Monday, October 23, 2017

சாதம் போட்ட அன்னபூரணிகள்

எனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று வாஞ்சையோடு தலை தடவிக் கேட்கத் தெரியும். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் போது அரை பரீட்சை லீவில் “இன்னும் உனக்கு எவ்ளோ நாள் ஸ்கூலு..” என்று கேட்பாள். “நாலு வருஷம் பாட்டி...” என்றால் “நாலு மணியா... என்னடா பேத்தறே..”ன்னு கேட்பாள். காது சுத்தமாகக் கேட்காது. செவிக்கருவிகளுக்கெல்லாம் சவால் விடும் காது. தாத்தா கைலாய பதவி அடைந்த பிறகு தலையை முண்டனம் செய்துகொண்டு நார்மடியோடு காலத்தை தள்ளினாள்.
சாரதாம்பாள், ஜெகதாவின் சாப்டியோ.. பசிக்குமேடா கூட “படிக்கறதே இல்லை.. கட்டேல போறவன்... தோசைக்கல்லை அடுப்புல போட்டதும் தட்டைத் தூக்கிண்டு வந்துடறான்.. போய்ப் படிச்சுட்டு வாடா.. அப்பதான் தோசை...” என்று விரட்டுவாள். கையில் பிரம்பிருக்கும் ஹெட் மிஸ்ட்ரஸ் போல இருந்தவள். அவளிடம்தான் வளர்ந்தேன். மடி ஆசாரம் என்பது உயிர் மூச்சு. ”என்ன பாட்டி.. காலேல குளிச்சுட்டியே... ஏன் இப்போ திரும்பவும் இப்போ மத்தியானம் ஸ்நானம் பண்றே?” என்று கேட்டால் “வயறு சரியில்லேடா... கொல்லப்பக்கம் போய்ட்டு வந்தேன்... கால் அலம்பினா போறுமா? ஸ்நானம் பண்ணிட்டேன்... கொடில மடியா புடவை ஒனத்தியிருக்கேன்.. “ என்று கூன் விழுந்த முதுகோடு கொல்லைக் கிணற்றிலிருந்து டங்குடங்கென்று வேகமாக நடந்து உள்ளே செல்வாள்.
சமையற்கட்டிலிருந்து “கையிலே.. கதை புஸ்தகம் போல்ருக்கேடா தம்பி...” என்று ரேழியில் படித்துக்கொண்டிருக்கும் என்னை கேட்பாள். ரஸ்க் தடிமனுக்கு கண்ணாடி போட்டிருந்தும் என்னுடைய அசையாத ஸ்ரத்தையான படிப்பைப் பார்த்து அது பாடபுஸ்தகமல்ல என்பதைக் கண்டுபிடித்துவிடுவாள். வெளி ஆட்களிடம் நியாய தர்மங்கள் விவாதிப்பாள். “இப்டி நடக்குமோடி இந்த லோகத்துலே...” என்று அதிசயித்து வலது கையால் தாவாங்கட்டைக்கு முட்டுக் கொடுத்து பேசுவாள்.
எண்பத்தேழு வயது வரை எங்கள் மன்னை ஹரித்ராநதியின் நான்கு கரையையும் பிரதக்ஷிணம் வந்து நடுவளாங்கோயில் வேணுகோபாலஸ்வாமியை கும்பிட்டு வீட்டுக்குள் வருவாள். தானே இருபது படி இறங்கி ஹரித்ராநதி மங்கம்மாள் படித்துறையில் ஸ்நானம் செய்வாள். தன் துணியை தானே துவைத்து மடியாக தானே கொம்பு பிடித்து உத்தரத்தில் தொங்கும் கொடியில் உலர்த்தி... “ஒரு சொம்பு பால் குடுடீ பவானி.. ஹரித்ராநதித் தாயாருக்கு விட்டுட்டு வேண்டிண்டு வரேன்...” என்று இருநூறு மிலி பாலை குளத்தில் ஊற்றி அதைத் தெய்வமாக மதித்து வேண்டிக்கொள்வாள். ஏதோ நம்பிக்கை. ”கார்த்தாலே வேண்டிண்டு பால் விட்டுட்டு வந்தேன்.. சாயரக்ஷை தொலைஞ்சு போன மோதரம் கிடைச்சுடுத்து...”. இந்த சாரதாம்பாள்தான் என்னுடைய மன்னார்குடி டேஸ் தொடரில் பாட்டி பாத்திரத்தை நிரப்புபவள்.
*
தேகாரோக்கியத்தோடு இருந்தவரையில் ஜெகதா உழைப்பின் சிகரம். கைகால்கள் விழுந்த பிறகு, அலமேலம்மா அவளை மகாராணி போல பார்த்துக்கொண்டாள். சாரதாவைவிட ஜெகதாவிற்கு சரீரம் பெருசு. ரேழி நடுவில் முக்காடுத் தலையோடு உட்கார்ந்திருக்கும் போது யார் வீட்டில் நுழைந்தாலும் “பாட்டீ... நமஸ்காரம் பண்ணிக்கிறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்கோ...” என்று நெடுஞ்சான்கிடையாக விழத் தோன்றும். ஆரோக்கியத்தோடு இருந்த ஜெகதா ஆயிரம் பேருக்கு சமைப்பாளாம். அவள் அருகில் சென்று கறுப்பு லக்ஷ்மியைத் தடவி கொடுத்து “விருந்தாளியெல்லாம் வந்துருக்காடி.” என்று சொன்னதும் அரை லிட்டர் பால் கூடக் கறக்குமாம். ஜெகதாவின் நடமாட்டம் கண்டவுடன் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் தலையை அசைத்து கழுத்தில் கட்டியிருக்கும் மணி அடித்து ஜாடையாய்ப் பேசும். வைக்கோல் பிரி உருவி போட்டுவிட்டு கழுத்தில் தடவிக்கொடுத்துவிட்டுச் செல்வாள்.
”ஸ்கூலுக்கு போலயாடா?”
“லீவு விட்ருக்கா”
“ஏன்?”
“தோ... இந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்கறத்துகாக..”
என்று டிவியைக் காட்டி இப்படிச் சொன்னால் நம்பிவிடுவாள். “ஓ... சர்தான்... சாப்ட வரியா?” என்று கேட்டு போட்டுவிட்டு பின்கட்டுக்குச் சென்றுவிடுவாள். லீவா? படிக்கவேண்டாமா? என்கிற கேள்விகள் அவளுக்கு கேட்கத் தெரியாது! அன்னபூரணிக்கு சரஸ்வதி டிபார்ட்மெண்ட் பற்றித் தெரியாது. ஒரு சமயம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் சர்க்கஸ் நடந்துகொண்டிருந்தது. வடக்கத்தியர்கள். ஜெகதாவோடு நானும் அக்காவும் சென்று பார்த்தோம். நடுவில் ஜெகதாவும் பாடிகார்டு போல இருபுறமும் நானும் கீர்த்திகாவும். உயரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய பெண்களைச் சிலர் ஆச்சரியத்தோடும் சிலர் ஆனந்தத்தோடும் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஜெகதா என் காதில் “பாவம்டா.. ஒரு ஜான் வயித்துப்பாடுக்காக அந்தரத்துல தொங்கறாள்கள்.. நமக்கு பகவான் நிறைய கொடுத்துருக்கான்.”
நடை தடுமாறியபோது கூட தொழுவம் எட்டிப்பார்த்து மாட்டுக்கு வாளியில் தீவனம் கலந்து வைத்து பார்த்துக்கொண்டாள். ”தட்டை அலம்பிண்டு வரியா? சாதம் போடறேன்” என்று தள்ளாத வயதிலும் கேட்டவள். ஊரிலிருந்து அகாலத்தில் யார் வந்து கதவைத் தட்டினாலும் ஜீரா ரசம் மோர் சாதமாவது கிடைக்கும். ஜெகதாவை நினைக்கும் போதெல்லாம் அன்னதானப் பிரபுவான இளையான்குடி மாற நாயனார் கதை நியாபகத்துக்கு வரும்.
இன்று ஜெகதாவின் ஸ்ரார்த்தம். சாப்பிட்டுவிட்டு கண் அயரும் நேரத்தில் சட்டென்று நினைவு அடுக்குகளிலிருந்து எழுந்திருந்த இரு பாட்டிகளும் என்னை இவ்வியாசம் எழுதச் சொன்னார்கள். இதுபோன்ற அம்பாள் பாட்டிகளின் சாம்ராஜ்யமாக வீடுகள் இருந்தபோது கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் அமைதியும் குன்றாத சந்தோஷமும் குடியிருந்தது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails