Monday, February 1, 2016

பாகம் 2: அடர்மழைக்கால டயரி - எல் நினோ

”நான் கிளம்பறேன்..” என்று சத்யா வீட்டில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டாயிற்று. வீதியில் இறங்கினால் முட்டியளவு தண்ணீரில் தப்ப வேண்டும். ஏனோ “வெள்ளமெனப் பொழிவாய்... சக்தி ஓம்..சக்தி ஓம்... சக்தி ஓம்....” என்று மீசையை முறுக்கிக்கொண்டு பாரதி பாடுவது போல ஒரு ஹாலுஸினேஷன். எளக்கியம்? இப்ப... ரொம்ப தேவைடா... என்று அடிக்குரலில் என் மனஸ் இளப்பமாகப் பேசுவது என் காதுக்கு மட்டும் இரகசியமாகக் கேட்டது. 

“இந்தா...” என்று ஒரு பெரிய குடையை மழையாயுதமாக சத்யா வீட்டில் கொடுத்தார்கள். இந்த பிசாத்துக் குடைக்கு மசியும் மழையா அது? இன்னமும் சொட்டுக் கூட குறையாமல் தொடர்ந்து ஊற்றிக்கொண்டுதான் இருந்தது. குடைக்குள் வெள்ளம்!

இரண்டு குறுக்குத் தெரு நடந்து...ச்சே..ச்சே.. நீந்திக் கடந்தபின் ஒரு பெரிய தெரு வந்தது. இதுவரை சாந்தமாக ஓடிக்கொண்டிருந்த சிற்றாறுகள் பேராறு ஆக வளரும் அபாயம் இருந்தது. புண்ணிய பலனாக அப்படியொன்றும் நிகழவில்லை. ஆனால் வால்கனோ வெடித்த கிராமம், கடல் புகுந்த நகரம் என்றெல்லாம் கிராஃபிக்ஸ் செய்து கண்கட்டி வித்தைக் காட்டும் ஹாலிவுட் படங்களில் வருவது போல பலர் சைக்கிளில், ஆட்டோவில், நடந்து, சைக்கிளில் என்று பரபரப்பாக எங்கேயோ திக்குத்தெரியாமல் சென்று கொண்டிருந்தார்கள். ஏதோ பீதி தொற்றிக்கொண்டிருந்தது. இருட்டை மீறி உற்று நோக்கிய கண்களில் திகில்.

நங்கையிலிருந்து வீட்டுக்குச் செல்லமுடியாதா? கையில் துணைக்கு ஆஜானுபாகுவான குடை வேறு! ”வானுவம்பேட்டையில கழுத்து வரைக்கும் தண்ணி போவுது...” என்று யாரோ சத்தமாக காது ரிப்பேரானவர்களுக்கு சொல்வது போல பின்னால் கதறியது என் காதிலும் கேட்டது. ”கழுத்துவரைக்குமா?” என்று வலது கையை தொண்டைக் குழிக்கருகில் வைத்துப் பார்த்தக் கலவரத்தில் அங்கே ஒரு மாயக் கால்பந்து தோன்றி பக்கென்று அடைத்துக்கொண்டது. அடுத்த அடி வைக்க விடாமல் கால் பின்னிக்கொண்டது. 

ஹெலிகாப்டர் எனக்கருகே தரையில் இறங்கும் ஓசை கேட்டது. “ஆட்டோ... வருமா?” என்று குரலைக் காற்றில் கரைய விட்டேன். காதை அறுத்துக் கீழே போட்டுவிடும் சப்தமெழுப்பும் சைலன்ஸர் கட்டியிருந்த அந்த ஆட்டோ “வரும் சாமீ... ஏறுங்க?” என்றார். நெற்றியில் சந்தனம் மணக்கும் இன்னொரு ஐயப்ப சாமி. ஏர்போர்ட்டிலிருந்து நங்கை வரை கொண்டு வந்து விட்டவரும் ஒரு ஐயப்ப சாமி! ஹரிஹரனுக்கு என் மேல் எவ்வளவு பாசம்! அன்பு!! 

“இந்த ஆட்டோ கழுத்தளவு தண்ணியில போவுமாங்க?” என்று கேட்டு அவரை மிரட்ட விரும்பவில்லை. “வெற்றி தியேட்டர் வழியா போய்... மூவரசன்பேட்டை.. போய்...” என்று மாற்று வழி சொல்லிக்கொண்டிருந்த போது “எப்படியும் நாம இங்கேயிருந்து மார்க்கெட் தான்டணும் சார்.... அங்கேயே அரை அவர் முன்னாடி நான் பார்த்தபோது முட்டிக்கு மேலே இழுத்துக்கிட்டு போச்சுது......” என்று இடுப்பில் ஆட்காட்டி விரலைக் குத்திக் காண்பித்தார். அவர் குத்தியதில் எனக்குக் கடுத்தது.

”அர்த்தநாரீஸ்வரர் குளக்கரையோட திரும்பிடுங்களேன்..” பயத்தில் அடுத்த வழி சொன்னேன்.

“நீங்க வேற.... வயசான தாத்தா பாட்டியோட ஏளு மணிக்குப் போன ஆட்டோ பிரண்டிருச்சு.... அவ்ளோ இளுவை அங்கே...”

உனக்கு ஜலசமாதி கட்டாமல் ஓயமாட்டேன் என்று பேசினார். 

“எங்க போவனும் சார்?” இப்போதுதான் ட்ராக்கிற்கு வந்தார்.

சொன்னேன். 

“ஓ! எனக்கு அங்கேயே ஒரு கஷ்டமரு இருக்காரே...” இப்படி ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார். நடுவில் வந்த குட்டை, குளம், ஏரி, ஆறு, கடல் என்று பல வடிவங்களில் கொள்ளளவுகளில் சாலையை ஆக்கிரமித்திருந்த நீர்நிலைகளை அனாயாசமாகத் தாண்டினார். பேச்சு சுவாரஸ்யத்தில் எதிலாவது நம்மை இறக்கிவிட்டு தள்ளச் சொல்லிவிடுவாரோ என்று எந்த சமயத்தில் நினைத்தேனோ அது அப்போதே நடந்தது. 

ரோஜா மெடிக்கல்ஸ் வாசலில் இடுப்பளவு தண்ணீர். பக்பக்கென்று அடைத்துக்கொன்று கட்டையை நீட்டிவிடுவேன் என்று ஆட்டோ மிரட்டும் குரல் கேட்டது. ”நா வேணா காலால உந்தித் தள்ளட்டா?” என்று கேட்டேன். “வேணா சார்... சாயந்திரம் ஒரு பாட்டியும் அவங்க பேரனும் வந்தாங்க... ஆஞ்சநேயர் கோயிலாண்ட விடணும். போயிகிட்டிருக்கும்போது இதே இடத்துல இன்னும் கொஞ்சம் குறைச்சலா தண்ணி நின்னுச்சி..... அவனைக் காலால தள்ளுடான்னு சொன்னேன்... வெள்ளம் அவனோட செருப்பை அடிச்சிக்கிட்டுப் போயிருச்சு....”

தொனதொனவென்று கதை பேசினார். வெளியே மழையும் சென்னையோடு தொடர் போராட்டம் செய்துகொண்டிருந்தது. நாம வீடு போய்ச் சேருவோமா என்கிற உதறல் கேள்விக்கே பதில் கிடைக்கவில்லையென்றாலும் அந்தப் பையனுக்கு செருப்புக் கிடைத்ததா என்கிற வம்புக் கேள்வி என்னுள் தொக்கி நின்றது. அவர் தொடர்ந்தார்.

“அங்கிள்.. இறங்கி செருப்பை எடுத்துடட்டுமா?ன்னு கேட்டான். நாஞ்சொன்னேன் தம்பி செருப்பு கடையில வாங்கிக்கலாம்.. உசுரு வாங்க முடியுமா?”

”பயந்துட்டானா?”

”அவனா? அங்கிள் அப்பா எனக்கு ஸ்விம் பண்ண சொல்லிக்கொடுத்துருக்காங்க... மெரீனால ஸ்விமிங்கிங் பண்ணுவேன்.. செருப்பை எடுத்துடுவேன்...ன்னு திமிர்றான்....”

தண்ணீர் இல்லாத சமவெளியில் இப்போது பயணித்துக்கொண்டிருந்தோம். நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் “இவ்ளோ மள பாத்ததே இல்லபா....” என்று தனியாக பேசிக்கொண்டார். தண்ணியில் நடப்பதற்கு தண்ணியா? வீடுபோய்ச் சேரும் வரை நமக்கு அக்கப்போர் ஓய்வதில்லை. 

சின்னச் சின்ன நாட் வைத்து ஆங்காங்கே நிறுத்தி நிதானமாக இயக்குநர் சிகரம் போல கதை சொல்லிக்கொண்டிருந்தார் ஆட்டோகாரர். அடுத்தமுறை மன்னார்குடி செல்லும்போது இவர் ஆட்டோவில் போனால் சுவாரஸ்யமாக இருக்குமோ என்கிற விபரீத எண்ணம் முளைத்தது. பையனுக்கு செருப்பு கிடைத்ததா? என்று நான் மனசில் நினைத்தபோது அவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

”எஸ்பிஐ காலனியாண்ட எப்பவுமே நிக்கும்... ஈவினிங்கா முட்டியளவு நின்னுச்சு...” என்று பாட்டி-பேரன் கதையை பாதியில் நிறுத்திவிட்டு சமூகப் பிரச்சனைக்கு வந்தார். எனக்கு இதில் ஈர்ப்பு இல்லை. வெட்கத்தை விட்டு ”பையனுக்கு செருப்பு......” என்று கேட்டுவிடலாமா என்று வாயைத் திறக்கப் போகும் தருவாயில்.....

“நான் சொன்னேன்..... தம்பி நீ குளத்துல அடிக்கிற நீச்சல் வேறே.... ஆத்துல அடிக்கிற நீச்சல் வேறே......ன்னு..... அவன் ரொம்ப கெட்டிக்காரப்பய சார்.... என்னைப் பார்த்து திருதிருன்னு முழிச்சிக்கிட்டே... அங்கிள் இது ஆறு இல்லே... தெரு.... ரொம்ப தடவை நா ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கெல்லாம் நடந்து போயிருக்கேன்.... ஒண்ணும் ஆகாது......ன்னான்.... கொஞ்சம் தண்ணியைத் தாண்டியிருந்தேன்.... ஒரு திருகுதான்.... பறந்துட்டேன்...”

பையனுக்கு செருப்பு கிடைக்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். பாட்டி நிறுத்தச் சொல்லிக் கேட்கலையான்னு வம்பை வளர்க்கலாமா என்று சிறு பொறி தட்டியது. திடீரென்று தண்டகாரண்யத்திற்குள் நுழைந்தது போல கும்மிருட்டு. எங்கள் பேட்டைக்குள் நுழைய ஐந்தாறு தெருக்கள் மெயின் ரோட்டிலிருந்து ஓடுகின்றன. நான் இரண்டு சொன்னேன். “அங்கெல்லாம் தண்ணி நிக்குது சார்... உங்க தெரு எனக்கு தெரியும். நா அளச்சுக்கிட்டுப் போறேன்... நீங்க வாங்க.....” என்று ஆட்டோகாரர் சொன்னதில் கடைசி “நீங்க” மற்றும் ”வாங்க”விற்கு மத்தியில் “பொத்திக்கிட்டு” பொதிந்திருந்ததுப்.
வீட்டு வாசலில் இறக்கிவிட்டுவிட்டு அவருடைய விஸிட்டிங் கார்டு தந்தார். “தேவைன்னா கூப்பிடுங்க சார்... சரஸ்வதி ஹாஸ்பிடல் ஸ்டாண்டுதான்.....”. அவர் கேட்ட தொகைக்கு மேலே ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்தேன். “ச்சே..ச்சே... அதெல்லாம் வாணம் சார்.. நானே கொஞ்சம் கூட வச்சுதான் ஓட்டறேன்... பெட்ரோல் கிடைக்கமாட்டேங்குது.... கோச்சுக்கிடாதீங்க...” என்று சொன்ன ஐயப்பசாமியின் கண்களில் ஜோதி சொரூபனாக வில்லாளி வீரன் வீரமணிகண்டன் தெரிந்தான். 

இரவு முழுக்க மழை. மின்சாரமில்லை. “எப்பப்பா கரண்ட் வரும்?” என்று கேட்ட சின்னவளிடம் மன்னையில் கரண்ட் கட் ஆகும் போது நான் பாட்டியிடம் கேட்டால் அவள் சொல்லும் பதிலைச் சொன்னேன். “போய்யா.. நீயும் உன் விளக்கமும்” என்கிற தோரணையில் கையை மட்டும் நீட்டி ஆட்டிவிட்டு “வேர்ட் பவர் விளையாடுவோமா?’ என்று கலைந்துபோய்விட்டாள். அவளிடம் நான் சொன்ன பாட்டியின் பதில் இப்பதிவின் கடைசி வரியில்.

காலையில் மொபைல் நெட்வொர்க் கிடைக்கவில்லை. வாசலில் யாரோ ”ஹலோ”வை பல ராககங்களில் சாதகம் பண்ணிக்கொண்டிருந்தார். எழுத்தவுடன் மெயில் செக் செய்வதும் எனது காலைக் கடன்களில் ஒன்றாக இருப்பதால் மொபைலைத் தேடி தீவிரமாக நோண்டினேன். ”நாட் கனெக்டெட் வித் இண்டெர்நெட்” என்று நொண்டியடித்தது. 

“தம்பி பால் வரலை.....” என்று அம்மா சொன்னதும் “இந்த மழையிலும் பால் வேணுமா?” என்ற என்னை விரோதமாகப் பார்த்தாள். ஆனால் அந்தப் பாலுக்கு என்ன பாடு படவேண்டியிருந்தது என்பது அடுத்த எபிஸோடில்......

பாட்டியின் பதில்: “ஒண்ணுலேர்ந்து நூறு வரை எண்ணு. கரண்ட் வந்துடும்.” (இதுபோல லட்சம் தடவை எண்ணியிருப்பேன்)

(தொடரும்.....)

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails