Monday, February 1, 2016

பாகம் 3: அடர்மழைக்கால டயரி - எல் நினோ

ஜன்னலில் மங்கலான வெளிச்சம். இரவு தீர்ந்துபோய் விடியலின் அறிகுறி. வெளியே மழை விட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஈர வாசனை. வாசலில் எட்டிப் பார்த்தேன். பெர்முடாவும் வேஷ்டியும் ட்ராக் சூட்டுமாக ஆண்கள் கும்பலாக தெருமுனை பேப்பர்கடையில் எதற்காகவோ நின்றிருந்தார்கள். நைட்டிகளைக் காணவில்லை. பால் நிலவரம் அறிய முக்குக் கடை வரை வந்தேன். 

“பேப்பர் வரலை... பால் இல்ல...” என்கிற பதிலை நிமிர்ந்து கூட பார்க்காமல் யார் கடை வாசற்படியில் கால் வைத்தாலும் சொல்லப் பழகியிருந்தார் கடைக்காரர். பழைய ஆறிப்போன சஞ்சிகைகள் கூட சுடச்சுட விற்பனையாயின. அறுபது வயசுக்குக் குறையாத கிழவர் காலங்கார்த்தாலே ஏதோ ஒரு பேப்பர் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் எம்ப்ளாய்மெண்ட் ந்யூஸைக் காட்டி “அது ஒண்ணு தாங்க...” என்றபோது அவரது செய்தி போதை என்னை வியக்க வைத்தது. 

“பால் எங்க கெடைக்கும் தெரியுமா?” என்கிற சமுதாயப் பிரச்சனைக்கு விடை கிடைக்கவில்லை. ஒருத்தர் என் பக்கத்தில் வந்து இராணுவ இரகசியம் போல ”காசிமாரி ஸ்டோர்ஸ் பக்கம் கெடைக்குதான்னு பாருங்க...” என்று சொல்லிவிட்டு எதிரி நாட்டு ராஜா பிடிக்க எத்தனிக்கும் ஒற்றன் போல தாவி ஓடி மறைந்தார். 

துப்பு கிடைத்தவுடன் ஸ்கூட்டியில் பாலைத் தேடி ஒரு பயணம். சேப்பு பச்சை நீலமுமாக நாலைந்து சாஷேக்கள் சரம் தொங்க கண்ணாடி பாட்டில் அடுக்கிய கடையோ அல்லது கடை மாதிரி இருக்கும் இடமோ கண்ணுக்குத் தென்பட்டால் “பால் இருக்கா?” என்ற கேள்வி அகஸ்மாத்தாக என் வாயிலிருந்து வந்தது. கசாப்பு கடை வாசலில் கூட பால் பாக்கெட் கிடைக்குமா என்று எட்டிப்பார்க்குமளவிற்கு ஆட்டு மூளையாகிப்போனேன். 

“நீலாவுக்கும்.. கொழந்தேளுக்கும் மட்டும் பால் கிடைச்சா போறும்டா தம்பி...” என்று அம்மா சொன்னது மீண்டும் மீண்டும் ஸ்க்ராட்ச் ஆன குறுந்தகடு போல ரிப்பீட் மோடில் இசைத்துக்கொண்டிருந்தது. காசி மாரி ஸ்டோர்ஸ் பக்கத்தில் ஒரு பால் கடை. சின்னப் பையன் ஒருவன் பால் பாக்கெட்டோடு வெளியே வந்தான். அமிர்தம் கிடைத்தது போலிருந்தது. 

“ஆறு பாக்கெட் கொடுங்க..” என்று கையிலிருந்த ரூபாயை நீட்டினேன்.

“மூனு பாக்கெட் வாங்கிக்கிடுங்க சார்.... மத்தவங்க கேட்டாலும் கொடுக்கணுமில்ல.....” என்று பால் கடையை ரேஷன் கடையாக்கி நியாய தர்மத்தை காத்து ரக்ஷித்தார் அந்த அம்மணி. கையில் பால் பாக்கெட்டுப் பதிலாக சினிமா கோர்ட் காட்சிகளில் நியாயத்தராசோடு வரும் தர்மதேவதையாகத் தெரிந்தார். 

என்னுடைய பேட்டைக்கு வந்து பால் தேடி அலையும் பித்தர்களுக்கு அந்த இடத்தை அறிமுகப்படுத்தி மகிழ்ந்தேன். தப்பு செய்து மாட்டிக்கொண்ட வடிவேலுவை அடிக்கத் துரத்துவது போல திபுதிபுவென்று அந்தக் கடையிருக்கும் திக்குக்கு ஓடினார்கள். மறுநாள் முக்குக் கடைக்காரர் “அரை லிட்டர் நூத்தம்பது ரூபாவாம்... நெல்சன் மாணிக்கம் ரோட்டுல....” என்றார்.

செல்ஃபோன் வேலை செய்யவில்லை. ”நம்ம ஏரியாவைத் தாண்டமுடியாது.. எல்லா சப்வேயும் ரொம்பிடுச்சு.... வெளிய போனா உள்ள வரமுடியாது...” என்கிற அப்டேட் கிடைக்கப்பெற்றேன். ஸ்நானம் செய்து ஸ்வாமி கும்பிட்டு நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. பதினோறு மணி வரை அழைப்பேதும் வரவில்லையென்றாலும் அதை கையிலெடுத்து அன்லாக் செய்து மூடுவது ஒரு சீக்காக தொற்றிக்கொண்டது. ஒட்டுவார் ஒட்டி போல அது சங்கீதாவுக்கும் பற்றிக்கொண்டது. 

நேரம் செல்லச் செல்ல செல்ஃபோனை பார்ப்பது நின்றுபோய் தெருவில் வெளியில் வேடிக்கைப் பார்ப்பது ஆரம்பித்தது. பசங்களிடம் உட்கார்ந்து பேசி அரட்டையடித்து, டம் ஷரட்ஸ் விளையாடி, வேர்ட் பவரில் கெத்து காட்டாமல், “Z" மற்றும் “Y" ஆரம்பமே கொடுத்து அழ வைக்கும்படி என்று நேரம் நகர்ந்துகொண்டேயிருந்தது.

சாயங்காலம் நெருங்க நெருங்க மீண்டும் கடைகளில் ஒரு கூட்டம். இம்முறை டார்ச், பேட்டரி, மெழுகுவர்த்தி போன்ற இருள் நீக்கும் ஐட்டங்களின் விற்பனை கொடிகட்டிப் பறந்தது. ஒரு நாள் இரவில் குபேரனாகும் முயற்சியில் ஈடுபட்ட சில கடைக்காரர்கள் புழுக்கோண்டு மெழுகுவர்த்தியை ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் வரை விற்று புண்ணியம் கட்டிக்கொண்டார்கள். “கப் கேண்டில் கூட இல்லீங்க...” என்று சொல்லிப்பார்த்துவிட்டு கடைசியில் “Kindle இல்லை” என்று போர்டு வைத்தார் ஒரு வியாபாரி.

டார்ச் விற்பனையும் அமோகம். டேங்கர் லாரி கொள்ளளவு சாராயம் காய்ச்சி ஊருக்கே சப்ளை செய்யத் தோதாகத் தேவைப்படும் சின்னதும் பெரிதுமாகப் பேட்டரி வாங்கிப்போனாவரைப் பார்த்தால் சரக்கு காய்ச்சுபவர் போல தெரியவில்லை. டபிள் ஏ டிரிபிள் ஏ என்று சைஸ் வித்தியாசம் தெரியாதவர்கள் சாம்பிளுக்கு கையில் எடுத்துவந்து கடைக்காரர் கொடுத்த பேட்டரியோடு சேர்த்து வைத்து அளவு பார்த்து ”சரிதான்” என்று தலையாட்டி வாங்கிக்கொண்டு போனார்கள். ஏதேதோ “ஏ” தெரிந்தவர்கள் இப்பேரிடர் காலத்தில் பாட்டரி ஏ கற்றுக்கொண்டார்கள். ஏபிசி நீ வாசி!

ஒரு தண்ணீர் கேன் நூற்றைம்பது ரூபாய். டாட்டா ஏஸ் முழுக்க கேன் வைத்துக்கொண்டு ஒரு திடீர் வியாபாரி முளைத்தார். உடனே ஒரு ஐம்பது பேர் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். எங்கே இருநூறு ஏற்றிவிடுவாரோ என்று திக்திக்கென்று அடித்துக்கொண்டது. இந்த நிலைமையிலும் முப்பது ரூபாய் தாண்டாமல் தண்ணீர் கொடுத்தவரும் இருபத்தைந்து ரூபாய்க்கே அரை லிட்டர் பால் கொடுத்தவரும் பாராட்டப்படக்கூடியவர்கள். 

மின்சாரமில்லா அமைதியான இரவு. அச்சுறுத்தும் வானிலை. வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு இராத்திரி ஏதாவது ஒன்று என்றால் எப்படி பாலம் கடப்பது என்கிற தீவிர சிந்தனை மண்டையைக் குடைந்தது. சேப்பாயி வேறு கையில் இல்லை என்பது அப்போதுதான் உரைத்தது. 

“தம்பி வண்டி பத்ரமா இருக்குமோனோடா?” என்று அம்மா கேட்ட பொழுது பக்கத்து காம்பௌண்டிலிருந்து “ஏர்போர்ட் ஃப்ளட்டடாம்...” என்று சீரியஸாக வருத்தப்பட்டார்கள். ”சேப்பாயி... நீ பத்திரமா?” என்று அடிவயிற்றிலிருந்து கிளம்பிய கூச்சல் வாய்க்கு வெளியே வராமல் மண்டைக்குள் சென்று குடைந்தது. 

”கஷ்டகாலங்களில் என்னைக் கரைசேர்த்த சேப்பாயியை எப்போது மீட்பேன்?”

 என்கிற கணக்கிலடங்கா டெம்ப்ளேட் வினாக்கள் மனசுக்குள் நட்சத்திரங்களாக மினுமினுக்க.... கண்கள் அயர்ந்து.... நான் தூங்கிப்போக... இரவு கேள்வியாய்க் கடந்தது. 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails