Monday, February 1, 2016

பாகம் 4: அடர்மழைக்கால டயரி - எல் நினோ

திசம்பர் திங்கள் மூன்றாம் நாள். மப்பும் மந்தாரமுமாகப் பொழுது புலர்ந்தது. தனியார் பால்கள் கடை வாசல்களில் நீல பாஸ்கட்களில் கிடத்தப்பட்டு “எடுத்துக்கோ...எடுத்துக்கோ...” என்று தாராளமாகக் கிடைத்தாலும் அரசுப்பால் ஆவின் வரவில்லை. சட்டைப் பாக்கெட்டுகளில் பொருட்பால் தாராளமாக இருந்தாலும் கைக்கு பாக்கெட் பால் கிடைக்கவில்லை. ந்யூஸ் பேப்பர் சுலபமாகக் கிடைத்தது. இந்த மழைக்காலத்தில் அத்தியாவசியப் பொருள் அந்தஸ்து பெற்ற கேண்டில், பாட்டரி, டார்ச் போன்றவைகளும் சகஜமான நிலைக்கும் விலைக்கும் வந்தது. காய்கறி வண்டி வந்தது. சிகப்பாய் தகதகத்த தக்காளி நூறு ரூபாய். கருவேப்பிலையும் கொத்தமல்லியும் பச்சை பசேலாய் பலத்த காசுக்கு விற்கப்பட்டது. வெயில் அடிக்கும்போது உருளை சேப்பன் என்ற வாயு வகையறாக்களை வாங்கிப்போட்டிருந்த வீட்டில் சாப்பாட்டுத் தட்டு நிறையும்.

“ஏர்போர்ட் இன்னும் ஒரு வாரத்துக்கு தொறக்கமாட்டாளாம்...” என்கிற அம்மாவின் குரலில் ”சேப்பாயி என்னாச்சுடா?”வும் தொக்கி நின்றது. இன்னமும் அலைபேசிகள் தொடர்பு எல்லைக்குள் வர மறுத்தன. “பீப்...பீப்..பீப்..” (இது அலைபேசி பீப்) என்று திக்கித் திணறி மேற்கொண்டு ஏதும் கிடைக்காமல் படுத்துவிடும். ரீடயல் அழுத்தி பட்டன் தேய்ந்தது.

இரண்டு தெருவிற்கு காலாற நடமாடினேன். தலைக்கு மேலே அவ்வப்போது ஹெலிகாப்டர் பறந்தது. வெள்ளநிவாரணக் குழுவோ? எண்பதுகளில் கொட்டாய்களில் பார்க்கும் படத்திற்கு முன்னர் எமரி ஷீட்டை தொண்டையில் தேய்த்து பேசச்சொல்லும் குரலில் “பீஹாரில் வெள்ளம்...” நினைவுக்கு வந்து ஆட்டிப்படைத்தது. ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஷீலா நகர் ஏரியையும் ஐயப்பன் கோயில் கார்த்திகேயபுரம் ஏரியையும் பார்த்துவிட்டு வந்தேன். ஷீலா நகர் ஏரியில் இரண்டு வாத்துகள் ஒய்யாரமாக நீந்திக்கொண்டிருந்தன. வேடிக்கைப் பார்க்கக் கூட்டமிருந்தது. சாலைக்கருகில் இருந்த கரையை உடைத்துவிட்டு தண்ணீரை வடித்துக்கொண்டிருந்தனர். 

”அடையாறு போற வழியிலயிருக்கிற எல்லாப் பாலத்தையும் உடைச்சிக்கிட்டு கடலுக்குப் போயிடிச்சாம்... இனிமே அந்த பாலமெல்லாம் கட்டினாதான்....” என்று அங்கலாய்த்த நபரின் கண்களில் பீதியிருந்தது. பின்னாலேயே ஏரி வேடிக்கைப் பார்க்க வந்த இன்னொருவர் “இதுமாதிரி இன்னும் ஏளு நாளு விடாம பேயுமாமே” என்றார். “யாரு சொன்னா?” ஆஃபீஸ் போகாமல் ஏரியா தாண்ட முடியாமல் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ஆண்மக்கள் அனைவரும் ஏதேதோ பேச்சுக்கொடுத்து பரஸ்பரம் தங்களது அப்டேட்களை வழங்கி நட்புப் பாலம் போட்டுக்கொண்டார்கள். ”யாரு சொன்னா?” கேட்டவரை ”ஏளு நாள் பேயுமாமே” சொன்னவர் வித்தியாசமாகப் பார்த்தார். 

”வாட்சப்புல வந்துது”

“நெட்வொர்க்கே வரலை.. வாட்சப் எப்படி வரும்?” இளக்காரமாகக் கேட்டார்.

“ஓ! வாட்சப் மாதிரி நெட்வொர்க்னு ஒண்ணு இருக்கா?”

கேட்டவரின் முகத்தில் பேஸ்தடித்தது போல் ஆகிவிட்டது. ஏரிக்கரை ரணகளம் ஆகிக்கொண்டிருந்தது. இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் ”யாரு சொன்னா?” ஆள் “என்னன்னு வந்தது?” என்று மீண்டும் மொதல்லேர்ந்து ஆரம்பித்தார். ஆஃபீஸ் கிடையாது.. டீவி கிடையாது. வேற பொழுதுபோக்குக் கிடையாது என்று இவரைப் பிடித்துக்கொண்டார். இந்தக் கச்சேரி முடியுமா?
“நாசா சொல்லியிருக்கானாம்..”

”நாசமாப்போயிடும்னா...” என்று அவர்கள் இருவரும் தோள்மேல் கைபோட்டுக்கொள்ளும் நேரம் வெகுதூரத்தில் இல்லை என்று அடுத்த ஏரி விசிட்டிற்கு பயணித்தேன்.

ஐயப்பன் கோயில் எதிரில் இருக்கும் கார்த்திகேயபுரம் ஏரி. கரையோரத்தில் இருந்த அம்மா உணவகம் மூடி கதவுக்குக் கீழே மண் மூட்டை குவித்திருந்தார்கள். ஏரி நிறைந்திருப்பதைக் காண தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டம். தெப்பம் விட்டால் அமர்க்களமாக இருக்கும். பத்திருபது பேர்கள் தூண்டிலும் கையுமாக பகுதிநேர மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். காலருகே கிடந்த பிளாஸ்டிக் பைகளில் அகப்பட்ட மீன்கள் விடுதலைக்குத் துடித்துக்கொண்டிருந்தன. 

சிகப்புக் கலர் கார் ஒன்று ஏரிக்கரையோரத்தில் மௌனமாக நின்றிருந்தது. சேப்பாயியை சீக்கிரம் மீட்க வேண்டும் என்ற எண்ணம் கிளர்ந்தது. சட்டென்று வீடு திரும்பினேன். ஏர்போர்ட் திக்கை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

ஆட்டோ பிடித்து ஏர்போர்ட் வாசலில் இறங்கிக்கொண்டேன். கண்ணாளனே பாடலில் மனிஷா கொய்ராலாவின் கண்கள் சுழலும் வேகத்தில் சேப்பாயியைத் தேடியது என் விழிகள். தூரத்தில் தூங்கிக்கொண்டிருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தால் வாட்டர் வாஷ் செய்ததுபோல பளபளவென்று நின்றிருந்தது சேப்பாயி. டோக்கனை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் வாசலுக்கு வந்து நீட்டினேன். ரூபாய் ஆயிரத்து நானூறு கேட்டார்கள். சேப்பாயி சேஃப்ட்டிக்கு இது ஒன்றும் பெரும்பணம் இல்லை என்று தோன்றியது.

அடுத்தடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு சேப்பாயிக்கு ரெஸ்ட். பொதுஜன போக்குவரத்தில் அலுவலுக்குப் பயணப்பட விருப்பப்பட்டேன். ஆலந்தூர் மெட்ரோ. கோயம்பேடு. ஷேர் ஆட்டோ. அம்பத்தூர் எஸ்டேட். திரும்பவும் அப்படியே வந்து மௌண்ட்டிலிருந்து ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பல் என்று திட்டமிட்டுக்கொண்டேன். 

ஆலந்தூர் மெட்ரோவில் ஏறியவுடன் பக்கத்தில் ”சார்....” என்ற பூனைக்குரல் கேட்டது. கழுத்தைத் திருப்பினேன். ஐம்பது வயதில் தேசலான ஒருவர் வெளியே ஊற்றிய ராக்ஷச மழையைப் பார்த்துக்கொண்டே “இன்னும் ரெண்டு புயல் இருக்காமே...”. மெட்ரோ ரயில் பாலத்தின் மீதிருந்து கீழே பார்த்தபோது பல பேட்டைகள் தீவுகளாகக் காட்சியளித்தது. அவர் பக்கம் திரும்பி நின்று கொண்டேன். 

“யார் சொன்னா?”

“பிபிஸில வந்துருக்காமே”

“என்னன்னு?”

“இன்னும் ரெண்டு புயல் இருக்குன்னு”

“நீங்க கேட்டீங்களா? பார்த்தீங்களா?”

அஷோக்நகர் ஸ்டேஷனில் கெத்தாக ஏறிய இளைஞர் இந்த பேச்சைக் கேட்டு வினோதமாகப் பார்த்துக்கொண்டே பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்.

“வாட்சப்ல வந்துது...” என்று பாம் போட்டார்.

நேற்று ஏரிக்கரையோரம் இருவருக்கிடையில் நடந்த சரித்திர டயலாக் ஞாபகம் வந்தது. கதவைக் கிழித்துக்கொண்டு இறங்கிவிடலாமா என்று யோசிக்கும் போது அரும்பாக்கம் வந்திருந்தது. இறங்கினால் நேரே மோட்சம்தான் என்று சுதாரித்துக்கொண்டேன். 

“சார்..இனிமே சென்னைக்கு அடைமழை கிடையாது... பயப்படாதீங்க...” என்று சமாதானம் சொல்லிவிட்டு விரோதமாக திரும்பி நின்றுகொண்டேன். இந்த அடர்மழைக் காலத்தில் வடபழனி-அரும்பாக்கம் தீவைக் கடக்க ஹேதுவாக இருந்தது மெட்ரோ இரயில்கள்தான். ”நாற்பது ரூபா கொஞ்சம் அதிகம்” என்று நானூறு அடிக்கு ஆட்டோவிற்கு நாற்பது கொடுக்கும் ஸ்திதியிலிருந்த நவயுக யுவதி கழுத்து சுளுக்கும்படி குலுக்கி அவளது நண்பியிடம் அலுத்துக்கொண்டாள். உடனே இருவரும் களுக்கென்று சிரித்துக்கொண்டார்கள். 

சென்னை முழுக்க எங்கே ஏறி இறங்கினாலும் பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்பட்டன. கோயம்பேட்டின் கடைசி நிறுத்தத்தில் இறங்கினேன். நடந்து போய் ”எஸ்டேட்... எஸ்டேட்...” என்று விற்றுக்கொண்டிருந்த க்ஷேர் ஆட்டோவில் ஏறினேன். வித்தை காட்டி ஓட்டிக்கொண்டிருந்த ட்ரைவர் இரண்டு இரண்டு பள்ளங்கள் கடந்து இரண்டு பேரை ஏற்றிக்கொண்டார். 

“லோக்கல் பஸ்ஸெல்லாம் ஃப்ரீ.... உங்களுக்கு சவாரி இல்லாமப்போய்டுமே!” மெல்லமாய்ப் பேச்சுக்கொடுத்தேன்.

“ஆமா... சார்.. நேத்துதான் திருச்சிக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்தேன்..”

“திருச்சிக்கா... இந்த ஷேர் ஆட்டோலயா?”

“ஆம்மா..... பன்னெண்டு பேரு... எல்லாம் பொம்பளைப் புள்ளீங்க.... கஸ்டமர் பொண்ணு ஒண்ணு கேட்டுச்சு... ஹாஸ்டல்ல இருக்காங்களாம்... சரின்னு போய்ட்டு வந்துட்டேன்...”

“ஒருத்தருக்கு எவ்ளோ?”

“எளுநூறு சார்...”

“அதிகமில்லை?”

“இது மைலேஜே வராது சார்... திரும்ப வரும்போது எம்ப்டியாதானே வந்தேன்... பஸ்ஸுக்காரங்க ஆயிரம் கேட்டாய்ங்களாம்... இப்ப சொல்லுங்க.. போவவர முன்னூத்தம்பது ரூபாதானே... டீசலுக்கே போச்சு சார்..”

ஷேர் ஆட்டோ பின்னால் வந்த பஸ்ஸின் பலனாக உள்ளுக்குள் இருந்த மூன்று பேரைத் தவிர்த்து யாரும் ஏறவில்லை.

“ஐயோ பாவமே! லாபமில்லை.... இல்ல...”

“பரவாயில்லை.. திருச்சி ட்ராப்ல கிடைச்ச காசுல.... மூவாயிரம் ரூபா கொடுத்து சாம்பார் சாதம்.. தயிர் சாதம்... செஞ்சு எடுத்துக்கிட்டு போயி.. வெள்ளத்துல வீடில்லாம ரோட்டுல இருக்கறவங்களுக்கு கொடுத்துட்டு வந்தேன் சார்..”

கேட்டவுடனே மயிர்க்கூச்சலெடுத்தது. இப்போது அவர் டிரைவராகத் தெரியவில்லை. ஆட்டோ ஓட்டும் தெய்வம். 

”எவ்ளோ பேரு சார்... தவியாத் தவிச்சுட்டாங்க சார்.. ஒருத்தரு பாக்கறத்துக்கு பேண்ட் சட்டையில டீசண்டா இருக்காரு சார்.. நாப்பத்தஞ்சு அம்பது வயசிருக்கும்... கையில துட்டு இல்ல போல... வயித்தப் பசிச்சிருக்கு... கேக்கறத்துக்கு வெக்கமா இருக்கு போல... ஒதுங்கி ஒதுங்கி ப்ளாட்ஃபார்ம் மேலே ஏறி நின்னுக்கிட்டிருந்தாரு... ஓடிப்போயி கையில கொடுத்தேன்.. வாங்கினதும் அவருக்கு கண்ணுலேர்ந்து தண்ணியாக் கொட்டுது... அளுவறாரு...எனக்கு ச்சே... என்னடா வாள்க்கைன்னு போய்ட்டுது சார்... ஒருத்தருக்கும் ஒதவாத துட்டு இன்னாத்துக்கு சார் இருக்கு... அதான் திருச்சி ட்ராப்ல கெடச்ச அல்லாத்தையும் செலவு பண்ணிட்டேன்... கவர்மெண்ட்ல ஃப்ரீ பஸ் உட்டுட்டாங்க.. இன்னும் ரெண்டு மூனு நாளைக்கு கலெக்ஷன் இருக்காது... வண்டியை கொண்டு போய் வீட்டாண்ட வுட்டுட்டு யாருக்காவது ஒதவி செய்யணும் சார்..”

அமைதியானார். எஞ்சியிருந்த இருவரும் இறங்கிவிட்டார்கள். பெரும்சுமை ஒன்று மனதில் ஏறியிருந்தது. ஆட்டோவின் ”டமடமடம” அவ்வப்போது அடங்கி அடங்கி எழுந்தது. திருஞானசம்பந்த மூர்த்தி பெருமானின்...

“இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!”னும்....
......
“பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்”னும் அந்த ஆட்டோகாரரைப் பார்த்து மனசு குளிர பாடவேண்டும் என்று உள்ளம் தவித்தது. 

இறங்கியவுடன் ரூபாயை அவர் உள்ளங்கையில் அழுத்தி இறுக்கப் பிடித்து மனசுக்குள் “ராசாயா நீ...” சொல்லி... கைகுலுக்கி கண்ணுக்குக் கண் பார்த்து “நன்றி” என்றேன். எதுவுமே செய்யாததுபோல சிரித்துக்கொண்டே சென்றார். 

(முற்றும்)

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails