Tuesday, June 6, 2017

சுப்பு மீனு: பாலு - இளையராஜா - இசை மோதல்

”இது Rude...atrocious.. எனக்குப் பிடிக்கவேயில்லை...”
“எது? ஏற்கனவே வெளில Scorching Sun.. நீ வேற ஏன் மீனு ரொம்ப சூடாயிருக்கே... sarsaparilla ஜூஸ் தரட்டா? உடம்புக்குக் குளிர்ச்சி... ”
”ரொம்ப சோகமா இருக்கு சுப்பு... ஏற்கனவே எல்லார் கூடயும் சண்டை போட்டாச்சு.... பாரதிராஜா.. வைரமுத்து...பாலச்சந்தர்...வித்வத் கர்வம் இருக்கவேண்டியதுதான்.. சுப்பு.. அதுக்காக...நானொருத்தந்தான் ராஜா.. பாக்கி எல்லாரும் கூஜா அப்டீன்னு தெருவுல இறங்கி பேசமுடியுமா? சுப்பு.... இப்போ நம்ப பப்ளி எஸ்பிபி கூடவும் தகராறு.. ரசிகாளுக்கெல்லாம் இது நஷ்டமில்லையா சுப்பு.. ஆழ்வார்கள்.. நாயன்மார்கள்... ஸங்கீத மும்மூர்த்திகள்.. மீரா.. ஸ்வாமி ஹரிதாஸ்கிரி...இப்படி எல்லோருக்கும் ராயல்டி தரோமா சுப்பு? வாழ்க்கையில எல்லாத்துக்கும் ராயல்டி கேட்போமா சுப்பு?”
”cool.. cool... மீனு.. புஸ்புஸ்ஸுன்னு மூச்சு வுடாதே...பிபி எகிறும்.. cool.. cool... உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ நந்தலாலா... யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு... பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று...பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று..“
”ஐயோ... காதைக் கொடையுதே.. நிறுத்துடா.... அசுணம் இந்த அபஸ்வரத்தைக் கேட்டா உசுரை விட்டுடும்... அது எம்மெஸ்வி...Beautiful composition... எஸ்பிபியின் தனந்தோம்..தனந்தோம்.. தனந்தோம்.. அபாரம்.. பிஜியெம் வேணுமா அதுக்கு?"
"மீனு.. I know your love towards SPB... "
"சுப்பு.. நீயே சொல்லு... வெறும் ம்யூசிக்க எவ்ளோ நாழி கேட்பே... ராகத்துக்கு உருவம் கொடுக்கறது ஜம்மென்று வரிகள் இல்லையா? ராகத்தோடு உருவம் எடுத்த வரிகளுக்கு உயிர் கொடுக்கறது வளமானக் குரல் இல்லையா.. ம்... சொல்லு.. நீதான் இசைப் பித்தனாச்சே... சொல்லு..”
“பொங்காதே... ஆசுவாசப்படுத்திக்கோ..... வெறும் கவிதையாவோ வரிகளாவோ படிக்கிறதுக்கு உயிர் கொடுக்கறது ம்யூசிக்னு ராஜா நிரூபிப்பார் .... கவிதையை.. பாடலை.. வெறுமனே மனப்பாடம் பண்றா மாதிரி படிச்சுக்காட்டிட்டு.. இப்படி இருந்தா யார் கேட்பான்னு சிரிச்சு ஏளனம் பேசுவார்... படைப்புரிமை பெற்றவருக்கு அதனால் யாராவது பணம் பண்ணினால் ’என்கிட்டே கேட்காமே பாடாதே’ன்னு கேட்கும் உரிமையும் இருக்குல்ல...மீனு.. ஒரு ஆங்கிள்ல ராஜா மேலே தப்பு இல்லைன்னு தோணுது... ”
”யே.. படுபாவி...நீ ரெண்டு பக்கமும் நாயம் பேசுற ஆளு.. அப்ப... இது டீம் வொர்க் இல்லையா? ... ஒரு நல்ல பாட்டு உருவாகனும்னா எல்லோரோட உழைப்பும் தேவைதானே...”
“நிச்சயமா... மொதல்ல இவங்களுக்கு கதை சொல்லி situation சொன்ன டைரக்டர்... அப்புறம் பாடலாசிரியரை எழுதச் சொல்லி.....”
“இவரோட மெட்டுக்கு எழுதச்சொல்லி.. அதையும் சொல்லு...”
“சரி.. இவரோட மெட்டுக்கு எழுதச்சொல்லி.... அதுக்கெல்லாம் காசு கொடுத்த ப்ரொட்யூசர்....”
“ஆமா.. காசு போட்டவர் அவர்தானே... பொருளை வாங்கிட்டோம்னா அது நம்மளோட உரிமைதானே... இல்லே அனுபவ பாத்யதை மட்டும்தானா சுப்பு?”
”ஒரு கிரியேஷனைப் போய்.. ஃபர்னீச்சர்.. பீரோ... மாதிரி ஜடப் பொருளா பார்க்க முடியுமான்னு தெரியலை. ம்யூசிக் போடறத்துக்கு முன்னாடி ராஜா எப்படி அக்ரீமெண்ட் போட்டார்னு தெரியலையே மீனு.. காப்புரிமை எனக்குன்னு போட்டிருந்தார்னா? அவர் கேட்கறதுல நியாயம் இருக்குல்ல...”
“இந்த ராட்சஷன் எப்டி ம்யூசிக் போட்ருக்கான்.ன்னு.. சிரிச்சிண்டே மேடையில கட்டிப் பிடிச்சுப்பாரே எஸ்பிபி.. ராஜாவுக்கு ரஜஸ் குணம் ஜாஸ்தியாயிடுத்தோ?”
“ஆனா... சத்வ குணத்தோடதான் எஸ்பிபி அந்த லீகல் நோட்டீசுக்கு பதில் சொல்ல்யிருக்கார்.. ”
”ஆமா .. உனக்கு தமோ குணம்தான்... எப்பப்பார்த்தாலும் சோம்பலாத் திரியறே... அதை விடு... ராஜாவோட லீகல் நோட்டீசுக்கு... என்னோட பாட்டுத்தலைவனோட அடக்கமான பதில் அவரை சிகரத்துக்கு கூட்டிட்டுப் போயிடுச்சுப்பா...”
“எஸ்பிபியோட அந்த ஸ்டேட்மெண்ட்ல உனக்கு எந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு மீனு?”
“If this is design of God, I obey it with reverence... வாவ்... என்னமா பேசறார்ப்பா... படிச்சதுமே அழுதுட்டேம்ப்பா.. ”
“இந்த சமயத்துல ராஜாவுக்கு ஒரு பாட்டு டெடிக்கேட் பண்ணட்டா?”
“என்ன பாட்டு சுப்பு? நீ குசும்பு புடிச்ச ஆளாச்சே”
“ஏய்... நான் ராஜாவின் பரம விசிறி. இருந்தாலும் இந்த பாட்டு..”
“ஏற்கனவே நொந்து போயிருக்கேன். கொலை வெறி ஏத்தாதே.. கழுத்தை நெறிக்கறத்துக்கு முன்னாடி சொல்லுடா...”
“அவர் பாடினதுதான்... பாட்டாலே புத்தி சொன்னார்... எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்நான் விற்றேன் இதுவரையில்....அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா அறியேன் உண்மையிலே... இப்படி நல்லது கெட்டது தெரியாமப் பாட்டுப் படிச்சவரு ... டூர்ல வர்ற காசை எஸ்பிபி பங்கு போட்டுக்கட்டுமே... ஃப்ரெண்ட்ஸ்தானேப்பா... மீனு ஐயாவோட ஐடியா எப்படி? ”
”அடப்போய்யா.. நீ வேற அடிபட்ட ரணத்துல கல் உப்பு வச்சு நறநறன்னு தேய்க்கிற.... என் ரசனை என் உரிமைன்னு போராடவேண்டியதுதான் போல்ருக்கே..”

சுப்பு மீனு: பர்த்ருஹரி - இசை

"சுப்பு.. இன்னிக்கி கார்த்தாலயே ரொம்ப மூடா?"
"அதையேன் இப்ப கேட்கற? என்னோட இருபத்தேழாவது வயசுக்கு அப்புறம் 24x7x365 டேஸும் நான் மூடன் தான் மீனு... உன்னைக் கல்யாணம் பண்ணின்டுருக்கேனே..."
"அடேய் நிர்மூடா.. சிரிக்காதே... நா அந்த மூடான்னு கேட்கலை.. இங்கிலீஷ் moodஆன்னு கேட்டேன்"
"ஏம்மா மீனுக்குட்டி? இங்கிலீஷ்ல ஒரு மூடு.. தமிழ்ல ஒரு மூடு வருமா? மூடுக்கு லாங்குவேஜ் உண்டா? அதுக்கு இனம், மொழி, மதம் கிடையாதே டியர் "
"ச்சை... உன்னோட ப்ளேடு தொழிலை விடமாட்டியா?"
"சொல்லு கண்ணு..."
"பத்தியா.. குழைச்சுண்டு வாலை ஆட்டறே..."
"க்விக்கா சொல்லு.."
"இன்னிக்கி வண்டில போம்போது அழகன்ல 'மழையும் நீயே.. வெயிலும் நீயே.' பாட்டுக்கு எஸ்பிபி ஒரு பக்கம் கிறங்கடிச்சார்னா நீ ஒரு பக்கம் அபஸ்வரமா "ஊ..ஊ..ஊ"ன்னு கூடவே உருகினியே.. அதைக் கேட்டேன்.. ரொமான்ட்டிக் மூடான்னு... "
"ஆமா மீனு.. நீ வேணா பாரேன்.. தேவா... மரகதமணி.. வித்யாசாகர் இந்த மாதிரி ம்யூசிக் டைரக்டர்ஸ்ட்ட எஸ்பிபி 200% பர்சென்ட் டெலிவர் பண்ணுவார்.. ஏன்னா அவங்களோட பங்கு அம்பது பர்சென்ட் இருந்தாக் கூட அவரோட நெளிவு சுளிவுல.. கமகம்..சிரிப்பு.. வேஏஏஏஏஏஏஏதமான்னு .. பாட்டை நூறாக்கிடுவார். நம்பளை மூடாக்கிடுவார்..."
"நீ பெரிய சங்கீதாக்காரன்.. உனக்கு எல்லாமே அத்துபடியாக்கும்... பர்ஸென்ட்லாம் பேசற..."
"ரசிக்கத் தெரிஞ்சா போதும். கலைஞனாயிடுவோம்..."
"அச்சச்சோ.. கபால்னு பாலிடிக்ஸ்ஸுக்குப் போயிட்டியே.."
"அடிப்பாவி... கலையை ரசிக்கும் கலைஞனாயிடுவோம்...னேன்.. "
"யாருடா அந்தக் கலை.. குத்துக்கல்லு மாதிரி நான் இங்கேயிருக்கேன்...."
"நீ குத்துக்கல்லா இருக்கறதுனாலத்தான்... நான் மெத்து மெத்துக்கல்லா.... கலை... மெத்து...கலை... மெத்து.."
"டேய்.. கிராதகா... மொத்து உன்னை... "
"சரி..சரி.. பர்த்ருஹரி இசையைப் பத்தி ஒண்ணு சொல்லியிருக்கார்... யாரு பர்த்ருஹரின்னு கேட்காதே... அவரைப் பத்தி அப்புறம் பேசுவோம்..."
"என்ன சொல்லியிருக்கார் அந்த ஹரி?"
"இசையை ரசிக்கத் தெரியாதவர்கள் வாலும் கொம்பும் முளைக்காத விலங்கினங்கள்"
"ரசிக்கத் தெரிஞ்சும் வாலாட்டற ஒருத்தரை எனக்குத் தெரியும்"
"யார்னு நானே சொல்றேனே... ப்ளீஸ்... ப்ளீஸ்... "
"Confessions from a software guy....ஒத்துக்கோ... ஒத்துக்கோ... "
"உங்கப்பாதான்... அவருக்கு மானஸ சஞ்சரரே ரொம்ப பிடிக்கும்....சதா சர்வகாலமும் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீச்சலடிச்சுக்கிட்டிருந்தாலும் .... புலிவால் மீசையில உருட்டி மெரட்டிடுவாரே... அதான்.."
"ச்சீ.. ஒழிஞ்சு போடா...."

சுப்பு மீனு: இட்லி

”அம்மா தினம்...ஆயா தினம்...ஒண்ணு விட்ட தம்பி தினம்..தங்கை தினம்..சித்தப்பா தினம்...அத்தங்கார் தினம்...அம்மாஞ்சி தினம்...இப்படியெல்லாம் தினம் கொண்டாடலாம்.. இட்லி தினம் கொண்டாடக் கூடாதா சுப்பு?”
“நிச்சயமா.. நீ வேணுமின்னா சட்னி தினம் கூட கொண்டாடு மீனு... யாரு கேட்டா?”
”சட்னி தினமா? அசடு மாதிரி பேசுறியே”
“ஏன்.. நீ பண்ற சட்னியைச் சாப்பிட்டா.. சாப்பிடறவனுக்கே ”தினம்” கொண்டாடனுமோ?”
“மரண மொக்கை. சிரிப்பே வரலையே சுப்பு... வர்ற மார்ச் முப்பது இட்லி தினமாம்.. இருவத்தி ஒம்பாதாம் தேதி சாயங்காலம் அஞ்சுலேர்ந்து ராத்திரி பத்து மணி வரை ராஜா அண்ணாமலை மன்றத்துல 2500 வகை இட்லியாம்....”
“2500 ஈடு இட்லியா.. வகையா? சரியாச் சொல்லு மீனு டியர்...”
“2500 ஈடு இட்லி பண்ணி.. மாயா பஜார் எஸ்.வி. ரங்காராவ் கூட சாப்பிடமுடியாது.. இது தினுசு தினுசா இட்லியாம்.. டிசையன் டிசையனாவும்... சுப்பு”
”சங்கதியைக் கேட்டாலே ஏப்பம் வருது.... இப்போ கண்ணை சொயட்டிக்கிட்டுத் தூக்கம் வருது.. முடிச்சுப்போம்..”

சுப்பு மீனு: வெட்கம்

"ச்சீ.. எனக்கு ஒரே வெட்கமா இருக்கு.. சுப்பு"
"அப்ப கண்ணை இறுக்க்க்க்க மூடிக்கோ மீனும்மா..."
”என்னோட கண்ணையா?.. உன் கண்ணையா சுப்பு?”
”யார் கண்ணாயிருந்தாலும் மீனு..வெட்கம் ஓடிப்போயிடும்... ”
”அப்ப வெட்கம் கண்லதான் இருக்கா?”
”பொதுவா கண்ணுலேர்ந்து மனசுக்கு ஏறுது... இன்னோரு தினுசு இருக்கு.... மானம் போறபோது மனசைப் பிடிங்கித்திங்கற வெட்கம்... அது சோகம்.. அது இப்போ வாணாம்... நாம்ப கண்ணால வாரதைப் பார்ப்போம்...”
”எப்டி? பெரிய பிரசங்கமா பண்ணிடுவியோ?.. க்ரிஸ்ப்பா சொல்லேன்...”
”ரெண்டு மூணு உதாரணம் இருக்கு... புராண காலத்துலேர்ந்து ஆரம்பிப்போம்..உனக்கு சுகாச்சார்யாளை தெரியுமா?”
”கிளி மூக்கோட இருப்பாரே.. எஸ்விசேகரோட வண்ணக்கோலங்கள் டைட்டில்ல பச்சக் கலர்ல வருவாரே... அவரா?”
”ம்... அவரேதான்..”
”அவர் அடிக்கடி வீட்டை விட்டுக் காட்டுக்குள்ளே ஓடிடுவாராம்...
“ஏன்? வீட்ல குடைச்சல் ஜாஸ்தியா?”
“ச்சீ..ச்சீ... உம் புத்தியப் பாரு... அவரு புண்ணியம் பண்ணினவர்.. கல்யாணம் ஆகலை... பிரம்மாச்சாரி... அவருக்கு எல்லாத்தையும் துறந்துட்டு அப்டியே விஸ்ராந்தியா போயிடணும்னு ஆசை....”
“ஓ... சன்னியாசியாவா? நீ எப்ப அப்படிப் போவே சுப்பு... நீயும் ட்ரை பண்ணேன்... லோக சமஸ்தா சுகினோ பவந்து ”
“ஏய்.. கதையைத் திருப்பாதே.... கேளு... அப்படி ஒரு நாளு காட்டுக்குள்ளே ஓடறாரு... பின்னாடியே வியாச பகவானும் ஓடி வரார்... திக் ஃபாரஸ்ட்.. தூரத்துல ஒரு பொய்கை... அதுல கந்தர்வக் கன்னிகளெல்லாம் கரையில ட்ரெஸ்ஸையெல்லாம் விழுத்துட்டு.... நக்னமா குளிச்சிண்டிருக்காங்க...”
”என்னதிது... கதையை நீ பார்த்த காலைக் காட்சி மலையாளப் படத்துக்கெல்லாம் கொண்டு போவே போல்ருக்கே...”
“மீனும்மா.. அபச்சாரம்.. அபச்சாரம்.. இது பாகவத புராணக் கதை.. பொறுமையாக் கேளு... சுகா... சுகா...ன்னு கூப்பாடு போட்டுண்டே வியாசர் இடுப்பு வேஷ்டியைப் பிடிச்சிண்டே துரத்திண்டு ஓடிவரார்... முன்னாடி ஃபாஸ்ட்டா சுகர் ஓடறார்.... இந்த குளிச்சிண்டிருந்த தேவகன்னிகைகளெல்லாம் என்ன பண்ணினா தெரியுமா?”
“க்ளைமாக்ஸா சுப்பு?”
“கேளு... பாதி குளியல்ல அப்படியே பொய்கையிலேர்ந்து எழுந்து வந்து... ஓடி வந்திண்டிருந்த சுகர் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்றாங்க.... எப்படி... தெரியுமா?”
“அதான் எப்டின்னு சொன்னியே.. ஷேம் லெஸ்.... நக்னமா...”
“ஆமாம்... சுகர் ஒரு கணம் நின்னார்... ஆசி வழங்கினார்.. திரும்பவும் ஓட ஆரம்பிச்சுட்டார்.. சுகா சுகான்னு காட்டுல எதிரொலிக்க வியாசர் பின்னால ஓடிவரார்... அவரைப் பார்த்துட்டு இந்த தேவகன்னிகைகளெல்லாம் என்ன பண்ணினா தெரியுமா மீனு?”
“என்னாச்சு? ஓடிப்போயி பொய்கையில குதிச்சுட்டாளா?”
“இல்லையில்லே.... ட்ரெஸ்ஸெயெல்லாம் சுருட்டி எடுத்துண்டு மரத்துக்குப் பின்னாடி போயி ஒளிஞ்சிண்டுட்டாளாம்.. வியாசருக்கு ஒரே கோவம்.. புஸ்ஸு..புஸ்ஸுன்னு மூச்சு விட்டுண்டு அப்டியே நிக்கறார்... சுர்ர்ர்ருன்னு பிபி ஏறிடுத்து அவருக்கு...”
“கிழவர்தானே வியாசர்... “
“அதுதான் அவருக்கு கோவம்... சுகர் நல்ல யௌவனம்... என்னடா கிழவனைப் பார்த்து மறையராங்களே... நம்ம பையனுக்கு நமஸ்காரம் பண்ணினாங்களே.... ”
“சுப்பு.. அநியாயம்ப்பா... இந்த வியாசர் தூரத்துலேர்ந்து எதையெல்லாம் நோட் பண்ணியிருக்கார் பாரேன்....”
“அதுதான் க்ரக்ஸ்ஸே... ட்ரெஸ் போட்டுண்டு மரத்துக்குப் பின்னாடிலேர்ந்து எல்லோரும் வந்து வியாசாச்சாரியாளுக்கும் நமஸ்காரம் பண்ணினா... அப்போ கேட்டார்... ஏம்மா? என்னோட பையன் யுவா ... அவனுக்கு நக்னமா வந்து நமஸ்காரம் பண்ணினேள்... இப்போ நா கிழவன் வந்துருக்கேன்.. எனக்கு முழுசா போர்த்திண்டு வந்துருக்கேளே.. நான் அவ்ளோ மோசமானவனாம்மா?”
“ஹிஹி... வியாசரே வாயைக் கொடுத்து வம்புல மாட்டிக்கறார்...குச்சியைக் கொடுத்து அடிவாங்கிக்கிற கேஸு... ”
“ஆமாம்.. அப்போ அவங்க ... இப்போ நீங்க கேட்டீங்களே இதுதான் உங்களுக்கும் உங்க பையனுக்கும் வித்யாசம்...அப்டீன்னாங்க.. அவருக்குப் புரியலை... என்னம்மா சொல்றீங்கன்னாரு.. ஒரு தேவகன்னி முன்னாடி வந்து நமஸ்தே சொல்லிட்டுச் சொன்னா... நக்னமா இருந்தோமா இல்லையான்னே உங்க பிள்ளை பார்க்கலை.. அவரோட பார்வையில அந்த வித்யாசமில்லை... அதனால எங்களுக்கும் வெட்கமில்லை.. பயமில்லை.. அப்டியே நமஸ்கரிச்சோம்... ஆனா நீரோ.. இந்த நக்ன வித்யாசம் பார்க்கறீர்... உம்ம பார்வையில கல்மிஷம் ஏறிப்போச்சு.. அதனாலதான் அப்டீன்னாளாம்..”
“வியாசருக்குப் புரிஞ்சிருக்கும்... திரும்ப சுகரைத் துரத்திண்டு ஓடினாரா.. இல்லை குடிலுக்கு திரும்பிட்டாரா?”
“அது கிடக்கு... வெட்கம் இன்னொருத்தர் கண்ல அப்டீங்கறத்துக்கு புராண எக்ஸாம்பிள் இது...”
“வேற....”
“அஞ்சாறு வயசு சின்னக் குழந்தையா இருக்கிற வரை.. அம்மா தன் பையன் முன்னாடியே ட்ரெஸ் மாத்திப்பா... ஆனா.. அவனுக்கே இன்னும் கொஞ்சம் வயசாயிடிச்சுன்னா.. டேய் வெளில போடான்னு விரட்டிட்டு.. கதவைச் சார்த்திண்டு ட்ரெஸ் மாத்திப்பா.. இது இன்னொரு எக்ஸாம்பிள்.. அந்தப் பயலோட பார்வையில வித்யாசம் வந்துடும்.. அம்மாவே அவனை விரட்டிப்புட்டுதான் புடவையை மாத்திப்பா... “
“இன்னுமிருக்கா?”
“இது கப்பு மேட்டரு.. காலங்கார்த்தால ட்ரெயின் செண்ட்ரல்ல போகறத்துக்கு முன்னாடி பேஸின் பிரிட்ஜ்கிட்டே நிக்க முடியாம நாறுமில்ல... அது ஏன் தெரியுமா?”
“அது தெரியாதா... ஏனிப்படி கொல பண்ற...”
“ட்ராக் ஓரமா வழிச்சுண்டு போறவங்கெல்லாம் பிருஷ்ட பாகத்தை ட்ரெயினைப் பார்க்க காமிச்சுக்கிட்டு உட்கார்ந்துடுவாங்க.. ஏன்னா... அவங்களை முகத்தோட முகம்.. கண்ணோடு கண் பார்த்தாக்கதான் வெட்கம் வரும்... ஆய் வராம போயிடும்..அதனாலதான்...”
“உன்னை GUNனை எடுத்தே சுடணும்டா...”
“தாயே... மன்னிச்சுரு... நமஸ்காரம் பண்ணிடறேன்....”
“சுப்பு.... இந்த மாதிரி வெட்கம்.. நாணம்.. இதுக்கெல்லாம் இப்படி கதை சொல்லி அசத்துறே... எனக்கு வெட்கமிருக்கா இல்லையா? ஹானஸ்டா சொல்லு... ”
“சுஜாதாவோட வசந்த் பாணில பதில் சொல்லணும்னா... “
“எதாவது எடக்குமடக்கா அசிங்கமா சொன்னியோ... நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?”
“என்ன பண்ணுவ?”
“உன்னை விட்டுட்டு ஜெ. சமாதில போய் தியானம் பண்ண ஆரம்பிச்சுடுவேன்...”
“அடிப்பாவி.. வேணாம்.. வேணாம்.. சமாதி தியானம்னு நாடு கெட்டுப்போச்சு... சொல்லிடறேன்.. வெளிச்சமா இருக்கிற பகல்ல வெட்கத்துல கன்னம் சிவக்கவும்.. இராத்திரி நைட் லாம்ப்பைக் கூட அணைச்ச இருட்டுல ரெண்டு பேருக்குமே கண்ணு தெரியாதா.. அதனால வெட்கம் கெட்டுப் போயி......”
“டேய் சுப்பு.. நீ ரொம்ப மோசம்டா... புராணக் கதை சொல்றேன்னு ஆரம்பிச்சு...ச்சே... ச்சே....”
பின் குறிப்பு: மையக் கரு சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதரின் பாகவத சப்தாகம்.

நம்பூதிரி : கோட்டோவிய மன்னன்

படத்தைக் காட்டி இதெது இன்னதென்று ஒரு மணி அதைப் பற்றிய குறு உபன்யாசம் சொல்லி தெளிய வைப்பது ஒரு வகை சித்திரங்கள். அவ்வகைச் சித்திரங்கள் ஆர்ட்ஜீவிகளுக்குப் பார்த்ததும் புரியும். என்னைப் போன்ற அஞ்ஞானிகள் மிரண்டுபோய்.... பேஸ்தடித்த முகத்துடன் காத தூரம் ஓடிக் குட்டிச் சுவரருகே குனிந்து ஒளிந்துகொள்வார்கள். ஆனால் வரைந்த படமே தான் .
யாரென்றும் எந்த இடத்திலென்றும் அறிவித்துக்கொள்வது ஆராதனைக்குரிய ஸ்வயம்பு இனம். ஓவியரின் வித்வத். “அட... இதானே” என்று கண்கொட்டாமல் இரசிக்க ஆரம்பித்துவிடுவோம்
ரேகச்சித்திரங்கள் என்று மலையாள கோட்டோவியங்கள் வகையறாவை வரைவதில் பிரசித்தி பெற்றவர் நம்பூதிரி. சமீபத்திய என்னுடைய கோவை விஜயத்தின் போது சென்ற பத்திரிகையாள ஜாம்பவான் ஒருவர் வீட்டுச் சுவரில் மஹாபாரதம் பல ஃப்ரேமுக்குள் தொங்கியது. என்னுடைய ஆர்ட்டிஸ்ட் ஸ்நேகிதங்கள் சுரேஷ் சீனு, ஸ்ரீதர் ட்ராஃப்கோ, கேரிகேச்சர் சுகுமார்ஜி போன்றவர்கள் இந்த ஓவியத்தின் அனாடமியை விரிவாக அலசலாம்.
ஸ்வர்க்காரோஹண பர்வத்தில் தருமனைத் தொடர்ந்த நாய். மார்பு விரிந்து பெருத்த சரீரமுடைய பீமன். கடைசியாய்ப் பின் தொடரும் நகுல சகதேவர்கள். நடுவில் வரும் திரௌபதி. நெளி நெளியானக் கோடுகளில் காட்சியை கண் முன்னே கொண்டு வரும் கலை.
பல நூற்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் ஒரு சித்திரம்.

நட்பே பரிசு

பெரியவளுக்கு நாளைக்கு மேத்ஸ் எக்ஸாம். சின்னவ கையைப் பிடிச்சு இழுத்துக் கடைக்குக் கூப்பிடறா...
"சீக்கிரம் வாடீ”
“இந்த சம்மை போட்டுட்டு வரேன்..”
“நாளைக்கு அவளுக்கு மேத்ஸ்... வெயிட் பண்ணு வரட்டும்.” - அதட்டும் குரலில் நானு.
“அவளோட ஃப்ரெண்டுக்கு கிஃப்ட் வாங்கணும்னா.. இன்னிக்கி சன்டே.... கடையெல்லாம் சீக்கிரம் மூடிடுவான்...”
அதுக்கு பெரியவ... “ப்ளீஸ் இருடீ...”
“வேணா ஒண்ணு பண்ணு... Happy Birthday ன்னு சும்மா சொல்லிட்டு... என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பே உனக்கு ஒரு கிஃப்ட்தான்... தனியா கிஃப்ட் வேணுமான்னு அவள்ட்டே நாளைக்குக் கேட்டுடு..”
பொடிசு என்னமா பேசுது!! ROFL!! :-)

கேரக்டர்

'புள்ளி' சுப்புடு
’அவுட்’ அண்ணாஜி
’சர்வர்’ சந்தானம்
’அட்டெண்டர்’ ஆறுமுகம்
’அல்டாப்’ ஆறுமுகம்
’மூணு சீட்டு’ முத்தண்ணா
’அப்பர் பர்த்’ குப்பண்ணா
’தொழிலாளி’ துளசிங்கம்
’அக்கப்போர்’ சொக்கப்பன்
’அராய்ச்சி’ ஆர்.வி. ராமன்
’துக்ளக்’ துரைசாமி
’வீட்டுக்கார’ வெங்கடாசலம்
’ஏமாளி’ ஏகாம்பரம்
’ஆப்பக் கடை’ அம்மாக்கண்ணு
’ஜம்பம்’ சாரதாம்பாள்
’பப்ளிசிடி’ பங்காருசாமி
’சிக்கனம்’ சின்னசாமி
’பல்டி’ பலராமன்
’டவாலி’ ரங்கசாமி
ஜானகி அம்மாள் ஹஸ்பெண்ட்
’அரசியல்’ அண்ணாசாமி
’நர்ஸ்’ நாகமணி
’வைத்தியர்’ வேதாசலம்
’அமெச்சூர்’ ஆராவமுதன்
’எதிர்வாதம்’ ஏகாம்பரம்
’அநுமார்’ சாமியார்
’நான்தான்’ நாகசாமி
’கமிஷன்’ குப்பண்ணா
இப்படி பட்டப்பெயர் கொண்ட இருபத்தெட்டு ஆசாமிகளை ஒரு அரை மணி செலவு செய்தால் பார்த்துவிடலாம். சாவியின் புத்தகம் “கேரக்டர்”. சந்தியா பதிப்பகம் வெளியீடு. இந்த புத்தகக் காட்சியில் வாங்கினேன். மேற்படி ஆசாமிகளை எவரும் ஒருமுறையாவது தனது அனுபவத்தில் சந்தித்திருப்பார்கள்.

இவர்களைப் பற்றிய சாவியின் வர்ணனை அபாரமானது. ஏதோ நாமே அவர்கள் எதிராக நின்று பேசுவது/கேட்பது போன்ற உரையாடல். ”ஆப்பக் கடை” அம்மாக்கண்ணுவும் ”தொழிலாளி” தொள்சிங்கமும் “நாஷ்டா” துண்ணுட்டு பேசும் அதிகாரப்பூர்வ சென்னை பாஷையும்..... “ஜம்பம்” சாரதாம்பாள் சப்ஜட்ஜ் மனைவி ஜானகி அம்மாளின் “நேக்கு.. நோக்கு...” அக்ரஹார பேச்சும்... ”அட...அட..அட..” போடவைக்கின்றன.
மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இவர் வார்த்தைகளால் வரைந்த ஸ்கெட்சில் அந்தந்தப் பாத்திரங்கள் உயிர்பெற்று கண் முன் தோன்றுகின்றன. திரு. நடனம் அவர்களின் ஓவியம் ஒவ்வொரு கேரக்டருக்கும் அசல் உருவம் கொடுக்கிறது. இந்த இருபத்தெட்டு கேரக்டர்களை எழுதுமளவிற்கு சங்கதி சாவியிடம் இருந்ததுதான் அவரது பலம். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். அவர்களது இயங்குதளம் வேறு. அந்தந்த தொழில் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இதை எழுதுவது கடினம்.
ஜானகி அம்மாள் ஹஸ்பெண்ட் என்று அழைக்கப்படும் சப்ஜட்ஜ் சாம்பசிவத்தின் பொண்டாட்டி தாச பாவனைகளில்.... ஒரு திருமணத்திற்கு போய்விட்டு பொண்டாட்டி எப்போது கிளம்புவாள் என்று அவள் திசையையேப் பார்த்துக்கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறார். யோவ்....... க்ளாஸிக்.
மூணு சீட்டு முத்தண்ணா... தலையணைக்கு அடியில் இருக்கும் சீட்டுக்கடை கண்ணில் ஒத்திக்கொண்டுதான் தினமும் படுக்கையை விட்டு எழுந்திருப்பார் என்ற ரகளையான ஆரம்பம்.
சிக்கனம் சின்னசாமி... எதையும் சிக்கனமாகச் செய்யும் சின்னசாமி தன்னிடமிருந்த ஜெர்மன் டைம்பீஸ் ஒன்றை தானே ரிப்பேர் செய்து ஓடவிட்ட பிரதாபத்தை எழுதிவிட்டு... கடைசி வரியில் பெரிய முள் அப்பிரதட்சணமாக சுற்றிக்கொண்டிருந்தது என்று முடித்த சாவி.. ஆஹா..
வாஷிங்டனில் திருமணம் வாசகர்கள் கொண்டாடிய படைப்பு என்றால் இதுவும் அதற்குச் சற்றும் சளைத்ததல்ல.
படித்து முடித்து புத்தகத்தை மூடியபின்பு ஒவ்வொருவரும் இப்போது என்ன ஆனார்கள் என்று சிந்தனை எழுவது சாவி சார் எழுத்தின் வெற்றி! (y)

பீபத்ஸ ரசம்

இம்முறை வலமும் விஜயபாரதமும் தாமதமாக இன்றுதான் கைக்குக் கிடைத்தது. தபாலாபீஸ் கோளாறு. இதழுக்கு இதழ் வலத்துக்காரர்கள் ஜமாய்க்கிறார்கள். அரைமணி நேரத்தில் ஆறு ஐட்டங்கள் படித்தேன். சிறுகுறிப்போடு கீழே பட்டியலிட்டு விடுகிறேன்.
1. கலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் - வல்லபா ஸ்ரீநிவாசன்:
ஒன்பது பக்கங்களில் சில்ப சாஸ்திரத்தின் சிலவற்றைத் தொட்டு கலிங்கத்திலிருந்து மேற்கோள்காட்டியிருக்கிறார். கல்லிலே தான் கண்ட கலைவண்ணங்களில் சாலபஞ்சிகா என்ற கொடியழகிகளை பற்றியும் கீர்த்திமுகா என்ற சிங்கமுகச் சிற்பங்களைப் பற்றிய வர்ணனைகள் அந்தச் சிற்பங்களை நேரில் கண்டு களித்த உணர்வு ஊட்டுகிறது. கட்டுரைக்கான படங்கள் திருவாளர். ஸ்ரீநிவாசன் போல் தெரிகிறது. படங்கள் என்று கோலன் வைத்து வீகேயெஸ் பெயர் போட்டிருக்கலாமோ?

2. டி.கே. மூர்த்தி - ஈரோடு நாகராஜ்:
கட்டுரை படிக்கும்போதே ம்ருதங்க ஓசை காதில் கேட்கிறது. மூர்த்தி சாரின் நகைச்சுவையாக மழையில் ஆட்டோ வண்டிச்சத்தம் கூட கேட்க, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு “மழை விட்டவுடன்ன எடுப்பா” சொன்ன மூர்த்தி சாரின் ஹாஸ்யம் அவரது ம்ருதங்க வாத்யம் போலவே “தரிகிட கிடதக தாத் தொம்” என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்து காதில் விர்ர்ர்ர்ர்ரென்று கேட்பது போல்.

3. கார்ட்டூன் பக்கத்தில் ஆர்.ஜி என்று இனிஷியல் ஆக்கிக்கொண்ட பெயருடன் கோபிநாத் ரவியின் படங்கள். எம்.ஜி.ஆர் குல்லாயுடன் ஜெவின் திலகத்துடன் தீபா பேரவை படம். முன்னால் ஒரு சிறுவனும் சிறுமியும் அமர்ந்திருக்கிறார்கள். நல்ல கருத்துப் படம்! :-)
4. கொனார்க் மகாலஷ்மி - ராமசந்திரன் உஷா. 
சூரியக் கோவில் சிற்பங்களில் மகாலஷ்மியை அடையாளம் கண்டுபிடித்த கதை. ரயிலில் தொடங்கும் கதை அதே ஹௌரா எக்ஸ்பிரஸ் வேகத்துடன் செல்கிறது. “வெளி மண்டபச் சிற்பங்கள் ரெண்டு கால்.. ரெண்டு கை.. மனித உருவங்கள்.. இங்க பாருங்க நாலு கை.. சுவாமி சிலைன்னா இப்படிதான் இருக்கும்...”. நானும் கொனார்க் போயிருக்கேன். வெளிமண்டபமும் உள்ளேயும் நிதானமாக பார்த்திருக்கிறேன். ஒரே சிரிப்பு.

5. புலாலும் ஆரியமும் - பத்மன்: 
தரமான தரவுகளுடன் அற்புதமான கட்டுரை. ஆர்ய என்பது இனம் அல்ல. அது சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்று மகாகவி பாரதியின் “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்”. என்ற வரிகளை மேற்கோள் காட்டியது கட்டுரையின் மையக்கருத்தை தூக்கி நிறுத்தியது. எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி. எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி என்று முடிக்கிறார்.

6. ஆதிகவியின் முதல் கவிதை - பெங்களூரு ஸ்ரீகாந்த்
ஆதியோகி பரவலாகப் போணியாகிக்கொண்டிருக்கும் வேளையில் ஆதிகவியின் இராமாயண காவியத்தின் பூர்வாங்கமான ”மா நிஷாத” பற்றி ஒரு வ்யாசம். அனுஷ்டுப் சந்தஸாக இருந்த இலக்கணம் அனுஷ்டுப் ஸ்லோகமாக மாறியது வால்மீகியிடம் என்ற செய்தியும் இடம்பெறும் அபாரமான பத்தி. பல உரைகளில் படித்ததை அதியற்புதமாகத் தொகுத்து மா நிஷாதவின் பொருள் வடித்திருக்கிறார். பீபத்ஸ ரசம் என்றால் இணையை இழந்து கதறும் பறவையின் ஓலமாம்.

வலம் நாளுக்கு நாள் மென்மேலும் மெருகேறி நலமாக வருகிறது. வாழ்த்துகள்!

கோவைக்கு ஒரு திடீர்ப் பயணம்

ஒரு அவசர அலுவலக வேலையாக இன்று கோவை பயணம். சென்னையில் காலை ஆறரை இண்டிகோ...கோவையில் மாலை ஐந்தரை இண்டிகோ. போக ஒரு மணி வர ஒரு மணி காற்றாய் ஆகாசத்தில் பறந்தது போக மத்தபடி கேகே அண்ணா தரிசனம் ஒரு மணி நேரம்.. பாக்கியெல்லாம் வேலை.. வேலை.. . வேலை.. வேலை...வேலை...
அதிகாலையில் கொத்தவால்சாவடி போல சென்னை MAAவில் காலை மிதித்து... முதுகில் சாய்ந்து... ஒரே தள்ளுமுள்ளு கூட்டம். மேரு மலையைக் கடைந்த பின்னர் களைப்பாக வந்து சுருட்டிப் படுத்துக்கொண்ட வாசுகி பாம்பு போல ஐந்து மடிப்பில் அசையாமல் இருந்தது பயணியர் க்யூ. Departure Gate செக்யூரிட்டி நாலு தரம் ஐடி ப்ரூஃபையும் என்னையும் சந்தேகக் கண்ணோடு (உருட்டி...உருட்டி) பார்த்துவிட்டு ”பயபுள்ள முழியே சரியில்லையே ...” என்று நினைத்துக்கொண்டே “ஹாங்...” என்று சைகையால் அசிரத்தையாக உள்ளே விரட்டினார்.
ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கும் கொடூர அரக்கனின் இதயம் போல அடுத்து இன்னும் கொஞ்சம் ஷ்ட்ரிக்ட் செக்யூரிட்டி. ”சீக்கிரம் போகனும்ப்பா... வண்டியை எடுத்துடுவான்....” என்று அங்க்ரேஜியில் கூட கெஞ்சமுடியாமல் அவர் ஹிந்தி மே போல்த்தா ஹை. ஒரு அடாசு டிடெக்டரை வைத்துக்கொண்டு... சினிமாக்களில் வரும் க்ளிஷே காட்சிகளில் காதலியை மோந்துகொண்டே மயிலிறகால் வருடும் காதலன் போல... ரசனையாக முன்னும்பின்னும் தேய்த்துக்கொண்டிருந்தார். இரண்டு கையையும் இயேசு நாதரை சிலுவையில் அறைந்தது போல விரித்து அவர் முன்னும் பின்னும் சொரிந்து கொடுத்து சுகம் ஏற்றவேண்டும் என்ற ஆசையில் எனக்கு முன்னால் விஸ்ராந்தியாக நின்றிருந்தவரை எப்போது விடுவார் என்று தெரியாமல் தவித்தேன்.
“Last call for Jambunathan" என்று ஸ்பீக்கரில் ஏலம் விடத்தொடங்க ... “ஜம்புநாதன் ஈஸியா ஜம்ப் பண்ணி போயிடுவாரு... ஆனா நம்மளைக் கூப்பிடலையே... ஆறரைக்கு தானே வண்டி எடுப்பாங்க... மணி ஆறு தானே ஆவுது... “ என்று கால்கள் பரபரக்க... எனக்கு முன்னால் இருந்த மாமாவின் ப்ரீஃப்கேஸை முட்டியால் தட்டிவிட்டேன். அறியாப் பிழை.
அக்கணமே முகம் சுருங்கி இன்ஸ்டண்ட் துர்வாசராகி சாபம் கொடுக்கும் பாவனையில் சரேலென்று திரும்பினார். “இடிச்சா முட்டிக்கு வலிக்கும். ப்ரீஃப்கேஸுக்கு வலிக்குமா?” என்று அசட்டுக்கேள்வி கேட்க நினைத்து... அவர் பார்வையைத் தவிர்க்கக் குனிந்து முட்டியைச் சூடு பறக்கத் தேய்த்துக்கொண்டேன். “இண்டிகோ ஏறும் பிரஹஸ்பதிகள் க்யூவில் இருந்தால் சீக்கிரம் ஏழாம் வாசலுக்கு ஓடிவரவும்.. இல்லையேல் உங்களை அம்போன்னு விட்டுட்டு போய்டுவோம்....” என்று ஸ்பீக்கர் கறாராய் அலற, தட்டிவிட்ட மாமவைத் தாண்டி ஓடினேன்.
கொல்லைக் கதவைப் பூட்டினோமா...பீரோ சாவியை திருடன் எடுக்க வசதியா அது மேலேயே வச்சோமோ... ஹால் ட்யூப்லைட்டை ஆஃப் பண்ணினோமா.... பாத்ரூம் கொழாயை ஸ்பிண்டில் லூஸ் ஆகிறவரை அழுத்தி மூடினோமா... என்றெல்லாம் நொடிக்கு நூறு சந்தேகம் வந்து வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து நாலு மணிக்கு வெளியூர் போக வெளியே வந்து... ரேழிக்கும் வாசலுக்கும் கபடி ஆடி... ஐந்து மணிக்கு கிளம்பும் மு.முத்தண்ணாக்கள் போல.... கொஞ்சம் மூச்சு விட்டுப்போம்... இரைக்கிறது...
சேஃப்டி பத்தி சொல்லு... மொபைல் ஆஃப் பண்ணச் சொல்லு.. கேபின் க்ரூ.. பைலட்ஸ் யாருன்னு சொல்லு... தரைக்கு மேலே பறந்தாலும் தண்ணில உழுந்தா எப்படி சேஃப்டி ஜாக்கெட்டைக் கட்டிகணும்னு சொல்லு... என்றெல்லாம் அந்த கன்னம் ரூஜ்ஜால் சிவந்த அழகான யுவதிகளை... ( நாக்கைத் தொங்கப் போட வேண்டாம்.இதற்கு மேல் அந்த ஸ்கர்ட் போட்டப் பெண்களை நான் வர்ணிப்பதாகயில்லை.. ) பாடாய் படுத்தி ஆறேமுக்காலுக்கு ரன்வேக்கு உருட்டி வந்து.... விர்ர்ர்ர்ர்ரென்று பறக்க ஆரம்பித்தார்....
போற வழியில்.... மேகப் பஞ்சுகளுக்கு மத்தியில்.... தேவலோகத்தில் இருப்பது போன்ற பிரமையில்... எனக்குத் தாயினும் சாலப் பரிந்து சாண்ட்விட்ச் கொடுத்து... அது தொண்டையை அடைக்காமல் இதமாய் இருக்க “யூ வாண்ட் ஜூஸ்?” என்று ஐஸாய்க் கேட்டு மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜூஸும் கையில் கொடுத்து அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட அந்த ஹோஸ்டஸ் வாலிபிக்கு சீக்கிரமே என்னைப் போல நல்ல கணவன் ப்ராப்திரஸ்து!
கோயம்புத்தூரில் இறங்கியபோது ஏர்போர்ட் சுத்தமாக அலம்பிவிடப்பட்டிருந்தது. என்னுடைய வேலை நிமித்த சந்திப்பிற்கு ஒரு மணிநேரம் அவகாசம் இருந்தது. “கேகேண்ணா... இறங்கிட்டேன்... வந்துட்டேன்..” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டு அவரிடம் நேரில் ஞானம் பெறுவதற்கு சென்றேன். அவர் காஃபி கொடுத்தார். பின்னர் கஞ்சி கொடுத்தார்... பின்னர் விடை கொடுத்தார்... அவர் கொடுத்ததிலெல்லாம் அன்பையும் குழைத்துக் குழைத்துக் கொடுத்தார்.
கோவை ரிட்டர்ன் அடுத்த பதிவில்.....

துணி காயப் போடுவது எப்படி? - அட்வான்ஸ்டு லேர்னர் சீரிஸ்

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ”கொத்தவரங்காய் நறுக்குவது எப்படி?” என்று ஒரு வாழ்க்கைப் பாடப் பதிவிட்டிருந்தேன். அசட்டுத்தனமாகக் கிரஸ்தாஸ்ரமத்தில் மாட்டிக்கொண்ட பிரஹஸ்பதிகளுக்கான காவிய போஸ்ட் அது. ”கூடமாட ஒத்தாசையா இருப்பன்..” என்று அம்மாக்களின் வார்த்தைக்கேற்ப கீரை ஆய்தலோ... காய் நறுக்குதலோ.. உருளைக் கிழங்கு தோலுரிப்பதோ... சுண்டைக்காய் நசுக்குவதோ.. இப்படி ஏதாவது ஒரு கடினமான காரியத்தைப் புருஷார்த்தமாக செய்து தலைவியிடம் பாராட்டுப்பெற்று காலர் தூக்கலாம். காய் நறுக்குவதோ... பால் காய்ச்சுவதோ...இன்ன பிற மேலே குறிப்பிடப்பட்டவை கேவலம் பால பாடங்கள். தேர்ச்சி சுலபம். அர்ச்சனை குறைச்சல்.

அட்வான்ஸுடு லேர்னர்ஸ் சீரிஸில் அடுத்ததாக இன்றைய வகுப்பில் நாம் பார்க்க இருப்பது “துணி காயப்போடுதல்...”. மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இப்பாடம் அனுபவம் வாய்ந்தவர்களால் கூட சொதப்பக்கூடியது. கொடிக்கம்பு பிடித்து மடியாக உள்கொடியில் உணர்த்தும் லெவலுக்கு உயர்ந்து விடுதல் சூப்பர் சீனியர் பிரிவு. அதுபற்றி இப்போது தாவங்கட்டையில் முட்டுக் கொடுக்கும் கவலையில்லாமல் மேலே படிக்கவும்.
தோய்க்கும் இயந்திரம் வந்த பிறகு ஒரு நாளைக்கு இரண்டு ஈடாவது துணிகள் போட்டு எடுக்க வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது. வீட்டில் நமது வாயை அடைத்துவிட்டார்கள் என்பதை அடையாளமாக உணர்த்தும் விதமாக வாஷிங் மெஷினின் வாயை பந்து போல் துணியை அடைத்து மெஷினை ஸ்விட்ச் ஆன் செய்யும் போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டு “இப்டி போட்டா துணில அழுக்கு போகுமா... முக்கால் போட்டுட்டு.. பாக்கிய எடுத்து ரெண்டாம் தடவை போடணும்..” என்று அனுபூதி கிடைக்கப்பெற்றதிலிருந்து வா.மெஷின் போட கற்றுக்கொண்டேன். அப்படி சொல்வதை விட... வா.மெஷினில் துணி போடக் கற்றுக்கொண்டேன்.
“ஒணத்திடுங்கோ...” என்று ஒரு நாள் தாக்கீது வந்த பின்னர், பிளாஸ்டிக் பக்கெட் கொள்ளாமல் அந்த துணிகளை எடுத்துக்கொண்டு மொ.மாடிக்கு செல்லும் போது நடந்த ட்ரெயினிங் செஷன் பாதிக்கப்பட்டோரின் பயன்பாடுக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் போது
“எல்லாத் துணியையும் நன்னா உதறிட்டுப் போடுங்கோ...”
“ம்...”
மூணாம் படி.
“ஷர்ட்டெல்லாம் உல்டா பண்ணிப் போடுங்கோ... இல்லேன்னா கலர் ஃபேடாயிடும்...”
”ம்...”
ஈரத்துணியோடு இருக்கும் பக்கெட்டின் எடை ஒரு பக்கம் அழுத்த இடை கெஞ்ச ஏறும் போது வரும் அடுத்த அறிவுரை...
“எட்டு மொழத்தை நாலாப் போடாம... ரெண்டாப் போடணும்... அப்போதான் சீக்கிரம் காயும்...”
“சரி..”
ஏழாம் படி.
“கர்சீஃப்... ஜட்டியெல்லாம்... பறந்துடப்போறது.. க்ளிப்பைக் கண்டிப்பா போடுங்கோ....”
“ம்.. போட்டுடறேன்...”
“ரெண்டு துணியை பக்கத்துல போட்டு.. அதோட ஓரத்துக்கு க்ளிப் போடக்கூடாது. அதுல மிச்சம் பண்ணி என்ன பண்ணப் போறேள்?”
“சரியாப் போடறேம்மா...” அந்தப் போடறேம்மாவில் சலிப்போடு அழுத்தம் தெரியாமல்... வி.எஸ்.ராகவன் போல குழைவாக “போடறேம்மா..” என்று சொன்னால் உங்களுக்கு நன்நடத்தை சான்றிதழ் வழங்கப்படும்.
பத்தாம் படி.
“என்ன எல்லாத்துக்கும் ம்... சரின்னு... “
இதென்னடா வம்பாப் போச்சுது... வேற எதுனா கேட்போம்...
“மரக் கிளிப்பா... ப்ளாஸ்டிக் கிளிப்பா... எதுப்பா போடணும்?” இந்தக் கேள்வி கேட்கும் போது ஒரு வெகுளித்தனம் ஒட்டியிருக்கவேண்டும். கிண்டல் தொணியில் கேட்டால் உங்களுக்கு விடிமோட்சமே கிடையாது.
“இதென்ன அச்சுப்பிச்சு கேள்வி? கிளிப்பு எதா இருந்தா என்ன? பறக்கக்கூடாது அவ்ளோதானே...” படாரென்று பதில் கிட்டும். இப்போது முகத்தோடு முகம் பார்த்துச் சிரித்துக்கொள்ளவும்.
மொ.மாடிக் கதவு திறக்கிறேன். க்ரீச்...க்ரீச்..க்ரீச்...
“பேண்டெல்லாம் நல்லா விரிச்சு போடணும்.. அதுவும் உல்ட்டா பண்ணிடணும்....”
”சரிம்மா...” முகம் தெரியாமல் குரலை மட்டும் விட்டாயிற்று.
பக்கெட்டிலிருந்து துணிகளை எடுக்கும் போது அது ஒன்றின் கீழ் ஒன்றாக சிக்கிக்கொண்டு வெளியே வர அடம்பிடிக்கிறது. தலைக்கு மேலே வெயில் சுட்டெரிப்பதால் கடுப்பாகி....சரி.. மெண்டலாகி... கைக்கு வந்தபடி உருவி.... அப்படியும் இப்படியுமாக கொடியில் போட்டு... அப்பாடா என்று க்ளிப் போட எத்தனிக்கும் போது... பரீட்சை ஹாலுக்குள் பிரவேசிக்கும் பறக்கும் படை போல.. இல்லத்தரசி எண்ட்ரீ கொடுத்த இன்ஸ்பெக்ஷனில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழித்தது ஒரு சரித்திரம்.
மேலே காட்டப்பட்ட சம்பாஷணை வாயிலாக ஆணாக அவதரித்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். இதைப் படித்த பின்னரும் “ச்சும்மா.. காயப்போடணும்.. அவ்ளோதானே.. இதுக்கென்ன இவ்ளோ அலப்பறை...” என்றெல்லாம் ஜம்பமாகப் பேசித் திரிவது துர்லபம். பிரம்மச்சாரியாக இருப்பவர்கள் இப்போதே ப்ராக்டீஸ் எடுத்துக்கொண்டால் கல்யாணத்திற்குப் பிறகு “எல்லா நாளும் இனிய நாளே...”.

சாரட்டு வண்டில சீரொட்டொளியில

ஆஃபீஸில் இப்படி அப்படி நகரவிடாமல் காலையிலிருந்து ராத்திரிவரை கை ஒழியாமல் வேலை. முகப்பு விளைக்கைத் தூண்டி வண்டியை நகர்த்தும் போது இடது கையால் ஆடியோவைத் தட்டிவிட்டேன். ”சாரட்டு வண்டில சீரொட்டொளியில” என்று ரஹைனாவின் அடிக்குரல் கேட்டது. காற்று வெளியிடை. ரஹ்மான் விருந்து. ஃப்லிம் மேக்கர் மணிரத்னம் படம். திப்புவும் பாடியிருக்கார்.
குதிரையின் குளம்பொலியின் டக்..டக்கை காதுக்கு இதமாக ஸ்பாஞ்ச் வைத்து அமுக்கியது போல ஒரு மென்மையான ரிதமிக் beatல் துவங்கிய பாடல். இனிமையாக இருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் “A"த்தனமான வரிகள் தூவியிருந்தது. ”மன்மதன் நாட்டுக்கு மந்திரியே..” என்று “அந்தி மழை பொழிகிறது”வில் எழுதிய வைரமுத்து இப்பாடலில் “அவன் மன்மதன் காட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான்...” என்று எழுதியிருக்கிறார். மன்மதனின் நாடு எது? காடு எது?
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பிளையை பொண்ணு கிண்டிக் கிழங்கெடுப்பா.... என்ற வரியில் கிண்டிக் கிழங்கெடுப்பது எப்படி என்று ஆராய்ச்சியில் அலையவிட்டார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு வரி....
”இவ குரங்கு கழுத்தில் குட்டியைப் போல தோளில் ஒட்டிக்கிட்டா.....”

ஆஹா! கேட்டதும் நெஞ்சுக்குள் காதல் பூக்குதே!! 

போகன்

அர்விந்த் சாமி ராஜ பரம்பரையில் வந்தவர் என்பதற்காக கழுத்தளவு ஸ்விம்மிங் பூல் நீரில் இறங்கி நின்று தோழிகளுடன் ஜலக்கிரீடை செய்யும் கிளுகிளுப்பானக் காட்சிகள் காட்டும் போது பக்கத்திலிருந்து “படம் என்ன ரேட்டிங்” என்று கிசுகிசுத்துத் தோளை இடித்தார் சங்கீதா. “யூ”ன்னு போட்ருந்தது என்றேன். ”ஓ இப்போ யூவுக்கு இதுதான் ஸ்டேட்டஸா?” என்றார். மேலும் இந்த சம்பாஷணையை வளர்க்காமல் ”ஆமாம்” என்று அசிரத்தையாகச் சொல்லிவிட்டு காட்சி மாறும் முன் திரையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
நாயகனுக்கு அறிமுகக் காட்சி வைக்க வேண்டும் என்கிற தவிப்பில் ஜெ.ரவிக்குக் கைலி கட்டி ஆலுமா டோலுமா மாதிரி ஆடவைத்த பாவத்திற்கு இயக்குனருக்கு எப்பிறவியிலும் விமோசனம் கிடைக்காது. ஹன்ஸிகாவை சரக்கு அடித்துவிட்டு டூவீலரில் ஓட்டிவந்து போலீஸிடம் மாட்டிக்கொள்வது போல சீன் அமைத்து ஜெ.ரவியைச் சந்திக்கவிடுகிறார். ஏன் சார்... ஹன்ஸிகா மாதிரி லட்டுவை இப்படியொரு இண்ட்ரோவிலா காமிப்பீர்!
காசு கொடுத்து கருமத்தில் வந்து மாட்டிக்கொண்டோமா என்று ஒட்டுமொத்த அரங்கமும் வருத்தமுறும் நேரத்தில் அர்விந்த்சாமியால் படம் சூடுபிடிக்கிறது. பரகாயப் பிரவேசம் என்ற கூடு விட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றுக்கொண்ட அர்விந்த்சாமியின் லீலாவினோதங்களே படம். பொதுவாக பரகாயப் பிரவேசம் என்பது உயிரற்ற உடலில் தனது உயிரைச் செலுத்தி பின்னர் தன் கூடுக்குள் திரும்புவதேயாகும்.
சினிமாட்டிக்காக இதைக் காட்டும் இயக்குனர் சின் முத்திரை வைத்துக்கொண்டு எதிராளியின் கண்களை உற்றுப் பார்த்தால் அவர்களின் உடம்புக்குள் அர்விந்தசாமி சென்றுவிடுகிறார். பரகாயப் பிரவேசம் என்ன ஒட்டுவார் ஒட்டியா அல்லது மெட்ராஸ் ஐ ஆ! பார்த்தாலே தொற்றிக்கொள்வதற்கு!!!
ஹீரோ ஹீரோயின் அறிமுகக் காட்சிகள் போல சிலவற்றை ஜவ்வாக இழுக்காமல் வெட்டி ஓட்டியிருந்தால் நாற்பத்தைந்து நிமிடங்கள் சேமித்திருக்கலாம். படம் எடுத்தவருக்கும் படம் பார்த்தவருக்கும் அந்த நிமிடங்கள் லாபம். அர்விந்த்சாமி “நான் நிரந்தரமானவன்” என்று இரு கைகளையும் அகல விரித்து வானம் பார்த்து சொல்லும் காட்சிகள் அற்புதமானவை. ஜெ. ரவியை விட எல்லோரையும் கவர்ந்தவர் அ.சாமியே!
இசை இமானாம். பின்னணி முழுக்க கிடாரைத் தந்தி அறுகக் கதற வைத்து டெம்போ ஏற்றியிருக்கிறார். பாடல் ஒன்றும் மனதில் பதியவில்லை. பாடலுக்கு ஆடும் போது பின்னணில் கலர்ப் பொடி தூவுவது போல எடுக்கும் ஆதிகால டெக்னிக்கை மலர் தூவுவதுபோல வைத்திருப்பதில் இயக்குனரின் வயசு தெரிகிறது. நாசரை அமெரிக்கையான ப்ரோபஸராகக் காட்டிவிட்டு பத்து நிமிடத்துக்குள் பேராசைக்காரனாகக் காட்டி பொட்டில் சுட்டு மூட்டைக்கட்டி விடுகிறார்கள். சொற்ப நேரமே வந்தாலும் நேர்த்தியாக செய்திருந்தார்.
பொன்வண்ணனுக்கு போலீஸில் பெரிய போஸ்ட் வேடமெல்லாம் ஒத்துவரவில்லை. கோயம்பேடு மார்க்கெட் ஏஜெண்ட், காய்கறி வியாபாரியிடம் பேரம் பேசுவது போல பேசுகிறார். மிடுக்கு இல்லை. ஜெயம் ரவிக்கு போலீஸ் கெத்தெல்லாம் சுத்தமாக இல்லை. குரலில் மென்மையும் நடக்கையில் நளினமும் இருக்கிறது. அர்விந்த்சாமி புகுந்த உடம்பானதும் அவரது அசைவுகளில் தெரியும் ஸ்டைல் அலாதியாக இருக்கிறது.
கூட்டத்தோடு கலந்து சத்யத்திலிருந்து வெளியே வரும்போது சத்தமாக “ஏண்டா? போகர் பரகாயப் பிரவேசமெல்லாம் கொள்ளையடிக்கவா யூஸ் பண்ணுன்னு சொல்லிருக்கார்?” என்று நக்கலாகக் கேட்ட என் சித்தப்பாவை மொத்தக் கூட்டமும் ஒருமுறை திரும்பிப்பார்த்துவிட்டு சிரித்தது. மனுஷர் முடிக்காமல் மீண்டும் “இப்போல்லாம் ஒன் டூ த்ரீ எடுக்கறது ஸ்டைலாப்போச்சு.. சிங்கம் மூணு மாதிரி போகன் மூணு வரைக்கும் வருவானுங்க...” என்றவரை ஓடிச்சென்று கை பற்றி தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்திக் காருக்குள் ஏற்றி வீடுவந்து சேர்ந்தேன்.
தயவுதாட்சண்யம் பார்க்காமல் அட்லீஸ்ட் நாற்பத்தைந்து நிமிடங்கள் கத்தரித்து பாட்டில்லாமல் வெளியிட்டால் வெள்ளிவிழா காணும் படம். இப்போது மணம் வீசாத “போகன்வில்லா”

2016: சிவராத்திரி

நகரேஷு காஞ்சி. கைலாசநாதர் கோவிலில் இன்று சிவராத்திரியுடன் சேர்ந்து வந்த பிரதோஷ அபிஷேக ஆராதனையை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். தட்டு தட்டாய் பழங்கள் பஞ்சாமிர்தமாக்கப்பட, கேன் கேனாய் பால், கெட்டித் தயிர், பாணம் மேல் தூவிய விபூதி, அரைத்த குளிர் சந்தனம், பாட்டில் பன்னீர், பூசுற்றிய நூற்றியெட்டு சங்காபிஷேகம் என்று நான் சிவானந்தத்தில் திளைத்தேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்த அபிஷேகத்தில் மனசு கூத்தாடியது.
நெற்றியில் பட்டையாய் ஏறிய விபூதி மணத்தில் மனசில் பக்தி ஊற்றாய்ப் பொங்கியது. சிவமே... சிவமே.. சிவமே.. என்று உள்ளுக்குள் கதற முடிந்தது. பட்டைலிங்கத்தில் சுடர் விட்ட தீபாராதனையில் உலகம் துறந்து லயித்த இன்பம் பிராணன் இருக்கும்வரை மறக்காது. அபிஷேகப் பிரியனை ஆனந்த தாண்டவமாட வைத்த திருப்தி.
கைலாச்நாதர் தரிசனத்துக்குப் பின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்தியாகக் கிடைத்த பிரதோஷ நாயகர் புறப்பாடு. நாகஸ்வர வித்வான்கள் மல்லாரி வாசிக்க இடதும் வலதுமாய் ரிஷபத்தின் மீதமர்ந்து ஒய்யாரமாக ஆடிவரும் அம்மையப்பனைக் காணக் கண்ணிரண்டுதான் போதுமோ? கண்ணாயிரம் வேண்டாமோ? ஆஹா.. ஒரு க்ஷணத்தில் பட்டென்று மனசு விட்டுப்போயிற்று. சிற்றின்பங்களை விட்டு இந்த பேரின்ப ஜோதி எப்போதும் வாய்க்காதா என்று அந்த கணம் பிரமாதமாக எண்ணினாலும் பட்டினத்தடிகள் சொன்னது போல அங்காடி நாயாக அடிபடத் திரும்புகிறது பாழ் மனம்.
காமாக்ஷி தரிசனத்தில் மெய் மறந்தோம். அலங்காரமாகப் போடப்பட்ட விளக்கொளியில் கோபுரம் தங்கத்தில் தகதகவென்று ஜொலிக்கிறது. புருஷனுக்குப் போட்டியாக பிறைச்சந்திரனை சிரசில் ஏந்தி கருணைப் பார்வையில் அருட் காட்சியளித்தாள் அம்பிகை. அவள் முன் எத்தனை நேரம் அமர்ந்தாலும் நொடியெனக் கரையும் மாயமென்ன? சக்தியின் சொரூபம். எவரையும் கட்டிப்போடும் காருண்யம். அம்பிகையே... உன் பாதம் சரண் நாங்களே!
நெஞ்சு நிறைந்த இரவு! சிவோஹம்!

பிரயாணம்

இமயமலைப் பர்வதத்தில் என்று நாமாகவே எண்ணிக்கொள்ளுமளவிற்கு ஒரு வனாந்திர பிரதேசம். அங்கு ஹரிராம்புகூர் என்ற மனிதவாடை வீசும் வடக்கத்தி கிராமம் ஒன்று. அங்கே இருவர்... இல்லையில்லை.. ஒருவர் பிரயாணிப்பதுதான் கதை. மலை, சமவெளி, காடு என்று அம்மலைத் தொடரில் ஒரு நீள கட்டையில் வைத்து கிழ தாடியுடன் இருப்பவரை இழுத்துக்கொண்டு இன்னொருவர் வருகிறார். வெகுதூரம் பயணித்து அந்த மனிதவாடை வீசும் கிராமத்தில் சில பொருட்கள் வாங்கி திரும்புகின்றனர் என்றுதெரிகிறது. பள்ளத்தாக்கு, செங்குத்தாக ஏறும் மலை, ஆறு, சமவெளி என்று இரண்டு இரவுகள் இரண்டு பகல் குளிரில் பிரயாணப்பட்டுதான் தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும்.
அப்படி வரும் இருவரும் சன்னியாசிகள். கட்டையில் படுத்துக்கொண்டு வருபவர் குருதேவர். இழுத்துக்கொண்டு வருபவர் அவரது சிஷ்யர். அசோகமித்திரனின் "பிரயாணம்" சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது. வயதான குருதேவரை மீண்டும் ஆசிரமத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ச் சேர்த்துவிடவேண்டும் என்பது சிஷ்யகோடியின் பிரதான இலக்கு. ஆனால் குருதேவரால் நகரக்கூட முடியாமல் தள்ளாமை வந்துவிடுகிறது. அவரைக் கம்பளி சாக்கு பைக்குள் போட்டு காதுகளை மூடி இரவு முழுவதும் பனிவிழும் மலைக் காட்டில் பாதுகாக்கிறார் சிஷ்யர். கஞ்சி கலந்து தருவது பற்றியும் இரவில் வானில் தோன்றும் நட்சத்திரக் கூட்டம் பற்றியும் அமியின் வர்ணனையை எவராலும் அடித்துக்கொள்ளமுடியாது.
ஓநாய்கள் எப்படா சமயம் வாய்க்கும் என்று அவர்களைக் குதறத் தயாராய் சுற்றுகின்றன. கையில் இருக்கும் சுள்ளிக்கட்டைகளை கொளுத்திப் போராடிக்கொண்டிருக்கிறார். எப்பவோ கண் அயர்ந்து மீண்டும் எழுந்த வேளையில் சாக்குப்பையின் அடிபாகத்தில் ஓநாய் கடித்த சுவடு தெரிகிறது. பொழுது விடியும் தருவாயில் பார்க்கையில் குருதேவர் இறந்து போயிருப்பது தெரிந்தது. மீண்டும் குருதேவரைக் கட்டையில் வைத்துத் தள்ளிக்கொண்டே ஆசிரமத்தை அடைய விரைகிறார். அப்படியிருந்தும் மலைக்குள்ளேயே இன்னொரு இடம் செல்வதற்குள் இருட்டிவிடுகிறது. அங்கேய தங்க நேரிடுகிறது. ஓநாய்கள் இந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிடுகிறது.
தீ மூட்ட கட்டைகள் இல்லை. இங்கேயும் அங்கேயுமாக பொறுக்கி தணல் மூட்டுகிறார். விடிய விடிய குருதேவரைப் பாதுகாக்கவேண்டும் என்று அமர்ந்திருக்கிறார். ஓநாய்க் கூட்டத்தோடு சண்டையிடுகிறார். எப்போது கண் மூடினோம் என்று தெரியாமல் அசந்து போய் மீண்டும் கண் விழிக்கும் போது முரட்டு ஓநாய்கள் குருதேவரை குதற முற்படுகிறது. ஒற்றையாளாய் அந்த ஓநாய்க்கூட்டத்தை எதிர்த்துப் வலுவிருக்கும்வரை போராடுகிறார்.
ஓநாய்கள் குருதேவரை கவ்வி ஒரு சிறுபள்ளத்தாக்கிற்கு இழுத்துப்போகின்றன. கதறுகிறார். இருளில் ஒன்றும் செய்யமுடியாமல்... காலையில் அந்தப் பள்ளத்தை எட்டிப் பார்க்கிறார். தலையை பிய்ந்து குருதேவரின் உடல் கிடக்கிறது. ஆனால் இங்கே கதையை அமி முடிக்கும் பாணியே அலாதியானது. கீழ்கண்ட வரிகளோடு இந்தக் கதை முடிகிறது.
“ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது.”
1969ல் எழுதப்பட்ட கதை இது. ”ஐயா” என்று ஐந்தாறு இடத்தில் வரும் வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வாசகனைக் கட்டிப் போடும் எழுத்து. சிறுகதைதான் என்றாலும் வெகுநேரம் சிந்திக்க வைக்கும் கதை. குருதேவர் இறந்துபோய்விட்டார் என்று முடிவு செய்த சிஷ்யனின் அனுமானம் தவறா? தன்னை பள்ளத்துக்கு இழுத்துப்போன ஓநாய்களுடன் போராடினாரா? நம்மையும் அந்த மலைச்சாரலில் பத்து நிமிடங்கள் வாழவைக்கும் எழுத்து. வாசிப்பின்பம் பருக நினைக்கும் எவரும் தவறாமல் படிக்கவேண்டிய கதை.

திரும்பச் சொல்லாத மாடு

”அப்பா.. இங்க பாரு..”
“ம்..”
“தெரியும்ங்கிறத்துக்கு Opposite என்ன?”
“தெரியாது”
“தெரியாதா? ஹைய்யோ.. இது கூடத் தெரியாதா?.”
சின்னவள் கைகொட்டிக் குலுங்கிச் சிரிக்கையில் ஒரு வாரத்திற்கான டென்ஷனும் அயர்ச்சியும் மறைந்துபோய் திங்களுக்கான புத்துணர்ச்சியை மனசு பெற்றுவிடுகிறது..
“இன்னொன்னு கேட்கட்டா?”
“ம்.. கேளு...”
“ஒருத்தங்கிட்ட ரெண்டு மாடு இருக்கு. ஒண்ணு பேரு ‘திரும்பச் சொல்லாத’ இன்னொன்னு பேரு ‘திரும்பச் சொல்லு’. அவன் என்ன பண்றான் ‘திரும்பச் சொல்லாத’ங்கிற மாட்டை வித்துட்டான்.இப்ப அவன் கிட்டே எந்த மாடு இருக்கும்?”
“திரும்பச் சொல்லு..”
”திரும்பவும் சொல்லணுமா?” என்று கேட்டுவிட்டு ‘ஒருத்தங்கிட்ட ரெண்டு மாடு இருக்கு...” என்று இரண்டு விரலைக் காண்பித்துச் சொல்ல ஆரம்பிக்கும் அழகில் மயங்கி இன்னும் நூறு தடவையானும் ‘திரும்பச் சொல்லு..” சொல்லலாம் என்று இருக்கிறேன்.
”அந்த மாட்டுக்காரன் கிட்டே எந்த மாடு இருக்கும்?”
“திரும்ப சொல்லு”
வாழ்வின் இன்பமயமான தருணங்கள் மிகவும் சுலபமாகக் கிடைக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு வேறெங்கோ அலைகிறோமோ?

Thursday, June 1, 2017

நீலமங்கலம்

ஜமீந்தார் கதைகளில் வருவது போல கிராமத்தின் பெயர் நீலமங்கலம். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோடில் இடது திரும்பினால் மண்வாசனையோடு பல கிராமங்கள் கடக்கவேண்டும். இடுப்புக்கீழே ட்ரௌஸர் இறங்கிய சட்டை போடாத பையன், “ஹேய்..ஹேய்..” என்று பிரம்புக்கையோடு ஆடு மேய்க்கும் ஆயா, தூரத்தில் ட்ராக்டர் ஓட்டி வரும் முண்டாசு கட்டிய இளைஞன், பசுமையெங்கும் தெரிய நடுவில் சிம்மாசனத்தில் அமர்ந்த ராஜா போல அரசமரம் என்று வழிநெடுக இயற்கையின் அட்டகாசம்.
ஈசூர் வந்தவுடன் இடதுபுறத்தில் “PAULAR RIVER" என்கிற போடு வழிகாட்டும். அங்கே செல்லாமல் வலது திரும்பினால் உங்கள் கார் மட்டுமே பயணிக்கும் ஒரு தனிவழிச்சாலை. விவசாயம் நடக்கிறது. இரண்டு புறமும் நட்டிருக்கிறார்கள். பச்சைபசேல் என்று ரம்மியமாக இருக்கிறது. சட்டை துறந்து இடுப்பு வேஷ்டியுடன் வரப்பில் இறங்கி கால் நனைக்க மாட்டோமா என்று துடிக்கும் மனசு.
அதே சாலையில் மூன்று கி.மீ சென்றால் ஒரு குன்று தெரியும். அதுதான் குன்னத்தூர்மலை. கிராமத்தின் பெயர் நீலமங்கலம். கிளைவிரித்து நிற்கும் மரத்தடியில் உளித்தழும்புகளோடு பழமையான நந்தி பார்க்கும் வானம் பார்த்த லிங்கத்தின் தெருவோடு சென்றால் வருவது மஹாகாளேஸ்வரர் கோயில். புண்ணிய நதிகளிலிருந்தும் இன்ன பிற க்ஷேத்திர தீர்த்தங்களிலிருந்துமாக 234 இடங்களிலிருந்து ஜலம் ஏற்றி வந்து குளம் கட்டியிருக்கிறார்கள்.


அங்கிருந்து மலையில் மஹா நாராயணர் திருக்கோயில் தெரிகிறது. அங்கே காவிக் கொடி படபடத்துப் பறப்பது கண்ணில் படும்போது நம்முள்ளே ஒரு துள்ளல் ஏற்படுகிறது. கிராமத்தினுள் சென்று வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மலையின் அடிவாரத்தை அடைகிறோம். படிக்கட்டின் ஓரத்தில் பனைமரம் சூழ ஒரு பச்சைக் குட்டை. “ஸ்ரீ ஸ்ரீநிவாசா... ஸ்ரீ ஸ்ரீநிவாசா...” என்று அசரீரிபோல மேலிருந்துப் பாடல் ஒலிக்க மலையேறுகிறோம்.
கொஞ்ச தூரம் படிக்கட்டுகளும்... கொஞ்ச தூரம் ராம்ப் போலவும்...சௌகரியமாக ஏறமுடிகிறது. கோவிந்தா.... நாராயணா என்று மாலை வெய்யிலில் ஏறும் பொழுது மனசுள் பக்தி நிறைந்து வாழ்க்கையில் ஏற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மலர்கிறது. மேலே சன்னிதி அடைவதற்குள் மூன்று திருப்பங்கள் வருகிறது. வயதானவர்கள் அமரத் தோதாக சிறு சிமெண்ட் கட்டையை ஒவ்வொரு திருப்பத்திலும் வடிவமைத்திருக்கிறார்கள். வலுவுள்ள திடகாத்திரமான இளைஞர்கள் பத்து நிமிடத்தில் உச்சிக்குச் சென்று மஹா நாராயணர் தரிசனம் செய்துவிடுவார்கள்.
”ஆதி நாராயணர்தான் ரொம்ப வருசமா இந்த மலைக்கோயில்ல இருந்த தெய்வம். சில வருசங்களுக்கு முன்னாடி யாரோ சில விசமிங்க சிலையை ஒடச்சி தூர வீசிட்டாங்க... அவரைத்தான் நீங்க அங்கே பார்த்தீங்க...” என்று ”நீரோட்டம்” மணி சொன்னார். தும்பைப் பூ போல வெள்ளையாடையில் இருந்தார்.
மஹா நாராயணர் சன்னிதி தாண்டி பாறைகளுக்கு நடுவில் சற்றே சிதிலமடைந்த நிலையில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார் ஆதி நாராயணர். கற்களுக்கு மத்தியில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் கொடுத்தார். கதிரவனின் கிரணங்கள் அவரது சிரசுக்கு மேலே ஒளிமழை பொழியத் தட்டுத் தடுமாறி அந்த பாறைகளுக்குள் இறங்கி நின்று சேவித்தோம். அற்புதமான மூர்த்தம். முகலாயர்கள் காலத்தின் போது அழிக்கப்பட்டவைகள் போதாதென்று சமீப காலத்தில் கூட இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறது. இருந்தும் அனைவரையும் ரக்ஷிக்கும் தெய்வம் அவனொருவன் தான்.
சுற்றிலும் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டிருக்கும் போது அமைதியாயிருந்த நீரோட்ட மணியிடம்....
“நீங்க இந்த கிராமத்து ஆளுங்களா? எவ்ளோ வருஷமா இருக்கீங்க? ”
“ஆமாங்க... இது நம்ம சொந்த ஊருங்க... சுத்துப்பட்டு கிராமங்களுக்கு போர் போடுறத்துக்காக நீரோட்டம் பார்த்து சொல்லுவேன் .. போன வாரம் கூட ஒரு இடம் பார்த்து சொன்னேன்... இந்தக் கோவிலுக்குக் கூட கிணறு.. போருக்கெல்லாம் நாந்தான் இடம் குறிச்சுச் சொன்னேன்.. குருஜி நீரோட்ட மணின்னுதான் கூப்பிடுவாரு..” என்று கண்கள் விரியச் சிரித்தார். நெற்றியில் சந்தனம் துலங்கியது.
ஆதி நாராயணரைத் தரிசித்த பின்னர் ஒரு சின்ன இறக்கத்தில் பட்டாபிஷேக இராமர் சன்னிதி. தொடுவானத்தில் அக்கினிப் பிழம்பாக சூரியன் இறங்கிக்கொண்டிருக்கிறான். இங்கே இராமருக்கு அபிஷேகம் நடந்தது. மூர்த்தி சிறுசு. ஆனால் கீர்த்தி பெருசு. லக்ஷணமாக வடிக்கப்பட்ட பட்டாபிஷேகக் காட்சி கண்ணை விட்டு அகலாது. கூட்டமாய் மலையைச் சுற்றிச் சென்ற பறவைகளுக்கும் இறை தரிசனம் கிடைத்தது. கற்பூரார்த்தி காட்ட முடியாமல் காற்று பலமாக வீசியது. தாம்பாளத்தால் மறைத்துக்கொண்டு காட்டினார். நிறைவான தரிசனம்.
“அதோ கிளக்கால தெரியுது பாருங்க.. அதுதான் திருக்களுக்குன்றம் மலை. கார்த்திகையன்னிக்கி ஜொலிக்கும். அப்புறம் வரிசையா வெளக்கு தெரியற இடம் கல்பாக்கம் பக்கத்துல...” என்றார்.
“பரமேஸ்வரமங்கலம்.. நத்தம்.. அணைக்கட்டு.. அந்த ஏரியா வருங்களா?”
“ஆமா சார்.. எப்படி கரெக்டா சொல்றீங்க?”
“நாங்க போயிருக்கோம் மணி சார். பரமேஸ்வரமங்கலத்துல பாலாத்துக்கு நடுவுல சிவன் கோயிலு...”
”ஆமா சார்... நிறைய கோயிலு போயிருக்கீங்க போல்ருக்கு...”
இப்போது மஹா நாராயணர் சன்னிதி. முன்னிரவு நேரம் ஆரம்பமாகியிருந்தது. மலையைச் சுற்றி கும்மிருட்டு. சன்னிதியில் மட்டும் ட்யூப் வெளிச்சம். எங்களுக்காகவே இம்மலையில் எம்பெருமான் எழுந்தருளீயது போல நாங்கள் மட்டுமே இருந்தோம். பிரத்தியேகமான மலை. விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்க அபிஷேகம். பால், தயிர், ஸ்நானப் பொடி, இளநீர், பழரசம் என்று விதம்விதமாக குளிர்வித்தோம். அர்ச்சனை ஆரத்தி நடைபெற்றது. அலங்காரப்பிரியனுக்கு மேனியெங்கும் திருக்காப்பு சார்த்தி கற்பூரஜோதியில் தகதகத்தார்.
வழிபாடு முடிந்து இறங்கும் போது கிழக்கில் பூர்ண சந்திரன் மஹா நாராயணர் தரிசனத்திற்கு வந்திருந்தான். இருட்டில் இறங்குவதற்கு அவனே டார்ச்சாய் ஒளி பாய்ச்சினான். நீரோட்ட மணி “கோவிந்தா..கோபாலா.. கிருஷ்ணா..” என்று நாமாவளி சொல்ல நாங்களும் பின் பாடினோம். மின்சாரமில்லாத காலங்களில் தீவட்டி ஏந்தி காடுமலைப் பாதைகளில் சுற்றிவருவது போல செல்ஃபோன் தீவட்டி அடிக்க கீழே வந்திறங்கினோம்.
கார் பக்கத்தில் குட்டை தூங்கிக்கொண்டிருந்தது. பூர்ண சந்திரனின் ஒளி மழையில் ஊரே நிழலாய்த் தெரிந்தது. சேப்பாயியை உசுப்பி மீண்டும் மஹாகாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம தீபாராதனை தரிசித்துக்கொண்டு இல்லம் திரும்பினோம்.
ஜியெஸ்டி ரோடு ஏறுவதற்குள் வந்த ரயில்வே கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்தபோது ரோடோர மரங்களுக்கிடையில் தெரியும் நிலவொளியின் துணையில்.... தூரத்தில் நீலமங்கலம் மலை தெரிந்தது. மஹா நாராயணரை தனியே விட்டு அனைவரும் இறங்கியிருப்பார்கள். அவரும் சன்னிதி விட்டு சுதந்திரமாக வெளியே வந்து நம்மையும் இவ்வுலகத்தையும் காத்து ரக்ஷிக்க கீழே பார்த்துக்கொண்டிருக்கலாம். எதிரே தெரியும் திருக்கழுக்குன்ற சுடலைப்பொடி பூசியவனுடன் குசலம் விசாரித்து சம்பாஷித்துக்கொண்டிருக்கலாம்.
இரவு நேரங்களில்... ஆளில்லா கிராமத்து சாலை பயணம் மனதைக் கிறங்கடிக்கும். ஸ்வாமி தரிசனம் ஆன பின்பு கார் வெளிச்சத்துக்கு இருபுறமும் வந்து போகும் கட்டிடங்களும் சிறுதெய்வக் கோயில்களும் என்னன்வோ கதை சொல்லும். ஜியெஸ்டி ஏறி சிங்கபெருமாள் கோயில் நெருங்கியதிலிருந்து வாகன நெருக்கடி கழுத்தை நெறித்தது. மறைமலைநகர் தாண்டியவுடன் வந்த அடையார் ஆனந்தபவனில் இரவு சிற்றுண்டி அருந்தினோம். பெரியவா மகிமை பேசும் பி. ஸ்வாமிநாதனைச் சந்தித்துக் கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டோம்.
பதினொன்னரைக்கு படுக்கையில் சரிந்த போது மஹா நாராயணர் கதாயுதபாணியாகக் கண்ணுக்குள் வந்தார். ஊரோடு நான் தூங்கினாலும் மனசு மட்டும் மலையில் இருந்தது. இன்னொருமுறை போக வேணும்!

கிண்டில் புத்தகங்கள்

அந்தப் பையன் பேர் ஜெயக்குமார்னு நினைக்கிறேன். கார் வண்ணன். கச்சலான தேகம். பளீர் பற்கள். படிய வாரிய தலை. பாட்டம் மடித்த பேண்ட். சைக்கிள் ஹாண்டில் பாரில் ஊஞ்சலாடும் ஒயர்க்கூடை. மங்கையர்மலர், ஆவி, குமுதம் என்று பல இதழ்கள் நிரம்பிய பை. ப்ரான்ஸ், சில்வர் மற்றும் கோல்டு போல வாடிக்கையாளிர்ன் சந்தாவுக்கு ஏற்ப புது சஞ்சிகைகள் வீட்டு வாசலில் மணியடித்து வழக்கப்படும். ”ஜெய்... இந்தா கொழக்கட்டை... ஒரு டம்ளர் பாயஸம் குடியேன்...” என்று விசேஷ நாட்களில் கொடுத்து தாஜா பண்ணியிருந்தால் புதுசோ.. இன்னும் ரெண்டு நாள் கூட வைத்திருப்பதோ... சலுகையாகக் கிடைக்கும்
மன்னார்குடி ஹரித்ராநதியில் குளத்து நீரைச் சூழ்ந்த நான்கு கரைகளுக்குள் நடந்த பிஸினஸ் மாடலை இப்போது அமேஸான் கடல் கடந்து உலகமெங்கும் அதிரடியாய்ச் செய்கிறது. Kindle Unlimited என்பது அதன் பெயர். கிண்டில் இல்லாவிட்டாலும் கிண்டில் ஆப்பை தரவிறக்கி மொபைலோ லாப்டாப்போ டெஸ்க்ட்டாப்போ.. எதிலும் புத்தகங்கள் படிக்கலாம். ஒன்றல்ல இரண்டல்ல... மில்லியன் புத்தகங்கள். அநேகம் ஆங்கிலம். ஆயிரம் தமிழ்த் தலைப்புகளும் இருக்கிறது. மாத சந்தா இருநூறு. வருடச் சந்தா சொற்பம்தான். அதோடு மட்டுமல்லாமல் பழங்கால ஆங்கில இலக்கிய மின் புத்தகங்கள் கொத்தாக இலவசம்.
அலமாரியில் இடம் இருந்தவரையிலும் தாளில் அச்சிட்ட புத்தகங்களை வாசனைப் பிடித்து வாங்கி வாங்கி அடுக்கினேன். இப்போது அனைத்தையும் நிரப்பியாகிவிட்டது. அச்சிட்ட புத்தகமே ஆனந்தமான ஒன்று என்கிற பழைய சித்தாந்தத்தில் இருந்தேன். Kindle Unlimitedல் மாதச் சந்தா சேர்ந்தவுடன் தரவிறக்கிய புத்தகங்களை எப்போதெல்லாம் எதற்கெல்லாம் காத்திருக்கிறேனோ அப்போதெல்லாம் காக்க வைத்தவர் கூப்பிடும் வரை புரட்டிப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். வடபழனி தாண்டி வரும் லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலில் ஒரு முறை பத்து நிமிடங்களுக்கு மேலாக சிகப்பு எரிய சாவியின் “பழைய கணக்கு”வில் இரண்டு அத்தியாயம் படித்துமுடித்தேன். பரம திருப்தி!
கையடக்க ஐஃபோனில், கிண்டிலில், மேசைக் கணினியில், லாப்டாப்பில் என்று நீக்கமற நிறைந்திருக்கும் சர்வ கேட்ஜெட்டுகளிலும் ஆயிரம் புத்தகம் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையேது? ஆயிரம் மணி நேரம் ஆளில்லா இடத்தில் காத்திருக்கச் சொன்னாலும் கஷ்டமென்பதை அறிவோமா?
தமிழ்ப் புத்தகங்களை கிண்டில் ஃபயரிலும் லேட்டஸ்ட் கிண்டில் ஆப்பில் திறக்கமுடியவில்லை. ஐஃபோன் திறந்து தாராளமாகப் படிக்கக் கொடுக்கிறது. இதுபோல சிற்சில இம்சைகள் இருந்தாலும் கிண்டில் ஆப் நிறுவிய பல மின்னணு சாதனங்களில் படிக்க முடியும் என்பதால் தைரியமாக சந்தா செலுத்தலாம். பல புத்தகங்கள் வாங்கி இச்சை வரும்போது எடுத்துப் படிப்பதை விட்டு இப்போது ”பணம் கட்டியாச்சே.. எக்ஸ்பயரி ஆயிடுமே..” என்கிற காரணம் தார்க்குச்சி போடுகிறது. ஆகையால் இந்த 2017ம் வருடத்தில் வாரம் ஒரு புத்தகம் படித்து முடிக்கவேண்டும் என்கிற சங்கல்பம் எடுத்திருப்பதால்... கீழ்கண்ட புத்தகங்கள் ஜனவரியில் முடித்திருக்கிறேன்.
1. பழைய கணக்கு - சாவி (கிண்டில் ஃபயரில் மற்றும் Windows 7 Kindle Appல் படிக்க முடியாது)
2. 50 Life and Business lessons from STEVE JOBS - George Ilian
3. Tirupathi - Amar Chitra Katha - Comics
4. வாழ்விலே ஒரு முறை (அனுபவக் கதைகள்) - ஜெமோ - கிழக்கு (கிண்டில் ஃபயரில் மற்றும் Windows 7 Kindle Appல் படிக்க முடியாது)
இதோடு மட்டுமல்லாமல் பைரப்பாவின் அச்சு வடிவ பருவம் நூறு பக்கங்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.
புத்தகப் பிரியர்கள் சதாசர்வ காலமும் அவர்களுக்கான பிரத்யேக கிரகத்தில் வாழ்கிறார்கள். கடலை மடித்துக் கொடுத்த கூம்புக் காகிதத்திலிருந்து தவறி கையில் விழுந்தால் எலும்பை முறிக்கும் தலகாணி அளவு புத்தகங்கள் வரை தலையைத் தொங்கப் போட்டுப் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.
முக்கியமான பின் குறிப்பு: இது Kindle Unlimited க்கு விளம்பரமல்ல... :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails