Sunday, October 22, 2017

சுப்பு மீனு: தாய்ப் பாசம்

”அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே....ம்ம்ம்ம்...அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே... நேரில் நின்று பேசும் தெய்வம்...”
“என்னடா சுப்பு... ரொம்ப நெக்குருகிப் பாடறியே.... அம்மாக்கள் டே பெசலா?”
“மீனு.. கிண்டலடிக்காதே.. அம்மாக்கு ஒரு நாள்.. அப்பாவுக்கு ஒரு நாள்னு.. வருஷத்துக்கொரு தடவை ஸ்ரார்த்த திதி மாதிரி. கொண்டாடற வழக்கமெல்லாம் இல்லை.. ஆனா பாதி பேர்.... ஆட்டோ ஓட்டற வடிவேலு டைப்ல இருந்துட்டு.. இன்னிக்கி ரொம்ப பேசுறானுங்க...”
“அது என்னடா ஆட்டோ ஓட்டற வடிவேலு?”
“அது வேற வாய்... இது நாற வாய்.... வடிவேலு தெரியாது? அவருதான்...”
”ஓ... ஓஹோ... அம்மாவை பத்தி ஸ்ரீமத்பாகவதத்துல பிரஹ்லாத சரித்திரத்துல ஒரு இடம் வரும்... அழுதுட்டேண்டா சுப்பு... உனக்கு தெரியுமோ?”
“ம்... ஹிரன்யகசிபு பிரஹ்லாதனைக் கொல்றத்துக்கு நிறையா ட்ரை பண்ணுவான்.. அதுல ஒரு மெத்தேட் சாதத்துல விஷம் வச்சுக் கொல்றது... விசேஷமா என்ன பண்ணுவான்னா... தன் பொண்டாட்டியைக் கூப்பிட்டு... பால் சாதத்துல விஷம் கலந்து உம் பைனுக்கு ஊட்டுன்னு உத்தரவு போடுவான்... ராஸ்கல்...”
“ஆமா. அப்போ அந்தக் குட்டியூண்டு பிரஹ்லாதன் என்ன சொல்லும் தெரியுமா? சாதம் ஊட்டும் போது ஏம்மா அழறேள்னு கேட்கும். உன் பிதா விஷம் கலந்து ஊட்டச் சொல்லியிருக்காண்டா குழந்தே... இந்த பாலுஞ்சாத்துல விஷம் இருக்குடா.. இதை உனக்கு ஊட்டப்போறேன்... நீ போய்ச் சேரப்போறே.... எனக்கு வயறு கலங்கறதுடா... கை நடுங்கறது.. எப்படி ஊட்டுவேன்... என்கிட்டே ஸ்தன்ய பானம் பண்ணின உனக்கு என் கையால எப்படிடா விஷம் சாதம் ஊட்டுவேன்?ன்னு கலங்கிடுவா...”
“மீனு.. அப்போ பிரஹ்லாதன் சொன்னது... அம்மா.. அது விஷம் சாதமா இருந்தா என்ன? உன்னோட வாத்ஸல்யத்தைக் கலந்து ஊட்டும் போது விஷம் அமிர்தமாயிடாதா? நன்னா ஊட்டு.. பேஷா ஊட்டு.. எனக்கொன்னும் ஆகாதும்மா.. நீ அழாதேன்னு.. அம்மோவோட கன்னத்துல வழிஞ்ச கண்ணீரைத் தொடச்சி விட்டுட்டு.... ஆன்னு வாயைத் தொறந்துக் காட்டி... ஊட்டச் சொல்லித்தாம்...”
“ஆமாண்டா சுப்பு.. எப்பேர்ப்பட்ட காட்சி அது... ஒரு தட்டு சாதம்.. விஷம் கலந்து வச்சதை சாப்பிட்டுட்டு.. வெளில விளையாட ஓடிப்போயிடுத்தாம்... ஹிரண்யகசிபுக்கிட்டே ஓடிப்போயி... நாதா.. அவனுக்கு விஷம் சாதம் ஊட்டச் சொன்னேள்.. தட்டு சாதத்தையும் சாப்டுட்டு.. விளையாட ஓடிப்போயிட்டான்... ன்னு முட்டிண்டு அழுதாளாம்...”
இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா? குழந்தை பிரஹ்லாதனுக்கு அம்மா பேர்ல எவ்ளோ வாஞ்சை.. எவ்ளோ பாசம்.. அன்பொழுக குழந்தை சொல்லியிருக்கான்... அம்மா நீ விஷம் குடுத்தா கூட எனக்கொன்னும் ஆகாதுன்னு.. அம்மாவைப் பத்தி உசத்தியா சொல்றத்துக்கு இதைவிட பெரிசா எதாவது சொல்லமுடியுமா மீனு...”
“பிரமாதமான உதாரணம்டா சுப்பு... சன்னியாசிக்கே அம்மா பாசம் விடலை.. அம்மா அவ்ளோ பெரிய ஸ்தானம்...”
“ஆர்யாம்பா சங்கரரை சன்னியாசத்துக்கு விடலை... அம்மாவுக்கு தேஹ சௌக்கியமில்லாமல் இருந்த போது... ஆல்வாய்ப்புழையை அவாத்து வாசலுக்கே கொண்டு வந்தார் சங்கரர்... அம்மா மேலே இருந்த ப்ரேமைல... நீ நினைக்கும் போது நான் வந்து உன் முன்னால் நிப்பேன்னு சத்யம் பண்ணிக் கொடுத்துட்டு சன்னியாசம் வாங்கிண்டார் மீனு.. ஷன்மத ஸ்தாபகர்.. நினைச்சாலே சிலிர்ப்பா இருக்கே...”
“சங்கர சரிதம்.. படிச்சாலோ.. கேட்டாலோ.. அவ்ளோ ....”புண்ணியம்டா சுப்பு.. பட்டினத்தார் கூட இதே மாதிரி அம்மா காலமானத்துக்குப் பிறகு ஓடி வந்து பார்த்து சிதை மூட்டினார்னு கேள்வி... சரியாடா சுப்பு?”
“மீனு.. ஒண்ணு கவனிச்சியா.. அம்மா மட்டுமில்லே.. அப்பாவையும் சேர்த்துக் கொண்டாடறோம் நாம.. இராமாயணத்துல வர்ற ஷரவணகுமாரன்.. கண் தெரியாத தன் அப்பா அம்மாவை தூளிக்காவடி கட்டி தோள்ல சுமந்துண்டு ஊரூராப் போனான்னு படிக்கும்போது.. உள்ளூர் முரடனுக்குக் கூட அம்மா மேல பாசம் பொத்துண்டு ஊத்தாதோ?”
”மஹாபாரதத்துல குந்தி படாத கஷ்டமாடா சுப்பு? தோளுக்கு மேலே வளர்ந்து கல்யாணம் பண்ணிண்ட பிறகு கூட அதுகளை கண்ணுல பொத்தி வச்சு பாதுகாத்தா.. குந்தி... அவ ஒரு சூப்பர் அம்மாடா சுப்பு...அம்மா செண்டிமெண்ட் இல்லாத தமிழ்ப்படம் உண்டா? இன்னமும் எவ்ளோ அம்மாக்கள் தன்னோட பசங்க படிக்கும்போது இராப்பூரா கண் விழிச்சு... டீ காஃபி போட்டுக்கொடுக்கறாங்க...ஸ்கூலுக்கு புத்தக மூட்டையைத் தூக்கிண்டு போறா... “
”கடேசியா ஒரு ஆட்டோ வாசகம் சொல்லட்டா.. வடபழனிகிட்டே பார்த்தேன் மீனு..”
“என்ன?”
“கர்ப்பக்கிரஹத்தில் இருக்கும் கடவுளை விட கருவில் சுமந்த தாயே என் தெய்வம்”
“ஆஹா.. ரொம்ப நல்லாயிருக்கேடா சுப்பு.... ஆனா சின்ன சந்தேகம்டா.. ”
“என்ன?”
“அந்த ஆட்டோகாரர் வடிவேலு சாயல்ல இருந்தாரா?”
“யேய் மீனு... உன்ன... உன்ன...”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails