். இன்னொருவர் ஊரார் குப்பையில் தன் வயிற்றைக் கழுவும் அந்தப் பெண். அழுக்குச் சட்டை. கந்தலான பூப்போட்ட பாவாடை. கலைந்த செம்பட்டையான கேசம். கண்களில் உழைப்பின் தீவிரம். திருஷ்டி படாமலிருக்க கணுக்காலில் கறுப்புக் கயிறு கட்டியிருந்தாள்.

மும்முரமாக அட்டைப்பெட்டி, ஆவின் பால் கவர் என்று பொறுக்கிக் கொண்டிருந்தாள். தனக்கு உபயோகமான பொருளைச் சுருட்டி விடுவாளோ என்ற கண்காணிப்பில் பைரவர் சுதாரிப்புடன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

அருகில் நிறுத்தியிருந்த மூன்று சக்கர குப்பை வாகனத்தின் பாரில் ஒரு உர சாக்குத் தூளி கட்டியிருந்தது. எங்கேயோ குப்பையில் பொறுக்கிய பார்பி டால் ஒன்று அந்த தூளியில் தூங்கிக்கொண்டிருந்தது. தங்கநிறத் தலைமுடியுடன்.

இரண்டு தெரு கடந்திருப்பேன். ஹிமாலயாஸ் டீக்கடைக்கு எதிர்புறம் இன்னொரு பச்சைத் தொட்டி. அங்கேயும் அதே மூன்று சக்கர மிதிவண்டி. தொட்டிக்குள் அந்தப் பெண். இப்போது பாரில் கட்டியிருந்த உரத் தூளி லேசாக அசைந்தது. அதென்ன பாட்டரியில் இயங்கும் பார்பியா? கண்ணைக் கட்டி இழுத்தது.

வாவ்! தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்காக (வாலியிடம் கடன் வாங்கிய வரி!) உயிருள்ள பாப்பா!! தலை நின்றுவிட்டது. கோலிக்குண்டு மாதிரி ரெண்டு துருதுரு கண்கள் தெரிந்தது. நல்ல துருதுரு. இரை கொண்டு வரும் பட்சிகளுக்கு அதன் குஞ்சுகள் கூட்டிலிருந்து வாயைத் திறக்குமே அதுமாதிரி பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் சிணுங்கவில்லை. அழவில்லை.

இதுவும் கடந்து போனேன். வாக்கிங் முடிப்பதற்கு இன்னும் ஒரு தெருதான் பாக்கி. வீட்டையடையும் முன் இன்னொரு குப்பைத் தொட்டி. அதனருகில் அதே வண்டி. தொட்டிக்குள் அந்தப் பெண்மணி இல்லை. தூளியில் அந்தக் குழந்தையும் இல்லை. இருபுறமும் கண்களை ஓடவிட்டேன். உதயா ஸ்நேக் பார் வாசலில் குழந்தையைத் தலைக்கு மேலே பிடித்துக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். என் முகத்தில் அடித்த சூரியன் போல பளீரென்று வெள்ளையாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது.

அவளருகே டீக்கடை வாசல் படியில் பேப்பரில் மடித்த பன்னும் பக்கத்தில் ஒரு க்ளாஸ் டீயும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails