Saturday, February 22, 2014

மார்கழியில் நான் பொங்கலாக இருக்கிறேன்

சாலையில் ஐந்தாறு பேர் மங்கி கேப்பும் கம்பளி சுற்றிய கழுத்துமாக பனி எதிர்க்க சக்தியில்லாமல் அதைர்யமாக அடங்கி நடந்துகொண்டிருந்தார்கள். பாலகுமாரனின் க்ருஷ்ண-அர்ஜுனில் பனி மழை பொழியும் தனுர் மாதத்தில் மேலுக்கு உத்தரீயமில்லாமல் வெற்று மார்புடன் உப்பரிகையில் நின்று குளிரோடு யுத்தம் புரிந்து கொண்டிருக்கும் அர்ஜுனனைப் பற்றிய வர்ணனை நினைவுக்கு வந்து வீராதி வீரனாகப் பனியனைக் கழட்டிவிட்டு Bare பாடியோடு நடக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். சிக்ஸ் பேக்ஸ் பார்த்துவிட்டு வீதியில் செல்வோர் மயங்கிவிடுவார்களோ என்றஞ்சி சமூகநல நோக்குடன் அப்படியே நடக்க ஆரம்பித்தேன்.

கழுத்தில் பட்டியணிந்து லைசென்ஸ் பெற்ற சுத்தமாகக் குளித்த மிடுக்கு நாயொன்று கப்படிக்கும் வீதிச் சொறி நாய்களை முன் பற்கள் தெரிய ”கர்...ர்...ர்....”ரித்து அடிபணிய வைத்துக்கொண்டிருந்தது. நாயினும் கடையோன் என்று மணிவாசகப் பெருமான் சொல்லிக்கொள்ளும் மாண்பு நினைவுக்கு வந்து அதைத் தோழமையுடன் பார்த்துக்கொண்டே விரைந்தேன்.

வள்ளி தேவசேனா சமேத கல்யாண கந்தசாமி, தென்மூலை வரசித்தி விநாயகர், கிராம எல்லை சாமி பொன்னியம்மன், பேட்டையில் பிரசித்தி பெற்ற பாதாள விக்னேஸ்வரர், கலர்கலராக சுதைச்சிற்பங்கள் ஜொலிக்க அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கண்ட வடமூலை சர்வசித்தி விநாயகர் என்று காலையில் நடக்கும் போது வழியில் இருக்கும் எந்த திருக்கோயில் கோபுரமும் சலனமேயில்லாமல் செட்டுக் கட்டாமல் பக்திமாலை பரப்பாமல் இருந்ததை இன்று கவனித்தேன்.

சைக்கிள் மணி க்ளிங்..க்ளிங் என்றதும் எங்காவது பஜனையொலி கேட்கிறதா என்று காதைக் குவிக்கும் ஆர்வம் பெருகியது. கூர்ந்து கவனித்ததில் காலையிலேயே யார் வீட்டிலோ ”வா..வா... என் வெள்ளிச்சப் பூவே வா...” என்று இசையருவி கேட்டது.

வீட்டு வாசல்களில் சுருக்கமாக நாலு இழையில் இப்படி ஒரு இழை அப்படி ஒரு இழையாக சிக்கென்று சிக்குக் கோலமிட்டிருந்த வாசல்கள் “இது மார்கழியா?” என்று எள்ளி நகையாடின. எண்பது வயது பாட்டி ஒருத்தி இடுக்குப்புள்ளி கோலத்தில் ஒரு புள்ளியில் முடியும் சங்குகோலம் போட்டுக்கொண்டிருந்தது ஏமாற்றத்தை ஐந்து சதவிகிதம் குறைத்து ஆறுதல் அளித்தது. கலர்க் கோலத்துக்கு காவல் இருந்த மன்னை நாட்கள் நினைவுக்கு வந்து நெட்டித் தள்ளின.

வேகத்தைக் கூட்டி விரைந்து வந்து வீடு பேறு அடைந்தேன். ஆமாம், முந்திரியோடு நெய் மிதந்து மணம் பரப்பும் பொங்கல் வாசனை வாசல் வரை எட்டிப்பார்த்த என் வீட்டை துரிதகதியில் அடைந்தது என் பேறுதானே!

( சென்னை ) மார்கழியில் நான் பொங்கலாக இருக்கிறேன்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails