Thursday, December 15, 2016

மரமே மந்திரம்

ஐயப்பன் கோயில் எதிரே ”யப்பா..” என்று வாயைப் பிளக்க வைக்கும் பெரிய ஏரி. எதிர்கரையோரங்களில் ஸ்பைக்ஸ் தலையுடன் க்யூ வரிசையில் பனை. மேனி வருடும் இதமான காலைக் காற்று. வெள்ளி அலைகளைக் கிழித்து நீர்ப்பறவைகள் பக்கவாட்டு ”V" போட்டுக்கொண்டு மெதுவாய் நீந்துகின்றன. தூரத்துத் தொடுவானத்தில் கதிரவன் அனைவருக்கும் சுறுசுறுப்பாக மார்னிங் சொல்கிறான்.
அருகம் புல் ஜூஸ்காரர் இன்றாவது நான் வாங்கிக் குடிப்பேனா என்பது போலப் பார்க்கிறார். அவரைத் தாண்டி சாலையில் பின்னாலேயே ஓடுபவர் வாழ்க்கை ரீவைண்ட் ஆகிவிடுமா? என்ற க்ரேஸியான நினைப்பு முட்டும் போது “சார்....” என்ற கட்டையான குரல் என்னை ஏரிக்கரைக்கு மீட்டது.
“நானா?” நெஞ்சில் கை வைத்து தலையை ஆட்டினேன்.
“ஆமா.. சார்.. இங்க வாங்களேன்...”
ஏரிக்கரையிலிருந்து கொஞ்சம் சரிவில் கீழே இறங்கி நின்றவர் கூப்பிட்டார். நெற்றியில் கோடாய் சந்தனம் மணத்தது. சாஸ்தாவை வழிபடும் திருநெல்வேலி வட்டார சாயல். நடுவில் ஒரு பட்டாணி சைஸ் குங்குமம். அடிப்பாகத்தில் கணுக்கல் வரை மடக்கி விட்ட பாண்ட். அரைக்கை வெள்ளை சட்டை. பாக்கெட்டில் பாபா எட்டிப் பார்த்தார். அவரை பார்த்துக்கொண்டே இறங்குகிறேன்.
“இந்தாங்க.. இதை இந்தப் பள்ளத்துல நடுங்களேன்...”
குழி பறித்த குட்டி மண்வெட்டியை நகர்த்திவிட்டு.....
கொஞ்சம் ஈரப்பதத்துடன் பனம்பழத்தைக் கொடுத்தார்.
“பனையா?”
“ஆமாம்...”
நட்டு மூடினேன். ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு நீங்கள் ஐயப்பா நகர் பதினொன்றாவது தெருவரையில் வந்தால் நான் நட்ட பனை வளர்ந்திருக்கும்.
அடுத்த பாதசாரியை அடுத்த பள்ளத்துக்கு அழைக்கப்போனார் அந்தப் பெரியவர். பயனுள்ள காலையாக மாற்றியவரை கூப்பிட்டு “நன்றி சார்...” என்று கும்பிட்டேன். வாய் கொள்ளாப் புன்னகையுடன் “மகிழ்ச்சி...” சொல்லி கைகூப்பினார்.
சற்று தூரத்தில் பாக்கெட்டில் “ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:” என்று ருத்ரம் ஒலிக்க சென்றவரையும் மரம் நடுபவரையும் பார்த்தேன். அவரும் மந்திரம் தான் சொல்கிறார். மரமே மந்திரம். “பார்க்கும் மரங்களெல்லாம்... நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா....” என்ற மந்திரம்.
வாழ்க வையகம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails