Sunday, October 22, 2017

சுப்பு மீனு: நட்பு

”சுப்பு.... நேரத்துக்கு வீட்டுக்கு வரவே மாட்டேங்கிறியேடா... தெனமும் அகாலத்துல வந்து கதவைத் தட்டுறியே....”
“தட்டலியே... காலிங் பெல் தானே அடிச்சேன்....மீனு..”
“கேவலமாக் கடிக்காதே... யார் கூட ஊர் மேஞ்சிட்டு வரே... ஆஃபீஸ் விட்டதும் நேரா வீட்டுக்கு வரணும்னு தோணாதா?”
“மீனு... கோச்சுக்காதே... நம்ம கவர்மென்ட்டுக்கு சப்போர்ட் பண்றவர்க்கு சப்போர்ட் பண்ணிட்டு வரேன்.. நீ எனக்கு சப்போர்ட் பண்ணனும்... எனக்கு சப்போர்ட் பண்ணினா நீ கவர்மெண்டுக்கு சப்போர்ட் பண்ணினா மாதிரி... ”
“ச்சே..ச்சே.... நிப்பாட்டு... என்ன எழவோ... குழப்பியடிக்காதே...”
"நம்ம சுதா இல்லே.. அவன் கொஞ்சம் கம்பெனி கொடுக்க வர்றியான்னு கேட்டான்...அதான்.. "
"அடச்சீ... அவனா நீயி...."
“பாதகி... என்னையே கலாய்க்கிறியா... நான் சுத்தமான ஸ்படிகம் போல ஆளு... அவனுக்கு ஜல்பு புடிச்சிருக்காம்... ஒரு கட்டிங் போட்டா சரியாயிடும்டா சுப்பு... மூவாயிரம் கடைக்கு மேலே அடைச்சுட்டானுங்க... மாநிலமெங்கும் குடிமகன்கள் லோல்படறானுங்க... கவர்மென்ட் கஜானா காத்தாடுது...ஒரு நாளைக்கு தொன்னூறு கோடி வருமானம் வருமாம்.. இப்போ அதுல நாளொன்னுக்கு இருவத்தஞ்சு கோடி லாஸாம். I Support Government .. அதானால கொஞ்சம் சரக்கு வாங்கறத்துக்கு கம்பெனி குடேன்னு.. சுதா சைதாப்பேட்டைக்குள்ளே எங்கியோ அழைச்சுண்டு போயி....”
“வசவசன்னு வாசக் கொழாயத் தொறந்து வுட்டா மாதிரி பேசாதே.. சட்னு முடி... ஏற்கனவே லேட்டாச்சு...”
“மூ.சந்துக்கு பக்கத்துல ரேஷன் கடையில சர்க்கரை வாங்கறத்துக்கு நிக்கிற மாதிரி ஒரு க்யூ... ஒருத்தருக்கு ஒரு பாட்டில்தானாம்... நெஜமாவே ரேஷன்.. அங்க நின்னு..”
“ச்சீ..ச்சீ... வாயை மூடு.. தயிர்சாதம் வச்சுருக்கேன்... கிச்சலிக்கா ஊறுகாயிருக்கு... வேணுமின்னா கொட்டிண்ட்டு படுத்துக்கோ...”
“கோச்சுக்காதே மீனு... ஃப்ரெண்ட்ஷிப்ப மூழ்க விடக்கூடாதுன்னு...”
“ஆமா.. நீங்க ரெண்டுபேரும் அப்டியே காவிய நண்பர்கள்... போவியா... குடிக்கறது தப்பு.. அதை வாங்கறத்துக்கு கம்பெனி குடுக்கறது கொலைக் குத்தம்... உங்களை மாதிரிப் பாவிகள் நண்பனுக்கு ஹெல்ப் பண்றேன்னு இதுமாதிரி அழிச்சாட்டியம் வேற.... “
“அவனும் நானும் திக் ஃப்ரெண்ட்ஸ்...குடிச்சுட்டு அவன் வண்டியோட்டி கவுந்துடக்கூடாதுன்னுதான் கம்பெனி குடுத்தேன்.. பத்ரமா கொண்டுபோய் அவன் வீட்ல இறக்கிட்டு வரேன்... அவனுக்கும் ஒரு குடும்பம் இருக்கே...”
“பாவி.. அவனைக் குடிக்கவே கூடாதுன்னு தடுத்தின்னா நீ ரியல் ஃப்ரெண்ட்... ஊத்திக்குடுத்துட்டு உத்தமன் நான்னு மார் தட்டிக்கிறியே... வெட்கமாயில்லே...”
“கழுவி ஊத்தாதே... சரண்டர்... பார்த்தசாரதியா போனவன... ப்ளேடு பக்கிரிய திட்ற மாதிரி திட்டறயே...”
“பார்த்தசாரதிய ஏன்டா வம்புக்கு இழுக்கறே... அவருக்கும் பார்த்தனுக்கும் இருந்த ஃப்ரெண்ட்ஷிப் எபடி தெரியுமா?”
“மீனு... அர்த்தராத்திரிலே மகாபாரதம் சொல்லப்போறியா?”
“அக்ரூரர் உக்ரசேனனுக்கு மந்திரியா இருந்தார்... உக்ரசேனன் யாருன்னு தெரியுமில்ல...”
“ஆரம்பிச்சுட்டே... சொல்லாம விடமாட்டே.. சொல்லு... உக்ரசேனன் கம்சனோட அப்பா.. பாபிகள் அரக்கர்களோட ஜாதகமே எனக்குத் தெரியும்...”
“ம்... அவரேதான்.. உக்ரசேனன் கிருஷ்ணனைக் கூட்டிண்டு வரச்சொல்லி அக்ரூரரை அனுப்பினார்.. அவர் கிருஷ்ணனோட மாளிகை வாசலுக்கு வந்துட்டார்... வாசல்ல காவக்காக்கிறவன்கள் வேலால குறுக்குநெடுக்குமா மறிச்சு உள்ளே போகக்கூடாதுன்னு தடுக்கிறனானுங்க...”
“அவருக்கு ஃப்ரீ பாஸ் கிடையாதா? “
“மொக்கையா ஜோக் அடிக்காதே... கேளு.. தன் பேரைச் சொல்லி அனுமதி கேட்கிறார்.... ஒருத்தன் மாளிகைக்குள்ளே ஓடிப்போயி கேட்டுட்டு திரும்ப வந்து போங்கோன்னு மரியாதையா அனுப்பி வைக்கிறான்...”
”எதிரே ஓடி வந்து கிருஷ்ணன் அக்ரூரரைக் கட்டிப் பிடிச்சிருப்பானே....”
“இருடா.. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல கிருஷ்ணனோட சிரிப்பும் ஊஞ்சல் ஆடற சத்தமும் கேட்டுது... மெல்லப் படியேறிப் போனார்... படிக்கு நேரே பிரம்மாண்டமானத் தேக்கு ஊஞ்சல் தொங்கறது... அங்க அவர் கண்ட காட்சி எப்படியிருந்தது தெரியுமா? அக்ரூரர் கையைக் குமிச்சுண்டு வந்த வழியே திரும்பிடலாம்னு நகர்ந்தாராம்...”
“ஏன்? கிருஷ்ணனை எதாவது காம்ப்ரமைஸிங் பொசிஷன்ல பார்த்துட்டாரா?”
“உனக்கு கெட்ட புத்தி சுப்பு.. அப்டிதான் யோசிப்பே... ஊஞ்சல்ல கிருஷ்ணன் படுத்துண்டிருந்தானாம்.. எப்படித் தெரியுமா? தலையை ருக்மணியோட மடில வச்சுண்டு... காலை அர்ஜுனனோட தொடை மேலே போட்டுண்டு... ஊஞ்சலாடிண்டிருந்தானாம்...”
“இதுல என்ன இருக்கு? துரியோதனன் கூட எடுக்கவோ கோர்க்கவோன்னு கர்ணன் பிடிச்சு அறுந்த பொண்டாட்டி பானுமதியோட மேகலையின் முத்துக்களைக் கையிலெடுத்துக் கேட்டானாம்.. வில்லிப்பூத்தூராரின் கற்பனை... இதுவும் பாரதம்.. இதுவும் நட்புதான்..”
“நீ இருக்கியே.. ... அவனுங்க ரெண்டு பேருமே Bad கம்பெனி.. நாஞ்சொல்ற ரெண்டு பேருமே divine கம்பெனி...”
”நட்புல என்ன Bad... Good.. divinity.?"
"கௌரவர்கள் குலத்துக்கு நாசம் துரியோதனன் கர்ணன் கூட்டணி. Bad friendship நியாய தர்மத்துக்கு உதாரண நட்பு ஜோடி கிருஷ்ணனும் பார்த்தனும். Good Friendship."
”மீனு.... நாம் ரெண்டு பேரும் ஆதர்ச தம்பதிகள்.. சரியா?”
“ரொம்ப ஐஸ் வக்காதேடா சுப்பு.. எனக்கும் ஜல்பு புடிச்சிடப்போறது.... கிருஷ்ணன் அர்ஜுனன் அளவுக்கு ஃப்ரெண்ட்ஷிப் இந்தக் காலத்துல எதிர்பார்க்கமுடியுமா? என் மடில தலையை வச்சுண்டு உன்னோட எந்த ஃப்ரெண்ட் மடில காலை வெச்சுப்பே?”
“மீனு... அதாவது.... ஊஹும்... ஈர்க்கு சரிப்படமாட்டான்... வத்திக்குச்சி பய இன்னும் மோசம்... மசாலா.. அவன் படு சுத்தம்.. ஒண்ணுத்துக்கும் உபயோகம் இல்லை.. சரி விடு.. ”
“பார்த்தியா? உன் க்ரூப்ல ஒருபயலையும் நம்ப முடியலை.. பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன், குசேலர்-கிருஷ்ணர்...."
"தாயே.. வணக்கம். நமஸ்காரம். நன்றி..."
"அது.. அந்த பயம் இருக்கட்டும்..."

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails