Sunday, October 22, 2017

சுப்பு மீனு: தன்னலமற்ற சேவை

”சுப்பு.. உன்னை எப்படிடா இப்படி தடித்தாண்டவராயனா வளர்த்துவெச்சிருக்கா உங்கம்மா? ஒண்ணுத்துக்கும் பிரயஜோனமில்லாம... உம்...”
“ஏன் மீனு இப்படி உள்ளே நுழையும் போதே சள்ளுபுள்ளுன்னு எரிஞ்சு விழறே! மார்க்கெட்ல அந்த பூச்சி அரிச்ச நாலே நாலு கறிவேப்பிலையை இலவசமாத் தரமாட்டேன்னு விரட்டிட்டானா?”
“எவனோ கருவேப்பிலை தரலைன்னா உன்னை ஏன் நான் திட்டணும்? சென்ஸ் இல்லாம பேசாதே. வீட்ல சாக்கடை அடைச்சுண்டா கூட மோதி ஒழிகன்னு கோஷம் போடற கும்பல் மாதிரி இருக்கியே...”
“ஆண் வர்க்கத்தையே சுட்டுப் பொசுக்கிடலாம்னு வெறுப்பாயிட்டியோ.. அதான் வ்ராட் வ்ராட்னு கத்துறியோ... ”
“சுப்பு... நான் எவ்ளோ ஓடியாடி வேலை செய்யறேன்... நீ தின்னு தின்னுட்டு... எப்போ பார்த்தாலும் சோஷியல் மீடியாவை மேஞ்சுட்டு..... தமிழ் ந்யூஸ் சேனல்ல அரசியல்காரால்லாம் உட்கார்ந்து போதுபோகாம காள்காள்னு கத்தி.... சண்டை போடறதைப் பார்த்துட்டு.. ஹாயா சேர் தேய்ச்சிண்டு உட்காண்டிருக்கே... உனக்கு ரொம்ப சொகம் கண்டு போச்சு...”
”இது டூ மச். நானும் நிறையா வேலைப் பார்க்கிறேன் தெரிஞ்சுக்கோ...நானே பல் தேய்ச்சு, நானே குளிச்சு, நானே தலவாரிண்டு.. நானே சாப்பிட்டு, நானே நடந்து போய்.. நானே...”
“ச்சே..ச்சே...நிப்பாட்டுடா.... நீ சொன்ன ’நானே’ல்லாம் இல்லேன்னா நீ நீயே இல்லை.. டெட் பாடிடா... என்னை பேச வைக்காதே...”
”சரி..சரி... ரொம்ப இடிக்காதே... உன்னை விட நம்ம வீட்டுல தன்னலமற்ற சேவை செய்வதற்கு ஒருத்தங்க இருக்காங்க.. யார்ன்னு தெரியுமா?”
“உங்கம்மான்னோ.. இல்லை.. நீன்னோ.. எதாவது அசட்டுப்பிசட்டுன்னு பேசினே..இதால.. இரக்கமேயில்லாம... ஒரே போடு போட்டுக் கொன்னுடுவேன்.. சொல்லிட்டேன்...”
“தோசத்திருப்பியைக் கீழே போடும்மா... நீ அடிக்கடி பார்த்துக்கிற ஆளுதாம்மா...”
“ரொம்ப வெறுப்பேத்தாதே.. யாருன்னு சொல்லு..”
“அதோ... அந்த கடிகாரம்ந்தான்... தெனமும் ஓடிக்கிட்டே இருக்கு.. அதுக்கு பலன் இருக்கோ? ஆனா அதைப் பார்க்கிறவங்களுக்கு பலன் உண்டு... தன்னலம் கருதாமல் மற்றவர்களுக்கு உழைப்பதில் கடிகாரத்திற்கு நிகர் உண்டோ கண்மணி?”
“திடீர்னு உனக்குள்ள இருக்கிற அந்த புத்திசாலித்தனம் பொங்கி பிரவாகமா வழியுதுப்பா.. அதை அப்படியெ ரெண்டு டம்பளர்ல அள்ளிக் குடிக்கமாட்டோமான்னு இருக்குடா... இதைவிட இன்னொரு பெஸ்ட் எக்ஸாம்பிள் இருக்குத் தெரியுமா?”
“என்னை மடக்கிறியா? என்ன..என்ன..என்ன..என்ன?”
“நீ என்ன கேபி சுந்தராம்பாளா? என்ன..என்ன..என்னன்னு பாடறியே... திருவள்ளுவர் கூட எழுதியிருக்கார்.. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல...”
“ஆம்மா... சரி... இதுல ஒரு டௌட். நிலம் மட்டும்தான் பொறுமையா இருக்குமா? ஒரு மரத்துமேலே ஏறி நின்னு கிளைய வெட்டினா”
“ஆமா... நுனிக் கிளையில உட்காண்டு அடிக்கிளைய வெட்ற உன்ன மாதிரி நிர்மூடன்கிட்டே என்ன பேசறது?”
“சரி...அடிக்கிளையில உட்காண்டு நுனிக்கிளைய வெட்றான்... அப்போ மரமும் சும்மாதானே இருக்கும்... மலையில உட்காண்டு பாறையைப் பேத்துண்டு போறான்னு...அதுவும் சும்மாதானே இருக்கும்... அதென்ன நிலத்துக்கு மட்டும் அவ்ளோ பெருமை?”
“சுத்த பேக்குடா நீ... மரம்.. மலையெல்லாம் வெட்டினா ஒன்னு மரத்தைத் தரும்.. இல்லைன்னா பாறையைத் தரும்.. ஆனா நிலம் என்ன தரும்?”
“பால் பாயசம் தரும்... போ மீனு.. வர்ற வர்ற நீ சர்வாதிகாரி ஆயிட்டே... நீ சொல்றதுதான் சரின்னு ஆர்க்யூ பண்றே..”
“அபிஷ்டு... நிலத்தை ஆழமாத் தோண்டத் தோண்ட அது சுவையான நீர் கொடுக்கும்டா.... அதாவது தண்ணை வெட்டிக் கூறு போடறவனைக் கூட பொறுத்துண்டு அவனோட வாழ்வாதாரமாகியத் தண்ணீரைத் தருது... இன்னும் வெட்டிண்டேபோனா நிலக்கரி.. டயமண்ட்...”
”ஆஹா.. புல்லரிக்குது... உன்னை பொண்டாட்டியா அடைஞ்சது நான் செஞ்ச பூர்வ ஜென்ம புண்ணியத்தோட பலன்... நமஸ்காரம் தாயே... ஒரே ஒரு சந்தேகம்.. கேட்கலாமா தேவீ....”
”ம்.. கேளு...”
“ஓட்டுக் கேட்கும்போதெல்லாம் தன்னலமற்ற தலைவர்னு பிரச்சாரம் பண்றாங்களே... அதுபத்தி...”
“ஹைய்யோ..ஹைய்யோ.. காமெடி பீசுடா நீ சுப்பு... தன்னமலற்ற தலைவர்ன்னுதானே பிரசாரம் பண்றாங்க.. குடும்பநலமற்ற தலைவர்ன்னு சொல்றதில்லையே.. போ.. போ.. போயி வேலை எதாவது இருந்தா பாரு...”
“நா கடிகாரம் மாதிரி உழைச்சாலும்.... மதிப்பு இல்லை....”
“ச்சும்மா மொணமொணக்காம போ... கண்டு பிடிச்சுட்டாரு.. கடிகார சேவையைப் பத்தி....”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails