Monday, February 1, 2016

பாகம் 1: அடர்மழைக்கால டயரி‬ - எல் நினோ

திசம்பர் ஒன்றாம் தேதி. காலையில் செல்லும்போதே வானத்தைப் பொத்துக் கொண்டு கொட்டியது. கத்திப்பாரா க்ளியர். மியாட், ராமாபுரம் க்ளியர். போரூர் சிக்னல் ஆட்டோ கட் அடிக்கும் அளவிற்கு நெரிசல். வழிய வழிய நின்ற போரூர் ஏரி ரோட்டைத் தொட எத்தனித்துக்கொண்டிருந்தது. மிக முக்கிய அலுவல்கள். வானம் பார்த்து மேகம் பார்த்து ஒத்திப்போட முடியாது. ஆக்ஸிலை அழுத்து. பற. திரைகடலோடியும் திரவியம் தேடு. மழைகடலோடியும் மீட்டிங் போடு!!

மாலை நான்கு மணிக்கு வருண பகவான் டீ குடிக்கப் போயிருந்தார். ”இப்பவே கிளம்பினா வீட்டுக்கு போகலாம். இல்லேன்னா பாதி வழியில ததிங்கினத்தோம் போடணும்...” என்ற சத்யாவின் சத்யவாக்கால் போட்டது போட்டபடி கிளம்பியாச்சு. சேப்பாயிக்கு எக்ஸ்ட்ரா ட்யூட்டி. 

மதுரவாயல் பைபாஸ் போக்குவரத்து க்ளியர். வருண பகவான் இவ்வளவு சீக்கிரம் டீ குடித்துவிட்டு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தரத்திலிருந்து வெள்ளைத் திரைச்சீலையை கார்க் கண்ணாடிக்கு இரண்டடி முன்னால் தொங்கவிட்டு ஆட்டுவது போல கனமழை. திரைச்சீலை காற்றால் இடதும் வலதுமாய் அசைய அசைய ரோடு தெரிந்து தெரிந்து மறைந்தது. நாலரை மணிக்கு நடுநிசி போல கும்மிருட்டு. கண்ணைப் பறிக்கும் மின்னல் இல்லை. அச்சுறுத்தும் இடிமுழக்கமில்லை. மேகத்திலிருக்கும் தண்ணீர் லோடு முழுவதும் இறக்கிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பெய்தது. எங்கு நோக்கினும் தண்ணீர்! தண்ணீர்!! பைபாஸின் இருபுறத்திலும் புதிய ஆறுகள் உற்பத்தியாகி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

போரூரில் வாகன நெரிசல். சிக்னல் தாண்டி ஒரு திடீர்க் குளம் உருவாகியிருந்தது. கனரக வாகனங்களுக்குப் பாதகமில்லை. சேப்பாயியின் கழுத்து வரை வெள்ள நீர். கோயம்பேடு அரும்பாக்கம் பகுதிகள் நிரம்பியிருக்கும் என்று மாற்று வழியில் வந்தால் இங்கேயும் அதே நிலை. ஒன்று திரும்பவேண்டும். இல்லையேல் நீந்திக் கடக்க வேண்டும். மனதைத் திடப்படுத்திக்கொண்டு முதல் கியரை மாற்றி ஏறியாகிவிட்டது. எங்கிருந்தோ இடது புறத்தில் புயலென ஏறிய மாநகரப் பேருந்து விசிறி அடித்த நீரில் முகப்புக் கண்ணாடி முழுக்க ரோட்டு நீர். முன்னால் சென்ற டூவீலர் வெள்ள நீர் அலையடித்துக் கவிழ்ந்தார். அவருக்குப் பக்கத்தில் சென்ற ஆட்டோ சீட்டு வரை தண்ணீர் ஏறி “பொக்”கென்று அணைந்து மூர்ச்சையானது. 

முன்னால் இரண்டு வாகனங்கள் தேங்கி நிற்க கழுத்தளவு நீரில் சேப்பாயி ”ர்ரூம்.....ர்ரூம்....”மென்று திணறிக்கொண்டிருந்தது. இன்றிரவு கொட்டும் மழையில் போரூரிலேயே மாட்டிக்கொள்வோமோ என்ற திகில் பற்றிக்கொண்டது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நெஞ்சுரத்தோடு வலது ஓரத்திலிருந்து இன்னும் ஆழ்கடல் பகுதியான இடது ஓரத்திற்கு மாறினேன். ப்ரேக்கில் காலை வைக்காமல் ஆக்ஸிலேட்டரில் ஏறி உட்கார்ந்தேன். பெடல் உடையும் வரை அழுத்தினேன். சேப்பாயிக்கு இரண்டு முறை மூச்சு முட்டியது. ஊஹும். விரட்டு. மோட்டர் போட் போல மிதந்தும் அன்னம் போல நடந்தும் மீனாய் நீந்தியும் கடந்து வந்து தரையில் அஸ்வமாக ஓடியது சேப்பாயி. சபாஷ்டா! (சேப்பாயிக்கு!!)

அதற்கப்புறம் பௌருஷம் காட்டும் தீரமிக்க சவால்கள் இல்லை. பட் ரோடு முனையில் தலையை உயர்த்திப் பார்த்தால் மீனம்பாக்கத்துக்கு மேலே போர்மேகங்கள் சூழ்ந்திருந்தன. மணி ஐந்து. அந்த கருமேகங்கள் சுமந்த நீர் மழையாக ஒரே இடத்தில் பொழிந்தால் தோமையார் மலை மூழ்கிவிடுமோ என்று அச்சப்பட்டேன். காரின் மேல் ஏறி கையை உயர்த்தி ஆட்காட்டி விரலால் தொடும் தூரத்தில் மழை மேகங்கள் உலவிக்கொண்டிருந்தது. 

கத்திப்பாரா ஏறும் போது பெய்ய ஆரம்பித்தது. இப்போது வண்டிக்கு அரையடி முன்னால் நகர்வன கூட தெரியவில்லை. கிண்டியில் இறங்கி ஆசர்கானா தாண்டினோம். எங்கள் பேட்டைக்கான எல்லா மார்க்கமும் வெள்ளநீரால் நிரப்பப்பட்டது. சுரங்கபாதையெல்லாம் மூழ்கியது. மீனம்பாக்கம் கேட் அருகே நின்ற போலீஸ் “திரும்பாதீங்க...” என்று பதறிப்போய் தடுத்தார். 

இப்போது......... எங்கே போவது? மழையின் தீவிரம் கூடுகிறது. தொடுவானம் தரைவானமாகக் கீழே இறங்கிவந்துவிட்டது. மேகமெல்லாம் கை தொடும் தூரத்தில் நின்றுகொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இதுதான் ஊழிக்காலமா? கலியுகத்தின் முடிவா? எங்கே புகலிடம்? வீடா? ரோடா? வீட்டில் எழுபது தாண்டிய நான்கு முதியவர்கள். அதில் ஒருவர் படுத்த படுக்கையாக. சீக்கிரம் வீடடைய வேண்டும். எனது அருகாமை அவர்களுக்கு பலம். ஈஸ்வரா காப்பாத்து!!

கணநேரம் மூளையை அலம்பி துடைத்துவிட்டாற்போல இருந்தது. வழியெங்கும் வாகன நத்தைகள் மௌனமாய் ஊர்ந்துகொண்டிருந்தன. மணி மாலை ஆறு. வாகனங்களின் பின்புற சிவப்பு விளக்குகள் அபாய சிக்னல் கொடுத்துக்கொண்டிருந்தன.

மீனம்பாக்கம் தாண்டி பல்லாவரம் வழியாக நங்கைநல்லூர் திரும்பிவிடலாம் என்று இன்னும் முன்னேறினோம். மீனம்பாக்கம் ஏர்போர்ட் எதிரே கட்டியிருக்கும் மேம்பாலத்தின் அடியில் திடீர் ஏரி உருவாகியிருப்பது அப்போதுதான் கண்ணில் பட்டது. சேப்பாயிக்கு இன்னொரு நீச்சல். இடது ஓரம் வரை முட்டிக்கு மேல் தண்ணீரில் நின்று கொண்டு போலீஸார் “இங்கே பள்ளமில்லை... வேகமா ஓட்டிக்கிட்டுப் போயிடுங்க....” என்று சைகை காண்பித்து உழைத்துக்கொண்டிருந்தார்கள். யார் பெத்த புள்ளையோ.. மவராசன்கள் நல்லாயிருக்கணும்....

அப்போது @ravindran narayanan மதுரையிலிருந்து சென்னை வந்திறங்கப்போவது ஞாபகம் வந்தது. அவரையும் அழைத்துக்கொண்டுவிடலாம். இந்த வெள்ளத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்று ஏர்போர்ட்டிற்குள் நுழைந்து சமர்த்தாகப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டோம். கொஞ்ச நேரத்தில் விமானங்கள் தரையிறங்கவில்லை என்றும் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது என்றும் செய்தி வந்தது. 

தென் இலங்கைக்குப் பறந்த ஆஞ்சநேயர் குடிகொண்டிருக்கும் நங்கநல்லூருக்கு என் போன்ற நரன்கள் எப்படித் தாண்டுவது? ”பழவந்தாங்கல் சப்வே வரைக்கும் போய்டுவோம்... அப்புறம் நடந்து அக்கரைக்குப் போய்ட்டோம்னா.. வீட்டுக்குப் போயிடலாம்....” என்று சத்யா திட்டம் வகுத்தார்.

தெய்வாதீனமாக மீனம்பாக்கம் வெளியே ஒரு ஆட்டோ நின்றிருந்தது. 

“பழவந்தாங்கல் போகணும்”

“ஏறுங்க சாமீ!” ஆட்டோ ட்ரைவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். நெற்றியில் பளிச் சந்தனம். நரைமுடிக் காட்டில் நாலைந்து கருப்பு கேசத்தோடு தாடி. கழுத்தில் கருப்புத் துண்டு. மூக்கை உரசும் சிகரெட் நெடி. யாரேனும் சவாரி தம்மடித்திருக்கும். இப்போ அதுவா ஞாபகம்!! ஸ்வாமியேய் சரணம் ஐயப்பா..,..

சிறுசிறு சாலைக் குட்டைகளில் அவர் வண்டியைத் திறம்பட செலுத்தியதில் கைதேர்ந்த ஆள் என்று தெரிந்தது. 

வெளியே மழை இரைச்சலைத் தாண்டி அவருக்குக் கேட்பதற்காக சற்று சத்தமாக “சாமிக்கு எந்த ஸ்டாண்ட்?” 

“வடபழனிங்க.. ஏர்போர்ட் சவாரிக்கு வந்தேங்க..ஏர்போர்ட் உள்ள வர்றத்துக்கு ரெண்டு மணி நேரம் ஆயிட்டுது....”

சாலைப் பள்ளத்தாக்குகளையும் குன்றுகளையும் கடந்து ஜியெஸ்டி ரோட்டிலிருந்து நங்கை திருப்பத்திலிருக்கும் சாந்தி பெட்ரோல் பங்க் அருகே வந்தோம். 

“சாமீ! ரோட்டுல பாரிகேட் வச்சுருக்காங்க.. பங்க் உள்ள போயிடுங்க.. அப்படியே லெஃப்ட்ல கொண்டு போய் இறக்கிவிட்ருங்க...”

சாமி உள்ளே நுழைந்தார். பெட்ரோல் பங்க்கை அரைவட்டமாய் அளந்தார். நங்கை செல்லும் பாதைக்கு வந்தால்...... சடன் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்திவிட்டு...

“சாமீ.. கொஞ்சம் பாருங்க.. இதுக்குள்ள போவணுமா?” என்று கேட்டார்.

அவர் கையால் துடைத்த முகப்புக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் ரோடே தெரியவில்லை. ஒரே வெள்ளக்காடு. மெரினாவில் இறங்கி கடலோரத்தில் நின்று கொண்டு உள்ளே பார்த்தால் கண்ணுக்கு முடிவே தட்டுப்படாதோ... அது போல எங்கு காணினும் தண்ணீர். அலையடித்து நீர் நெளிவது சில சமயம் இருட்டிலும் பளபளத்தது.

“சரி நாங்க இறங்கிக்கிறோம்... இந்தாங்க....”

நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். பொறுமையாக பைக்குள் கை விட்டு மீதம் ஐம்பது ரூபாயை எடுத்து சிரத்தையாக நீட்டினார் அந்த மகான். எனக்கு ஐந்துமலைவாசன் ஐப்பனே நேரே வந்தது போல தோன்றியது... அந்தக் குளிரில் உடம்பு நடுங்காமல் அவரது செய்கையால் ஒருமுறை உதறியது. மயிர்க்கூச்சல். அடைமழை. ஐம்பது ரூபாய். 

“பரவாயில்லை... வச்சுக்கோங்க சாமீ.....”

“ச்சே...ச்சே... ஐம்பது ரூபாய் போதுங்க... நீங்க பார்த்து பத்திரமா நடந்து போங்க சாமீ...” என்று வழியனுப்பினார். ”யோவ்.. மனுசன்யா நீ...” என்று கட்டி அணைத்துக்கொள்ள தோன்றியது. வலுக்கட்டாயமாக அந்த ஐம்பது ரூபாயையும் அவர் பைக்குள் திணித்துவிட்டு இடதுஓர ப்ளாட்ஃபார்ம் ஓரமாக பயந்துகொண்டே நடக்க ஆரம்பித்தோம். 

எங்கும் மின்சாரம் இல்லை. ஒரே இருட்டு. ஒத்தையடிப்ப்பாதை ஓடும் காவிரிக்கரை குக்கிராமத்திற்கு கடைசி பஸ்ஸில் வந்திறங்கி முகவரி தேடுவது போல இருந்தது. அதிர்ஷ்டவசமாக யாரோ எதிர் திசையில் நடந்து வருவது “ப்ளக்..ப்ளக்...” என்ற ஒலி கேட்டது. தசரதன் யானை தண்ணீர் குடிக்கிறது என்றெண்ணி ஷ்ரவணகுமாரனை அம்பு போட்ட பிஜியெம். இதிகாசமெல்லாம் இப்போதா வந்து ஃபிலிம் காட்டணும்? நகருப்பா.... ப்ளாட்ஃபார்மை மறைக்குமளவிற்கு நீர். இன்னமும் ஜியெஸ்டி ரோட்டிலிருந்து நங்கைநல்லூர் சப்வே நோக்கி காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. மிகவும் நுணுக்கமாக அடிமேல் அடி வைத்து பதினைந்து நிமிடத்தில் மாடிப்பாதை வழியாக நங்கைநல்லூருக்குள் வந்தாயிற்று. 

இன்னும் கதை முடிந்தபாடில்லை. எல்லா ரோட்டிலும் முட்டியளவிற்கு தண்ணீர். எதிரே யாரவது வந்தால் கூட முட்டிக்கொள்ளுமளவிற்கு மசமச இருட்டு. எங்கே சைஃபன் திறந்து இருக்குமோ என்று தெரியாது. சத்யா வீட்டின் திசையறிந்து அனுமானத்துடன் நடந்துகொண்டிருந்தோம். சில ஆழமான அபாயப் பகுதிகளைக் கடக்க கை கோர்த்துக்கொண்டோம்.

“சார்... சார்... நில்லுங்க.. நில்லுங்க...” என்ற குக்குரல் அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் இழுத்தது. எங்கேயோ இருட்டிலிருந்த ஐந்தாறு இளைஞர்கள் நீந்தி விரைந்து ஸ்தலத்துக்கு வந்தார்கள். 

“அங்கே சைஃபன் தொறந்திருக்கு. அங்க ஒரு கல் இருக்குப் பாருங்க.. அதுல ஒரு கால் வைங்க.. அப்புறம் அடுத்த ஸ்டெப் தாண்டிருங்க.. இல்லேன்னா உள்ள போயிடுவீங்க.. இரண்டு பேரும் கையைக் கோர்த்துக்கோங்க....” போனா ரெண்டு பேருக்கும் ஜலசமாதி! இன்னிக்கி சனிக்கிழமை இல்லையே!! 

இணைந்தகரங்களுடன் அதைக் கடந்தோம். சின்னச் சின்ன தெருக்களிலெல்லாம் நீச்சல் குளம் கட்டி விட்டது போல தண்ணீர் நின்றது. குழந்தைகளும் பெரியவர்களும் வாசலில் நின்று கொண்டு உள்ளே புகுந்த வெள்ளநீரை முறத்தால் வாரி இறைத்துக்கொண்டிருந்தார்கள். சில இடங்களில் முட்டியளவு, சில இடங்களில் அதற்கும் மேலே. நாற்றமில்லை. “ஆத்துத்தண்ணிதான்!” என்று விரிந்த உதட்டுக்கு மத்தியில் பேச்சு வந்தது.

எல்லாம் கடந்து சத்யா வீட்டிற்கு வந்தாயிற்று. சூடான ஒரு டீ உள்ளுக்குச் சென்றதும் முதுகு நிமிர்ந்தது. அடுத்த இலக்கு என் வீட்டிற்கு செல்ல வேண்டும். எனக்காக காத்திருக்கும் ஜீவன்களைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கான தேவைகள் என்னால் மட்டுமே பூர்த்திசெய்யக்கூடியவை. இரவு நான் சாப்பிட்டதும் தான் சாப்பிடும் எனது தெய்வங்கள். 

வெளியே மழை நின்ற பாடில்லை. சத்யா வீட்டில் உட்கார மனம் இல்லை. ”வீட்டுக்கு ஓடு” என்று உத்தரவாகி கிளம்பிவிட்டேன். 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails