Sunday, October 22, 2017

சுப்பு மீனு: பாசமழை

"சுப்பு... பாசமழை பொழியறதுல எங்கம்மாவைத் தவிர வேற யாரு இருக்கமுடியும்னு... மார்தட்டி பீத்திக்கிறியே... நானெல்லாம் உன்னை என்ன மரத்துல கட்டிவச்சு அடிக்கிறேனா? நகக்கண்ணுல ஊசி குத்தறேனா? நாங்கல்லாம் காட்டுறது பாசமில்லையா?"
"மீனும்மா.. பரதேவதே.. நீ இன்னும் என்னைக் கட்டி வச்சு வேற அடிக்கணுமா?... ஊசி வேற குத்தணுமா? "
"டேய்... "
"ச்சே..ச்சே... பாசத்தாலையே கட்டிப் போட்டு அன்பால அடிக்கறது பத்தாதான்னு கேட்டேன்...இது குத்தமா?"
"ரொம்ப புளுகாதடா.. வேற என்னவோ பேச வந்தே...ப்ளேட்ட மாத்திட்டே..."
"இல்லே... அம்மாவோட பாசம் அளவிடமுடியாதது மீனு... யார்டேயும் கிடைக்காது... பசுவோட மடிக்காம்பிலேர்ந்து அப்போ கறந்த பால் மாதிரி.. கலப்படமில்லாதது... செண்பகப்பூவோட வாசம் மாதிரி..Divinity.. "
"எப்டி சொல்லு பார்ப்போம்..."
"இப்ப.. டெய்லி கார்த்தால பத்து மணிக்கு சாப்பிடற பையன்... எட்டு மணிக்கே.. அம்மா இலை போடறியான்னு கேட்கறான்னு வச்சுக்கோ.. உடனே அம்மா என்ன பண்ணுவா?"
"என்ன பண்ணுவா? தடியா.. அதுக்குள்ள என்னடா பரப்புன்னு கரண்டியை ஆட்டிக் கேட்பா.."
"இல்ல.. அப்டியில்லே.... அது உங்காத்து வழக்கமாயிருக்கலாம்.."
"டேய்... தட்டாதடா... மேல சொல்லு..."
"த்தோ ஆச்சுடா கொழந்தே... நெத்திக்கி இட்டுக்கோ. மாத்யான்னிகம் பண்ணிடு.. ஜல்தியா போட்டுடறேன்...ன்னு சொல்லிண்டே இன்னோரு அடுப்புல பாத்திரத்தை ஏத்தி ரசத்தை வச்சு.. நாம அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போய்ட்டு வர்றத்துக்குள்ளே இலை போட்டு.. ஆவி பறக்க பரிமாறிடுவா... அத்தனை பாசம்..."
"பாசம்னு வந்துட்டா... ஆம்பிளைப் பசங்களெல்லாம் சாப்பாட்டு எக்ஸாம்பிள் கொடுத்து.. அம்மாவைக் கொண்டுபோய் உச்சாணிக்கொம்புல உட்கார்த்தி வச்சு.. மங்களம் பாடி முடிச்சுடுவீங்கடா.."
"யேய் மீனு.. நீ கூட நம்ப பசங்க கேட்டா உடனே பம்பரமாச் சுத்தி... பொங்கிப் போட மாட்டியா.. இதுவே நா கேட்டா காலேலதானே ஒரு கூஜா காப்பி குடிச்சேள்னு எதிராம் வரைக்கும் கேட்கிறா மாதிரி கத்தி கூப்பாடு போடுவியே..."
"சின்னப் பையனா இருந்தா யாரா இருந்தாலும் அப்படிதான் செய்வாங்க.. இதுல என்ன அதிசயம் இருக்கு..."
"அம்மாவுக்கு பையன் எப்பவுமே சின்னப் பையன் தானே..."
"விடாம ஆர்க்யூ பண்ணுவே.. Devil's Advocate."
"அடிப்பாவி.. அம்மாவை டெவில்னு சொல்லிட்டியே... இன்னொரு எக்ஸாம்பிள் சொல்லட்டா?"
"ம்.. சொல்லித்தொலை..."
"பீஷ்மர் இருக்காரோன்னு... பீஷ்மர்.. "
"ஆரம்பிச்சுட்டியா.. மகா.....................பாரதம்.................. பி.ஆர். சோப்ரா சீரியல் டைட்டில் மாதிரி...."
"போர்ல பாண்டவர்களோட படையை துவம்சம் பண்ணிண்டிருக்கார் பீஷ்மர்.. துரியோதனன் அப்படியிருந்தும் பீஷ்மரை நீ பாண்டவர்கள்ல யாரையாவது கொன்னியா கிழவான்னு ஏசறான்... அர்ஜூனன் மேலே அம்புமாரி பொழியறார்..அன்னிக்கி ராத்திரி குருக்‌ஷேத்ர கூடாரத்துல பீஷ்மரை நிக்க வச்சு கொன்னியா.. கொன்னியான்னு கேள்வி கேட்டு உரிஉரின்னு உரிக்கறான் துரி.."
"நீ எதையுமே ஜவ்வா இழுத்துதான்டா சொல்லுவே... பாசத்தைச் சொல்றேன்னு துரியோதனன் பீஷ்மரை நிந்திக்கிறதைச் சொல்றே... கதையே மாறிப்போச்சு... உன்னோட டிசையனே தனிடா சுப்பு... Keep it up!!"
"மீனு... இப்பதான் நம்ம கண்ணுல நீர்த்துளிர்க்கிற காட்சி..."
"ம்.. பொறுமையை ரொம்ப சோதிக்கிறே..."
"பீஷ்மர் சொல்றார்... டேய் துரியோதனா... இப்டி நீ.... நான் அவா தரப்புல யாரையும் கொல்லலைன்னு உலுக்கிறியே... அப்பா இல்லாத கொழந்தேள்டா அவாள்லாம்... அவா பால்யத்துல ஒண்ணுக்கொண்ணு தோட்டத்துல விளையாடிண்டு இருக்கு.. அர்ஜுனன் பய மட்டும் ரொம்ப சூட்டிகை..துறுதுறுன்னு இருப்பன். அவனை எடுத்துக் கொஞ்சிண்டே இருப்பேன்.. ஒரு நாள் இப்படி பசங்களெல்லாம் பந்து விளைடிண்டிருந்தபோது... புதர்குள்ளே பந்து போயிடுத்து.... என் மடிமேல ஏறி... அஞ்சு வயசு அர்ஜுனன்... என் கன்னத்தைப் பிடிச்சு... அப்பா... அப்பா... அந்தப் பந்தை எடுத்துத் தரேளான்னு கேட்டான்டா... நானுன் அப்பா இல்லேடா.. தாத்தான்னு சொல்லி அவனை சமாதனப்படுத்தினேன்.. அப்படி இருக்கறவன் மேலேதான் இன்னிக்கி அம்பையெல்லாம் வர்ஷிச்சுட்டு வரேன்.. என்னைப் போயி உனக்காக சண்டை போடலைன்னு சொல்றியேடான்னார்..."
"சுப்பு..சுப்பு... தொண்டையில வந்து என்னவோ கட்டிக்கறதுடா... நானே அழுதுடுவேன் போல்ருக்கே.. இதெல்லாம் எங்கடா கத்துண்டே?"
"இது அனந்தராம தீக்ஷிதர் சொன்ன பாகவத சப்தாகக் கதை.. இதுல ரெண்டு விஷயம் தெரியும்.. ஒண்ணு.. அர்ஜூனன் மேலே பீஷ்மரோட பாசம்.. ரெண்டாவது அவரோட நேர்மை.. இந்த தேசத்தை ஆள்றவனுக்கு நான் மூச்சு இருக்கிறவரை ஹெல்ப் பண்ணுவேன்னு எடுத்துண்ட பிரதிக்ஞைல தப்பாம இருந்தது.. எவ்ளோ பெரிய மகோத்தமர் அவர்.. பிதாமகர்... "
"சுப்பு... இந்தக் கதை சொன்னத்துக்காகவே உனக்கு பாராட்டு விழா எடுக்கலாம்.. நீ சொன்னா மாதிரியே அம்மாட்டேயிருந்துதான் பரிசுத்தமான அன்பு வெள்ளமா பெருக்கெடுத்து ஓடிவர்றது... அவளோட காலடில கிடக்கறதே சொகமா இருக்கு..... ஜகன்மாதா..."
"மீனு... மீனும்மா... மீனுக்குட்டி.....சமர்த்துடி நீ.. "

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails