Sunday, October 22, 2017

சுப்பு மீனு: பீஷ்மர்

"சுப்பு.. உனக்கு ரொம்ப தெனாவெட்டாப் போச்சு.... வர வர சொன்ன பேச்சே கேட்க மாட்டேங்கிறே”
“மீனு செல்லம்.. நீ நில்லுன்னா நிக்கறேன்.. உக்காருன்னா உட்கார்றேன்... இப்டி அபாண்டமா பழி சொல்லாதேம்மா... மீ பாவம்..”
“போடா.. மொத்த புருஷ வர்க்கமே இப்படிதான்.. பொண்டாட்டிக்கு அடங்குனா மாதிரியே போக்கு காமிப்பீங்க.. கடேசில உங்களுக்கு என்ன வேணுமா அதை சாதிச்சிப்பீங்க.. எங்களுக்குத் தெரியாதா?”
“பொண்டாட்டி பேச்சைக் கேட்காட்டா என்ன நடக்கும்னு தெரிஞ்சுமா நாங்களெல்லாம் சிலுப்பிக்கிட்டுத் திரியமுடியும்?”
“ரொம்ப பேசாதே.. பெருமாளைப் பார்க்கறத்துக்கு மின்னாடி தாயாரைத்தான் சேவிக்கணும்.. தெரியுமோன்னோ?”
“ம்... அதுலயே உங்களுக்குதானே முதல் மரியாதை... தாயார் உங்களோட அம்சமில்லையோ..”
“ரொம்ப நீட்டி முழக்காதே... ஏன்னா நம்பளோட குறைகளை பெருமாள்ட்ட எடுத்துச்சொல்லி நிவர்த்தி பண்ணச் சொல்லுவாளாம்.. இதுலேர்ந்து என்ன தெரியறது?”
“பெருமாளே பொம்னாட்டி பேச்சைக் கேட்டுண்டுதான் காலம் தள்றார்னு தெரியது...”
“ஹூக்கும்... வக்கனையா பேசு... ஆனா சொன்ன பேச்சை மட்டும் கேட்காம தையத்தக்கான்னு ஆடு...”
“யாரு தலையவிரிச்சுண்டு இன்னிக்கி பத்ரகாளியாட்டம் ஆடறான்னு தெரியறதே..”
“என்னடா தலையைக் குனிஞ்சுண்டே முணகறே...”
“எனக்கென்ன ஆடத்தெரியும்.. ஆடல்வல்லானையே ஆட்டி வச்ச இனமாச்சேன்னு உங்க கும்பலைப் பத்திப் பெருமையா சொன்னேன்..”
“ஏன்.. இன்னொன்னு சொல்லிவியே அடிக்கடி.. உன்னோட ஃப்ரெண்ட் சொல்வார்னு...”
“என்ன மீனும்மா.. இப்ப எங்க கோர்க்கபோறீயோ... எனக்குத் தெரியலையே...”
“பெரிய வஸ்தாதா இருந்தாக் கூட பொண்டாட்டி சொல் பேச்சைக் கேட்பான்.. இல்லைன்னா சாப்பாட்டுல விஷத்தை வைச்சுக் குடுத்துடுவான்னு மெர்சலாயிடுவான்னு....”
“ஆஹா.. நீ சென்னைத் செந்தமிழ்ல பேசும்போது... ஆஹா.. ஆஹா.”
“இப்படியெல்லாம் பாராட்டிட்டு...இதோ.. இன்னும் கொஞ்சநாழில சொன்னப் பேச்சைக் கேட்காமே உன் ஃப்ரெண்ட்ஸ் கூட லூட்டி அடிக்க கிளம்பிடுவே.. சரியா?”
“நமக்குன்னு நாலு மனுஷா வேண்டாமா மீனுக் குட்டி..”
“குட்டி... செல்லம்.. சமத்து... அசத்துவடா நீ... பெரிய கைகாரனாச்சே தாஜா பண்றதுல...”
“ஒரு ஜென்மத்துல பொண்டாட்டி பேச்சைக் கேட்டு மறு ஜென்மத்துல கல்யாணமே ஆகாதுன்னு சாபம் வாங்கிண்ட கதையும் இருக்கே.... “
“சாபமா? என்னடா சொல்றே சுப்பு?”
”ஓ.. கல்யாணம் ஆகாதுன்னு யாராவது சபிச்சா... அது சாபமில்லை... வரம்.. உன் வாயாலயே சொல்றியே மீனு..”
“ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினைப்பா... ஏதோ கதை சொல்லணும்னு ஆரம்பிச்சுட்டே... சொல்லித் தொலை... கேட்கலைன்னா... நச்சுப் பண்ணியே... லீவு நாள்ல கழுத்தை அறுப்பே....”
“இது தேவலோகத்துக் கதை.. மஹாபாரதத்துல வருது... சொன்னப்புறம் அவரா இவரும்பே...”
“ரொம்ப பீடிகை போடதடா.. மொத்தமா பொம்பளைங்கப் பேச்சைக் கேட்காதீங்கன்னு டேமேஜிங்கா எதாவது சொல்லப்போறே.... நான் உன்னை மொத்தப்பொறேன்... ஆரம்பியேன்...”
“வசிஷ்டரோட ஆசரமத்துலதான் காமதேனுங்கிற பசு இருந்துச்சு....”
“அங்க இருந்தா சரி... இங்க இருந்தா ஐஐடி வாசல்ல வெட்டிக் கறி துன்ணுடுவாங்க....”
”அச்சச்சோ.. கதை சொல்ல விடமாட்டியா.. அரசியல் பேசாதே... மீனு.. அப்பறம் வசிஷ்ட சாபம் கிடைக்கும்.. ஆமா சொல்லிட்டேன்...”
“உங்கூட இனிமே கல்யாணம் கிடையாதுன்னு சொன்னா... அது வரமாச்சே.. சாபமாகிய வரம்... சுபசாபம்...”
“இப்ப சொல்லட்டா வேண்டாமா?”
“சொல்லுடா... உங்கிட்டே கெஞ்சிக் கெஞ்சிக் கதை கேட்கணுமா?”
“ம்... அந்த பசுவோட பால்லதான் அவர் தெனமும் ஸ்வாமிக்கெல்லாம் அபிஷேகம் பண்ணுவார்... அப்புறமா அந்த பிரசாதத்தை பூஜைல கலந்துண்டவாளுக்கெல்லாம் தருவார். அந்த பிரசாதமா தர்ற பால்ல ஒரு விசேஷம் உண்டு... அதைச் சாப்பிட்டா இளமையா ஆயிடுவா?”
“என்னடா எர்வாமாட்டின் கதை மாதிரி சொல்றே...”
“சாமிக்குத்தம் ஆயிடும்... கதையைக் கேளு...”
“சரி..சரி.. கன்னத்துல போட்டுண்டுட்டேன்..”
”அப்படி ஒரு நாள் பூஜைல அஷ்டவசுக்கள்னு சொல்ற எட்டு கந்தரவர்கள் கலந்துண்டா.. அவர்களோட லீடர் ப்ரபாசன். அவனுக்கும் அந்தப் பாலைக் கொடுத்தார் வசிஷ்டர்.. என்னை மாதிரி அவனும் பொண்டாட்டிக்கு தாசானுதாசன்... யார் எது கொடுத்தாலும் அவளுக்கும் கொண்டு போய் கொடுப்பான்...அந்த பாலை ஒரு வாட்டர் பாட்டில்ல கொட்டி எடுத்துண்டு அவங்க வீட்டுக்குப் போனான்...”
“என்னிக்காவது ஒரு தக்கினியோண்டு சாக்லேட் கொடுத்துருப்பியா நீ... உடனே உன்னை மாதிரின்னு படம் போடறே... ம்... உன்னை திருத்த முடியாது.. மேலே சொல்லு...”
“அவன் பொண்டாட்டிக்கு ஜிதஹின்னு ஒரு அரசி ஸ்நேகிதி. இவன் கொண்டு வந்த பாலை ஒரு சின்ன டம்பளர்ல ஊத்தி அவளுக்குக் கொடுத்தா. அறுபது வயசுக்காரி இருபது வயசுக்காரியா ஆயிட்டா... அவளோட புருஷன்..அதான் அந்த ராஜா ராத்திரி அந்தப்புரத்துக்கு வந்துட்டு ஜிதஹியைப் பார்த்துட்டு.. உங்க அக்கா எங்கேடீன்னு கேட்டான்... அவ.. ஐயோ... நாந்தான் ஜிதஹி.. என் ஃப்ரெண்டு காம்தேனுப் பால் கொடுத்தா.. நான் இளமையாயிட்டேன்... அப்டீன்னா... உடனே ராஜா.. நீ மட்டும் இளமையா இருந்தா என்னடி அனுபவிக்கமுடியும்.. நானும் ஆகவேண்டாமான்னு கேட்டான்...”
“அந்த ராணி அவனை தீர்த்துக்கட்டிட்டு உருப்படியா சொல் பேச்சுக் கேட்கிறவனை புருஷனா அடையலாம்னு திட்டம் தீட்டினாளோ?”
“ச்சே... மீனு... இது அரதப் பழசு லாஜிக்.. அதெல்லாமில்லை.. இது துவாபர யுகத்துல நடந்தது.. வெயிட் பண்ணு... ஜிதஹி ஃப்ரெண்டுக்கிட்டே கேட்க.. அவ ப்ரபாசன் கிட்டே கேட்டா.. ப்ரபாசந்தான் பொண்டாட்டியோட அடிமையாச்சே.. என்னை மாதிரி...”
“சுப்பு... இன்னொரு தடவை இந்த மாதிரி அடிமை.. தாசன்னு பசப்பினே... கொன்னு உப்புக் கண்டம் போட்ருவேன்... ஜாக்கிரதை.. மேலே சொல்லுடா...”
“பித்துக்குளி பய... அந்த காமதேனுவையே கடத்திண்டு வந்து அவங்க வீட்டு வாசல்ல கட்டிப்பிட்டான்.. எள்ளுன்னா எண்ணெய்யா வந்து நிக்கறா மாதிரி.. பாலுன்னா மாட்டோட வந்துட்டான்..”
“அபிஷ்டு.. வசிஷ்டர் ஈசியா கண்டுபிடிச்சுடுவாரே....”
“அப்புறம்... அவருக்கு ஞானதிருஷ்டில தெரிஞ்சு... சம்மன் அனுப்பினார்...”
“ப்ரபாசனோட சேர்த்து எட்டுப் பயலும் அங்கே ஓடினானுங்க... எல்லாப் பயலும் பூலோகத்து மானிடப்பதர்களாகப் பிறக்கக்கடவதுன்னு சாபம் கொடுத்துட்டு.. ப்ராபசனைப் பார்த்து.. டேய் பயலே.. நீ மட்டும் பொண்டாட்டி சுகம்னா என்னன்னே தெரியாம ஜீவிக்கணும்ன்னு அடிஷன்ல் செக்‌ஷன்ல சாபம் கொடுத்தார்...”
“அச்சச்சோ...”
“உடனே மிச்சம் இருந்த ஏழு பயல்களும்.. சாமீ.. இவந்தான் கல்ப்ரிட்.. A1. நாங்களெல்லாம் ஹெல்ப்பர்ஸ்.. எங்களை விட்டுடங்களேன் ப்ளீஸ்ன்னு கெஞ்சினதும்.. சரிப்பா. நீங்களெல்லாம் பொறந்ததும் மேலோகம் வந்துடுவீங்க.. இந்தப் பய மட்டும் அங்கேயே கிடந்து அல்லாடுவான்...ன்னு ஜட்ஜ்மெண்ட் எழுதிட்டாரம் வசிஷ்டர்...”
“அது யாருன்னு சொல்லலையே...”
“நீ கொஞ்சம் ட்யூப்லைட்தான் மீனு... சந்தனுவுக்கும் கங்கைக்கும் பொறந்த பீஷ்மர்தான் ப்ராபசன்.. எட்டாவதா பொறப்பார்.. மித்த ஏழு பேரையும் பொறந்ததுமே கொலை பண்ணி கங்கையே கங்கையில விட்டு மேலோகம் அனுப்பிடுவா.. இவர் மட்டும் இங்கேயே தங்கிடுவார்.. அப்புறம் கல்யாணமே பண்ணிக்கமாட்டேன்னு விரதம் இருப்பார்.. இந்தக் கடும் விரதத்தை மெச்சி... தேவர்கள் மலர்மழை பொழிஞ்சு.. பீஷ்ம..பீஷ்ம.. பீஷ்ம.. என்று அசரீரியாய் ஒலித்து.... பட்டம் கொடுப்பாங்களே...”
“சரி. இதுல எங்க பொண்டாட்டி பேச்சைக் கேட்டா கெட்டுப் போயிடுவாங்கங்கிற லாஜிக் வருது...”
“பொண்டாட்டி பால் கேட்டதாலத்தானே, அவன் மாட்டையே... அதாவது காமதேனுவையே திருடிண்டு வந்தான்...”
“போடா போக்கத்தவனே... அவ பால்தானே கேட்டா.. இவன் கையில ஒரு பாட்டில எடுத்துண்டு போயி வசிஷ்டர்ட்டே கேட்டா கொடுத்துருப்பாரே.. எதுக்கு மாட்டைத் திருடணும்...”
“மீனு நீ அப்படி வர்றியா?”
“சுப்பு.. இதையும் ப்ராபாசனோட பொண்டாட்டி சொல்லி அனுப்பியிருக்கணும்.. உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துண்டே இருக்கணும்டா.. இல்லன்னா வழிக்கு வரமாட்டீங்க.. ஸ்வயமா எதாவது பண்றத்துக்கு துப்பிருக்கா...”
“உன் கைல குச்சியையும் கொடுத்து அடி வாங்கிற மாதிரி.. இந்தக் கதையையும் சொல்லி திட்டு வாங்கறா மாதிரி ஆயிடுத்தே... யம்மா... பரதேவதே.. மீனுக்குட்டி.. தப்பான உதாரணம் சொல்லிட்டேன்.. விட்டுடுடீ.. செல்லம்...”
“உன்னை... ச்சும்மா விடக்கூடாதுடா.. என்னோட எல்லா வேலையையும் கெடுத்தது மட்டுமில்லாமல.. தப்புத்தப்பா எக்ஸாம்பிள் வேற கொடுக்கறே...இருடா உன்னை என்ன பண்றேன் பாரு...”
“செல்லம்.. நமஸ்காரம்.. வந்தனம்.. சுஸ்வாகதம்.. நமஸ்தே... தாயே...”
“ஓடிரு.... படவா...”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails