வாக்கிங்கிற்கு வாசலில் வந்தால் கிழக்கில் வானம் சாயம் பூசியிருந்தது.
வர்ணஜாலம். மின்கம்பியில் அமர்ந்து மெய்மறந்து வேடிக்கைப்
பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் காகத்திற்கு ஆஃபீஸ் கவலையில்லை. பசங்களை
ஸ்கூலுக்குக் கிளப்பும் வேலையெல்லாம் கிடையாது.
இன்னும் ஒரு கிமீ
செல்வதற்குள் தலைக்கு மேலே தகதகவென்ற தங்கப்பாளங்களாக வெடித்து ரேகை ஓடி
“வந்து அள்ளிக்கோ...” என்று கூப்பிட்டது. குங்குமப்பொட்டு டீ கடைக்காரர்,
ஹார்னிலிருந்து கையெடுக்காமல் அடிப்பதில் தீராத காதல் கொண்ட பொறியியல்
கல்லூரி வாகன ஓட்டுனர், ஏரியா தாண்டி வந்த
எதிரியை ”வள்...ள்...”ளென்று விரட்டி வெற்றி கண்ட பைரவர், லாப்டாப்பில்
சப்ஸ்க்ரிப்ஷன் டேட்டா அடித்து பேப்பர் பிரித்துக்கொண்டிருந்த கைலிக்காரர்,
மூன்று கட்டு மல்லியும் பொதினாவும் பத்தே ரூபாய் என்று சிலேட்டில்
எழுதிக்கொண்டிருந்த காய்கறிக்கடைக்காரர், குமரன் வாசலில்
முறைத்துக்கொண்டிருந்த என்னை அறிந்தால் அஜித் என்று சகலரையும் நிமிடங்களில்
கடந்து திரும்பவும் கிழக்கு நோக்கி திரும்பினேன். பாறை பாறையாய்
ஐஸ்கட்டிகள் ஆகாயகங்கையாக உருகி ஊற்றிவிடும் வெண்மையில் மேகக்கூட்டம்
விண்ணில் உலவியது.
வானம் எனக்கொரு போதிமரம் என்று வைரமுத்து பாடியது எனக்கு இன்று போதை மரமானது.
0 comments:
Post a Comment